Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

இனியொரு விதி செய்வோம் – பகுதி 09

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து மேலும் பேசுவதற்கு பலவிடயங்கள் உள்ளன. சென்ற தடவை, விமர்சனத்துக்குரியன பற்றி இனிப் பேசலாம் எனக் குறிப்பிட்ட போதிலும் இலங்கையில் பத்திரிகைகள் அதன் வெற்றி குறித்து தொடர்ந்து எழுதிவந்தமையைக் கவனத்திற் கொள்ளாமல் போக இயலவில்லை. ஜனவரி 23ம் திகதிய பத்திரிகைகளில், அது குறித்த கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.  தினக்குரல் தொடர்ச்சியாக மாநாடு குறித்து முழுமையான விவரணத்தைத் தந்திருந்தது.

 

பத்திரிகை விமர்சனங்கள்!

தினகரனில் மானா மக்கீன் எழுதிய முழுப் பக்கக் கட்டுரையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் பெருமளவில் பங்கேற்று, ஒருவகையில் முஸ்லிம் மாநாடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டார். மீள்பார்வை ஜனவரி 21 வெளியீட்டில் வெற்றிகரமான மாநாடு எனச் சிலாகித்திருந்த ஒரு கட்டுரையும் முஸ்லிம் பங்கேற்பு முழுமாநாட்டில் 40 வீதமாக அமைந்திருந்ததாகக் கூறியிருந்தது. முந்திய மீள்பார்வையில் மாநாடு முஸ்லிம் எழுத்தாளர் பிரச்சனைகளைப் புறக்கணிப்பது பற்றி எழுப்பப்பட்ட சந்தேகங்கள் நிவர்த்திக்கப்பட்டிருந்ததாலேயோ என்னவோ, மாநாட்டுக்குப் பிந்திய இந்த மீள்பார்வையில் எதிர்நிலைக் கட்டுரை எதுவும் இடம்பெறவில்லை.

முஸ்லிம் பங்கேற்பாளர்கள் முழுநிறைவாக செயலாற்றியதோடு மாநாட்டு தொடக்க அரங்குகளில் முன் வைக்கப்பட்ட விமர்சனங்களைக் கையேற்றுத் தொடர்ந்த அமர்வுகளில் திருத்தப்பட்ட நடைமுறை காரணமாக எதிர் நிலை விமரிசனங்களுக்கு அவசியமில்லாமல் போய்விட்டது எனலாம். எமது கவனிப்புக்குரியதான “நலிவுற்றோர் இலக்கியம் பொதுமக்களிடையே போதிய கவனிப்பைப் பெற்றுள்ளதா? ” என்ற கருத்தரங்கு அமர்வில் இது குறித்து சிறு சலனம் எழுந்ததுண்டு. அதே வேளை, வேறு அரங்குகளில் முஸ்லிம் பிரச்சனை பேசப்பட்டதாக சமாதானம் பெறப்பட்டது.

அவ்வாறே, பெண்ணியப் பிரச்சனை,  உழைக்கும் மக்கள் இலக்கியம் என்பன வேறு அரங்குகளின் அக்கறையாக இருந்தததுண்டு. பெண், அடிநிலை உழைப்பாளர், சிறுதேசிய இன நெருக்கடிக்குள்ளாகும் முஸ்லிம் – மலையகம் போன்ற பிரச்சனைகள்  வேறு அரங்குகளில் பேசு பொருளாக இருந்துள்ள நிலையில் இங்கு “நலிவுற்றோர் இலக்கியம்” எனப்படுவது எதனை?.  இக் கேள்வியையே அரங்கின் தலைவரான முதுபெரும் எழுத்தாளர் தெணியான் எழுப்பியிருந்தார்.

விடுபட்ட தலித்பிரச்சினை!

விடுபட்டுப் போன ஒரு பாரிய பிரச்சனை தலித் இலக்கியம் பற்றியதாகும். அதனைப் பேசுபொருளாக ஆக்க விரும்பாமல் தப்பியோடும் மனப்பாங்கையே,  இந்தத் தலைப்பின் போலித்தனம் காட்டுகிறது.  டானியல், டொமினிக்ஜீவா, தெணியான் போன்ற சில படைப்பாளிகளைக் கௌரவப் படுத்துவதால் மட்டும் தலித் பிரச்சனை இல்லாமல் போய்விட்டது எனக்கூறிவிட முடியாது.

