Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதிகளின் சமரசத்திற்கு இரையாகும் தமிழ் கைதிகள்

1. குற்றச்சாட்டு எதுவும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.

2. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவராவது இருக்கும் பட்சத்தில் அவர்களை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக்க வேண்டும்.

3. நீண்ட காலம் காரணமின்றி சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு "வாழ்வு" மறுக்கப்பட்டமைக்காக விடுதலையாகும் கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படல் வேண்டும்

4. அவர்கள் சமூக வாழ்வில் மீழிணைவதற்கான திட்டம் தகுதி வாய்ந்தவர்களுடைய ஆலோசனையுடன் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கான உதவிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படல் வேண்டும்.

நெவில் ஆனந்த (சட்டத்தரணி)

சுஜீவா தகநாயக்கா (சமூக சேவையாளர்)

முடிதா கருணாமுனி (பத்திரிகையாளர்)

குசல் பெரேரா (தொழிற் சங்கத் தலைவர்)

அன்ரன் மாக்குஸ் (சட்டத்தரணி)

சிறிநாத் பெரேரா

தொடர்புக்கு:- நெவில் ஆனந்த(சட்டத்தரணி)- 0777876811 - சுஜிவா தகநாயக்கா(சட்டத்தரணி) - 0777324062

மேலே குறிப்பிடப்பட்ட சிங்கள முக்கியஸ்தர்களால் கையொப்பம் இடப்பட்டு அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய நான்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று கடந்த அக்டோபர் 19 திகதியில் இலங்கையின் சகல ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. இன்றுவரை அதுபற்றி எந்தத் தமிழ் (தேசிய) ஊடகங்களும் குறிப்பிடவில்லை. அதற்கான காரணம் அந்த மனுவின் சாராம்சத்திலேயே அடங்கியுள்ளது. அந்த மனுவில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனத்தையும் அதற்கு முண்டு கொடுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் போலித்தனத்தையும் அவர்கள் மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டியிருந்தார்கள். அதனைத் தமிழ்த் தேசியத்தின் ஆதிக்கம் தணிக்கை செய்து விட்டமைதான் அந்தக் காரணமாகும்.

இலங்கையில் நீதி நிர்வாகம் ஒழுங்கற்றது எனவும் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளதெனவும் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் சையிட் ராட் அல் உசைன் வெளியிட்ட ஆதாரங்களடங்கிய ஐ.நா.வின் விசாரணை அறிக்கையினைத் தொடர்ந்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்கு குழு நிறைவேற்றிய தீர்மானம் இலங்கையின் உள்ளக யுத்தக் குற்ற விசாரணைக்கு முன் நிபந்தனையாக பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு இலங்கையின் நீதி நிர்வாக நடைமுறை திருத்தி அமைக்கப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்தி உள்ளது. இதனை இலங்கை அரசாங்கமும் த.தே.கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டுள்ளன. அப்படிப்பட்ட நிலையில் தமிழ்க் கைதிகளைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதற்கோ அன்றி மறுபடி விசாரணை செய்வதற்கோ இந்த அரசாங்கத்திற்கு எதுவித உரிமையும் இல்லை. இதனை ஆதாரமாகக் கொண்டே மேற் கூறப்பட்ட ஆறு சிங்கள முக்கியஸ்தர்களின் 4 கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.

தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அக்டோபர் 12ந் திகதி ஆரம்பித்தனர். அதற்கு ஆதரவாக "இப்தோதாவது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" என்ற ஆர்ப்பாட்டம்-ஊர்வலம்-மகஜர் கையளிப்பு என்பன அக்டோபர் 14ல் கொழும்பில் மூவின மக்களையும் அணிசேர்த்து இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் கைதிகள் விடுதலையை வலியுறுத்திய போராட்டங்கள் ஆங்காங்கே நடாத்தப்பட்டன. பல தரப்பினராலும் கோரிக்கைகளும் விடப்பட்டன.ஆனால் தமிழ்த் தேசியத்தின் அத்திவாரமான யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களின் விடுதலையைக் கோரி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மீது 'சாணகப் பூச்சு" நடாத்தப்பட்டது. இந் நடவடிக்கை "கைதிகளின் விடுதலை கோரும் உரிமை இனவாதத் தமிழர்களுக்கு மட்டுமே உரியது" என்ற வன்முறைச் செய்தியைத்தான் எடுத்தியம்பி நிற்கிறது.

இப் போராட்டங்களைத் தொடர்ந்து நாட்டின் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணுவோம் என வாக்குறுதி வழங்கி சிங்கள-தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஆட்சியதிகாரத்தை அடைந்துள்ள நல்லாட்சி அரசாங்கம் இப் போராட்டங்கள் காரணமாகத் திடீரென விழித்தெழுந்து கைதிகள் பற்றி கரிசனை காட்டியது.

நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி அமைச்சர் "அரசியல் கைதிகள் எவரும் இல்லை" எனக் கூற ஜனாதிபதியோ "அவரிடமே" அவர்கள் பற்றி ஒரு விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஆணையிட்டார். அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த விரும்பாத தமிழ் பிரதிநிதிகள் கைதிகளைச் சந்தித்து ஜனாதிபதியின் உறுதிமொழிச் செய்தியை வெளிப்படுத்தியதை அடுத்து அக்டோபர் 17ல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை நவம்பர் 07 வரை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

அதேவேளை குறிப்பிட்ட திகதிக்குள் தாங்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் மீண்டும் தங்கள் சாகும் வரையான போராட்டம் தொடரும் எனவும் அதற்கான பொறுப்பு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச - சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் - தேசிய உரையாடல் அமைச்சர் மனோ கணேசன் - எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் -சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோகண புஸ்பகுமார - சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர் சுகத கம்லத் ஆகியோரையே சாரும் எனவும் எழுத்து மூலம் வலியுறுத்தியும் உள்ளனர்.

