Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஊடகதுறையினை அடக்கி ஒடுக்குவதில் பெயர் பெற்ற நாடு இலங்கை!

ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இலங்கை பெயர் பெற்ற நாடாகவே இருந்து வருகிறது. ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு என்பதெல்லாம் போலித்தனமான பசப்பு வார்த்தைகள் என்பதையே அண்மைய ஓமந்தைச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது. யாழ்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பயணித்த தமிழ் ஊடகவியலாளர்கள் இனம் தெரியாதோரால் பின்தொடரப்பட்டதும், ஓமந்தைச்சோதனைச் சாவடியில் படையினரால் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டதும், அதனிடையே கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டதும் பின்பு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதும் திட்டமிடப்பட்ட வகையிலே அரங்கேற்றப்பட்டவைகளாகும். இச்சம்பவத்தையும் அதன்பின் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு நடைபெற இருந்த ஊடகப்பயிற்சிச் செயலமர்வு குழப்பப்பட்டு நிறுத்தப்பட்டவையும் ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டவையாகும். இவை யாவும் வடபகுதி தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திப் பழிவாங்குவதற்கும் அடிபணிய வைப்பதற்கும் எடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளே ஆகும்.

இத்தகைய மோசமான அடக்குமுறையானது மகிந்த சிந்தனை ஆட்சியில் தொடரும் நிகழ்வுப் போக்காகவே இருந்து வந்துள்ளது. மேற்படி வடபகுதித் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான பழிவாங்கும் அடக்குமுறை கொண்ட ஓமந்தைச் சம்பவத்தை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
                      
மேலும் அவ் அறிக்கையில், தெற்கிலே அரசாங்கத்தின் சர்வாதிகாரத்தையும் மக்கள் விரோத செயல்களையும் எதிர்த்து விமர்சித்து வரும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்நோக்கி வரும் அடக்குமுறைகளின் இரட்டித்த அளவிலேயே வடக்கு கிழக்கின் தமிழ் ஊடவியலாளர்கள் அரசின் பேரினவாத ராணுவ ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியே அண்மைய ஓமந்தை சம்பவமாகும். எனவே வடக்கு கிழக்கின் ஊடகவியலாளர்கள் தெற்கின ஊடவியலாளர்களுடனும் ஒடுக்கப்படும் மக்களுடனும் ஐக்கியப்பட்டு போராட வேண்டியதன் அவசியத்தை இவ்வேளை எமது கட்சி சுட்டிக் காட்டுகிறது.

-புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

29/07/2014