இந்த மாநாட்டு அமர்வுகளிலேயே ஒன்றை அவதானிக்க முடிந்தது. இலங்கை எழுத்தாளர்களது அமர்வுகளுக்கான ‘பனர்கள்’ அனைத்தும் கவர்ச்சியாக அச்சடிக்கப்பட்டிருந்த போது, டானியல் அரங்கக்கானது மட்டும் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. ‘நலிவுற்றோர்’ எனும் இந்த அரங்குக்கான அச்சுப்பதிவு ‘நலிவுள்ள’ என்று இருந்தமையினால் நலிவுற்றோராக்கப்பட்டுள்ளதை இங்கேயும் பார்க்கிறோம். இவையெல்லாம் நலிவுள்ள மனங்களையே காட்டுகின்றன.  இவை தெணியான் முன்வைத்த தலைமையுரைக் கருத்துக்கள் சில.

கருத்தரங்க உரையாளர்களில் ஒருவர் மட்டும், தலித் பிரச்சனையென்று எதுவும் இல்லை என்று பேசினார். முன்னேற வேண்டியது தானே எனப் பேசினார். இருவரது உரைகள் மட்டும் அடிப்படைப் பிரச்சனைகளைத் தொட்டு, அடிப்படையில் தலித் இலக்கிய அவசியங்களை வெளிப்படுத்தினர் (அவர்கள் இருவரும் மலையக ஆய்வாளர்கள் என்பது கவனிப்புக்குரியது). ஏனையவர்கள் தலைவர் எழுப்பிய அடிப்படைப் பிரச்சனைகளை ஏற்றுக்கொண்ட போதிலும் தலித் நெருக்கடியின் மையத்தை நெருங்கவியலாதவர்களாயிருந்தனர்.

இலங்கையில் சாதியத் தகர்வுப் போராட்டம் தீர்க்கமாக நடந்தநிலையில், தமிழின் தலித் இலக்கிய முன்னோடியாக டானியல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சூழலில் நாம் தலித் இலக்கியம் குறித்து விவாதிக்காது இருந்துவிட முடியாது எனும் கருத்தே இறுதியில் கருத்தாடல் அரங்கின் அடிப்படை அம்சமாயிற்று. இதனால் சபையோர் குறிப்புரையில் முன்னர் குறிப்பிட்ட உபதேசி சோர்வுற்றார். அத்தகைய ஒரு நிலையிலேயே புலம்பெயர் அரங்குகளில் தலித் பிரச்சனை பிரதான பேசுபொருளாக இயலுமாகியுள்ளமை பேசப்பட்டது.

தலித்தியம் பேசும்பொருளான விடயமாக்கப்படவில்லை!

தலித் பிரச்சனை ஒரு விடயமேயில்லை என்பதற்கு சபையோர் குறிப்புரையில் கவிஞர் ஒருவர் தலைவர் உரையியிலிருந்து ஆதாரத்தை எடுத்திருந்தார். தெணியான் சிகையலங்கார நிலையம் (சலூன்) மூடப்படும் நாட்களில் எப்போதாவது ஒரு சவரத்தொழிலாளர் ஒருவர் தனது வீட்டுக்கு வந்து தனது முடியையும் பேரப்பிள்ளைகளது முடிகளையும் வெட்டுவது பற்றி பேசியிருந்தார். அப்போதான் உரையாடலில் நட்பு ரீதியாக அந்த சவரத் தொழிலாளி முன் வைத்த கருத்துத் தான் பிரதான பேசுபொருள்.

எதிர் வழக்காடிய கவிஞருக்கு இது தான் வலுவான எதிர்த்தாக்குதல் விடயமாயிற்று. சாதியத் தகர்ப்புப் போராட்டங்கள் இடம் பெற்ற போது வீடுகளுக்கு வந்து தொழில் செய்யமாட்டோம், எங்கள் கடைகளுக்கு வாருங்கள் என்ற விடயம் முதன்மை நிலைபெற்று வெற்றிகொள்ளப்பட்டது. இன்று அந்தத் தொழிலாளியை வீட்டுக்கு வரச் செய்து தலைவரே அந்தப் போராட்டத்துக்கு எதிரியாகிச் சாதி பேணுபவராகிவிட்டார் என்பது அந்தக் கவிஞரின் குற்றச்சாட்டு. இது பெரும் விவாதப் பொருளாகிவிடவில்லை. இருப்பினும் கவிஞருக்குத் தாம் வலுவான தாக்குதலைத் தொடுத்ததான ஒரு மிதப்பு இருந்ததை அவதானிக்க முடிந்தது. அவரளவில் சாதிப் பிரச்சனை அப்படியொன்றும் கவனிப்புக்குரியதல்ல என்பதற்கு இது வலுவான ஓர் ஆதாரம்.

