Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை ராணுவம் மாணவர்களுக்கு கட்டாய பௌத்த தலைமைத்துவ பயிற்சியளிக்கும்"

இலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஒராண்டு பௌத்த தலைமைத்துவ பயிற்சியை இலங்கை இராணுவம் அளிப்பதற்கான முன்னெடுப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டின் இரண்டு அதியுயர் பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரியப் பீடத்தினர் இது குறித்து வைத்த பிரேரணைகளை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த பீடத்தின் பேச்சாளரான மெதகம தம்மானந்த தேரர் பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

"மாறுதலுக்குத் தயாராங்குகள்"என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்படும் அந்தப் பயிற்சியின் மூலம் இளைய சமூகத்தினருக்கு மேம்பட்டக் கல்வியை அளித்து, அதன் மூலம் சமூகத்தின்பால் அவர்களுக்கு உள்ள அணுகுமுறையை மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு புதிய அரசியல் சாசனம் தேவை என்றும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள அரசியல் சாசனத்தை வைத்துக் கொண்டு நாடு முன்னேற முடியாது என்றும், அதனால் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யவேண்டும் அல்லது புதிய அரசியல் சட்டம் ஒன்று தேவை என்று தாங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் மெதகம தம்மானந்த தேரர் கூறுகிறார்.

நாட்டின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த தலைமைத்துவப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், அனைத்து சமூகத்து மாணவர்களும் தமது சொந்த மொழியில் இந்தப் பயிற்சியைப் பெறும்போது, அவர்கள் இந்தத் திட்டத்தின் நோக்கத்தை நன்கு புரிந்து கொள்வார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசுகள் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக அமைதியாக வாழும் வாய்ப்பை 100 சதவீதம் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்