Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

இனியொரு விதி செய்வோம்! - பகுதி 06

ஈழத்தமிழ்தேசிய இனப்பிரச்சினையைக் குழம்பிய குட்டையாக்கி ஆதாயம் தேடும் அமெரிக்க இராஜதந்திரத்துக்கு எதிர்வினை ஆற்றும் இந்திய நிலைப்பாடு இன்று வேடிக்கை வினோத விளையாட்டாக ஆகிவிட்டுள்ளது. ஒருபுறம் உலக மேலாதிக்கத்தில் அமெரிக்காவின் சண்டித்தனங்களை அங்கீகரித்து ஒத்தூதி அதன் பிராந்திய கூட்டாளியாக தோள் சேர்ந்தவாறே, மறுபுறம் தெற்காசியாவில் அமெரிக்க தலையீட்டை தவிர்ப்பதற்குப் போராட வேண்டிய நிலையில் இந்தியா. குறிப்பாக, இலங்கையில் அமெரிக்கா இன்று மூக்கை நுழைப்பதற்கு முட்டுக்கட்டைகளை எங்கெங்கே சொருக வேண்டும் என்ற விவகாரங்களிலேயே இந்தியாவின் இராஜதந்திரத்தின் பெரும்பாகம் செலவாகித் தீர்ந்துபோக வேண்டியதாக உள்ளது.

 

ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனை ஆரோக்கியமான போராட்ட வடிவங்களை மேற்கொள்ள முடியாத வண்ணம் குரூரமான யுத்தமாக மாற்றப்பட்டதில் இந்தியாவின் பங்குபாத்திரம் இரகசியமான ஒன்றல்ல. அவ்வாறாக முப்பத்து மூன்று ஆண்டுகளின் முன்னதாக வடிவமைக்கப்பட்ட ஆயதப் பிரசன்னத்தில் அகத் தேவைகளை மிஞ்சி புறத் தேவையாக இந்திய ஊடுருவல் காரணி குறித்த புரிதல் இங்கு எமக்கு அவசியமாகிறது.

அணிசேரா கொள்கை:

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான யு.என்.பி. அரசாங்கம் அதிகாரத்தை கையேற்ற 1977 இலிருந்து இந்தியா இலங்கை விவகாரத்தை வேறு வகையில் கையாள வேண்டியதாயிற்று. முன்னதாக எழுபதுகளின் முற்கூறில் இலங்கையின் அணிசேராக் கொள்கையைச் சிறந்த முறையில் முன்னெடுத்த சிறீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் மிதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் இந்திராகாந்தி கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தார். சிறீமாவோ பிரதமராக இருந்தவேளையில் 1976 இல் அணிசேரா நாடுகளின் தலைமை இலங்கைக்கு வாய்த்த நிலையில், அவரது தலைமைப் பொறுப்பு பாராட்டும் வகையில் அமைந்திருந்தமையை உலகறியும். பனிப்போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க – சோவியத் போட்டியில் எந்தத் தரப்பையும் சாராமல் அனைத்து நாடகளுடனும் நல்லுறவை இலங்கையினால் பேணமுடிந்தது.

இந்தியாவோ அப்போது சோவியத் சார்பினை மெற்கொண்டிருந்தது. சோவியத் யூனியன் ஆதரவுடன் தெற்காசியப் பிராந்திய மேலாதிக்கத்தை மேற்கொள்ளும் அவாவுடன் இந்தியா செயற்பட்டது. அதனை முறியடித்து தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா இலங்கையை வென்றெடுத்தாக வேண்டியிருந்த வேளையிலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதிகாரத்துக்கு வந்த ஜே. ஆர். அணிசேராமைக் கோட்பாட்டை தூர வீசிவிட்டு அமெரிக்காவுக்குத் தளமாக இலங்கையை மாற்றும் எத்தனங்களில் இறங்கினார். வொய்ஸ் ஒஃப் அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட்ட இடமும்,  திருகோணமலை துறைமுகத்தை சிங்கப்பூர் கொம்பனியூடாக அமெரிக்காவிடம் கையளிக்க எடுத்த முயற்சியும் இந்தியாவின் கண்டனத்துக்குள்ளாகிய விவகாரங்களாகின.

திருகோணமலை எண்ணைக் குதத்தை வேறொரு நாட்டுக்குக் கொடுப்பதாயின் இந்தியாவுக்கு வழங்குமாறு இந்திரா காந்தி வேண்டியிருந்தார். முழுமையான அமெரிக்க அடிவருடியான ஜே.ஆர். அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பின்னர் இலங்கையை வழிக்குக் கொண்டுவரும் நோக்குடன் இனப்பிரச்சனையைக் கையாளும் தந்திரோபாயத்தை இந்திரா மேற்கொண்டார்.

