Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மீண்டும் ஒரு யுத்தத்தை எதிர்கொள்ளப் போகிறது யாழ்ப்பாணம்! அதிர்ச்சி தரும் தகவல்!

கடந்த காலப் போரின் பின்னால் அந்தப் போர் நடந்த பூமியில் விஸ்வரூபம் எடுக்கப் போகின்றது இயற்கைக்கும் எமக்குமான கொடிய போர். இப் போர் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

அதவாது, உலகின் சகல மனிதர்களுக்கும் அவர்களது உயிர் வாழ்க்கைக்கும் மிகவும் அத்தியாவசியமானது குடிநீர். அந்த வகையில் யாழ்.குடாநாட்டிலும் இன்றுள்ள பிரச்சினைகள் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு நீர் விநியோகமும் சிக்கலானதாக அமைந்துள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பல நாடுகள் சந்தித்த இயற்கை மாற்றத்துடனான எதிர்பார்ப்புக்கள் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். அவ்வாறானதொரு குடிநீர் குறித்த பெரும் பிரச்சினைக்கு இப்போது யாழ். குடாநாட்டு மக்கள் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.

போர்ச் சூழலுக்குள் சிக்குண்ட யாழ்.குடாநாட்டு மக்களுக்கு குடிநீர் மாசடைவது பற்றியும் நிலத்தடி நீர் மாசுறுவது பற்றியும் சிந்திப்பதற்கு நேரமிருக்கவில்லை. இவ்வாறு நீர் மாசடைவதையும் குடிநீர் வளம் இல்லாமல் போவதையும் தடுப்பது குறித்து உருப்படியான அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே யாழ். குடாநாட்டில் குடிநீர் தொடர்பான மிகப் பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது.

கடந்த 30 வருட காலப் போரினால் யாழ்.குடாநாட்டில் நீர் வளச்சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை போன்றவற்றின் பணிகள் ஸ்தம்பித்த நிலையிலேயே இருந்தன. இதன் காரணமாக குடாநாட்டைச் சூழ இருக்கும் உவர் நீர் சரியான காப்புறுதித் திட்டங்கள் இல்லாமையினால் நிலத்தடி நீருடன் பெருமளவில் கலந்துள்ளது. இன்னமும் கலந்து கொண்டே இருக்கின்றது.

இவ்வாறு மாசடைந்த நீரைப் பருகுவதால் நாம் சிறிது சிறிதாக நோயாளிகளாகி அதுவும் புற்றுநோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கின்றோம். குடாநாட்டு மக்களிடம் புற்றுநோய்த் தாக்கம் அதிகளவில் அண்மைக் காலமாக உணரப்பட்டு வருகின்றது.

அத்துடன் மக்கள் வாந்திபேதி நோயையும் எதிர்கொள்ள வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை தோற்றுவிக்கப்படுவதுடன், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் யேர்மனி சந்தித்த கொலரா நோயைப் போன்று இது பயங்கரமாக இருக்கும். இதெற்கெல்லாம் காரணம் மாசடைந்த நீரைப் பருகுவது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மக்களுக்கு சுத்தமான நீரை வழங்குவதற்கு நீர் விநியோகத் திட்டங்களை ஏற்படுத்துவதாலும் அதற்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாலும் மட்டும் இப் பிரச்சினையை வென்று விட முடியாது. இதற்கு நீரைப் பயன்படுத்தும் மக்களினதும் பூரண ஒத்துழைப்புத் தேவை என்பதை மறுக்க முடியாது.

தண்ணீர் இயல்பாகவே தீயை அணைக்கக் கூடியதே. ஆனால் இந்தத் தண்ணீர்தான் இனிமேல் மக்களுக்கிடையே போரை மூட்டி விடும் எரிபொருட்களாகவும் இருக்கப் போகின்றது.என்பதில் ஐயமில்லை.