Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை-இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைவே பிரச்சசினைகளுக்கு தீர்வு!

''இந்தியாவின் மாக்ஸிச- லெனினிய கம்யூனிஸக் கட்சி ஏற்பாடு செய்திருந்த அதன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னிலை சோஷலிஸக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லவிருந்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் தோழர் புபுது ஜயகொட அவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசா தர மறுத்துவிட்டது. இது, அங்கு தோழர் ஆற்றவிருந்த உரையின் சாராம்சம்.''

அன்பிற்குரிய தோழர்களே, தோழியர்களே!

இந்த கருத்தரங்கிற்கு என்னை அழைத்தமைக்காகவும், இலங்கை பூகோள ரீதியில் மாத்திரமல்ல, வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியிலும் நெருக்கமாகவுள்ள தென்னிந்திய ஒடுக்கப்பட்ட மக்கள் முன் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பமொன்றை வழங்கியமைக்காகவும் இந்திய ' மாக்ஸிச லெனினிய கம்யூனிஸக் கட்சிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தியாவிலிருந்து எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்போது நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இன்றைய சமூக யதார்தத்திற்குள் தேசிய அரசின் எல்லைக்குள்ளிருந்து நாங்கள் அரசியலில் ஈடுபட நேர்ந்துள்ளது. ஏன்றாலும், முதலாளியத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால்தான. இடதுசாரிகள் சர்வதேசவாதிகளாகி விடுகிறார்கள். நாங்கள் சர்வதேசவாதிகளாகாவிட்டால் எங்களது முயற்சிகள் அனைத்தும் பாளாகிவிடும் என்பதை கோட்பாட்டு ரீதியில் மட்டுமல்ல, உலக கம்யூனிஸ இயக்கத்தின் வரலாற்று அனுபவத்தின் வாயிலாகவும் அறிந்து வைத்துள்ளோம். இலங்கையில் இடதுசாரி இயக்கம் சில சந்தர்ப்பங்களில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு தனியான அரசியல் கடசியொன்றை அமைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறது. அதற்குக் காரணம், இலங்கை மற்றும் இந்தியாவில் ஏற்படும் சமூக மாற்றங்கள் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டிருப்பதோடு, ஒருவரை சார்ந்து ஒருவர் பராமரிக்கப்படுவதுமேயாகும். 

ஆகவே இந்த சந்தர்ப்பத்தை இலங்கையிலும. இந்தியாவிலும் பாட்டாளி வர்க்கம் முதற்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கிடையிலான உறவுக்கும் புரிந்துணர்வுக்குமான அடிப்படையை நிர்மாணிப்பதற்கான சந்தர்ப்பமாக்கிக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.

இன்றைய எங்களது தொனிப்பொருள் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினையாகும். அதற்கு முன்னர் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கத்தைப் பற்றி, முன்னிலை சோஷலிஸக் கட்சியைப் பற்றி சிறு விளக்கமொன்றை தரவேண்டியுள்ளது. 

இலங்கை இடதுசாரிய இயக்கத்தினது நீணடகால பாரம்பரியத்தின் பிரதிபலன்தான் நாங்கள். 1935ல் இலங்கை சமசமாஜிக் கட்சியின் தோற்றுவாயோடு இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் ஆரம்பம் நிகழ்கிறது. அன்று பிரித்தானிய ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தபோது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிகள் சில முக்கியமான கடமைகளை பூர்த்தி செய்தனர். அவர்களுக்கு தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியிலும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் பலமான அடித்தளம் கட்டியெழுப்பப்பட்டு வந்த போதிலும், இலங்கை சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸக் கட்சி உள்ளிட்ட இடதுசாரிய இயக்கங்களின் வர்க்க ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அவர்கள் முதலாளித்துவத்திடம் கட்சியை தாரைவார்த்தனர். அதன் உச்சக்கட்டமாக 1964ல் 21 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது. அப்போது இலங்கை கம்யூனிஸக் கட்சியின் சீன சார்ப்பு அணியில் செயற்பாட்டாளராக இருந்த தோழர் ரோஹன விஜேவீர் 1965ல் அதிலிருந்து விலகி மக்கள் விடுதலை முன்னணியை அமைத்தார். மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்திலிருந்தே வர்க்க ஒத்துழைப்பிற்கு எதிரான வர்க்கப் போராட்டத்திற்காக இலங்கையில் சோஷலிஷப் புரட்சியை யதார்த்தமாக்குவதற்காக தோன்றி நின்றது.

இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, மேலும் ஆயிரக்கணக்கானோர் சிறையிலடைக்கப்பட்டு உடைத்து சுக்குநூறாக்கப்பட்ட 1971ன் ஆயுதப் புரட்சியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்களென நினைக்கிறேன். இலங்கையில் சோஷலிஸத்திற்கான முதல் போராட்டம் அதுதான். ஆனாலும் அந்தப் போராடடம் மிகக் குறுகிய காலத்திற்கு கொடூரமாக அடக்கப்பட்டது. 1978 தேர்தல்களில் மாற்று வழியில் பங்கேற்று அரசியலுக்கு வந்தபோதிலும், 1983ல் கட்சி தடை செய்யப்பட்டது. தோழர் ரோஹன விஜேவீர உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட கையோடு புரட்சி தோல்வியடைந்தது. 

அந்த பாரிய அழிவின் பின்னர் 1994ல் மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. ஆனால், ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட பழைய இடதுசாரி இயக்கத்தின் தீவிரவாதத்திற்குள் மக்கள் விடுதலை முன்னணியும் பலியாகியது. 

இலங்கையின் பிரதான முதலாளித்துவ கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியோடு கூட்டு சேர்ந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்டது. 2005ல் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக முன்னின்று உழைத்தது. அது மாத்திரமல்ல, 2010 ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வெற்றிக்காக இரண்டாவது பிரதான கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியோடு கைகோர்த்துக் கொண்டது. முன்னிலை சோஷலிஸக் கட்சியை கட்டியெழுப்புவதற்காக கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் 2011ல் கட்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணம் வர்க்க ஒத்துழைப்புக்கு எதிரான போராட்டம்தான். இது இன்று நாம் உரையாற்றக் கூடிய தொனிப்பொருளோடும் சம்பந்தப்படுகிறது. 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்ற காலத்தி;ல் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை கடைபிடித்தது. கட்சி முழுமையாக இனவாதத்திற்குள் வீழ்ந்தமைதான் இதற்கு காரணமென நினைப்பது தவறு. தமிழ் மக்கள் எதிர்க்கொண்டுள்ள தேசிய நெருக்குதல் குறித்தும், மாறி மாறி ஆட்சிக்கு வரும் முதலாளித்துவ அரசாசங்கங்களின் இனவாத செயற்பாடுகளினால் நெருக்கடி உக்கிரமடைந்தமை குறித்தும் எங்களுக்கு மத்தியில் கருத்தாடலொன்று இருந்தது. 

சிங்கள - தமிழ் - முஸ்லிம் என இன அடையாளத்தோடு வர்க்கத்தை பிளவுபடுத்தி வர்க்கப் போராட்டத்தை பலவீனமடையச் செய்யும் ஆளும் வர்க்கத்தின் குறுக்குப் புத்தி குறித்தும், இந்தப் பிரச்சினையை தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப முகாமைத்துவம் செய்வதற்கு ஏகாதிபத்தியம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அதன்போது பேசப்பட்டது. 

கட்சியிலிருந்த பெரும்பாலான தோழர்கள் இந்தப் பிரச்சினையை தத்துவார்த்த கோணத்திலேயே பார்த்தனர். முதலாவதாக சோஷலிஸப் புரட்சி. புரட்சிக்குப் பின்னர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகுவாக இருக்கும். தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்ற கருத்து அந்த கோட்பாட்டுக்குள் இருந்தது. ஆனால், 2009ல் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பாரிய அழிவு ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட சிங்கள- தமிழ் மக்களுக்கு பாரிய அழிவை உண்டாக்கிய செயற்பாட்டில் நாங்களும் பங்காளிகளாக இருந்தோம் என்பதற்கான சுய விமர்சனம் உறுப்பினர்களிடம் இருந்தது. நாங்கள் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகுவதற்கு இன்னொரு காரணம் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களுக்கிடையில் இருந்த இடைவெளியை நிரப்பும் அரசியலுக்குள் பிரவேசித்தோம். 