இந்தியாவின்  தந்திரோபாயம்:

முன்னதாக தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது இந்திரா அதனை நிராகரித்திருந்தார் -எதிராக இருந்தார். சிறீமாவோ தலைமையில் கொழும்பில் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு 1976 இல் நடைபெற்ற போது கொழும்புக்கு இந்திரா வருகை தந்தார். அப்போது யாழ்ப்பாணச் சுவர்கள் எங்கும் “இந்திராவே திரும்பிப் போ” எனும் முழக்கம் எழுதப்பட்டிருந்தது. ஓரிரு வருடங்களில் நிலைமை தலைகீழானது. இந்திராவின் அரவணைப்போடு தமிழீழப் போராட்ட இயக்கங்கள் இந்திய மண்ணில் ஆயுதப்பயிற்சிகளை மேற்கொள்ள முடிந்தது.

சிறிய தாக்குதல்களில் வழிப்படுத்த முடியாத போது அநுராதபுரத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவிச்சிங்கள மக்களைக் கொன்றொழிக்கும் தாக்குதல் மெற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலுக்கு வேறு இயக்கங்கள் மறுத்த நிலையில் புலிகள் அதனை நிறைவேற்றிக் கொடுத்திருந்தார்கள் என்பது கவனிப்புக்குரியது. அத்தாக்குதல் ஜே.ஆரை கதி கலங்க வைத்தது மெய். அப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருந்த நரசிம்மரால் இலங்கை வந்து ஜே.ஆருடன் மேற்கொண்ட உரையாடலில் அந்த அச்சம் வெளிப்பட்டதுண்டு. ஆயினும் காலம் இன்னும் கனியும் நிலையிலேயே பெரிய ஆதாயத்தை எட்ட முடியம் என்பதில் இந்தியா தொடர்ந்த இராஜதந்திரங்கள் வளர்ந்தன. அதற்குள் இந்திரா மறைந்து ராஜீவ் காந்தி பிரதமரானார். அவர் ஒப்ரேசன் லிபரேசன் எனும் இலங்கை இராணுவ முன்னேற்றத்தைத் தடுத்த நிவாரண தாக்குதல்களுடன் ஜே.ஆர் – ரஜீவ் ஒப்பந்தம் கைச்சாத்தானது. அது தமிழீழக் கனவைத் தகர்த்த நிலையில் பலரும் அம்மா இந்திரா இருந்திருந்தால் இந்த அவலம் நேர்ந்திராது எனப் புலம்பியதுண்டு. அம்மாவும் இதே இலக்கை நோக்கியே எமது பிரச்சனையைக் கையாண்டு வந்தார் என்பதே உண்மையாயினும் ராஜீவின் முதிர்சியற்ற அரசியல் பிரயோகங்களின் தவறுகள் களையப்பட்டு இருந்திருக்க முடியும்.

அரசியல் முதிர்சசியினமை:

ராஜீவ் தொடர்ந்து இந்திய இராணுவத்தை இலங்கை மண்ணில் இருக்க வைத்தது அவரது அரசியல் முதிர்சியின்மையின் வெளிப்பாடு. பல்லுப் பிடுங்கிய புலியாக போராட்ட அமைப்பை இருக்கவிட்டவாறு தொடர்ந்து இருப்பது அவரது நோக்கமாக இருந்தது. அப்போதே முல்லைத்தீவில் புலிகளின் தலைமையை அழிக்க முன்னெடுக்கப்பட்ட இராணுவ முயற்சியை ராஜீவ் தலைமை தடுத்திருந்தது. பின்னாலே அதைவிடப் பல மடங்கு பிரமாண்டத்துடன் வளர்ந்திருந்த புலிகளை இலங்கை இராணுவத்தை வைத்தே 2009 இல் அழித்தொழிக்க முடிந்த இந்திய அதிகாரத் தரப்புக்கு இருபது வருடங்களின் முன் அதனைச் செய்திருக்க முடியாது என்பதில்லை. அவர்களுக்கு அப்போது பல்லுப்பிடுங்கிய புலியும் இராணுவ பிரசன்னமும் வேண்டியிருந்தது.

