Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தீர்க்கப்பட வேண்டிய சந்தேகங்களும் பரிமாற்றப்பட வேண்டிய உண்மைகளும்.

1926ல் “இலங்கைக்கு கண்டி சிங்களவர்-கரைநாட்டுச் சிங்களவர்-தமிழர் என்ற அடிப்படையில் அமைந்த மூன்று பிராந்தியங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி அரசியலமைப்பே அவசியம்” என்பதை எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க வலியுறுத்திய போது அன்றைய மேல்தட்டு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதனை கணக்கில் எடுக்கவில்லை.

1931ல் “இனவாதம்” முளைவிடும் ஆங்கிலேய அரசியல் அமைப்பு வேண்டாம” என்று ‘யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்’ (1920க்கும் 1940க்கும் இடையேயான காலப் பகுதிகளில் பண்டாரநாயக்கா உட்பட பல வேறுபட்ட சிங்கள அரசியல் தலைவர்களை யாழ்பாணத்திற்கு அழைத்து வந்து மாநாடுகளை நடாத்திய அமைப்பு)  வலியுறுத்திய போது தமிழர் தலைவர்கள் ‘காங்கிரஸையே’ காணாமல் போகும்படி செய்து விட்டார்கள்.

1944ல் தான் இலங்கை வரலாற்றில் முதற் தடவை ‘இலங்கைத் தமிழர்’ என்ற வரையறையின் கீழ் ‘அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்’ கட்சி கட்டப்பட்டது. 

1946ல் சிங்கள-தமிழ்-முஸ்லீம் முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய ‘ஐக்கிய தேசியக் கட்சி’ தொடங்கப்பட்டது.

1949ல் ‘இலங்கைத் தமிழரசுக் கட்சி’ ஆரம்பிக்கப்பட்டு ‘பாரம்பரிய வடகிழக்குப் பிரதேசத் தமிழர்கள்’ - ‘தமிழ்’- ‘சமஷ்டி’ - சுயாட்சி போன்ற இனவாதக் கதையாடல்கள் ஆரம்பமாகின.

1951ல் திரு பண்டாரநாயக்க ‘சிறிலங்கா சுதந்திரக் கட்சி’யை ஆரம்பித்து ‘சிங்கள மக்கள்’ – ‘சிங்கள நாடு’ - ‘சிங்களம்’ என்ற இனவாதக் கதையாடல்களை ஆரம்பித்து வைத்தார்.

.1956ல் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் வந்தபோது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் முன்னால் சத்தியாக்கிரகம் இருந்தார்கள். பிரதமர் திரு பண்டாரநாயக்கா கண் முன்னாலேயே சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து கொழும்பிலும் கல்லோயாவிலும் கலவரங்கள் இடம்பெற்றன.

அடி வாங்கிய ஆங்கில மொழியில் அரசியல் செய்த பாரம்பரிய தமிழ் தலைமைகள் சிங்கள மொழியைப் படிக்க வேண்டாம் என்றார்கள். ஆனால் அன்றைய (சிங்கள) அரசாங்கம் எந்த வகையிலும் தமிழைத் தடை செய்யவில்லை. 

1957ல் ஒப்பந்தம்(பண்டா-செல்வா) செய்யப்பட்டது. பின்பு கிழித்தெறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்ட தமிழ்த் தலைமைகளின் அரசியல் சாணக்கியம் 1958ல் கலவரத்தை ஏற்படுத்தியது.

1965ல் மறுபடி ஒரு ஒப்பந்தம் (டட்லி-செல்வா)  கைச்சாத்தானது. அதுவும் கிழித்தெறியப்பட்டது. 

1970க்கு முன்னர் ‘மலையக-இஸ்லாமியத்’ தமிழர்கள்’ உட்பட இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளுக்காக பல இடதுசாரிக் கட்சிகள் குரல் கொடுத்து வந்தன கலவர காலங்களில் இந்த இடதுசாரிக் கட்சிகளைச் சார்ந்த சிங்கள மக்கள் தமிழ் மக்களைப் பாதுகாத்தனர். ஆனால் தமிழ் தலைமைகள் அந்த நட்பு சக்திகளை அந்த சக்திகளுக்குப் பின்னால் அணிதிரண்டிருந்த மக்களை நாடவில்லை. அவர்களுடைய பாரம்பரிய-பரம்பரைத் தமிழ் ஆதிக்க அதிகார மனோபாவம் அந்த நட்பு சக்திகளுடன் இணைவதனை அனுமதிக்கவில்லை. 

