Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சோஃபியாவும் - பாஸிசமும்

எந்த அரசியல் பின்புலமுமற்ற மத்தியதர வர்க்கப ; பெண் "பாசிசம் ஒழிக" என்று கோசம் போட்டதைக் கண்டு, பாசிட்டுக்கள் அதிர்ந்து போயுள்ளனர். சுயநலம் பிடித்த மத்தியதர வர்க்க பொது மனநிலைக்கு முரணாக, ஓட்டுமொத்த சமூகமும் அரசியல்மயமாவது கண்டு, ஊடகங்கள் தாங்கள் போட்டிருந்த "நடுநிலைமை" வேசத்தை உதறி, பாசிசத்தை முண்டுகொடுக்கும் விவாதங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். "பாசிசம் ஓழிக" என்ற கோசத்தில், பாசிசம் என்று கூறியது ஏன் என்ற விவாதத்தை மறுதளித்து பாசிசத்தை பாதுகாக்க முனைவதே ஊடகவியலாக மாறி வருகின்றது.

விமானத்தில் கோசம் போடலாமா என்று பாஜக பாசிட்டுகள் குற்றஞ்சாட்டும் அதே உள்ளடக்கத்தை கொண்டு, ஊடகங்கள் தங்கள் பங்கை அரங்கேற்றுகின்றது. விமானத்தில் கோசம் போடலாமா என்று விவாதம் நடத்தியதுடன், நடுத்தர வர்க்க பெண்ணின் எதிர்காலம் குறித்து பொதுப் பீதியை ஊட்டி விடுகின்றனர். விமானத்தில் நடத்திய "போராட்டத்தை" தவறான போராட்ட வழிமுறையாக சித்தரித்து வருகின்றனர். இப்படிப் போராடுவது என்பது பின்னணியின்றி இருக்க முடியாது என்று கூறுவதன் மூலம், அதைப் பாசிச பாணியில் உண்மையென்று நம்பவைக்க முனைகின்றனர்.

போராடிய பெண்ணின் பால், சாதி, மத.. அடையாளங்கள் மூலம், பாசிட்டுகள் பாணியில் "பாசிசம் ஓழிக" என்ற கோசத்துக்கு முகத்திரையை போட்டுக் காட்டி, பாசிசத்தின் முகத்திரையை மூடிவைக்க முனைகின்றனர். கைது, விசாரணை, நீதிமன்றம், பாஸ்போட்டை முடக்குவது என்ற தொடர் அச்சுறுத்தல்கள் மூலம், போராட முனையும் ஓவ்வொருவனுக்கும் இதுதான் கதி என்று அச்சுறுத்தும் பாசிச நடைமுறைகளை – முன்னின்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அச்சுறுத்துகின்றனர். அதாவது பாசிட்டுகள் தங்கள் அடக்குமுறைகள் மூலம் எதை மக்களுக்கு உணர்த்த முனைகின்றனரோ – அதை ஊடகங்கள் மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் பாசிசத்துடன் கைகோர்த்துப் பயணிக்கின்றவர்களாக மாறி நிற்கின்றனர்.

 

"பாசிசம் ஒழிக" என்ற கோசத்தை, பாசிச வழிகளில் ஓடுக்கியதன் மூலம், பாசிசத்தை ஆழமாக்கி நடைமுறையாக்கி இருப்பதையே, சோஃபியாவின் கைது முதல் ஊடகங்களின் செயற்பாடுகள் வரை உணர்த்தி நிற்கின்றது. மக்களை ஓடுக்கும் பாசிட்டுக்கள் எந்த விதத்திலும் பின்வாங்கவில்லை.

சிவில் சட்ட நடைமுறைகளில் பாசிசம் நம்பிக்கை இழந்து வருகின்றது. மாறாக சட்டவிரோத வழிகளில் ஓடுக்குவதை தாண்டி, வேறு மார்க்கம் பாசிசத்துக்கு இல்லை. இதையே  சோஃபியாவுக்கு எதிரான சட்டம் முதல் ஊடகவியல் வரை நிறுவி இருக்கின்றது.

எங்கும் பாசிசம், எதிலும் பாசிசமாகிவிட்ட சமூகத்தில், சட்டமும் நீதியும் சமூகத்துக்கு மறுக்கப்பட்ட பின், எதிர்வினையை சட்டத்தின் எல்லைக்கு உட்பட்டதா என்று தேடுவது, பாசிசத்தால் மட்டுமே முடியும். "விமானத்தில் கோசமெழுப்பலாமா!?" என்ற கேள்வியுடன் பாசிசக் கோமாளிகளால் மட்டும் தான் கூத்தாட முடிகின்றது. இப்படி இதற்குள் சிந்தித்து – விவாதிக்கின்ற அனைவரும் பாசிட்டுகளாக மட்டும் தான் இருக்க முடியும்.

"பாசிசம் ஓழிக" என்ற கோசத்தையும், அதன் உள்ளடகத்தையும், கைதின் போது அந்த பெண் தனது கோசத்தின் வழி பாசிஸ்டுக்கள் எனக் கோசமிட்டதற்கு எள்ளளவும் பிசகாமலே பாசிசம் எப்படி செயற்பட்டது என்பதை விவாதிக்க மறுக்கின்ற பின்னணியில், பாசிசம் வலுக்கொள்கிறது. பாசிட்டுகள் அறிவாளிகள் போல், ஊடகங்களில் பாசிசத்தைக் கொட்டுகின்றனர்.

