Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

முள்ளிவாய்க்கால் இரவுகள்.....

ஓங்கி வளர்ந்திருந்த மரங்களினூடாக

ஒளியில்லாத நிலவு கசிகிறது

முடிவில்லாமல் கடல் அலைகள் கரைக்கு ஒதுங்குகின்றன

வெள்ளிய மணல் கும்பங்களில்

கால்கள் புதைய நடக்கின்றேன்

 

மெல்லிய அழுகைகள்,  விம்மல்கள்

காற்று முழுக்க கதறல்கள்

திடீரென்று எங்கும் குழந்தைகள்,குழந்தைகள்

குறுநடை நடந்து சிறு கை வீசி

விம்மிய குழந்தை ஒன்று கேட்டது

 

எங்கே போயிருந்தாய் இவ்வளவு நாளும்

நாங்கள் பால் இன்றி, பால் தந்த தாயும் இன்றி

பரிதவித்த போது எங்கு போயிருந்தாய்

நீயும் கொலைகாரர்களில் ஒருவனா

கோபமாக கேட்டது

 

இல்லை, இல்லை பதறியபடி மறுத்தேன்

அந்த நாட்களில் நான் உண்டதில்லை

உறக்கம் கொண்டதில்லை

கண்கள் முழுக்க கண்ணீரோடு இருந்தேன்

 

கோபம் குறைந்த குட்டி கன்னக்குழி மிளிர கேட்டது

போர் முடிந்து விட்டதாமே

இப்போது குழந்தைகள் குதித்து விளையாடுகிறார்களா

 

மனிதர்கள் பகை மறப்பார்கள்

பைபிளில் சொன்னது போல்

பசுவின் கன்றும், பால சிங்கமும்

பக்கம், பக்கம் நின்று நீர் பருகும் என்றேன்

 

குழந்தைகள் தானே, நம்பி குதூகலமாக சிரித்தார்கள்

சென்று வாருங்கள் எம்செல்வங்களே என்றேன்

அப்பா எங்கே என்ற அந்தோணி* மகளின்

அழுகையை மறைத்தபடி.

 

(*) - (அரச படைகளால் கொல்லப்பட்ட புத்தளம் மீனவர்)

 

- விஜயகுமாரன்.

முன்னணி இதழ்-5