Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வேலை அழுத்தத்தால் அவதியுறும் ஜரோப்பிய மக்கள்…!

உலகம் இயந்திரமயமாகிவிட்டது. பூமி தன் இயற்கை சக்தியிiனை இழந்து இயந்திரத்தால் இயக்கப்பட வேண்டி நிலமைக்கு வந்து கொண்டிருக்கிறது. பொருளுக்குள் வாழ்தல் தான் உலகமாகிவிட்டது. இந்த பொருளுக்காக அலையும் முதலாளித்துவம். இயந்திரமயமகாக்குதல், நவீனத்துவம், உலகமயமாக்குதல் … இப்படியே புதிய புதிய திட்டங்களையும் மாற்றங்களையும் திடீர் திடீரென உருவாக்கி, தனது உச்சலாபத்தினை நோக்கி தன்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இயந்திரங்களோடு பழகிப்பழகி மனிதர்களையும் இயந்திரமாகவே பார்க்கின்றது இந்த முதலாளித்துவம்.

இது தன்னுடைய அதி உச்ச இலாபத்தினை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தன்னை நகர்த்திக் கொண்டு வருவதால் தொழிலாளர்களின் எந்த நலனையும் பற்றி கவலைப்படுவது கிடையாது. மாறாக அவர்களின் உழைப்பினை எந்த அளவிற்கு சுரண்ட முடியுமோ, அந்த அளவிற்கு சுரண்டியே தன்னுடைய இலாபத்தினை பெற்றுக் கொள்கிறது. ஆனால் சாதாரண உழைக்கும் அப்பாவி மக்களோ தங்கள் உழைப்பிற்கோ, தேவைக்கோ ஏற்ற வருமானமின்றி தங்களுடைய அன்றாட வாழ்க்கையினை கொண்டு இயக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். நாளாந்தம் உணவுப் பொருட்கள், எரிபொருள், வீட்டுவாடகை போன்ற அன்றாட வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து கொண்டே போகிறது. ஆனால் சம்பளம் உயர்வதாகவில்லை, ஒழுங்கான தொழில் இல்லை. திடீரென வேலையினால் நிறுத்தப்படுகின்றார்கள். செய்யும் தொழில் எவ்வளவு காலம் நிரந்தரம் என்பது நிச்சயமில்லை இப்படி பல பிரச்சனைகளோடு வாழ்க்கையினை ஓட்ட வேண்டியுள்ளது.

 

 

இன்று  ஜரோப்பிய மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் என்றுமில்லாத அளவிற்கு பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தொழில் கிடைப்பதென்பது இன்று குதிரைக் கொம்பு போலாகிவிட்டதினால் உழைப்பின்றி, போதுமான வருமானமின்றி பொருளாதார நெருக்கடியினால் தினம் தினம் மக்கள் போராட வேண்டியுள்ளது. உலகப் பொருளாதரத்தின் வீழ்ச்சி சிறுசிறு பிரச்சனைகளை அனுபவித்து வந்த இந்த மக்களுக்கு எதிர்கொள்ள முடியாத அளவிற்கு பாரியதொரு துன்பச் சூழலினை உருவாக்கிவிட்டுள்ளது. பல தொழிற்சாலைகளிலும், சிறு வேலைத் தலங்களிலும் பலவருடங்களாக வேலை பார்த்து வந்த அனுபவமிக்கவர்கள் வேலையால் விலக்கப்பட்டு குறைந்த சம்பளத்தில் புதியவர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இதனால் கல்வித்தகமை, தொழில் அனுபவம் கொண்டு ஒரு துறை சார்ந்து தொழில் புரிந்து வந்த பல தொழிலாளிகள் அவர்களின் கல்விக்கோ, அனுபவதிற்கோ சம்பந்தமில்லாத முற்றிலும் மாறுபட்ட ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதுவும் 50, 55 வயதினைத் தாண்டிவிட்டால் அனேகமான வேலைத் தலங்கள் அவர்களை வேலையில் சேர்ப்பதில்லை. ஆனால் அரசோ தன்னுடைய சேமிப்பையும் இலாபத்தினையும் கருதி ஓய்வூதியம் பெறுவதற்கான வயதின் எல்லையினை கூட்டிக் கொண்டே போகிறது. இளவயதில் குறுகிய காலத்தில் மாடாக உழைத்து தேய்ந்துவிட்ட மனிதன் 50, 55 வயதெல்லையினை தாண்டி தொழில் புரிய முடியாது இயங்க முடியாது சக்தி இழந்த மனிதனாக நோயாளி ஆக்கப்படுகிறான். தன்னுடைய குடும்பம் குழந்தை குட்டி என்ற இறுதிக் காலத்தினை அமைதியாக கழிக்க வேண்டிய மனிதன் எந்தவித ஆதாவுமின்றி வயது மீறிய சுமைகளுடன்  துன்பத்தை அனுபவித்தபடியே மரணித்துப் போகிறான்.

