Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்

“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன? அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் கேட்டார். அரசியல் உரையாடலை நிகழ்த்த விரும்பி அந்த நண்பர் இது தொடர்பாக மேலும் சில கேள்விகளை எழுப்பினார்.

“தமிழ்த்தேசியம் தொடர்ச்சியாகப் பலவீனப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதனுடைய அடுத்த கட்டம் என்பது அதற்கிருக்குமா என்பதே கேள்விதான். ஏனென்றால், பலவீனங்களைத் திருத்திக் கொள்ளாமலிருக்கும் எதுவும் பலமாகவோ, உறுதியாகவோ, தொடர்ச்சியாகவே இருக்க முடியாது. பலவீனமாக இருக்கும் எதுவும் வெற்றியை நோக்கி நகரவும் இயலாது. ஆகவே, தமிழ்த்தேசியம் என்பதற்கு அடுத்த கட்டம் என்ற ஒன்றிருக்குமா? என்பதே கேள்விதான். தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்துவது எதிர்த்தரப்பாகிய சிங்களத் தீவிரத் தேசியவாதமே தவிர, தமிழ்த்தரப்பல்ல. தமிழ்த்தேசியத்தைப் பலவீனமடைய வைப்பதற்கு எதிர்த்தரப்பை விடவும் அதைத் தீவிர நிலைப்பட ஆதரிப்போரே தோற்கடித்து வருகின்றனர். அவர்களே தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக வெளியைச் சுருக்கி, ஒருமுகப்படுத்தி, ஒற்றைப்படைத்தன்மையாக்கி, அதை இனஅடிப்படைவாதமாக மாற்றியுள்ளனர். ஆகவே அது தோல்வியின் படிக்கட்டுகளில் இறங்கிச் செல்கிறது. இது வருத்தத்திற்குரிய ஒன்றே. ஆனாலும் இன்றைய நிலை இதுதான்“ என்றேன்.

நண்பருக்குச் சலிப்பும் துக்கமுமாக இருந்தது. அவருடைய முகம் வாட்டமடைந்தது. அவர் விரிந்த தளத்தில் சிந்திக்கும் பண்பை உடையவர். எதையும் புரிந்து கொள்ளக்கூடியவர். யதார்த்தத்தை உணர்ந்தவர். என்றாலும் உண்மையை எதிர்கொள்ளும்போது சற்று நெருக்கடியாகத்தான் உள்ளது. என்ன செய்வது உண்மையின் விதியும் வரலாற்றின் விதியும் அப்படியான குணமுடையவையாக இருக்கின்றனவே. இரண்டுமே நோயைக் குணப்படுத்தும் மாத்திரைகள் என்பதால், இப்படிக் கசப்பை அவை உள்ளுரக்கொண்டிருக்கலாம்.

நண்பருக்குச் சொன்னேன்.

”சரிகளும் பிழைகளும் நிரம்பியதாக இருந்தாலும் 2006, 2007 இல் தமிழ்த்தேசிய அரங்கு (தமிழ்த்தேசியம் அல்ல) பலமாகவே இருந்தது. அப்போது புலிகளும் பலமாக இருந்தனர். கூடவே அரசியல் ரீதியாக புலிகளின் நிலைப்பாட்டுடன் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பலமாக இருந்தது. அதாவது அரசியல் ரீதியாகவும் ஆயுதபலத்திலும் தமிழ்த்தேசிய அரங்கு பலமாக இருந்தது. எதிர்த்தரப்பாகிய அரசாங்கத்தையும் சிங்களத்தேசியவாதத்தையும் யோசிக்க வைக்குமளவுக்கு இந்தப் பலமிருந்தது.

2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். இருந்தும் 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு நிலைப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பலமான அணியாக இருந்தது. எதிர்நின்று தாக்குப்பிடிக்க முடியாது விட்டாலும் ஒரு அடையாளமாக நின்றது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

ஆனால் 2012, 2013, 2014 இல் தமிழ்த்தேசிய சக்தி எனப்படுவது இரண்டாகியது. 2016 இல் ஒரு அணி அரசுக்குச் சார்பாக மாறியது. அல்லது அரசுக்குச் சேவகம் செய்யத் தொடங்கியது.மறு அணி அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறது. அரசை விமர்சிக்கிறது.

அதாவது அரசு சார்புத் தமிழ்த்தேசியம் ஒன்றாகவும் அரச எதிர்ப்புத்தமிழ்த்தேசியம் இன்னொன்றாகவும் இன்றுள்ளது.