 

 

ஆட்சிமாற்றத்துடன் இராணுவம் திரும்பப்பெறப்பட்டதுடன் புலிக்குப் பல்லு மீள வளர இடமளித்து அதன் மிரட்டும் வளர்ச்சியில் முழுச்சிங்களச் சமூகத்தையும் அச்சுறுத்தி இந்திய ஆணைக்குள் கட்டுப்படுத்தும் இராஜதந்திரம் பிந்திய இரு தசாப்தங்களுக்குரியது. இன்று உதவிய புலிகள் அழிக்கப்பட்டு பதினேழு ஒப்பந்தங்களுடன் இலங்கை முழுதாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அரை குறையான ஜே.ஆர் – ரஜீவ் (இலங்கை மண்ணில் செய்யப்பட்ட) ஒப்பந்தத்துக்கே அன்று கொந்தளித்து இரத்தம் சிந்திய சிங்களச் சமூகம் மகிந்த – மன்மோகன் சிங் ஒப்பந்தங்கள் (இந்திய மண்ணில் வைத்து விபரங்கள் பூரணமாக வெளிப்படா வண்ணம் செய்யப்பட்ட போதிலும்) கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருப்பது கவனிப்புக்குரியது.

தமிழ்த் தலைமைகளின்  காவடி:

இவ்வகையில் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க அபிலாசைக்கு முழுதாக இலங்கை பலியாகியுள்ள நிலையில் தான், நமது தமிழ்த் தலைமைகள் இந்தியாவுக்கு காவடி எடுத்துள்ளார்கள் (அதைவிட வேடிக்கை கருணாநிதியிடம் மண்டியிட்டு கெஞ்சுதல்) தொடர் கெஞ்சுதலும் தமிழகத்தின் தமிழுணர்வாளரது மிரட்டுதலும் கண்டு அவ்வப்போது இந்திய அரசும் ஏதாயினும் கண்துடைப்புகளைச் செய்தபடிதான். வரவிருக்கும் வெளிவிவகார அமைச்சரின் பயண ஏற்பாட்டுக்கு ஏற்பாக நிருபமாராய் வந்து போயிருக்கிறார். எல்லாம் நலமே நிறைவாகி வருக்கின்றன என்ற திருப்திச் சான்றிதழாவது பரவாயில்லை.  இலங்கையிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் நிருபமா திருவாய் மலர்ந்தரளியிருக்கிறார். வரப்போகும் வெளிவிவகார அமைச்சர் இதை விடப் பெரிதாக எங்களுக்கு எதைத் தந்துவிடப் போகிறார்?

சென்ற வருடம் புலியழிப்பு யுத்தம் முனைப்பான போது யுத்த நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் வலுப்பெற்றிருந்தது. மத்திய மந்திரி சிதம்பரத்திடம் இந்தவிவகாரம் முன் வைக்கப்பட்ட போது அவர் சொன்னார், “நாங்கள் காஸ்மீரில் செய்வதைத் தான் இலங்கை இராணுவம் முல்லைத்தீவில் செய்கிறது, அதை நிறுத்தும்படி எப்படிக் கோரமுடியும்?” இதன் தொடர்ச்சியே நிருபமா கூற்று.  முல்லைத்தீவின் படிப்பினையைப் போதியளவு உள்வாங்கி காஸ்மீரில் பிரயோகிக்க வெறுமனே வெளிவிவகார அமைச்சர் வந்தால் போதுமா? நீங்கள் அசல் கோமாளி தான், இது ஒருபக்க கண்துடைப்பு – அதற்கான பாடங்கள் வேறு வடிவங்களில் பெறப்பட்டிருக்கும் என்பதைக்கூடவா அறிய மாட்டீர்கள், என்ற உங்களுடைய முணுமுணுப்பும் சரியானது தான்.

இந்தியப்  படிப்பினை:

அமைதி காக்கும்படி இலங்கையிலிருந்து திரும்பப்பெறப்பட்டபோது இந்திய இராணுவ அதிகாரிகள் ஒரு விடயத்தைக் கூறியிருந்தார்கள்,  “சற்று அதிக விலையே கொடுக்கப்பட்டுள்ளதாயினும், ஒரு கொரில்லாப் படையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த பாடங்களை நாங்கள் பெற்றுள்ளோம்” என்ற இந்திய இராணுவ அனுபவங்கள் இலங்கை இராணுவத்துக்கு புகட்டப்பட்ட நிலையிலேயே இன்று புலிகளை ஒழித்துக்கட்ட முடிந்திருக்கிறது. இந்த அடுத்த கட்ட படிப்பினையில் இந்தியா அதிகம் விலை கொடுக்காமலே (இலங்கையை விலைகொடுக்க வைத்தே) கொரில்லாப் படையொன்றை அழித்தொழிப்பது எவ்வாறு என்பதைக் கற்று இருக்கிறார்கள். இனி அதை காஸ்மீரிலும் மாவோயிஸ்ட்டுக்கள் வளர்ந்துள்ள இடங்களிலும் பிரயோகிப்பார்கள். காஸ்மீரிலாவது பயங்கரவாத அமைப்பை மீறி மக்கள் போராட்டங்கள் நடக்க முடிகிறது. மாவோயிஸம் பேசும் மாவோயிஸ்டுக்களோ புலிகளைப் போலவே மக்கள் போராட்டங்களை முடக்கியவாறு தங்கள் பயங்கரவாதத்தை முன்னெடுக்கிறார்கள் என்றவகையில் அவற்றை ஒழித்துக்கட்டுவது இந்திய அதிகாரக்கும்பலுக்குக் கடினப்பணியன்று.