 

ஆனால் முதலாளித்துவமோ தன் உற்பத்தியினையும், இலாபத்தினையும் பெருக்கிக் கொண்டே போகிறது. குறைந்த கூலியிலே கூடிய இலாபத்தினை பெருக்கிக் கொள்ள ஆசியா போன்ற பின் தங்கிய நாடுகளிற்கு தங்களின் உற்பத்திகளை இடம் மாற்றிக் கொண்டு வருகின்றது. மிதமாக உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளும், வேலைத் தலங்களும் தங்களின் இலாபம் கருதி போலந்து போன்ற பின் தங்கிய நாடுகளில் இருந்து வேலை தேடி வருபவர்களுக்கு முதலிடம் கொடுப்பதால், அந்த நாட்டு மக்கள் தங்கள் சொந்த நாட்டிலே வேலை வாய்ப்பு இல்லாமல் மிகவும் சிக்கலான சூழலிற்கு தள்ளப்படுகிறார்கள். இதை மீறி வேலை செய்பவர்களும் இதுவரை அவர்களிற்கு கிடைத்த அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து எதையும் எதிர்த்து வாதிட முடியாதவர்களாக அடிமைகள் போல் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஏதாவது எதிர்த்துப் பேசினால் வேலையைவிட்டு நீக்கி விடுவார்கள் என்ற பயத்தினால் எல்லா கஸ்டங்களையும் தங்களுக்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டு தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய அரசுகளினதும், முதலாளிகளினதும் இந்த நவீன அடிமை அடக்கு முறையின் போக்கினால் மக்கள் பல மன அழுதங்களுக்கு உட்படுத்தப்பட்டு நோயாளிகள் ஆக்கப்படுகின்றார்கள். இந்த மன உளைச்சல் பலரை குடி, போதைவஸ்த்து போன்ற தவறான பழக்கங்களுக்கு நிரந்தரமான அடிமைகளாக்கிவிடுகின்றது. இது மக்களின் நாளாந்த வாழ்க்கையினை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றது. முதலாளித்துவத்திற்கு குடை பிடிக்கும் ஐரோப்பிய அரசு தங்கள் நாட்டினை சொர்க்க பூமியாக வெளிக்காட்டிக் கொண்டு உள்ளுக்குள் பொருளாதார ரீதியாக ஆட்டம் காண ஆரம்பித்துள்ளன.

 

 

மக்களின் நாளாந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாத இந்த அரசுகள் தங்களுடைய இயலாமையினை பல வழிகளில் நியாயபப்படுத்தி வருவதோடு சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் வழங்கி வந்த பல அடிப்படைச் சலுகைகளை குறைப்பதன் மூலம் அல்லது நிறுத்துவதன் மூலம் அந்த மக்களை தன் அதிகாரத்தினால் அடக்கி ஒடுக்கி வருகிறது.

 

1.  வேலை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வந்து உதவித் தொகையின் காலத்தினை குறுக்கி வருகின்றது.

 


2. குடும்பங்களுக்கு வழங்கப்படும் குழந்தைகளுக்கான உதவித் தொகை குறைக்கப்படுகிறது.


3. கல்விக்காக வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்தி வருகிறது.


4. மருத்துவ நிலையங்கள், மருத்துவம் போன்ற அவசிய தேவைகளினை மறுக்கும் வண்ணம், பல மாற்றங்களை செய்து வருகிறது.