காரணம் அந்த சக்திகள் தமிழ் மக்களுடைய உரிமைகளை மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியில் அடக்கியொடுக்கி மிதித்து நசித்து வைக்கப்பட்டுக் கொண்டிருந்த பாமர பாட்டாளித் தமிழ்  மக்களின் உரிமைகளுக்காவும் குரல் கொடுத்ததேயாகும். சிங்கள ஆதிக்க அதிகார வர்க்கங்களுக்கு சமனாக தமிழ் மக்களை ஆளும் அதிகாரத்தை அதாவது சம அந்தஸ்தை-தமிழரசைக் கோரியவர்களுக்கு தமிழ் மக்கள் மத்தியிலான “சமத்துவம்” கோரிய இடதுசாரிகளைப் பிடிக்கவில்லை. அவர்களுடன் அரசியல் கட்சி என்ற வகையில் (இன்றுவரை) ஒரு உரையாடலைக் கூட நடாத்தவில்லை. நடாத்த விருப்பமில்லை. வன்னிப் பேரழிவுக்குப் பின்னர் கூட தென்னிலங்கை மக்கள் மத்தியில் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் புரிந்த அநியாயங்களை எடுத்துச் சொல்ல மனம் வரவில்லை. சொல்வதற்கான இதய சுத்தி இல்லை. 

இன்று கூட தமிழ் மக்களின் அவலங்களுக்குத் தொடர்ந்தும் காரண கர்த்தாக்களாக விளங்கும் ஆளும் அரசாங்க சக்திகள் மீதும் - அந்த சக்திகளுக்கு அனைத்து உறுதுணைகளை வழங்கியபடி நாட்டின் வளங்களையும்-குடிமக்களையும் சுரண்டும் வெளிநாட்டுக்காரர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் தமிழ் மக்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அவர்களுடன் இணைந்து செயற்படும்-செயற்பட விரும்பும் சிங்கள-மலையக-முஸ்லீம் மக்களிடம் நட்பைக் கூட காட்ட முடியவில்லை. 

தற்போது புதிய அரசியல் யாப்பு வந்தால் எல்லாம் நல்லபடி ஆகும் என்கிறார்கள். ஆனால் அந்த யாப்பை சட்டம் ஆக்குவதற்கு சர்வசன வாக்கெடுப்பு வேண்டும். அதற்கு அதிகளவில் “ஆம்” என வாக்களித்து யாப்பை அங்கீகரிக்க வேண்டிய மக்கள் தென்னிலங்கை மக்களே. அவர்களைக் காட்டியே நல்லாட்சியினர் “கபடி ஆட்டம்" ஆடிக் கொண்டிருக்கிறனர். எனவே அந்த மக்களிடம் எமது பிரச்சனைகள் என்ன? அபிலாசைகள் யாவை? எங்களது கோரிக்கைகளின் நியாயம் எவை? என்பதனை விளக்க வேண்டிய அவசியத் தேவை ஒன்று இன்று உள்ளது. 

இலங்கையில் ‘சனநாயகத்தை’க் காப்பாற்றத் துடிக்கும் சர்வதேச சமூகம் கூட இந்த மக்களின் அனுசரணையில்லாமல் எமது நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது. சர்வதேசம் எங்கள் மேல் அனுதாபம் மட்டுந்தான் தெரிவிக்கிறதே தவிர ஆதரவு தரவில்லை. தரவும் மாட்டாது. ஆதரவு தரக்கூடியவர்களும் எமக்கு ஆதாரமாக விளங்கக் கூடியவர்களும் எமது ஏனைய சகோதரக்குடிமக்களே.

70 வருடங்களாக எம்மைத் தொடர்ந்து துன்புறுத்தி வரும் அரசியல் தலைமைகளுடன்தான் மாறி மாறி நாம் தீர்வு குறித்துப் பேசுகிறோம். நம்பி நம்பி ஏமாறுகிறோம். அதுவும் அதிகார(ம்)ப் பங்கீடு பற்றித்தான் பேசுகிறோம். அதுவும் வடகிழக்கு எல்லைக்குள் நின்றுதான் பேசுகிறோம். அதற்கும் அப்பால் ஏழு மாகாணங்களில் வாழும் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் பற்றிய அக்கறை நாம் கொள்ளமாட்டோம். அது எங்களுடைய பிரச்சனையல்ல என்பதே எமது நிலைப்பாடு. இதுதான் எமது 70 ஆண்டு கால அரசியல் வரலாறு. 

வடகிழக்குக்கு அப்பால் 15லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை உள்ளடக்கியபடிதான் சிங்கள மக்கள் வாழ்கிறார்கள். எமது ‘சந்தேக புத்தி’ பாரம்பரியத்ததால் யுத்த காலத்தில் வடக்கில் குடிமக்களோடு குடிமக்களாக-தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லீம் மக்களை விரட்டியடித்தோம். 