சாதிய இழிவுக்கு எதிராக வீடுகளுக்கு வந்து தொழில் செய்ய மாட்டோம் என்ற போராட்டம் பூரண வெற்றி. இன்று எவரும் சாதிய அவமதிப்போடு வீட்டுக்கு வந்து அந்தத் தொண்டூழியம் செய்யும்படி வற்புறுத்தவும் இயலாது. அத்தகைய சூழலில் எவரும் போகப் போவதும் இல்லை. ( மறைந்து போய் இன்றைய இந்தத்துவ எழுச்சியில் மரணச் சடங்குகளில் சில விரும்பத்தகாத நடத்தைகள் தலைகாட்டுகின்றன.  அதற்கு எதிரான இயக்கம் அவசியம் – ஆக, பிரச்சனை உள்ளது).

தெணியான் சாதிய அவமதிப்புக்குரிய நிலையில், அந்தத் தொழிலாளியுடன் தொடர்பாடவில்லை. முற்றிலும் சமத்துவ நிலையிலும், ஒருவருக்கு ஒருவர் உதவி என்ற வகையிலும், அந்த உறவு அமைந்ததை அவர் குறிப்பிட்டிருந்தார். கடை பூட்டப்பட்ட நிலையில், ஒரு வருமானம் அந்தத் தொழிலாளிக்குக் கிடைக்கிறபோது, பேரப்பிள்ளையைக் கடைக்கு அழைத்துப் போக இயலாத தனது நிலையை ஏற்று அத்தொழிலாளி தனக்கு உதவியமையையே தெணியான் குறிப்பிட்டிருந்தார். பொது நிலையில் தலித் பிரச்சனை பேசுபொருளாக முதன்மை பெற்றாக வேண்டும் என்பது வலுப்பெற்றமையால் இவ்விடயம் பெரும் விவாதமாகவில்லை.

ழுங்கைமைப்பின் தவறு!

முழுமையான மாநாட்டு ஒழுங்கமைப்பில் இருந்த இந்த விடுபடல் மிகுந்த கவனிப்புக்குரியது. இது வெறும் தப்பியோடல் அல்ல. இந்த மாநாட்டை புலம்பெயர் நாடுகளின் மற்றும் தமிழக புலி ஆதரவாளர்கள் வன்மையாக எதிர்த்த போதிலும் இலங்கையின் தமிழ்த் தேசியர்களில் மிக மிகப் பெரும்பான்மையினர் ஆதரித்துப் பங்கேற்றிருந்தனர். இங்கே புலிவாலைப் பிடித்த போலிப் புரட்சி வேசம் பூண்ட உதிரிக்கூட்டுக் கட்சியொன்று ஈனஸ்வரத்தோடு எதிர்ப்பைத் தெரிவித்த போதும், முற்போக்கு சக்திகளும் தமிழ்த் தேசிய சக்திகளும் மிக ஆரோக்கியமான முறையில் ஜக்கியப்பட்டு இம் மாநாட்டை வெற்றிகரமாக்கினர்.

ஆயினும், தமிழ்த் தேசியர்கள் இன்னமும் முற்போக்கு அடிப்படைகளை உள்வாங்க முனையாமல் அதற்கு எதிர் நிலைப்பாட்டையே தமக்கான உயிர்ப்பென ஏன் கருதுகின்றனர்?.  புலம் பெயர் ஆதிக்க வாதத்தை நிராகரித்த போதிலும் – இங்குள்ள யதார்த்தத்தை உள்வாங்கிய போதிலும் – ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேசியப் பிரச்சினையை இனங்காண இன்னும் மனம் இடம் தரவில்லையா?

(தொடரும்)