 

5.ஓய்வூதியத்திற்கான வயதெல்லையினை அதிகரித்தல், வயோதிபர் பராமரிப்பிற்கான சலுகைகளை நிறுத்தி பாரியமாற்றங்களை கொண்டுவருதல்…

 

இப்படி பலவிதமாக மக்கள் மீது சுமையை சுமத்தி வருகிறது. போராடிப் பெற்ற உரிமைகள், மக்கள் உழைப்பிலான வரிப்பணத்தின் உருவான சமூக நலத்திட்டங்கள் வெட்டப்படுகின்றது. அரசின் பொருளாதார நெருக்கடியும், சில கூட்டுக் கட்சிகளின் மறைமுகமான இனவாதக் கண்ணோட்டமுமே இணைந்து, இந்த சமூக நலவெட்டுகளை கூர்மையாக்கி முன்னெடுக்கின்றது. வெளிநாட்டவர்களுக்கு குழந்தைகளின் தொகை கூட, மற்றும் கூடுதலான வெளிநாட்டவர்கள் வேலை செய்யாமல் உதவித் தொகையிலேயே வாழ்கிறார்கள் என்ற இனவாத கருத்துக்கள் இங்கு இதன் பின் மறைமுகமாக மேலோங்கி நிற்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அனைத்து மக்களுமே. எதிர்கட்சிகள், சில சிறிய கட்சிகள் அரசினுடைய இந்த முடிவுகளை எதிர்த்தாலும், அரசு பெருமுதலாளிகளின் கைப்பொம்மையாக இயங்கிவருவதால் மற்றைய கட்சிகளின் எதிர்ப்புக்களோ, சரியான திட்டங்களோ, கருத்துக்களோ ஓரம் தள்ளப்படுகிறது.

 

இத்தனை பாரிய பிரச்சனைகளுக்கு மத்தியிலும் சாதாரண மக்கள் கிடைக்கிற ஏதாவது ஒரு வேலையினைக் கொண்டு காலத்தினை ஓட்டலாம் என்ற எதிர்பார்ப்போடு வேலைக்கு சென்றால் அதிலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறைந்த நேரத்துக்குள் கூடிய வேலை செய்ய வேண்டி நிர்ப்பந்திக்கப்படுவதும், இருவர் செய்து வந்த வேலையினை ஒருவரே செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படுவதும், தொழிற்சாலைகளில் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. எந்தளவிற்கு ஒரு தொழிலாளியிடமிருந்து அவனது உழைப்பினை சுரண்ட முடியுமென்பதே முதலாளியின் கொள்கையாக இருப்பதால் தொழிலாளர்கள் தினமும் செத்துப் பிழைக்கின்றார்கள். இயந்திரதிற்கு இணையாக ஈடு கொடுத்து வேலை செய்யும் படி முதலாளித்துவம் தொழிலாளர்களை நிர்ப்பந்தித்து வருகிறது. கிடைத்த வேலையினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற தேவையினால் ஒவ்வொரு தொழிலாளர்களும் கஸ்டத்தினையும் பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வேலையினைத் தக்க வைக்க வேண்டியுள்ளது.

 

 

இந்த வேலை அழுத்தம், குடும்பப் பிரச்சனைகள், வெளிப் பிரச்சனைகள் எல்லாம் சேர்ந்து நாளடைவில் மனிதனுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தி விடுகிறது. பலபாரிய கடுமையான நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக அமைவது இந்த மனஅழுத்தம் தான். இதனால் நிரந்தர மனஅழுத்தம், இரத்த அழுத்தம், வயிற்றுப் புண், … போன்ற கொடிய வியாதிகள் வந்த விடுகின்றன. அதைவிட மூட்டுவலி, முதுகுவலி, இடுப்பு வலி, சதைப்பிடிப்பு, கால் வீக்கம், முழங்கால் வலி என்பன மனிதனின் அன்றாட வாழ்வில் தலையிடி காய்ச்சல் போன்று சாதாரணமாகிவிட்டது. இன்று ஏதாவது ஒரு பாதிப்பு இல்லாத மனிதனைக் காண்பதரிது.