சிங்களவர்களின் உரிமைக்காக தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் உரிமைக்காக சிங்கள மக்களையும் ஒருங்கிணைக்கும் அரசியலுக்கும், அதனூடாக சிங்கள - தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களை ஒரே அணியில் இணைக்கும் அரசியலுக்கும் பிரவேசித்தோம். சிங்கள இனவாதத்திற்கு தூபமிடும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்கு பயந்தார்கள். ஆதலால், எமது கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து கட்சிக்கெதிராக பாரிய அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. வடபகுதி மக்களுக்கு பாட்டாளி வர்க்க அரசியலின் செய்தியை எடுத்துக் சென்ற லலித் குமார் வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய தோழர்கள் 2011 டிசம்பர் மாதம் கடத்தப்பட்டார்கள். அவர்களை பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. 2012 ஏப்ரலில் எமது அரசியல் சபை உறுப்பினர்களான தோழர் குமார் குணரத்தினமும் , தோழி திமுத்து ஆட்டிகலையும் கடத்தப்பட்ட போதிலும், தேசிய மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாக பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இவற்றுக்கு மத்தியில்தான் நாம் இனவாதத்திற்கும் வர்க்க ஒத்துழைப்புவாதத்திற்கும் எதிரான பாட்டாளி வர்க்க அரசியலுக்காக போராடுகிறோம். இலங்கையில் ஒடுக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, இலங்கையிலும் இந்தியாவிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் பகைமை வளர்க்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில், எமது இடதுசாரிய சிந்தனை எம்மை சர்வதேசவாதிகளாக ஆகுமாறு கூறுவதனால்தான் நாங்கள் என்னவென்றால் இனவாதத்திற்கு எதிரான எமது மனச்சாட்சிதான். எமது சிந்தனையில் இருந்தவற்றுக்கும், யுத்தத்தின்போது உண்மையாக நடந்தவற்றுக்கும் இடையிலிருந்த இடைவெளி எங்களை அதிர்ச்சியில் உறையச் செய்தமையால் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி முன்னிலை சோஷலிஸக் கட்சியை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள்தான் ஆகின்றன.சர்வதேசவாதத்தைப் பற்றி பேசாத இடதுசாரிகள் எங்குமே கிடையாது. எல்லோரும் அந்த வார்த்தையை உச்சரிக்கிறார்கள். ஆனால் சர்வதேசவாத செயற்பாட்டை அணுகுவது எப்படி? உங்களது நாட்டிலும், எங்களது நாட்டிலும் அனுபவங்கள் இருக்கின்றன. தமது அரசியல் - பொருளாதா- சமூக- கலாச்சார உரிமைகள் பறிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள், சிங்கள முதலாளியோடு இனவாத ரீதியில் ஒன்றுபடுகிறார்கள். 

அனைத்து வழிகளிலும் தம்மை மிதித்துக் கொண்டிருக்கும் தமிழ் எஜமானர்களோடு ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன ரீதியிலான உறவுகள் ஏற்படுகின்றன. நாங்கள் அதனை அனுபவத்தின் வாயிலாக அறிந்துள்ளோம். தூரத்திலிருந்து கூர்ந்து நோக்கும்போது இந்திய ஒடுக்கப்பட்டவர்களின் கரங்களிலும் அதே விலங்கு போடப்பட்டிருப்பது தெரிகிறது. இந்தியாவின் சில மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் நரேந்திர மோடியின் இனவாத கருத்துக்களுக்கு வரவேற்பு கிடைத்தமையையும், தென்னிந்தியாவில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றோர் ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களுக்கிடையில் உள்ள முரண்பாடுகளை மறைத்து போலி முரண்பாட்டையும் இனவாதத்தை போஷிக்கும் விதத்தையும் நாங்கள் அவதானித்து வருகிறோம். இந்தியாவிலும் இலங்கையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில், வர்க்க அமைப்புகளுக்கு மத்தியில், இடதுசாரிகளுக்கு மத்தியில், முற்போக்காளர்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வையும், செயற்பாட்டையும் உருவாக்கிக் கொள்வது இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கும் ஆரம்ப நடவடிக்கையாக இருக்கும். மாக்ஸியம் - லெனினிஸம் குறித்து பொதுவான கருத்துக்களை கொண்டிருந்தாலும் ஒவ்வொருவருடைய பிரச்சினைகளைப் பற்றியும், சவால்களைப் பற்றியும், தந்திரோபாய நடவடிக்கைகள் விடயத்திலும் நாங்கள் வெகு தூரத்தில் இருக்கிறோம். அந்த தொலை தூரத்தை இப்படியான கருத்துப் பரிமாற்றங்களினால் தீர்க்க முடியுமென நாங்கள் நினைக்கவில்லை. என்றாலும் இச்சந்தர்ப்பத்தை ஒரு ஆரம்பமாக எடுத்துக் கொள்வோமென நாங்கள் முன்மொழிகிறோம்.