இந்தநிலையானது தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்போர் சிலருக்கு நெருக்கடியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களுக்கு எது சரி, எது தவறு என்று புரியவில்லை. இதனால் அவர்கள்  கூட்டமைப்பையும் ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் அல்லது தமிழ் மக்கள் பேரவையையும் ஏற்கிறார்கள். கூட்டமைப்பில் இருப்பவர்களில் பலர் பேரவையிலும் உள்ளனர்.  இவர்களுக்குக் கூட்டமைப்பும் வேணும். பேரவையும் வேணும். இவர்களைப் பொறுத்தவரை கூட்டமைப்பும் சரி. பேரவையும் சரி. இதனால் கூட்டமைப்பிலும் ஒரு கால். பேரவையிலும் ஒரு கால். அதுவும் சரி. இதுவும் சரி.

அப்படியென்றால் எது சரி? எது பிழை? எதற்காக இரண்டு முகங்கள்? இரண்டு காட்சிகள்? இரண்டு அணிகள்?

இப்படித் தடுமாறக்கூடிய அளவுக்குத் தமிழ்த்தேசியத்தைச் சிதறடிக்கும் விதமாக இந்தச் சாதனையை கொழும்பு மிகச் கச்சிதமாக நிகழ்த்தி முடித்துள்ளது. முதலில் புலிகளைத் தோற்கடித்த சிங்களப் பெருந்தேசியவாதம், ஒட்டுமொத்தமாகவே தமிழர்களுடைய ஆயுதப்போராட்டத்தை  முடிவுக்குக் கொண்டு வந்தது.  அதற்கு முன்பு, ஆயுதப்போராட்ட இயக்கங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் மாற்றியெடுத்தது. புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈபிடிபி என அனைத்தையும் தன் வசப்படுத்தியது. 1980 களின் நடுப்பகுதியில் அரசுக்கும் சிங்களப்பெருந்தேசியவாதத்துக்கும் சவாலாக இருந்த ஈழவிடுதலை இயக்கங்களும் அவற்றின் தலைவர்களும், 1990 களில் அரசாங்கத்தின் தொட்டிலிலும் கட்டிலிலும் உறங்கும் நிலை வந்தது.  புலிகளின் தோல்விக்குப் பிறகு, இப்பொழுது தமிழ் அரசியல் தரப்பையும் அது தன்வசப்படுத்திஇ கஞ்சி குடிக்க வைத்திருக்கிறது.

இதேவேளை, இன்னும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுடன் இருப்பதாகத் தோற்றம் காட்டுகின்ற அணிகளாகிய கூட்டமைப்பும் தமிழ்த்தேசிய விடுதலை முன்னணி அல்லது பேரவையும் மூன்றாக மாறக்கூடிய நிலைமைகளே இப்போதுண்டு. சிலவேளை அதற்கும் அதிமாகச் சிதறக்கூடிய வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன. இங்கே இலங்கையில் மட்டுமல்ல, இலங்கைக்கு வெளியே புலம்பெயர் நாடுகளிலும் ஒரு மைய நிலைப்பட்டுச் சிந்திக்கின்ற, ஒன்றிணைந்து செயற்படுகின்ற நிலைமைகள் தென்படவில்லை. புலிகளை ஆதரிக்கின்ற சக்திகள் கூட இரண்டு, மூன்றாகப் பிளவுண்ட நிலையிலேயே உள்ளன. ஆகவே, மேலும் மேலும் துண்டுகளாக உடைந்து சிதறக்கூடிய நிலைமைகளே காணப்படுகின்றன. இதற்குக் காரணம், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்போர் அனைவரும் உணர்ச்சிகரமாகவே சிந்திக்கிறார்கள். அதற்கேற்பவே தமது அரசியலை முன்னெடுக்கின்றனர்.

ஆனால்இ உலகம் இன்று உணர்ச்சிகரமான விசயங்களுக்கு இடமளிப்பதில்லை. அது உணர்ச்சிகரமான விசயங்களை விட்டு அறிவுபுர்வமான உலகமாகி நீண்ட தூரம் பயணித்து விட்டது. இன்று நம் முன்னே உள்ளது முற்றிலும் அறிவுமயப்பட்ட உலகமே. அறிவே இன்றைய யுகம். அறிவே சக்தியாகி உள்ளது. அறிவினால் உருவாக்கப்பட்ட சக்தியே இன்றைய உலகத்தை ஆள்கிறது. ஆகவே, தமக்கான அரசியலை முன்னெடுப்பதற்குத் தமிழர்கள் முற்றிலும் அறிவுபுர்வமாகச் சிந்திக்க வேணும். அது முன்னெப்போதுமில்லாத ஒரு புதிய மாதிரி. தமிழ்ப்பண்பாட்டுக்கு புதிய விசயம். ஆனால், என்ன செய்வது, அதைப் பயிலத்தான் வேணும்.