 

முதலாளித்துவம் பணத்தினை மீதப்படுத்துவதற்காக தொழிலாளர்களுக்கு அவசியமான பாதுகாப்பு உபகரணங்களுக்கான, பாதுகாப்புச் சூழல் போன்ற அவசிய தேவைகளைத் தவிர்த்து தனது இலாபத்தினை பெருக்கி கொள்கிறது. இதனால் பலர் தொடர்ந்து தொழில் புரிய முடியாமல் நிரந்தர நோயாளி ஆகிவிடுகின்றனர். இது குடும்பத்தில் பாரிய பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்துகின்றது. சுகவீனமுற்றவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்டு வந்த  உதவிப் பணத்தின் கால எல்லை குறைக்கப்பட்டு வருவதால் நாளடைவில் எந்தவித வருவாயுமில்லாது பலர் சிரமப்பட வேண்டியுள்ளது. அல்லது வருத்தத்தினையும் பொருட்படுத்தாது தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலமைக்கு தள்ளப்படுகின்றார்கள். இது இன்று ஐரோப்பிய மக்களின் சாதாரண வாழ்வாகிவிட்டது. பழக்கப்பட்டுப் போனாலும் பாதிப்பு பாதிப்புத் தானே.

 

 

ஐரோப்பிய  முதலாளிவத்தின் இந்த சுரண்டல் கொள்கையினைத் தான் உலக மயமாக்குதல் என்ற பெயரிலே மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றார்கள். இதனால் பாதிப்புக்கு உள்ளாவது ஐரோப்பிய மக்களின் நாளாந்த வாழ்கையே. சீனா, இந்தியா, இலங்கை… போன்ற நாடுகளில் இந்த முதலாளிகள் முதலீடு செய்வதால் அந்த நாட்டின் வளங்கள் அழிக்கப்படுகின்றன. அந்த மக்களை சொந்த உழைப்பு எதுவுமற்ற கைக் கூலிகளாக மாற்றி முதலாளித்துவத்தின் அடிமைகளாக்கி அவர்களின் உடல் உழைப்பினை சுரண்டி ஒன்றுமே இல்லாத பரதேசிகளாக அந்த மக்களை நடுத் தெருவில் விடுவதே இந்த முதலாளித்துவத்தின் செயற்பாடாகும். இதனால் இலாபம் அடையப் போவது உலகப் பெருமுதலாளிகளும் அரசியல்வாதிகளுமே ஒழிய சாதாரண மக்களல்ல.

 

இலங்கையினைப் பொறுத்த வரையில் சிங்கள அரசினால் ஆக்கிரமிக்கப்பட்ட எங்கள் மக்களுடைய வன்னிவளங்களின் பெரும் நிலப்பகுதி இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளை இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு தாரைவார்க்க இலங்கை அரசு தயாராகவுள்ளது. முட்கம்பி வேலிகளுக்குள் அவதியுறும் வன்னி மக்களை அவர்களது மண்ணிலே குடியமர்த்துவதில் இலங்கை அரசு பல இழுத்தடிப்புகளை செய்து வருகிறது. அவர்களுடைய நிலம் அந்த மக்களிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வன்னி மக்களை முழுமையாக  அவர்களுடைய சொந்த மண்ணிலே சுயமாக விவசாயம் புரிய அனுமதிக்க வேண்டும். உலகமயமாக்குதல் என்ற பெயரில் மக்களை தினமும் கைக் கூலிகளாக மாற்றி, தங்கள் அடிமைகளாக்கி, அவர்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கும் அரசியல்வாதிகளின் கொள்கையினை மக்களாகிய ஒவ்வொருவரும் இனங்கண்டு ஒன்றுபட்டு அதனை எதிர்த்து குரல் கொடுப்பதன் மூலம் தான் இந்த சுரண்டல் அமைப்பிலிருந்து எங்களை மீட்டுக் கொள்ள முடியும். எங்கள் வருங்கால சந்ததியினரிற்கும் சந்தோசமான ஆரோக்கியமான வாழ்வினை அமைத்துக் கொடுக்கலாம்.

தேவன்.

2/06/2011