Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

எந்தக் கட்சியும் வெற்றிபெறாத களத்தில் தோற்றுப்போன மக்கள்!

 

இன்றைய சுரண்டல் அமைப்பைப் பேணும் வகையில், அதற்கு எதிராக மக்கள் போராடும் உணர்வுக் கொள்ளலைத் தடுப்பது ஆளும் வர்க்கத்துக்கு அவசியமான ஒன்று. இந்த மோசமான சமூக முறைமை பற்றி அறிவதற்கு முயலும் முதல் முயற்சிகளையே தடுத்துத் தூக்க நிலையில் உணர்வை மரத்துப்போகச் செய்வதற்கு காலத்துக்குக் காலம் எதையாயினும் சிறப்பு மேளமாக உருவாக்கித் தாலாட்டுப்பாடுவர் (எப்போதும் நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்தும் தொடர்புசாதனங்கள் - சிறப்பு விருந்தாக முட்டாள் பெட்டியும் சினிமாவும் செய்யத் தவறும் பணியைக்கூட இவை சாத்தியமாக்கும்)

 

அந்தவகையில் உள்ளுராட்சித் தேர்தல் தாலாட்டின் ”ஆராரோ ஆரிரரோ” ஓசை அடங்கும் முன்னர் கிரிக்கெட் சமா தொடங்கி விட்டது. மோசமான தேசிய வெறியைக் கிரிக்கெட் மூலமாகவும் ஊட்டிப் போதையூட்டும் இந்திய - பாகிஸ்தான் - இலங்கை என்பனவே இறுதி வெற்றிக்கான எதிர்பார்ப்பாயும் உள்ளன. ஏற்கனவே, போட்டி தொடங்கும் போதே, ”போடா போடா ஓடிப்போடா, வெல்லப் போகிறோம் நாங்கள் தாண்டா” என்று ”ஆசியத் தேசிய வெறியில்” இந்த மூன்றில் ஒரு நாட்டுக்கே வெற்றியென எமது தொடர்பு சாதனங்கள் பாடத்தொடங்கியிருந்தன.

இந்திய - பாகிஸ்தானிய தேசிய வெறிக்கு கிரிக்கெட் வெற்றியின் அவசியத்தை எல்லைப் போரைவிடவும் முக்கியமானதாக இரசிகர்கள் கருதிய போதிலும் தோற்றுப் போவதற்குக் கையூட்டுப்பெற்று ஏமாற்றும் வீரர்கள் அந்த இரு நாடுகளிலும் உள்ளனர். எவ்வளவு - எங்கே - எப்படி வாங்கினார்கள், வாங்குவதில் இருந்த சிரமங்களை எவ்வகையில் வென்றிருப்பார்கள் என்பதில் அவர்கள் தோற்றுப்போவது இருக்கும்.

அவ்வாறு சோரம் போகும் வியாபாரத்தில் இறங்காத அளவுக்கு இன்னமும் இலங்கை வீரர்களுக்கு ரோசமும் உண்டு, தேசிய வெறியும் தணியாமற் தொடர்கிறது. அவர்களுக்கான திறமையுடன் இவையும் கூட்டணியமைத்திருப்பதால் அநேகமாய் இலங்கைக்கான வெற்றி வாய்ப்பு தூக்கலாய் உள்ளது. பதினைந்து வருடங்களின் முன்னர் உலகக் கோப்பையை இலங்கை வென்றபோது கொலன்னாவ தாக்குதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும் கிரிக்கெட் போதை காரணமாக எந்த அதிர்வும் காட்டாமல் கொலன்னாவச் சுவாலை அடங்கிக்போயிருந்தது.

இப்போது, மற்றவரது பெண்டாட்டிகளைப் பரஸ்பரம் தூக்கியதால் கடும் கடுப்பில் மற்றவரின் காலைவாரும் கலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுவந்த இரு வீரர்களே சமாதானமாகித் தேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காகப் போராடத் தொடங்கி விட்டனர். அனைத்துக் கிரகநிலைகளும் இவ்வகையில் சாதகமாகி விட்டதால் இலங்கைக்கான வெற்றி சர்வநிச்சயம் (இதை வாசிக்கும் போது இந்த ஆரூடம் பொய்த்துப் போனது கண்டு கொடுப்புக்குள் நீங்கள் சிரிக்கவும் கூடும். தொடர்பு கொள்ளவாய்ப்பிருந்தால் அந்த நேரக் கிரகநிலை மாற்றத்தை எனக்குக் காட்ட இயலுமாயிருக்கும்).

வெற்றியோ - தோல்வியோ, எவ்வாறாயினும் கிரிக்கெட் தன் பங்குக்கு மிகச் சிறந்த ஆரிரரோவாக இருந்து இன்றைய பொழுதில் மக்களை மயக்க நிலைக்கு ஆட்படுத்தி வருகிறது என்பது தான் இங்கு முக்கியமானது. இந்த மயக்க நிலையோடு தொடர்புடையது அண்மைக்கால உள்ளுராட்சித் தேர்தல் முடிவு. தேர்தலில் வென்றது யார்?

