Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இவர்களுக்காகவா…! (சிறுகதை)

வனிதாவிற்கு பெரிய அதிர்ச்சி…

கோபமும் வேதனையும் மனதினை வாட்ட, ஒரே குழப்பம். அவளால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. வீட்டுக்கு வந்ததும் உடுப்புக் கூட மாத்தாமல் கட்டிலில் வந்து விழுந்து விட்டாள்.

சாதாரணமாக அவள் வெளியிலே போவதில்லை. பல நாட்களுக்கு பிறகு நேற்றுத் தான் அம்மாவோடு ரவுனுக்கு போனாள். தீபாவளி வருகுது, நிவேதாவுக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டு வரலாம் என்று அம்மா கூப்பிட்டதால் தான் அவள் போனாள். பேசாமல் வீட்டில் நின்றிருந்தால் எதுவும் தெரிந்திருக்காது. எதையுமே கேட்டிருக்க வேண்டியதில்லை..! நல்ல வேளையாக அம்மா கேட்கவில்லை. அம்மா கேட்டிருந்தால் மனமுடைந்து போயிருப்பாள்.

 

ஏன் இவர்கள் இப்படி..? மனசே இல்லாத ஜடமாய் இருக்கிறார்கள். இவர்கள் மட்டும் தான் இப்படியா அல்லது மனிதர்களே இப்படித் தானா..?

பதினொரு வருடங்கள் ஐயா – அம்மா – நிவேதா எப்படி துடித்திருப்பார்கள் ! எனக்கு அப்போது பதின்நாலு வயது. நிவேதாக்கு ஆறு வயது. நிமிடத்துக்கு ஒருக்கா அக்கா, அக்கா என்று என்னையே உலகமென இருந்த பிஞ்சு மனது என்னைக் காணமல் எப்படி பதைத்திருக்கும்…? அவளை பிரிந்து செல்ல எனக்கு எப்படி முடிந்தது..?

ஐயா, அம்மா, நிவேதாவை திரும்ப பார்ப்பன் என்று நான் நினைத்திருக்கவில்லை. என்னை மறந்திருப்பார்கள் என்று எண்ணினேன். ஆனால் என்னை கண்டதும் ஐந்து வயது குழந்தையை கொஞ்சுவது போலை ஐயாவும் அம்மாவும் மாறிமாறி கொஞ்சியதும்.., விதமான உணவுகள் சமைத்து ஊட்டிவிட்டதும்..!

நிவேதா, இரண்டு மூன்று நாட்கள் சரியாக பேசவில்லை. கோபம்.. நியாயமான கோபம் தான்! ஆனால் இப்போது அவளுக்கு எல்லாம் நான் தான். இத்தனை நாட்களும் எப்படி தவித்திருப்பாள்.., எத்தனை இடம்பெயர்வு, எத்தனை பதுங்குகுளி..! இந்த பிஞ்சு மனம் எப்படி பயந்திருக்கும்..?

எனக்கு ஏன் இது புரியாமல் போனது. இந்த அன்பை மறந்து விட்டு செல்ல எப்படி என்னால் முடிந்தது?

அப்போது நான் எட்டாம் வகுப்பு. எங்கள் வகுப்பில் முப்பது மாணவர்கள். நானும் சுமதியும் முதலாம் வகுப்பில் இருந்து ஒரே வகுப்பில் தான் படித்தோம். சந்திரன் எட்டாம் வகுப்பில் தான் எங்களுடன் இணைந்தான். துடிதுடிப்பானவன் – மிகவும் பண்போடு அன்பாக பழகுவான். அவனுக்கு என்னையும் சுமதியும் பிடிக்கும். எங்களுக்கும் அவனை மிகவும் பிடித்திருந்தது. தகப்பன் டாக்ரர். வசதியான குடும்பம். இருந்தும் மிக எளிமையாக இருப்பான். திடீரென அவனுக்கு கிடைத்த தொடர்பு அவனை மாற்றியது. அவனோடு நெருங்கி பழகியதால் நானும் சுமதியும் அவனோடு சேர்ந்து கொண்டோம்.

அன்று எங்களோடு இருந்த உணர்வு தமிழீழம் மட்டும் தான். அதற்காக எதையும் இழக்க நாங்கள் தயங்கவில்லை. எங்கள் கண்களுக்கு தெரிந்தது சிங்கள ஆமி மட்டுமே…!