இலங்கை ஒரு தீவு. அதன் அயல் வீடுதான் இந்தியா. இன்னும் சிறப்பாகக் கூறுவதாயிருந்தால் தென்னிந்தியா. இந்தியாவின் தென் கடற்கரையிலிருந்து இலங்கை கடற்கரைக்கு உள்ள தூரம் உங்களுக்கென்றால் சென்னைக்கும் புதுடில்லிக்கும் உள்ள தூரத்தையும் விட குறைவுதான். எனக்கென்றால் எனது பிறந்த ஊருக்கும் கொழும்புக்கும் இடையிலான தூரத்தையும் விடக் குறைவு. இரு நாடுகளுக்கிடையில் நெருங்கிய உறவுகள் காணப்படுவது அதனால்தான். இலங்கை மக்களின் வரலாற்றில் பல திருப்புமுனைகளோடு இந்திய குடிபெயர்வுகளின் தொடர்பும் இருக்கிறது. 

இலங்கையின் ஆரம்ப கற்காலம் தொட்டு இரும்பு யுகத்திற்கு செல்லும்போது, ஆரம்ப கூட்டுச் சமூகத்திலிருந்து அரசுகளைக் கொண்ட ஆசியான் உற்பத்தி முறையுடனான வர்க்க சமூகம் உருவாவதில் இந்திய குடிபெயர்வுகளின் தாக்கம் இருந்ததாக நம்பப்படுகிறது.

இலங்கையில் சிங்களம் பேசும் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் புத்த மதமும், பெரும்பாலான தமிழ் பேசும் மக்கள் பின்பற்றும் ஹிந்து தர்மமும் இந்திய வழித்தோன்றல்களான சமயங்களாகும். இஸ்லாம் அராபியர்களின் ஊடாக இலங்கைக்கு வரவில்லை. மாறாக மலபார் மற்றும் காயல் பட்டணத்திலிருந்து வந்த இஸ்லாமியர்களின் வழியாகவே இஸ்லாம் இங்கு வந்தது. காலத்துக்குக் காலம் மோதல்கள் ஏற்பட்டாலும், பொதுவாக சிங்கள- தமிழ் உறவுகள், இந்திய- இலங்கை உறவுகள் தொடர்பிலான வரலாறு இன்றுபோல் வேதனைகள் நிறைந்ததாக இருக்கவில்லை. 

அநேகமான தமிழ் சொற்கள் சிங்கள மொழியோடு கலந்திருக்கின்றன. இலங்கையின் மத வழிபாடுகள் பௌத்தம் மற்றும் ஹிந்து சமயங்களின் கலவையாக காணப்படுகிறது. நீங்கள் இலங்கையில் புத்த விகாரையொன்றுக்கு சென்றால் அங்கு புத்தரின் சிலைக்குப் பக்கத்திலேயே ஹிந்து தெய்வங்களின் சிலைகளையும் காண முடியும். இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தி;ல் ஒரே நாளில் சித்திரைத் திருநாளை கொண்டாடுகிறார்கள். இலங்கையின் கடைசி இராசதானியை ஆண்ட அரசர்களில் பெரும்பாலானோர் தமிழ் நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவர்களாகும். 