இந்தச் சந்தர்ப்பதில் ஒரு உதாரணத்தைக் குறிப்பிடவேணும். தமிழ்த்தேசியச் சக்திகள் இன்று சந்தித்திருக்கும் நிலையானது, 1960, 1970 களில் பலமாக இருந்த இடதுசாரிகள் பின்னர் சிதறிக் கெட்டழிந்த நிலைக்கு ஒப்பானது. அதிகமதிகம் அரசியலைக் கற்ற இடதுசாரிகள் தம்மைப் பலவீனப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாகப் பலவீனப்படுத்துவதிலேயே தங்கள் காலத்தையும் சக்தியையும் செலவிட்டனர். இதன் விளைவாக, அவர்களின் அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. ஜனநாயகத்தையும் முற்போக்கையும் மாற்றங்களையும் பன்மைத்துவத்தையும் வர்க்க வேறுபாட்டிலுள்ள முரண்களைக் கையாள்வதற்கான அரசியலையும் முன்மொழிந்த இடதுசாரித் தத்துவம்இ எதிர்த்தரப்புக்கு எதிராகத் திரள்வதற்கான அடிப்படையை மறந்தது. எதிர்த்தரப்புக்கு எதிராகத் திரட்சியடைந்து, பலமாக வேண்டிய அணி தனக்குள் மோதிச் சிதறியது. இதனால், கடந்த நாற்பது வருடங்களாக இடதுசாரிகள் புறத்தியிலேயே நிற்க வேண்டியிருக்கிறது. மாற்று அணியாகவோ, மாற்றுக்குரலாகவோ தன்னைக் கட்டமைக்கும் நிலைக்கு இன்னும் அது வளர்ச்சியடைவில்லை. ஆனால், இடதுசாரிகளின் முன்மொழிவுகளும் அவர்களுடைய நிலைப்பாடுகளும் இதயமும் சிறப்பானவை. நியாயமானவை. இருந்தும் அது சக்தியாகப் பரிணமிக்கவில்லை. இதற்குத் தடையாக இருப்பது எது? எந்த விதி? மக்களை நேசிக்கின்ற, மக்களுடைய உணர்வுகளோடும் அவர்களுடைய பிரச்சினைகளோடும் கலந்திருக்கின்ற இடதுசாரிகள், மக்களிடம் செல்வாக்கைப் பெற முடியாமலிருப்பதும் வரலாற்றில் சக்தியாகத் திரளமுடியாமலிருப்பதும் எதனால்? இதற்கான காரணங்களை அவர்கள் இன்னும் பகுப்பாய்வு செய்து முடியவில்லை. குறித்துச் சொல்வதாக இருந்தால், தமக்கிடையில் முரண்படுவதிலும் வேறுபாடுகளை வித்தியாசப்படுத்திக் காண்பிப்பதிலும் மோதிக்கொள்வதிலும் காட்டும் அக்கறையை எதிர்த்தரப்பான வலதுசாரிய – அதிகார அரசியலை நோக்கிக் குவியப்படுத்துவதில்லை. 

இத்தகைய பலவீனமே தமிழ்த்தேசிய அரசியல் சக்திகளிடத்திலும் காணப்படுகிறது. தமிழ்த்தேசியமானது, தனக்குள்ளே ஜனநாயகத்தைக் கொள்ளவில்லை. கட்சி ஜனநாயகமும் சரி, கருத்தியல் ஜனநாயகமும் சரி, பொதுவெளிக்கான ஜனநாயகமும் சரி எல்லாமே மிக மோசமான நிலையிலேயே உள்ளன. இதனால்தான் தமிழ்த் தேசிய அரசியற் சக்திகளிடையே ஒரு பேராளுமை உருத்திரளவில்லை. இதனால், அந்த ஆளுமையின் குரலுக்குக் கட்டுப்படக்கூடிய, வழிப்படக்கூடிய ஒரு நிலைமை உருவாகவில்லை. இதுவே அங்கங்கே உள்ளவர்களெல்லாம் தமக்குத் தாமே முடிசூடிக்கொண்டு மகாராஜாக்களாக வீதி வலம் வரத் துடிக்கிறார்கள். இதைப்போலவே, பன்மைத்துவத்தைப்பற்றிய புரிதலையும் தமிழ்த்தேசிய சக்திகள் கொள்ளவில்லை. இன்றைய உலகம் பன்மைத்துவத்தையே ஆதாரமாகக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கிறது. இது தவிர்க்க முடியாத இன்றின் விதி. ஆனால், தமிழ்த்தேசியம் இதற்கு முரண்டு பிடிக்கிறது. அது தன்னைத் தனிமைப்படுத்தி, புனிதப்படுத்தி, சிறப்பாக வேறுபடுத்திக் காண்பிக்க விரும்புகிறது. இது காலமுரணானது. மட்டுமல்ல, இன்றைய உலக ஒழுங்குக்கும் வாழ்க்கை எதிர்வுகளுக்கும் எதிரானது. இத்தகைய நிலையினாலேயே தமிழ் மொழியைப்பேசும் முஸ்லிம்களையும் மலையத்தமிழர்களையும் கூடத் தமிழ்த்தேசிய சக்திகள் வென்றெடுக்க முடியாமல் போனது. மட்டுமல்ல, முஸ்லிம்களையும் மலையகத்தமிழர்களையும் சேர்த்திணைத்துக் கொள்ளவும் இயலவில்லை.