இலங்கையில் இன்று நடைமுறையில் உள்ள சட்டக் கோவையின் பிரகாரம் சகல அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் ஆவர். இது தவிர இவர்களை உடனடியாக விடுதலை செய்யும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு உண்டு. அத்துடன் நாட்டின் நலன் கருதி தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மேல் தொடர்ந்தும் நம்பிக்கை வைப்பதற்கு ஒரு "நல்லெண்ண"அடையாளமாக அரசாங்கம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது.

இந் நிலையில் நாட்டினதும் நாட்டின் அனைத்துக் குடிமக்களினதும் நல்ல எதிர்காலத்திற்கு ஒரு ஆரம்பப் படியாக அமையும் இந்தக் கைதிகள் விவகாரத்தை சிங்கள-தமிம் மேலாதிக்க வாத மேட்டுக்குடி ஆளும் வர்க்கத்தினர் கையாளும் முறையானது இவர்கள் பரஸ்பரம் தங்கள் இருப்புக்களையும் ஆளும் அதிகாரத்தையும் தொடர்ந்து பாதுகாக்கும் வகையிலேயே செயற்படுவதனை உணர்த்தி நிற்கிறது.

இந்தத் தமிழ்த் "தேசியக் காவிகள்" தமிழ் மக்களைக் காவு கொடுத்தபடிதான் இன்று வரை தமது அரசியல் பாதையில் ஏறு நடை போட்டு வருகின்றனர். அன்றைய சிறிமா அரசாங்கத்தின் ஆட்சியின் போது 1970 முதல் 1974 வரை அவசரகாலச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருந்த இளைஞர்களை தங்கள் மேடைப் பேச்சுக்குத் தீனியாகப் பயன்படுத்தினார்களே யொழிய அவர்கள் விடுதலைக்காக உருப்படியாக எதையும் செய்யவில்லை. எனினும் 1977ல் எதிர்க் கட்சிப் பதவியைப் பெற்றார்கள். அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் சிறைப்பட்ட போதும், கொலை செய்யப்பட்ட போதும் 81ல் மாவட்ட சபையை வென்றெடுத்தார்கள். கடந்த 30 ஆண்டு கால "போரழிவு" இன்று அவர்களை மீண்டும் ஒரு முறை எதிர்க் கட்சிப் பதவிக்கு உயர்த்தியுள்ளது. சர்வதேச விசாரணைக் கோரிக்கையை முன்னிறுத்திய த.தே.கூட்டமைப்பு இன்று அரசாங்கத்துடன் இணைந்து உள்ளக விசாரணையை ஏற்றுக் கொண்டுள்ளது. இனப்படுகொலைத் தீர்மானம் எழுதி நிறைவேற்றிய முன்னாள் தலைமை நீதிபதியான வட மாகாண முதலமைச்சர் கைதிகளின் விடுதலைக்கு 7 அம்சங்கள் கொண்ட தீர்வொன்றை முன் வைத்ததன் மூலம் தொடர்ந்து அவர்களின் சிறைக்கால வாழ்வின் நீடிப்புக்கு அடி எடுத்துக் கொடுத்துள்ளார்.

இவற்றின் மூலம் தமிழ் கைதிகளின் விடுதலை பற்றிய அக்கறையும் ஆர்வமும் தமிழ் தேசியத்தின் முன்னோடிகளுக்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதனை நாட்டுமக்களின் நலன் கருதுவோர் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

அண்மைய நாடு தழுவிய மூவின மக்களின் தமிழ்க் கைதிகள் விடுதலைக்கான போராட்டமும் அதன் பிரதிபலிப்புக்களும் ஒரேயொரு விடயத்தை மிகவும் துல்லியமாக விளங்கப்படுத்தி உள்ளது. கைதிகள் உடனே விடுதலை செய்யப்பட்டால் சிங்கள-தமிழ் மக்களுக்கான இணைப்புப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டியதாக அது அமைந்து விடும் என நல்லாட்சி அரசாங்கமும் த.தே.கூட்டமைப்பும் நம்புவதேயாகும். சிங்கள-தமிழ் மக்களின் "இணைவாக்கம்" இலங்கையின் இனவாதத்தை வேரோடு அழித்துவிடும். இனவாதம் இல்லாது போனால் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு நாட்டில் இருப்பதற்கு இடம் இல்லாமல் போய்விடும். எனவே இலங்கையில் இனவாதத்தை தொடர்ந்தும் தக்க வைக்க இரு சாராரும் கையாளும் நடைமுறையே இன்றைய தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பான அணுகுமுறையாகும்.

தமிழ்ப் பேசும் மக்கள் இவற்றைப் புரிந்து கொண்டு இனவாத அரசியலை முற்று முழுதாக நிராகரித்து இலங்கையில் எல்லோருக்கும் சம உரிமையுண்டு எனப் போராடும் எமது சிங்கள சகோதரர்களுடன் இணையும் வரைக்கும் இனவாத மேட்டுக்குடி அரசியல்வாதிகள் தமிழ் இளைஞர்களைப் பலியிடும் சமரசங்களை செய்து கொண்டேயிருப்பார்கள்.