அதே வேளை தென்னிலங்கையில் ஒரே தடவையில் நூற்றுக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டபோதோ அல்லது வடக்கில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேலான இராணுவத்தினர் கொல்லப்பட்டபோதோ சிங்கள மக்கள் ‘பொங்கி’ எழவுமில்லை. ஆத்திரப்பட்டு அணி திரளவும் இல்லை. ‘சந்தேகப்பட்டு’ தமிழர்களை விரட்டவுமில்லை. 

ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தபடி இருந்த தமிழர் பிரதிநிதிகள் தென்னிலங்கையில் அரசியல் நடாத்திபடிதான் இருந்தார்கள். சிங்கள அமைச்சர்களின் சிபாரிசுக் கடிதம் பெற்று நாட்டை விட்டுச் சென்றவர்களும் உண்டு. இராணுவ அதிகாரிகளின் கருணையினால் சிறையில் இருந்து மீண்டவர்களும் உண்டு.

சிங்கள மக்களை பற்றிய அறிதல் இல்லாமல்-அவர்களுடன் பழகாமல்-அவர்கள் வாழும் வாழ்க்கையை விளங்கிக் கொள்ளாமல்-அவர்கள் சிந்தனையைப் புரிந்து கொள்ளாமல் தமிழர் அரசியல் அரிச்சுவடி எமக்குக் கற்பித்தபடி “சிங்களவனை நம்பலாமா” என இன்னும் கேள்வி எழுப்புவோமேயானால் எமக்கு “மனித உரிமைகள்” பற்றிய புரிதல் இல்லை என்பதே உண்மை. 

இந்த “சிங்களவனை நம்பக்கூடாது” என்ற தமிழ் அரசியல் பரப்புரையை நாம் ஏற்றுக் கொண்டிருப்பதற்குக் காரணம் “தமிழன் தமிழனை நம்புவதில்லை” என்பதேயாகும். இதனால்தான் நாமே எமது இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தோம். 

83ல் வெலிக்கடைச் சிறையில் சிங்களவர்(கிரிமினல்)கள் 53 தமிழர்களைக் கொன்றது 3நாட்களில்(யூலை 25ம் திகதி முதல் 27ம் திகதி வரை). 

29 ஏப்ரல் 1986ல் ஒரே இரவில் யாழ்ப்பாணத்தில் 400க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழர்களாலேயே கொல்லப்பட்டனர். 

30 மார்ச் 1987ல் தமிழர்களால் மேற் கொள்ளப்பட்ட கந்தன் கருணைப் படுகொலையில் 15 நிமிடங்களுக்குள் 63 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 

3 ஆகஸ்ட் 1990ல் காத்தான்குடி மசூதியில் தொழுகையில் இருந்த 147 இஸ்லாமிய தமிழர்கள் ஓரிரு நிமிடங்களில் தமிழர்களாலேயே கொல்லப்பட்டார்கள்.

இவற்றையெல்லாம் "இனிப்பாக" ஏற்றுக் கொள்பவர்கள் எழுப்பும் கேள்விகள்தான் இந்த “சிங்களவனை-முஸ்லீமை நம்பலாமா?” என்பவையாகும். 

ஆனால் அதேவேளை நாங்கள் இலங்கை அகதிகளை சிறைக் கைதிகளாக வைத்திருக்கும் தமிழ்நாட்டு அரசை – அந்த முகாம்களில் பிறந்து வருடக்கணக்கில் வாழும் தலைமுறைகளுக்கு பிரஜாவுரிமை வழங்க மறுக்கும் இந்தியாவை - இலங்கையின் இனப்பிரச்சனைத் தீயை அணையவிடாமலும் அதேவேளை தீச் சுவாலை விட்டு எரிய விடாமலும் பார்த்தபடி இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சர்வதேசத்தை நம்பி மனு கொடுத்தபடி இருக்கிறோம்.

எமது ஆயுதப் போராட்டம் சந்தேகங்களுடன்தான் கட்டியெழுப்பி வளர்க்கப்பட்டது. நாடு கிடைத்தால் அதனை ஆள்வது யார்? என்ற தமிழர்களின் “சந்தேகம்” இறுதியில் போரா(ர்ஆ)ட்டத்தை முடிவுக்கு இட்டுச் சென்றது என்பதே உண்மை.

“சந்தேகம் களைவோம் - உறவை வளர்ப்போம் - உரிமைகளுக்கு உரியவர்களாவோம்.”