இப்படிச் சொல்லும்போது, “சிங்களத்தேசியவாதம் மட்டும் முற்போக்கானதா, அது மட்டும் முறையாக ஜனநாயகத்தைப் பேணுகிறதா? பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதா? என்ற கேள்விகளை இந்த இடத்தில் யாரும் எழுப்பலாம்? தமிழ்த்தேசியவாதம் எதிர்கொள்வதைப்போன்ற நெருக்கடிகளை சிங்களப் பெருந்தேசியவாதமும் உள்நாட்டிலும் வெளிமட்டத்திலும் எதிர்கொண்டவாறே உள்ளன. இதனால்தான் இலங்கையின் ஆட்சியை பிறத்திச் சக்திகள் வழிநடத்துகின்றன. மைத்திரியும் ரணிலும் கதிரையில் இருந்தாலும் அவர்கள் செயற்படுவது பிறத்திச் சக்திகளின் கட்டளைகளுக்கமையவே. தன்னிலையை இழந்த, சுயாதீனத்தை இழந்த  நிலையிலேயே இன்றைய இலங்கை உள்ளமை இதனால்தான்.

இதற்கும் ஒரு சிறப்பான உதாரணத்தைச் சொல்ல முடியும். 1980 களில் தமிழ்ச் சக்திகளின் பிளவுண்ட நிலையை அல்லது முரண்நிலைகளை இலங்கையும் சரியாகப் பயன்படுத்தி வெற்றிகண்டது. இந்தியாவும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. விடுதலைக்காலப் போராடிய இயக்கங்களும் கட்சிகளும் தமக்குள் முரண்பட்டுக்கொண்டிருப்பதைத் தனக்கு வாய்ப்பாக இந்தியா பயன்படுத்தியது. பின்னர் அப்படியே இலங்கை (கொழும்பு) பயன்படுத்திக் கொண்டது.

ஆகவேஇ சுருக்கமாகச் சொன்னால், தமிழ்த்தேசிய அரசியலானது பல வழிகளிலும் இன்று தன்னைப் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இதைவிட வர்க்கம், சாதியம், பிரதேசவாதம் என்ற எதிர்நிலைகள் வேறும் இதற்குள் உண்டு. ஆகவே, இவற்றையெல்லாம் எதிர்கொண்டு வென்றெடுக்கக்கூடிய சிந்தனைத்திறனுள்ள பேராளுமையின் வருகை நிகழும்வரையில் நம்பிக்கை எதுவும் புலப்படவில்லை என்றேன்.

நண்பர் கேட்டார். “அப்படியென்றால். தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசம் என்ற முக்கோண அரசியல் இணைவும் அதன் மூலமான செயற்பாடுகளும் எப்படியாக இருக்கும்? என.

“கற்பனைக்குதிரைகள் ஓடுவதுமில்லை. களைப்பதுமில்லை“ என்றேன்.

”அப்படியென்றால், இதற்கு என்ன செய்யலாம்?“ என்று கேட்டார் நண்பர்.

அரசியலை அறிவாகக் கையாள முற்பட்டால், வெற்றிகளைப் பெறலாம். குறிப்பாக இராஜதந்திரத்தைப் படிக்க வேணும். அதைக் கற்றுப் புரிந்து கொள்வதன் மூலமாக இதைச் சாதிக்கலாம். இலங்கையிலேயே ஏனைய சமூகங்கள், பல வருட காலமாக பல வழிகளிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களினால் சாதிக்க முடியாத பலவற்றை இராஜதந்திர ரீதியாக சாதித்திருக்கின்றன. இது நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இனவாத சக்திகளை கையாளும் விடயத்தில் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களுக்கும் நடவடிக்கைகளுக்கும்  முக்கியத்துவமளிக்காமல் அறிவு பூர்வமாகவும் இராஜ தந்திரமாகவும் இதனைக் கையாள வேணும். அதற்கு ஒருங்கிணைந்த ஒரு வேலைத் திட்டங்கள் தேவை" என்றேன்.

நண்பருடைய  முகத்தில் நம்பிக்கையின் ஒளி தெரிந்ததா என்று சரியாக உணர முடியவில்லை. இருந்தாலும் அவர் கைகளை இறுகப்பற்றி விடைபெற்றார்.

கருணாகரன்

நன்றி: தேனி இணையத்தளம்