Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புரட்சிகர செவ் அஞ்சலி!

தோழர் கணபதி தங்கவடிவேல் கடந்த 29.07.2014 இல் தனது எண்பத்திமூன்றாவது வயதில் இயற்கை எய்தினார். அவர் இளமைக்காலம் முதல் மாக்சிசத்தை ஏற்று அதன் வழியில் வடபுலத்து பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். சமூக ஏற்றத்தாழ்வையும் அதன் காரணமான சாதிய தீண்டாமைக்கெதிரான வன்மத்தையும் கொண்டிருந்தமை மட்டுமன்றி அதனை எதிர்த்து உடைத்தெறிய வேண்டும் என்ற புரட்சிகர உணர்வையும் கொண்டிருந்தார். அதன் காரணமாக சமூக அக்கறையாளனாகவும் சமூக விடுதலை நோக்கிய பாதையில் இளைஞர்களையும் மக்களையும் அணிதிரட்டி அமைப்பு வாயிலாகச் செயற்படுவதில் முன்னின்று வந்தவர்.

1964இல் தோழர் நா.சண்முகதாசன் தலைமையில் புரட்சிகர கம்யூனிசக் கட்சியாக முன்சென்ற வேளை தோழர் தங்கவடிவேல் வடபுலத்து தலைமைத் தோழர்களான மு.கார்த்திகேசன், டாக்டர் சு.வே.சீனிவாசகம், கே.ஏ.சுப்பிரமணியம், கே.டானியல் போன்றவர்களுடன் இணைந்து செயல்படுவதில் முன்னின்றவர். அவ்வேளை ‘சாதி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்’ என்ற குறிக்கோளை முன்வைத்து எழுந்த 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியைப் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. அவ் எழுச்சி உருவாக்கிய புரட்சிகரப் போராட்டங்களின் மத்தியில் 1967ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு வேகுஜன இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் தலைமைக் குழுவில் எஸ்.சி.என்.நாகரட்ணம், கே.டானியல், கே.ஏ.சுப்பிறமணியம், டாக்டர் சு.வே.சீனிவாசகம், மான் நா.முத்தையா, சி.கணேசன், மு.சின்னையா, கே.கிருஸ்ணப்பிள்ளை போன்றவர்களுடன் தங்கவடிவேல் இணைந்து நின்று தீவிரமாகச் செயற்பட்டுவந்தார். 1969இல் அவ் இயக்கம் நடாத்திய இரண்டாவது மாகாநாட்டின்போது சாதியத்தையும் தீண்டாமையையும் அம்பலப்படுத்தும் ஒரு ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டது. அவ் ஓவியக் கண்காட்சி வெற்றி பெறுவதற்கு தோழர் தங்கவடிவேல் தனது பங்களிப்பை வழங்கியதோடு ஏனையோரின் பங்குபற்றலையும் வழிநடத்தி நின்றமை நினைவுகூரத்தக்கதாகும். இவ் ஓவியக் கண்காட்சி யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சாதிய தீண்டாமைக்கு எதிரான கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தோழர் தங்கவடிவேல் சமூக அக்கறையாளனாக, விளையாட்டு வீரனாக, பொதுவுடைமைவாதியாக, நல் ஆசிரியனாக, கிராமப்புற மக்களின் நண்பனாக, ஓவியனாக, பாடகனாக, நல்ல குடும்பத் தலைவனாக, சமூக மாற்றத்திற்கான விடுதலைப் போராளியாக தனது ஆற்றலுக்கும் சக்திக்கும் ஏற்றவாறு நம்பிக்கையோடும் துணிவோடும் வாழ்ந்து வந்த ஒருவராகத் திகழ்ந்தார். அத்தனைக்கும் அடித்தளமாக அவர் மாக்சிசம் லெனினிசத்தையும் மாவோ சேதுங் சிந்தனையையும் இறுதிவரை உறுதியாகப் பின்பற்றுபவராக இருந்து வந்தார். தமிழ்த்தேசியத்தின் பெயரிலான தவறான கொள்கையைப் பின்பற்றி ஆரம்பமான போராட்ட அலைகளால் எழுந்த கடும் சவால்களின் மத்தியிலும் தனது பொதுவுடமை நிலைப்பாட்டை இழக்காத தோழராகத் தங்கவடிவேல் இருந்துவந்தமை அவருக்குரிய விசேட சிறப்பாகும்.

அத்தகைய தோழர் தங்கவடிவேலின் மறைவு ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்கும் பொதுவுடமை இயக்கத்திற்கும் கவலை தரும் இழப்பாகும். அவருக்கு எமது கட்சி தனது செங்கொடியைத் தாழ்த்தி புரட்சிகர செவ்வஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றது. அவரது துணைவியார், பிள்ளைகள், குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றது.

உறுதிமிக்க பொதுவுடைமைவாதியான தோழர் க.தங்கவடிவேல் அவர்களின் மறைவுக்கு புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் புரட்சிகர செவ் அஞ்சலி!

புதிய – ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

03.08.2014