Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

உடைமைகள் சூறையாடப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம் மக்கள்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 67 


தமிழீழ விடுதலைப் புலிகளால் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தால் யாழ்ப்பாணம் - கண்டி வீதி (A9) என்றுமில்லாதவாறு சனநெருக்கடிமிக்கதாக மாறிக்கொண்டிருந்தது. தமது மண்ணையும், மனையையும் விட்டு அனைத்தையும் இழந்து அநாதரவாக, அகதிகளாக வெளியேறிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் நம்பிக்கையற்றதொரு எதிர்காலத்தை நோக்கியவர்களாக சென்றுகொண்டிருந்தனர்.


முதலில் சாவகச்சேரிப் பகுதியிலிருந்து 1,500 முஸ்லீம்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து கிளிநொச்சி மற்றும் மன்னர் மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லீம்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர். இறுதியாக அக்டோபர் 30, 1990 யாழ்பாணத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் இரண்டு மணித்தியாலத்தில் வெளியேறுமாறும் உடுத்த உடுப்புடன் ஐம்பது ரூபாய் பணம் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என புலிகளினால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. அகதிகளாக உடுத்த உடுப்புடன் வெறுங்கையுடன் வெளியேறிய முஸ்லீம்களின் அனைத்து வீடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றாக கொள்ளையடிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் இருந்து 20,000 முஸ்லீம்களும், மன்னாரிலிருந்து 38,000 முஸ்லீம்களும், வவுனியாவிலிருந்து 9,000 முஸ்லீம்களும், முல்லைத்தீவிலிருந்து 5,000 முஸ்லீம்களுமாக 14,400 குடும்பங்களைச் சேர்ந்த 72,000 முஸ்லீம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் உடுத்த உடுப்புடன் வெறுங்கையுடன் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  

யாழ்ப்பாணம் - கண்டி வீதி மனிதப் பேரவலத்துக்கு சாட்சியாக விளங்கிக் கொண்டிருந்தது. முஸ்லீம் மக்களின் இந்த அவலங்கள் எதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு பொருட்டாக இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தரவுப்படி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் தம்முடன் பெறுமதி மிக்க பொருட்கள் எதனையும் எடுத்துச் செல்வதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வீதிச் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். இத்தகைய வீதிச் சோதனைகள் மூலம் முஸ்லீம் மக்கள் தம்முடன் எடுத்துச் செல்லும் பெறுமதி மிக்க பொருட்களை சூறையாடுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரே நோக்கமாக இருந்தது.

சிறு களவுகள் மற்றும் சிறு கொள்ளைகளுக்காக சமூக விரோதிகள் எனப் பட்டம் சூட்டி மின்கம்பத்தில் கட்டி மரண தண்டனை வழங்கிய மரபில் வளர்ந்ததாகவே ஈழ விடுதலைப் போராட்டம் அமைந்திருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் சமூக விரோதிகள் என முத்திரை குத்தி ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களையும் தடை செய்து தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாகி விட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் சிறு களவுகளுக்காகவும், சிறு கொள்ளைகளுக்காகவும் "சமூக விரோதி" என முத்திரையிட்டு மரண தண்டனை வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஒரு சமூகத்தை - முஸ்லீம் சமூகத்தை - இனச் சுத்திகரிப்புச் செய்தது மட்டுமல்லாமல், அகதிகளாக விரட்டப்பட்ட அனைத்து முஸ்லீம்களிடமும் இருந்த பெறுமதி மிக்க பொருட்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சூறையாடினர்.

வடமாகாணத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் கால்நடையாகவும், துவிச்சக்கர வண்டிகளிலும், வாகனங்களிலும் வெளியேறிக் கொண்டிருக்கையில் அவர்களனைவரும் சோதனையிடப்பட்டு அவர்களிடமிருந்த பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதி மிக்க பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சூறையாடப்பட்டன. விடுதலை இயக்கமென தம்மை அழைத்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இச்செயல் சமூக விரோதச் செயலே அன்றி வேறல்ல.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கவனமும் முஸ்லீம் மக்களின் முழுமையான வெளியேற்றத்தையும், அவர்களின் பெறுமதி மிக்க பொருட்களை சூறையாடுவதிலும் குறியாக இருக்கையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தலைமறைவாக யாழ்பாணத்தில் வாழ்ந்துகொண்டிருந்த "தீப்பொறி"க் குழுவைச் சேர்ந்தவர்களான டொமினிக், தேவன், சுரேன், காசி, ஈசன் ஆகியோர்  கொழும்பு வந்தடைந்திருந்தனர்.

இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வவுனியா ஊடாக கொழும்புக்கு அனுப்பி வைப்பதில் வவுனியாவில் எம்முடன் செயட்பட்டவர்களான வண்ணன், கபிலன், அந்து ஆகியோரும் அவர்களது உறவினர்களும் கூட துணிச்சலுடன் செயற்பட்டிருந்தனர்.  தமிழீழ விடுதலைப் புலிகளால் வட மாகாணத்திலிருந்து எழுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட சம்பவமும், கிழக்கு மாகாணத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கில் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட சம்பவங்களும் இலங்கையில் மட்டுமல்லாது இலங்கையர்கள் புலம் பெயர்ந்து வாழும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் பலத்த கண்டனங்களுக்கும் உள்ளாகிருந்தன.

மேற்கு ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளில் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளுக்கூடாக தம்மை இனங்காட்டி வந்த தமிழ் முற்போக்கு சக்திகள் முஸ்லீம் மக்கள் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலைக் கண்டித்து கண்டனங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் முஸ்லீம் மக்களை அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய பூமியிலிருந்து அனாதைகளாக, அகதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் விரட்டியதற்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட அனைத்துக் கண்டனங்களும், கருத்துக்களும் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கெதிரானதாகவும், துரோகச் செயல்களாகவே  தமிழீழ விடுதலைப் புலிகளால் நோக்கப்பட்டன.  

வடமாகாணத்திலிருந்து உடைமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களில் பெரும் பகுதியினர் புத்தளம் மாவட்டத்தில் அகதிமுகாம் வாழ்கையை ஆரம்பிக்கத் தொடங்கியிருந்ததுடன் ஏனையோர் கொழும்பு உட்பட இலங்கையின் ஏனைய பாகங்களில் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்தனர்.

குறிப்பாக, கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் வடமாகாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம்களின் பிரசன்னம் அதிகமாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. புறக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து குணசிங்கபுரத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் அறிமுகமான ஒருவர் என்முன்னே வந்து கொண்டிருப்பதை அவதானித்தேன். அது வேறு யாருமல்ல.  மஹ்ரூப். யாழ்ப்பாணம் ஐந்து சந்தியைச் சேர்ந்த மஹ்ரூப் யாழ்நகரில் சிறிய கடையொன்றை நடத்தி வந்த ஒருவர்.

1983ல் ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை இனவாத அரசு இலங்கையின் சிறுபான்மை இனங்கள் மீது பிரகடனப்படுத்தாத யுத்தத்தைத் திணித்த போது அதற்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான புளொட்டுக்கு தனது முழுமையான ஆதரவை மஹ்ரூப் வழங்கியிருந்ததுடன் இலங்கை அரசால் தேடப்பட்ட பல புளொட் உறுப்பினர்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு தனது வீட்டையும் கூட எமக்குத் தந்துதவியிருந்தார்.

இலங்கை அரசின் இனஒடுக்கு முறைக்கெதிரான தமிழ் மக்களின் போராட்டத்துடன் தன்னை  முழுமையாக இனங்காட்டியிருந்த மஹ்ரூப் கையில் ஒரு பையுடன் என்முன் காணப்பட்டார். ஆம். தமிழீழ விடுதலைப் புலிகளின் இனச் சுத்திகரிப்பு தமிழ் மக்களின் போராட்டத்துடன் தன்னை முழுமையாக இனங்காட்டியிருந்த மஹ்ரூப் போன்றவர்களையும்  கூட விட்டு வைத்திருக்கவில்லை. என் முன்னே வந்து கொண்டிருந்த மஹ்ரூபின்  இருகைகளையும் எனது இரு கைகளால் பற்றிக் கொண்டு மஹ்ரூப் என்று விழித்தேன்.

ஆனால் மஹ்ரூப்பால் பேச முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் என்னுடன் மிகவும் நட்பாக பழகியிருந்த போதும் மஹ்ரூப் பேச முடியாமல் நின்றார். கலங்கிய கண்களுடன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு "உங்களுடைய ஆட்கள் செய்த காரியத்தைப் பார்த்தீர்களா?" என்றார்.

என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவருடன் வாதம் செய்வதற்கும் அல்லது விளக்கம் கொடுப்பதற்குமான தார்மீகப் பலம் என்னிடம் இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய செயற்பாடுகளை நான் ஆதரிக்கவில்லை என்றோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நான் உடன்பாடு கொண்டவனல்ல என்றோ விளக்கம் கொடுப்பதற்கும் வாதம் செய்வதற்குமான நேரமல்ல அது. ஒரு இனச் சுத்திகரிப்பு இடம்பெற்று முடிவடைந்திருந்தது. தமிழ் மக்களின் பெயரால் முஸ்லீம் மக்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட  மனித விரோதச் செயலை - இனச் சுத்திகரிப்பை - தடுத்து நிறுத்துவதற்கு தமிழர்கள் ஆகிய நாம் தவறியிருந்தோம்.

