Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை இனப்பிரச்சனையின் தோற்றுவாய் பற்றி....

இன்று தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள இனவாத அரசால் நசுக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் தனித்தமிழீழம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதை முன்தள்ளுவதற்கு இலங்கையின் இடது சாரிய வரலாற்றையும் அதேவேளை சிங்கள இனவாதிகளின் வரலாற்றையும் புரட்டிப்போட்டு தனிமையில் இனவாதத்திற்கு சிங்கள இனம் மாத்திரம் தான் காரணம் என்று கூறி அவர்களின் மீது பழியைப் போட்டு தமிழ் குறுந்தேசிய வாதத்தை முன்தள்ளுகின்றனர். இதில் சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமும் பிரித்தானியர்களின் சூழ்ச்சியின் முக்கிய கருவான பிரித்தாளும் தந்திரத்தால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டதே ஒழிய தனிமையில் சிங்களவர்களால் உருவாக்கப்பட்டது என்று கூறிவிட முடியாது. எவ்வாறு சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைக்க சிங்கள மேட்டுக்குடி முன்வந்ததோ அதேபோன்று தமிழ் இனவாதத்தையும் விதைக்க தமிழ் மேட்டுக்குடியினர் முன்வந்தனர்.

 

இன்று பலரும் அனாகரிக தர்மபாலாவை இனவாதத்தின் தந்தையாக வர்ணிக்கின்றனர். இவர் சிங்கள மக்கள் மத்தியில் பிரித்தானியரின் வேண்டுதலின் பெயரில் இதை விதைத்தார். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அன்று தம்மை மேட்டுக்குடிகளாக காட்டிய ஆறுமுகநாவலர் தமிழ் மக்கள் மத்தியிலேயே சாதியத்தை ஊற்றி வளர்த்தவர் என்பதை எவரும் கருத்தில் கொள்வதில்லை. இலங்கையில் இனவாதம் ஆரம்பிப்பதற்கு அடிப்படைக்காரணங்களாக இருந்தது அரை நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சக்திகளே. அன்னிய காலணித்துவத்தின் போது அன்னியர்களுடன் சேர்ந்து நின்று தொழிலாள வர்க்கத்தை சுரண்டியவர்கள் அன்னியர்கள் வெளியேறியதும் அதை தொடர்ந்து செய்து வந்தனர். இதற்கு மறைமுகத்தில் அன்னிய சக்திகளின் தூண்டுதல்களும் இருந்தேறின. இக்காலத்தில் இலங்கையில் மிகவும் வலுவான கம்யூனிசக் கட்சியும் இருந்தது இது இவர்களுக்கு எதிரான போராட்டத்தை கூர்மைப்படுத்தும் வகையில் இயங்கியது. இதைக்கண்ட காலணித்துவ நாடுகள் இவர்களின் அடிவருடிகளைக் கொண்டு இனமுரண்பாட்டை தூண்டி விட்டனர். இவ்வினமுரண்பாடு என்பது இயல்பாக ஏற்பட்டதல்ல மாறாக காலணித்துவ நாடுகள் தமது சுயலாபம் கருதி பிரித்தாளும் தந்திரத்தை பயன்படுத்தினர்.


தமக்கு நம்பிக்கையும் தமது கோட்பாட்டை மறைமுகமாக இலங்கைக்குள் திணிக்கக் கூடிய தரகு சக்திகளை தேர்ந்தெடுத்து அவர்களை உயர் பதவிகளில் அமர்த்தியதன் மூலம் தமது திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தனர். இதனால் தான் இரு இன முதலாளித்துவ சக்திகளுக்கும் இடையான போராட்டம் என்பது உக்கிரம் அடைந்தது. இதற்கு உதாரணமாக தமிழ் அதுவும் யாழ்பாணத்து தமிழர்களில் மேல் சாதி யினரை அன்னிய சக்திகள் தமது தேவைகளுக்காக பயன்படுத்த ஆரம்பித்தன. அதன் விளைவாக யாழ் மேல்சாதியினர் கல்விமான்களாக ஆக்கப்பட்டு அவர்களுக்கு சேவகம் செய்யவும் புறப்பட்டனர். இவர்களை இலங்கையின் மற்றைய பகுதிகளுக்கு இந்த அன்னிய சக்திகள் வேலைக்கு அமர்த்தி மற்றைய பகுதி மக்களை இவர்களின் ஊடாக சுரண்ட ஆரம்பித்தன. நேரில் பார்க்கையில் இந்த யாழ் தமிழர்களே இவர்களை சுரண்டுவது போன்ற ஒரு பார்வையையும் மற்றைய சமூகத்தின் மத்தியில் வளர்த்தும் வந்தனர்.