பதினொரு வருடங்கள்.., அதற்குள் எத்தனை இழப்புக்கள்..! இப்போது சந்திரனும் சுமதியும் என்னோடு இல்லை. இணைந்து சில வருடங்களிலேயே அவர்களை இழந்துவிட்டேன். அவர்களுக்கு பிறகு எத்தனை நண்பர்கள்.., எத்தனை தோழர் தோழிகள்..! ஒன்றாய் இருந்து – ஒன்றாய் சாப்பிட்டு – ஒன்றாய் படுத்தெழுந்து..! இப்போது யாரும் என்னோடில்லை.

எதற்காக எல்லாம்? இந்த மக்களுக்காகவா?

இயக்கத்தில் இருந்து வந்தால் கேவலமானவர்களா..? பெண்களை இப்படி கேவலமாக பேசும் இவர்களுக்காவா என் தோழிகள் சமாதியானார்கள்..! அன்று இவர்கள் காட்டிய மரியாதை தமிழீழத்திற்கு இல்லையா.., போராளிகளுக்கு இல்லையா.., வெறும் துப்பாக்கிகளுக்காகவா..? ஒவ்வொரு தாக்குதலின் வெற்றியையும் தங்களுடைய வெற்றியாக எங்கடை பொடியள்.. எங்கடை பிள்ளைகள் என்று புகழ்ந்து கொண்டாடியது எல்லாமே பொய்யானதா..? ….????

நம்பர்750 – பருத்தித்துறை வரை போய் வரும். கள்ளியங்காடு போக வேண்டுமானால் அந்த பஸ்ஸில் தான் ஏற வேண்டும். பஸ் வெளிக்கிட இருபது நிமிசமிருந்தது. வாங்கிய பொருட்களை தனக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டு அரிசி வாங்கி வரப்போன தாய்க்காக காத்துக் கொண்டிருந்தாள் வனிதா. பின்சீட்டிலே மூன்று பேர், முன்னுக்கு இரண்டு வயதானவர்கள் மட்டுமே பஸ்ஸில் இருந்தார்கள். பின்னுக்கிருந்த மூன்று பேரும், வீட்டில் இருந்து கதைப்பது போல் சத்தமாக கதைத்துக் கொண்டிருந்தார்கள். தங்களுக்குள் மெதுவாக பேசிக் கொள்கிறோம் என்ற நினைப்பு அவர்களுக்கு..! ஏதோ திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் திடீரென, ‘ கட்டுக் கடங்காத மாடாய் சுற்றி திரிஞ்சு போட்டு இப்ப வந்தால் எந்த பொடியள் ஓமெண்டுவாங்கள். இயக்கத்திலை எப்படி இருந்துதுகளோ.., எவனோட கிடந்துதுகளோ, யாருக்கு தெரியும்..? “ வனிதாவிற்கு மண்டையிலே பாறாங் கல்லை போட்டது போலிருந்து. றோட்டிலே இழுத்துப் போட்டு மிதித்துவிட வேண்டும் போல் இரத்தம் சூடேறிக் கொள்ள, திரும்பி ஒரு பார்வை பார்க்க தாயும் பின் வாசலில் கால் வைத்து ஏறிவர சரியாக இருந்தது. இதுகள் பேசுவது அம்மாவிற்கு கேட்டு விடுமோ என்ற பயத்தில் பொருட்களை தூக்கி கொண்டு முன் வாசலோடு இருந்த சீட்டுக்கு சென்றாள். ஏதோ புரியாத உணர்வு அவள் உடலிலே பாய்ந்து நரம்புக்குள் ஊர்ந்து கொண்டிருந்தது. கண்களிலே கலக்கமும் ஆவேசமும் பொங்கி வருவதை உணர்ந்த வனிதா தன்னை கட்டுப்படுத்தியவாறு தாயை உட்கார வைத்து அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

குடும்பம்.., சொந்தங்களை எல்லாம் இழந்து காடுகளிலே அனாதைகளாக தவித்த அந்த நாட்கள்.., நிலவைப் பார்த்து கண்ணீர் வடித்த அந்த இரவுகள்.., ஒவ்வொரு நாட்களும் மண்ணுக்குள் புதைந்து கொண்டிருந்த உயிர்களை பார்த்து கண்ணீர் சிந்திய அந்த கரிய நாட்கள் ஒவ்வொன்றும் அவளது நினைவுக்கு படமாக வந்து போனது. தமிழர்களை அடக்கி ஒடுக்கும் இந்த சிங்கள அரசிடமிருந்து எங்கள் தமிழ் மக்களை மீட்க வேண்டும். எங்கள் மக்கள் சொந்தமண்ணில் சுதந்திரமாக வாழ தமிழனுக்கு என்றொரு தனிநாடு வேண்டும் என்ற கொள்கைக்காக, எங்கள் சோகங்களை எல்லாம் துப்பாக்கிக்குள் மறைத்துக் கொண்டோமே..!!!