இதன் மூலம் "பா.ஜ.க பாசிசம் ஓழிக" என்ற கோசத்தை மட்டும் சோஃபியா சமூகம் முன் விட்டுச் செல்லவில்லை, பாசிசத்தின் தண்டனையை எதிர்கொள்வதன் மூலம், பாசிசம் எப்படிப்பட்டது என்பதை நடைமுறையில் எடுத்துக்காட்டி இருக்கின்றார்.

அவர் "பா.ஜ.க பாசிசம் ஓழிக" என்று கோசம் எழுப்பியதன் மூலம், பாசிசம் என்றால் என்ன என்பதை உலகறிய விவாதத்துக்கு உள்ளாக்கி இருகின்றார். பாசிச ஆட்சிமுறையை ஏன் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் வர்க்க ரீதியான முரண்பாடுகள் கூர்மையாவதும் - அதை மூடிமறைக்க சாதி - மதம் - இனம் - நிறமாக.. சமூகத்தைப் பிளந்து ஓடுக்குவது – சமூக  மேல்கட்டுமானத்தில் நடந்தேறுகின்றது. இதன் மூலம் மக்களை பிரித்து, சமூகத்தின் ஜனநாயக கட்டமைப்பையே ஓழித்துக்கட்டி விடுவது நடந்து வருகின்றது.

பாசிசமானது தேர்தல் ஜனநாயகம் வழங்கும் சட்டத்தின் ஆட்சிமுறைமையை மறுதளிக்கின்றது. நீதிமன்றங்கள் தொடங்கி அதிகாரத்தை வைத்திருக்கும் ஆயுதமேந்திய உறுப்புகள் அனைத்தும், சட்டத்துக்கு புறம்பான உறுப்பாக மாறிவருகின்றது. வெளிப்படையாக மக்களுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் கைத்தடியாக மாறிவிடுகின்றது. நீதி "நடுநிலையானது - அனைவருக்குமானது" என்ற பொது மாயையை தகர்த்து வருகின்றது. இதன் மூலம் முதலாளித்துவ "தேர்தல் ஜனநாயகம்  அனைவருக்குமான" என்ற பொது நம்பிக்கையை சமூகம் இழந்து விடும் வண்ணம், பாசிசம் தன்னைத்தான் அம்மணமாக்கி நிற்கின்றது. இது தான் சோஃபியா வின் எதிர்வினை.  இந்த எதிர்வினை  உலகளாவிய அரசியல் அலையாக எதிரொலிக்கும் அளவுக்கு - சமூகம் பாசிசத்துக்கு எதிரான அணியாக தன்னை முன்னிறுத்தி இருக்கின்றது. பாசிசத்துக்கு எதிராக சமூகம் விழிப்புற்று போராடுவதையும், போராட வேண்டிய அவசியத்தை சோஃபியாவின் எதிர்வினை ஏற்படுத்திவிட்டது.

தேர்தல் மூலம் பாசிச ஆட்சி அதிகாரத்தை மாற்றுவது பற்றிய "ஜனநாயகக்" கனவை தாண்டி, போராடுவதன் மூலம் பாசிசத்தை எதிர் கொள்வது என்பது மக்களின் அரசியல் தெரிவாகி வருவதை, சோஃபியா உதாரணமாக்கி நிற்கின்றார். இதன் பின் கோடிக்கணக்கான மக்கள் பாசிசம் ஓழிக என்ற கோசத்தை தமது கோசமாக்கியதன் மூலம், தேர்தலில் வாக்கு போடுவதற்கு அப்பால் பாசிசத்துக்கு எதிராக போராடுவதை தேர்ந்தெடுக்கும் அரசியல் நீட்சியாக மாறிவருகின்றது.

பாசிசம் என்பது இனம், மதம், சாதி, நிறத்தை … முன்னிறுத்தும் ஆட்சிமுறையல்ல, மாறாக வர்க்கத்தின் ஆட்சிமுறை என்ற புரிதலுக்கு சமூகம் முன்னேறுவது காலத்தின் தேவையாக மாறி இருக்கின்றது.

பாசிசத்தை புரிந்து கொள்வது அவசியமானது. பாசிசத்தின் குறிக்கோள் மக்களை எந்தவிதமான தங்கு தடையுமின்றி, ஆகக் கடுமையாகச் சுரண்டுவதே. பாசிசம் மக்களை கவர, மக்களுடையதான அவசர அவசியமான தேவைகளையும் கோரிக்கைகளையும் பற்றி ஆவேசமாக வாய்ச்சவடால் அடிக்கும். பாசிசம் மக்களுடைய உள்ளங்களிலேயே ஊறிப்போயிருக்கின்ற வெறுப்புக்களையும், தப்பெண்ணங்களையும் கிளறித் தூண்டிக் கிளப்பி விடுவது மட்டுமல்ல, மக்களுடைய நல்லுணர்வுகளையும், நியாய உணர்வுகளையும் சில சமயங்களில் புரட்சிகரமான பாரம்பரியங்களைக் கூட பயன்படுத்தி கொண்டு அதிகாரத்துக்கு வருவதன் மூலமே,  மக்களை ஓடுக்குகின்றது.

இனம், மதம், சாதி, நிறம் கடந்து, சுரண்டும் வர்க்க ஆட்சி தான் பாசிசம் என்பதை எடுத்துச் சொல்வதன் மூலமே, இனம், மதம், சாதி, நிறத்துக்கு பலியான மக்களை பாசிசத்துக்கு எதிராக அணிதிரட்ட முடியும். இதை மனித வரலாறு கோரி நிற்கின்றது.