அதேவேளை இந்த யாழ் மேல்சாதியினர் எற்கனவே யாழ்ப்பாணத்தில் கீழ்சாதியினரை ஒடுக்கி அடக்கி வாழ்ந்தவர்கள் பதவியும் அதிகாரமும் கிடைத்தவுடன் அதை இரட்டிப்பாக செயற்படுத்தவும் ஆரம்பித்தனர். போர்க்குணம் கொண்ட சிங்கள மக்களை ஒடுக்கவும் அவர்களின் போராட்டங்களை மளுங்கடிக்கவும் இந்த யாழ் மேல்சாதியினரை அன்னியர்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். இது மட்டுமல்லாது சிங்கள மேட்டுக்குடியினரையும் இந்த அன்னியர்கள் தமக்கு சேவகம் செய்ய பயன்படுத்தினர். இவ்வாறு இரு இனங்களுக்கிடையேயும் இருந்த மேல்மட்டத்தினரை தமது கைக்குள் போட்டுக்கொண்டதன் மூலம் இரு இனங்களையும் இணைய விடாது பிரித்தே வைத்திருந்தனர்.


தமிழர்கள் 35 சத விகிதத்திற்கும் கீழ் இலங்கையில் இருக்கும் போதே 50 சதவீத உரிமை கேட்டதன்மூலம் சாத்தியமற்ற ஒரு தீர்வை அன்றே முன்வைக்க கோரியிருந்தனர். இவ்வாறு 50 சத வீத அதிகாரப்பகிர்வு கேட்டவர்கள் தான் பின்னர் தழிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக வாழலாம் எனவும் கூறினர்.


இந்த காலகட்டத்தில் தான் யாழ் மேலாதிக்கத்தினர் பரவலாக சிங்களப் பிரதேசங்களிற்கு அரச ஊழியர்களாக தொழில் செய்யப்புறப்பட்டனர் அப்போது அவர்கள் சிங்கள மக்களை மூன்றாம் தர பிரஜைகளாகவும் அடிமைகளாகவுமே நடத்தி வந்தனர். தமது வீடுகளில் வேலைக்கு அமர்த்தி சித்திரவதையும் செய்தார்கள். இதன் மறுபக்கமாக சிங்கள மேட்டுக்குடியினர் இவற்றை தமது சுயலாபத்திற்காக பயன்படுத்த ஆரம்பிக்கலானார்கள். எற்கனவே பிரித்தானியரின் தூண்டுதலின் பெயரில் சிங்கள மேட்டுக்குடியினரால் முன்தள்ளுப்பட்டிருந்த இனவாதத்தை தமது கைகளில் தாங்கி இனமுரண்பாடு முற்ற வைக்கலானார்கள். தமிழ் சிங்களத் தலைமைகள் தாம் ஆட்சிபீடம் ஏறுவதற்காக இந்த இனமுரண்பாட்டை பயன்படுத்தினார்கள். இதன் விளைவாக தமது சுயலாபம் கருதி யாழ்ப்பாண மேலாதிக்க தமிழ் முதலாளிகளால் சிங்கள இனவாதத்திற்கு எதிராக யாழ் மையவாதத்துடன் பின்னிப் பிணைந்தது. கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் அங்கு வாழ்ந்த மக்கள் இனமத வேறுபாடின்றியே வாழ்ந்து வந்தனர். இவர்களின் வாழ்க்கை முறை ஒருவரை ஒருவர் தங்கி வாழ்ந்த வண்ணமே இருந்திருந்தது.


இவர்களின் வேலைகளாக விவசாயமும் மீன்பிடித்தொழிலுமே முக்கிய பங்காற்றியது. இந்த தரகு அரசால் இவர்களின் உழைப்பிற்கு சரியான பலன்கிடைக்காததால் அங்கிருந்த பலர் அரசுக்கு எதிராக சுயமான போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இந்தப் போராட்டங்களை மளுங்கடிக்கவும் தமது லாபங்களை பேணிப்பாதுகாக்கவும் சிங்கள அரசால் முன்னிறுத்தப்பட்ட இனவாதக் கொள்கையும் தமிழ் முதலாளிக்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியால் முன்வைக்கப்பட்ட தனித்தமிழீழம் என்ற கோட்பாடும் முட்டி மோத ஆரம்பித்தது.


இதன் விளைவாகவே இன்றைய தமிழீழக் கோரிக்கையும் உருவானது. இவ்வாறு உருவான தமிழீழக் கோரிக்கையை கையில் ஏந்தியவர்கள் குட்டி பூர்சுவா இளைஞர்களே. அவர்கள் இந்தக் கோரிக்கையை அரசியல் மயப்படுத்தி அதனூடாக மக்களை அணிதிரட்ட சிங்கள இனவாதத்திற்கு எதிரான போரை ஆரம்பித்தனர். இந்த இளைஞர்கள் தமிழ் சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் பங்கை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளாது மறுத்து இயங்கினர். மறுபுறத்தில் தமிழ் பாட்டாளி வர்க்கத்தினர் தமிழீழக் கோரிக்கை ஒரு தீண்டத்தகாத ஒரு கோரிக்கை என்பது போலவும் சாதியப் போராட்டமே முதன்மையானது என்பது போன்றும்; தமது செயற்பாடுகளை குறுக்கிக் கொண்டனர். இதனால் தமிழ்தேசியம் ஒரு பூதாகர நிலைக்கு மாறியது.


பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை கொண்ட பலரும் ஓரங்கட்டப்பட்டார்கள். ஒருசிலர் தேசியவாதம் தீண்டத்தகாதது என ஒதுங்கியும் கொண்டனர். இதனால் சிங்கள இனவாதமும் தமிழ்த்தேசியவாதமும் முட்டிமோதிக்கொண்டது. தமிழீழம் கோருவோர் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றும் அது பிரிந்து போதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமையைக் கொண்டது என்றும் பாட்டாளிவர்க்க கோசத்தை எடுத்து பறைசாற்றினார்கள். இவர்களின் இக்கருத்து சரியானதாக இருந்த போதும் இங்கு பிரிந்து போதல் என்ற பதத்தில் நின்ற படி எம்மை பிரித்துத்தான் ஆகவேண்டும் என்றும் ஒரு தேசிய இனம் தனக்கான சுயநிர்ணய உரிமையை பிரிந்து போதலுடன் கூடியதாக கோருவது என்பது சரியான கோரிக்கையாக இருந்தாலும் அதற்காக பிரிந்து போவதுதான் ஒரே முடிவு என்ற கோரிக்கை தப்பானது. இது பாட்டாளிவர்க்க சித்தாந்தத்திற்கும் முரணானதும் கூட...முன் வைக்கப்பட்டதே தமிழீழக் கோரிக்கை. தமிழீழக் கோரிக்கையை நாம் கவனத்தில் எடுப்போமாயின் இதை மாவட்ட ரீதியாக வாழும் தமிழ் மக்கள் எந்த வகையில் இதன் பின்னால் கொண்டு வரப்பட்டனர் என்பது புலப்படும். தமிழீழக் கோரிக்கை கூறுகின்றனர்.

"ஒரு தேசிய இனம் தனக்கான சுயநிர்ணய உரிமையை பிரிந்து போதலுடன் கூடிய தாக கோருவது என்பது சரியான கோரிக்கையாக இருந்தாலும் அதற்காக பிரிந்து போவதுதான் ஒரே முடிவு என்ற கோரிக்கை தப்பானது. இது பாட்டாளிவர்க்க சித்தாந்தத்திற்கும் முரணானதும் கூட...!"


சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களை ஒடுக்குவதற்காகவும் சிங்கள பாட்டாளி வர்க்கத்தை சுரண்டுவதற்காகவும் ஐக்கிய இலங்கை என்ற பதத்தை முன்தள்ளி சிங்கள பாட்டாளிகளை ஏமாற்றி வருகின்றது. இதற்கு சிங்கள இடதுசாரிகள் என்று கூறும் பலர் இதனூடு உடன்பட்டுப் போகின்றனர். இங்கு உண்மையான பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை கொண்டு இயங்கும் எந்த ஒரு அமைப்பும் பிரிந்து போதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளை அது எல்லாத் தேசிய இனங்களுடனும் ஐக்கியப்பட்டே போராட்டத்தை நடத்தும். அதேபோன்று மற்றைய தேசிய இனங்கள் தமக்கு பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்க கோரும் அதேவேளை அது ஐக்கியத்துக்கான போராட்டத்தையும் முன்னிறுத்தி மற்றைய தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து போராடும். இது பாட்டாளி வர்க்க சிந்தாந்த அரசியல் பார்வை.


இதையடுத்து இலங்கையின் புவிசார் வளம் பற்றிய விஞ்ஞான பூர்வமாகவும் இதைப்பற்றி ஆராயவேண்டும். அத்துடன் இலங்கையில் பல இன மக்கள் வாழ்கின்றனர் அவர்களை எந்தவகையில் வகைப்படுத்துவது.


1. சிங்கள இனம்
2. தமிழ் இனம்
3. முஸ்லீம் இனம்
4. மலையகத் தமிழ்
5. பழங்குடியினர் (வேடுவர்)
6. ஐரோப்பிய கலப்பினத்தவர் (பேகர்)


இவ்வாறு பல இனக்குழுமங்களைக் கொண்ட ஒரு நாட்டில் அவர்கள் தமக்கேயான தனித்தன்மையுடன் தம்மை அடையாளப்படுத்தும் இவர்களை எந்த வகையில் வகைப்படுத்துவது. இவர்கள் அனைவரும் தேசிய இனமா? அல்லது முதல் நான்கு வகையினரும் தேசிய இனமா? போன்ற கேள்விகள் உள்ளன. இவ்வாறாயின் அனைத்து தேசிய இனங்களும் பிரிந்து தமக்கான இடங்களை பிரகடனப்படுத்துமாயின் ஒரு தீவு விஞ்ஞான பூர்வமாக அது சாத்தியமற்றதாகின்றது.


- சீலன்.