சிங்கள- தமிழ் மக்களுக்கிடையில் பகைமை தோன்றுவதற்கு முதலாளித்துவம் முழுமுதற் காரணியாக இருக்கிறது. அதற்கு முன்னர் வரலாற்றில் பலமான ஒட்டுறவு இல்லாத போதிலும், நீண்டகால பகை இருக்கவில்லை.

ஆனால் முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு அது மாற்றமடைகிறது. இந்தியாவைக் போன்று இலங்கையும் ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பின்னர்தான் இலங்கையில முதலாளித்துவ முறை வேரூன்றியது. அதற்கு முன்னர் போர்த்துக்கீயர் மற்றும் ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் பொதுவான மாற்றங்கள் ஏற்பட்டாலும், பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்திலேயே ஆழமான சமூக பொருளாதார சீரமைப்புகள் ஏற்பட்டன. 19ம் நூற்றாண்டிலிருந்து இலங்கை மக்களை பிரித்தாளும் கைங்கரியம் மேடையேறியது. ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை போன்றே இலங்கையில் பிரபுத்துவம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஓற்றுமையையும் நல்லணக்கத்தையும் நிலைநாட்டும திசையை நோக்கி மக்களை இட்டுச் செல்லவில்லை. அவர்களுக்கிடையில் பகைமையை வளர்க்கும் திசைக்கே இட்டுச் சென்றது. பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களிடம் தமது காலனித்துவ நாடுகளில் தலைதூக்கும் சுதந்திர போராட்டங்கள் சோஷலிஸத்தின் பாதையில் வளர்ச்சியடைவதை தடுப்பதற்கான தந்திரோபாய முறையொன்று இருந்தது. அதுதான் 'பிரித்து ஆளும்" முறை. அதனை நாங்கள் இந்தியாவிலும் கண்டோம். இலங்கையிலும் கண்டோம். இந்த நிலைமைக்குள் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் எதிரியாகத் தெரிவதும், தமிழ் மக்களுக்கு சிங்கள மக்கள் எதிரியாகத் தெரிவதும் தற்செயலானதல்ல. திட்டமிட்ட செயற்பாட்டின் பிரதிபலன்தான் அது. 

முதலாவது அரசியல் நிர்ணய சபைக்கு பிரதிநிதிகள் இன அடிப்படையி;ல் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இனவாதத்தை தூண்டுவது வரை பல்வேறு உபாயங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் முதல் பிரிவினர் அவர்களுக்கே உரித்தான பிற்போக்குத்தனம் காரணமாக, இலங்கை இனத்தை கட்டியெழுப்பும் நோக்கமோ, இலக்கோ அவர்களுக்கு இருக்கவில்லை. சிங்கள முதலாளிகள் தமிழ் மக்களை அந்நியப்படுத்தி சிங்கள இனவாத அடையாளங்களோடு பிணைந்த முதலாளித்துவத்தை நிர்மாணிக்க முயற்சித்தனர். இலங்கை தேசிய சபையின் ஆரம்பக்கட்டத்தில் இதற்குத் தேவையான அளவு உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும். தமிழ் மொழியை பேசும் எஜமானியம் தனது மக்களின் பிரச்சினைகளுக்கு அந்தக் கோணத்திலேயே தீர்வு காண முயற்சித்தது. அது தமிழ் மக்களின் விடுதலைக்காக இலங்கையின் மீதோ, உலக முற்போக்கு இயக்கத்தின் மீதோ, இடதுசாரியத்தின் மீதோ நம்பிக்கை வைக்கவில்லை. சிங்களம் பேசும் ஒடுக்கப்பட்ட மக்களோடு உடன்பாட்டுக்கு வர முயற்சிக்கவில்லை. அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறுகிடைக்கும் இலாபத்தை பொறுத்து முதலாளித்துவக் கட்சிகளோடு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கே எப்பொதும் முயன்றது. இதனால் சிங்கள தமிழ் மக்களுக்கிடையிலான இடைவெளி மேலும் அதிகரித்தது. 