பொது முடிவு, ஆளும் தரப்பு 55% வாக்குகளைப் பெற்று அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது என்பதாக அறிவோம். ஐ.தே.க, ம.வி.மு ஆகியன கைவசம் வைத்திருந்த இடங்களைக் கூட ஆளும்தரப்பு கைப்பற்றியிருக்கிறது. ஆயினும், அதுவும் தோற்றுப் போயுள்ளது என்பதே அரசியல் அவதானிகளின் கணிப்பு எப்படி?
ஏற்கனவே பெற்ற வீதத்தைவிடக் குறைத்து 55ம% ஆகியுள்ளது என்பது ஒரு கருத்து. அதைவிடத் தேர்தலில் வாக்களித்த மக்களின் தொகை கணிசமாய்க் குறைந்துள்ளது. அரசின் மீது வளர்ந்து வரும் அதிருப்தியின் வெளிப்பாடு இந்த அக்கறையீனம் என்பதும் அவதானிகள் கருத்து. பொருளாதார நெருக்கடி அதிகரிப்பு - நிர்வாகச் சீர்கேடுகள் - அபிவிருத்தியின் தாமதம் - குடும்ப ஆதிக்கம் என்பவை வளர்ந்து வருவதன் காரணமாக அதிருப்தி வளர்ந்து வந்தபோதிலும், அது வெறுப்பாகப் பண்பு மாற்றம் பெறவில்லை. அவ்வாறு வெறுப்பாக மாறியிருப்பின் தமது விமர்சனத்தை உணர்த்தும் வகையில் அரசுக்கு மாறாக வாக்களிக்கும் வகையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு நடைபோடவாவது வாய்த்திருக்கும்.

இப்போதுள்ள நிலையில் மத்தியதரவர்க்க-உயர்வர்க்க சிங்கள மக்களின் சந்தர்ப்பவாதமே அரசுக்கான பலம். விவசாயிகளும் அடிநிலை மக்களும் அரசுக்கான ஆதரவைத் தொடர்ந்து பேணிவருகின்றனர். கடந்தகால ஐ.தே.க. இன் பொருளாதாரக் கொள்கை தம்மைப் பாதித்த கொடூரத்தை அவர்கள் மறந்துவிடத் தயார் இல்லை. இன்றைய அரசின் பாதிப்பு அதனோடு ஒப்பிடுகையில் அவர்களைப் பொறுத்தவரை குறைவு. மாறாக, மத்தியதர வர்க்கம் இன்றைய அரசின் பொருளாதாரக் கொள்கையை விடவும் ஐ.தே.க. இன் வரவால் தமக்கான வாய்ப்பு அதிகம் என்றே கருதுகின்றனர். இருப்பினும் அதன் வெற்றிக்கான மனமாற்றம் பெறவியலாதவர்களாக உள்ளனர். ஏன்?

ஒரே விடயம் பேரினவாத அகங்காரம் சார்ந்தது. தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தை மறுத்து ஒரே தேசம் எனும் பேரில் பேரினவாத செயலொழுங்கு மேற்கொள்ளப்படுவதனைப் புலிகள் அழிப்போடு தொடர்ந்த அங்கீகரிப்பாக அவர்கள் கணிப்பதன் பேறு இது!

எவரும் வெற்றி பெறவில்லை என்பது சரிதான். ஆளும் தரப்பின் அரசாங்க - எதிர்க்கட்சிகள் எதுவும் வெற்றி  பெறவில்லை. அதேவேளை இன்றைய எதிர்க் கட்சியான ஐ.தே.க.வும் தோற்றுப் போய் விடவில்லை.

அதற்கான அரசியல் - பொருளாதார வேலைத் திட்டங்களின் பல கூறுகளையே இன்றைய அரசு மேற்கொள்கிறது. இதற்கு 18வது அரசியல் திருத்தத்தைவிட வேறு உதாரணம் வேண்டுமா? அதனால் பெரும்பயன் அவர்களுக்கே. இன்று இடப்படும் பல அத்திவாரங்களை அவர்களே தமக்கான பயன்பாடாக பெறவுள்ளனர்.

ஆக, தோற்றுப் போயிருப்பது மக்கள் தான். அது குறித்த உணர்வு கொள்ளல் இன்றைய ஆரிரரோக்களைத் தாண்டி சாத்தியமாகுமா? இதற்கான அரசியல் தத்துவார்த்தப் புரிதல் எப்படிப் பெறப் போகிறோம்?

இவை குறித்து கலந்துரையாடக் களம் அமைப்போம்- உரையாடித் தெளிவோம். செயலாற்றி உலகை மாற்றிப் புனைவோம்.

தாயகன் ரவி

முன்னணி (இதழ் -1)