தனது சொந்த மண்ணிலிருந்து வெறுங்கையுடன் விரட்டியடிக்கப்பட்ட ஒரு மனிதனின்  உணர்வு நிலையை  என்னால் எண்ணிப்பார்க்க மட்டும்தான் முடிந்தது. ஆனால் மஹ்ரூபின் உணர்வோ இனச் சுத்திகரிப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் நிஜ வாழ்வாக  இருந்தது. மஹ்ரூபினுடைய கண்களை உற்று நோக்கினேன். தனது வாழ்வை முழுமையாக பறிகொடுத்து விட்டிருந்த ஒரு மனிதனின் ஏக்கம் அவர் கண்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

எப்பொழுதுமே "நாம்",  "நாங்கள்"  எனப் பேசும் மஹ்ரூப் "உங்களுடைய ஆட்கள் செய்த காரியத்தைப் பார்த்தீர்களா?" எனப் பேசும் நிலைக்கு கொண்டுவந்து விட்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழர்களாகிய நாமுமே காரணமாகவிருந்தோம். மஹ்ரூப் மட்டுமல்ல பெரும்பாலான முஸ்லீம் மக்களின் மனநிலையும் கூட இதுவாகவே இருந்தது. இதன்மூலமாக முஸ்லீம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி உருவாகிவிட்டிருந்தது.

செயற்குழு உறுப்பினர்களான டொமினிக், தேவன் ஆகியோரின் கொழும்பு வருகையையடுத்து செயற்குழு கூட்டப்பட்டது. டொமினிக், ரகுமான் ஜான், தேவன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்ட செயற்குழு கூட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறித்தும், வடமாகாண முஸ்லீம்கள் இனச் சுத்திகரிப்புக் குறித்தும் பேசப்பட்டதோடு இங்கிலாந்து மற்றும் சுவிஸில் எம்முடன் இணைந்து செயற்படுபவர்களுடன் தொடர்புகளைப் பேனுவதென்றும் கொழும்பில் எமது செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தில் ஒருபகுதியை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வது என்றும் தீர்மானித்தோம்.

டொமினிக்கால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட "தீப்பொறி"க் கொள்கைத் திட்டத்தை முழுமைப்படுத்தி எமது கொள்கைத் திட்டத்தை முன்வைப்பது என முடிவானது. ஆனால் வடக்கு-கிழக்கில் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனையான முஸ்லீம் மக்கள் படுகொலைகள், மற்றும் வடமாகாண முஸ்லீம்களின் இனச் சுத்திகரிப்புக் குறித்து எந்தக் கண்டனங்களையோ அல்லது இத்தகைய செயல்களைக் கண்டித்து "தீப்பொறி"க் குழு தனது கருத்தை வெளியிடுவதிலிருந்தோ செயற்குழு தவறியிருந்தது.

இத்தகைய எமது செயற்பாடானது நாம் போராட்டத்தில் இருந்தும் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளிலிருந்தும் எந்தளவிற்கு அந்நியமாக இருக்கின்றோம் என்பதையே எடுத்துக் காட்டியிருந்தது. டொமினிக்கால் தயாரிக்கப்பட்டிருந்த கொள்கைத் திட்ட நகல் குறித்த விவாதத்தில் முற்போக்கு சக்திகள் இனவாத அரசுக்கெதிராகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த கருத்துக்கள் மீண்டும் பலமாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஆனால் இம்முறை நாம் வடக்குக்-கிழக்கில் இருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ விவாதித்துக் கொண்டிருக்கவில்லை. தென்னிலங்கையிலிருந்து - சிங்களப் பிரதேசத்திலிருந்து - தமிழீழ விடுதலைக்காக போராடப் போவதாக விவாதித்துக் கொண்டிருந்தோம். சிங்கள முற்போக்கு சக்திகளையும் சிங்கள மக்களையும் இனவாதிகளென இணங்க கண்ட "தீப்பொறி"ச்  செயற்குழு உறுப்பினர்கள் பலர் இப்பொழுது அவர்களால் இனவாதிகளென இனங் காணப்பட்ட சிங்கள மக்கள் மத்தியிலிருந்து "தமிழீழப் போராட்டம்" குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்த எனது கருத்தானது செயற்குழு உறுப்பினர்களின் கருத்தான "தமிழீழப் போராட்டம்" முரணானதொன்றாகவே காணப்பட்டுக் கொண்டிருந்தது.  

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பெற்றெடுத்து, தாலாட்டி வளர்த்த "தமிழீழம்" என்ற குழந்தைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, முற்போக்கு சக்திகள், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொண்ட பலரும் தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக மட்டுமல்ல அதற்கு இணையாக வளர்ந்து விட்டிருந்த தமிழ் இனவாதத்துக்கு எதிராகவும் தமிழ் குறுந்தேசிய இனவெறிக் கெதிராகவும் சிங்கள. தமிழ். முஸ்லீம் முற்போக்குச் சக்திகள் ஐக்கியப்பட்டுப் போராட வேண்டியதன் அவசியத்தை ஏற்க மறுத்தனர்.