ஈழத் தமிழர் போராட்டம் மக்கள் போராட்டமாக விருத்தியாக இடம் கொடாது பயங்கரவாத வடிவத்துடன் தொடர ஏற்றதாகவே இந்திய ஆதிக்கக்கும்பலின் தலையீடு ஆரம்பம் முதல் இருந்து வந்தது. மக்கள் போராட்டங்களை முறியடிப்பது இலகுவானதல்ல, பயங்கரவாதத்தை தேவை கருதி வளர்ப்பதில் அதிகார வர்க்கத்திற்குத் தயக்கம் ஏதுமில்லை – பயங்கரவாதத்தை ஒப்பீட்டு ரீதியில் இலகுவில் அழித்தொழிக்க முடியும். அதற்கான விலை கொடுத்தலை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. அதன் வாயிலாகவே மக்கள் போராட்டங்களையும் ஒடுக்கிவிட முடிகிறது என்பதால் (அதைவிட பயங்கரவாதம் அதற்கு அவசியமற்ற வகையில் மக்கள் போராட்ட வாய்ப்புகள் அனைத்தையும் அதுவே ஒழித்துக் கட்டிவிடும். இலங்கையில் ஜே.வி.பி. மற்றும் புலிப்பயங்கரவாதங்கள் ஏற்படுத்தியுள்ள நாசங்கள் இன்று இலங்கையை எவ்வளவுக்கு நிர்க்கதிக்கு ஆளாக்கியுள்ளது என்பது இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு )

முரண்பாடுகளிலிருந்து பாடம் கற்றல்:

இலங்கையின் பயங்கரவாதத்தை இந்தியா வளர்த்தது. இந்தியாவில் பயங்கரவாத்ததை பாகிஸ்தான் வளர்க்கிறது. பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்தை இந்தியாவும் அமெரிக்காவும் வளர்க்கின்றன. இங்கே இந்தியாவா பாகிஸ்தானா அமெரிக்காவா என்பதைவிட உலகெங்குமான அதிகாரவர்க்க ஆளும் கும்பல் மக்கள் விடுதலை மார்க்கத்தை குழிதோண்டிப் புதைக்க கையாளும் தந்திரம் இது என்பது கணிப்புக்குரியது. ஆளும் வர்க்கம் உலகெங்கும் தமக்குள்ளான முரண்பாட்டுடன் இவ்விடயத்தில் கொண்டும் கொடுத்தும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். போராட்ட உலைக்களங்களுக்குள் தமக்கு ஏற்ற பயங்கரவாதப் பிசாசை ஊடாடவிட்டு தமக்கான ஆதாயங்களை வென்றெடுக்க அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

இலங்கை – இந்திய ஆளும் கும்பல்கள் என்னதான் முரண்பட்டு மோதிய போதிலும்  வேண்டிய வகையில் பயங்கரவாதத்தை வளர்த்துப் பயன்படுத்தி அழித்து விளையாடி எவ்வகையில் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கமாட்டோமா?

இந்தச் சின்னஞ் சிறிய தீவில் தேசிய இனக்கோரிக்கையை நாசம் செய்வது எப்படி எனக்கற்று இந்தியா தனது பல்வேறு தேசிய இனங்களின் அபிலாசைகளை அழித்தொழிக்க வழிமுறை தேடுகிறது என்பதனைக் கண்டுகொள்ள மாட்டோமா?

ஒடுக்கப்படும் தேசிய இனங்களது போராட்ட மார்க்கங்களை அதைவிட ஆழமாக கற்றுக்கொள்ள நாம் இனியேனும் முன்வரமாட்டோமா?

இந்திய – அமெரிக்க மேலாதிக்க சக்திகளுடன் கூட்டுச்சேர்ந்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை அழிக்கத் துணைபோகும் எமது ஆண்ட பரம்பரை தேசிய வாதிகளை இனங் கண்டு நிராகரிக்க முன்வரவேண்டாமா?