சிங்கள தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையை கட்டியெழுப்பும் நோக்கம் இடதுசாரி இயக்கத்திற்கு இருக்கவில்லை. இலங்கையின் இடதுசாரி இயக்கம் சிங்கள இனவாதத்திற்கும் தமிழ் இனவாதத்திற்கும் இடையில் சிக்கி தடுமாறிக் கொண்டிருந்தது. சிங்கள வலதுசாரியத்தின் மேலாதிக்க இனவாதத்தின் மீதும், தமிழ் வலதுசாரியத்தின் பிரிவினைக் கொள்கையில் தனிமைப்படுத்தப்பட்ட இனவாதத்தின் மீதும் பழியை போட்டுவிட்டு ஒதுங்கிவிட இடதுசாரி இயக்கங்களினால் முடியாது. இடதுசாரிகள் என்ற வகையில், இலங்கையின் இடதுசாரிய இயக்கத்தின் 80 வருடகால பாரம்பரியத்தின் இன்றைய பரம்பரையினராகிய நாம் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோம். 

அது குறித்து எமக்குள் சுய விமர்சனம் இருப்பது உண்மைதான். சிங்கள- தமிழ் மக்களுக்கு மத்தியில் இருந்த வரலாற்று உறவுகளை இடதுசாரியத்தால் அரசியல் வெளிப்பாடாக ஆக்கிக் கொள்ள முடியவில்லை. இலங்கை இடதுசாரிய வரலாற்றில் 1950களில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. 1953ல் இலங்கையின் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக ஹர்தால் நடத்தப்பட்டது. இடதுசாரி இயக்கத் தலைவர்களின் இந்த நடவடிக்கை காரணமாக ஆட்சியாளர்கள் மண்டியிட வைக்கப்பட்டனர். 1953ல் வளர்ந்து வந்த இடதுசாரிய மக்கள் அபிப்பிராயத்திற்கு எதிராக செயற்பட்ட பிற்போக்குவாதிகள், 1956ல் போலி மாற்றமொன்றை நிர்மாணித்தனர். அதன் விளைவாக இலங்கை முதலாளித்துவத்திற்குள் இரு பிரிவுகளும், இரு கட்சிகளும் உருவாகி, பின்னர் அவை மாறி மாறி நாட்டை ஆள்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அதேபோன்று இலங்கை முதலாளித்துவ பிரிவிற்கும், சிறு முதலாளிகளின் பிரிவுக்குமிடையில் அரசியல் உறவுகள் கட்டியெழுப்பப்பட்டன. 

வர்க்க ஒத்துழைப்புவாதத்திற்குள் மூழ்கிய இடதுசாரியம் அந்த பிற்போக்குக் கூட்டத்தோடு தொழிலாளர் வர்க்கத்தையும் பிணைத்தது. அதன் பின்னர் உண்மையான எதிர்விரோதங்கள் மறைக்கப்பட்டு, போலி எதிர்விரோதங்கள் மேடையேறும் வரலாறு மீளமைக்கப்பட்டது. இலங்கை முதலாளியத்திற்கு உந்து சக்தியை பெறுவதற்காக பயன்படுத்திய தமிழர் எதிர்ப்பிற்கு சிங்கள மக்கள் பலியாகினர். மறுபுறம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது தேசிய அரசியலுக்குப் பதிலாக முதலாளித்துவ ஆட்சியாளர்களோடு உபாயங்களில் ஈடுபடும் தமிழ் எஜமானிய அரசியலுக்கு கீழ்படிந்தனர். அதன் பின்னர் சிங்களவர்களும் தமிழர்களும் இரண்டுபட்ட வரலாறு உருவாகியது. இந்த நிலை இலங்கையை மட்டுமல்ல முழு பிராந்தியத்திலும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிராந்திய ஏகாதிபத்திய பலவான் என்ற வகையில் இந்தியா ஒவ்வொரு முறையும் இலங்கையின் பிரச்சினையில் தலையிட்டது. சமூகக் கண்ணோட்டத்தி;ல் அல்லாமல் அரசியல் சாணக்கிய கண்ணோட்டத்திலேயே இந்திய ஆளும் வர்க்கம் தலையிட்டது. 