நாங்கள் நேசித்தது இந்த மண்ணையும், இந்த மக்களையும் தானே..!

உயிரோடு திரும்புவது நிச்சயமில்லாத போதும் தாக்குதலுக்கு செல்கையில் சிரித்த முகத்தோடு அக்கா நாங்கள் போய் வருகிறோம் என்று சொல்லிவிட்டு சென்று திரும்பி வராமலே போன பிஞ்சு உயிர்கள் எத்தனை.., நாளை நாங்கள் சாகப் போகிறோம் என்று தெரிந்தும் எந்த வருத்தமும் இல்லாமல் சிரித்து விளையாடி தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்ட கரும்புலிகள் தான் எத்தனை..!

தமிழீழம்.. தமிழீழம்.. என்ற தங்களை மாய்த்துக் கொண்ட இத்தனை ஆயிரம் உயிர்களின் எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றதா.., எங்கள் மக்கள், எங்கள் சகோதரர்கள் என்ற நினைப்பு பொய்யானதா..?

இத்தனை வருடங்களுக்குள் எத்தனை மாற்றங்கள் அந்த வன்னி மண்ணுக்குள் நடந்து முடிந்தது. இன்று அந்தமண் எங்கள் மண் இல்லை என்றாகிவிட்டது. ஆனால் இந்த மக்கள் எதுவுமே நடக்காது போன்று இருக்கின்றார்களே இவர்களுக்கு இது எப்படி முடிகின்றது..? போராளிகளை இந்தளவு மட்டமாக பேசும் இவர்கள் எனது மக்களா?

அன்று இருந்த உலகம் வேறு – சுயநலத்தினை மறந்து மற்றவர்களை நேசித்த மனிதர்களின் உலகம். அந்த பச்சிலைகளை போன்று பசுமையான உள்ளங்கள் வாழ்ந்த உலகம். இது முற்றிலும் மாறுபட்ட உலகம் – மனச்சாட்சியினை தொலைத்து விட்ட சுயநல மனிதர்களின் உலகம். இவர்களோடு எப்படி நான் கலந்து கொள்ள முடியும்…???
நானும் எனது தோழர்களோடு போயிருக்க வேண்டும். எதற்காக வாழ ஆசைப்பட்டேன்..,

‘……” மறைந்து கிடந்த நினைவுகள் வனிதாவின் உயிரை வாட்ட கட்டிலை விட்டெழுந்தாள். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது..! நிவேதாவும் ஐயா அம்மாவும் அவள் நினைவில் வர எழுந்து அடுப்படிக்கு சென்றாள். அங்கு புட்டு கொத்திக் கொண்டிருக்கும் தாயை பார்த்ததும் அவசரமாக தரையில் விழுந்து தாயின் மடிக்குள் முகத்தினை புதைத்துக் கொண்டாள். தன் தாயின் இடுப்புச் சேலை இடைவெளிக்குள் தன்னுடைய பூமியை பார்த்தாள். இது என்னுடைய பூமி. எனக்கு மட்டுமே சொந்தமான பூமி. மீண்டும் அதற்குள் புதைந்து விட வேண்டும் போலிருந்தது… கண்கள் முட்டி அது கணப்பொழுதில் விம்மலாக வெடித்துக் கொண்டது. தாயின் கைகள் அவளை பற்றிக் கொள்ள அவளும் தாயை இறுகப் பற்றிக் கொண்டாள்…! அந்த அரவணைப்பின் இறுக்கத்தில் மனதின் சுமை சற்று தளர்ந்து கொண்டது.

‘எதற்காக அழ வேண்டும் – என் கண்ணீர் எதை மாற்றிவிடப் போகிறது..?  போரிலே கைகால்களை இழந்து ஊனமுற்ற வாழும் பெண் போராளிகள் எத்தனை – கணவன்மார்களை இழந்து வாழும் இளம் விதவைப் பெண்கள் எத்தனை, …வாழ வேண்டும்..! இந்த ஊனமுற்ற சமூகத்தினை மாற்றியமைப்பதற்காக நான் வாழ வேண்டும் – எங்களுக்குத் தேவை தமிழீழம் இல்லை, எந்த அடக்குமுறைகளும் இல்லாத ஒரு சமுதாயம்…!”

புதிய உணர்வும், நம்பிக்கையும் மனதிலெழ தாயின் மடியைவிட்டு மெல்ல எழுந்து கொண்டாள் வனிதா..!

-தேவன்