இலங்கையில் இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. இதுவரை ஆயுதங்களோடு செயற்பட்ட தேசியப் பிரச்சினை தற்போது புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரப் உரிமைகள் ஆபத்தில் சிக்கியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அதற்கு தீர்வை தேட வேண்டும். தீர்வை தேடும்போதுதான் அதன் ஆழம் தெரிகிறது. இந்தப் பிரச்சிணையில் இடதுசாரிய இயக்கத்தின் தலையீடு சமூக அபிவிருத்திக்கும் மறுமலர்ச்சிக்கும் எந்த விதத்தில் தாக்கத்தை எற்படுத்தும்? உதாரணமாக மார்ச் மாத கடைசியில் ஜெனீவா மனித் உரிமைகள் மாநாடு நடக்கவிருக்கிறது. ஒருபக்கம், ஏகாதிபத்தியவாதிகள் தெற்காசியப் பிராந்தியத்தில் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைபடுத்தும் சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்துகிறார்கள். மறுபக்கம் அது தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளுக்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. 

ஏகாதிபத்தியத்தினதும், உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தினதும் நிகழ்ச்சி நிரல்களுக்கிடையிலான இந்த உறவுகளுக்கு மத்தியில் இடதுசாரி இயக்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது எப்படி? அந்த கேள்விகளுக்கான பதில் இலகுவானதாக இல்லை. 

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதலாளித்துவத்தின் எந்தவொரு பிரிவின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது, அமெரிக்கா அல்லது ஐரோப்பா ஊடாகவோ, கருணாநிதி அல்லது ஜெயலலிதா ஊடாகவோ, ராஜபக்ஷ அல்லது விக்னேஸ்வரன் ஊடாகவோ அதனை தீர்க்க முடியாது. முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகாரப் போட்டி மற்றும் உள்முரண்பாடுகளின் மூலம் உருவாகும் மறுசீரமைப்பு தமிழ் மக்களுக்கு தற்காலிக நிம்மதியைக் கொடுக்கலாம். ஆனால், அது நீண்டகாலம் நிலைக்கக் கூடிய நிம்மதியாக இருக்க முடியாது. அதன் மூலம் தீர்வு கிடைத்துவிடாது. 

நாங்கள் மாக்ஸியவாதிகள் என்ற வகையில் அதற்கான பாதையை தேட வேண்டும். உலக மட்டத்திலான புரட்சிகர மாற்றத்திற்குள் தான் விடுதலைக்கான பாதை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். ஓவ்வொரு நாட்டிலும் ஏற்படக்கூடிய புரட்சிக்குப் பின்னர், தெற்காசியாவில் சோஷலிஸக் குடியாட்சி அமைப்பை கட்டியெழுப்புவதன் ஊடாக ஆரம்பமாகும் செயற்பாட்டுக்குள் ஒடுக்கப்பட்ட தமிழனின் மாத்திரமல்ல, ஒடுக்கப்பட்ட சிங்களவனினதும், இஸ்லாமியனினதும் இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள ஒடுக்கப்பட்டவர்களினதும் விடுதலைக்கான பாதை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். 

இவ்வாறாக சிங்கள மக்களுக்குள் தமிழர் மீதான பகையும், தென்னிந்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் சிங்களவர் மீதான பகையும் இல்லாதொழிக்கப்படும். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை தமிழ் ஜனநாயகத்திலிருந்து மீட்டு ஒடுக்கப்பட்ட சிங்களவர்களோடு ஐக்கியப்பட வைக்கும் அரசியலுக்குள்தான் தமிழ் மக்களின் கேள்விக்கு பதில் இருக்கிறது. அந்த புதிய மாற்றீடை உருவாக்குவதற்காக எமது கட்சிகளுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வும், ஒன்றிணைந்த செயற்பாடும் தேவைப்படுகிறது. இந்திய பாட்டாளி வர்க்க இயக்கத்தில் ஏற்படும் வளர்ச்சிகள் இலங்கையின் புரட்சிக்கு உந்து சக்தியாக இருப்பதைப் போன்றே, இலங்கையின் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு கிடைக்கும் வெற்றி இந்திய புரட்சியை துரிதப்படுத்தும் என்பதில் எங்களுக்கிடையில் விவாதம் இல்லை. உங்களது நாட்டில் போன்றே எங்களது நாட்டிலும் இடதுசாரியத்தின் மறுபிறப்பிற்காக நாங்கள் கை கோர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக தோழமையின் கைகளை உயர்த்தி நான் விடைபெறுகிறேன்.