Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதி – தேசம் – பண்பாடு - பகுதி 2

அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்தபோது  வெள்ளாளர், முதலியார், நாயக்கர் எனும் ஆளும் கூட்டணிச் சாதிகளது தேசியத்தின் தலைமையில் ஏனைய தமிழ்த்சாதிகள் ஐக்கியப்படுத்தப்பட்டனர். 70-ம் ஆண்டுகளிலும் அதன் பிற்பகுதிகளிலும், கள்ளர், மறவர், அகம்படியார் தலைமையில் முக்குலத்தோர் தேசியத் தலைமையை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழகத்தை வெற்றி கொள்ள முடிந்த்து. இந்தப் பின்னணியிலேயே வன்னியர் தேசியத்தை பிதிநிதித்துவப்படுத்திய (சாதிக்கட்சியென இங்கே முதன் முதலில் வெளிப்படையாக இனங்காணப்பட்டது). பாட்டாளி மக்கள் கட்சி தோற்றம் பெற்றது. தொடர்ந்து தலித் கட்சிகளான புதிய தமிழகம் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் தோற்றம் பெற்றன.

பிராமணத் தேசியம்

முன்னதாக 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா முழுமையையும், பிராமணத் தேசியத்தால் ஒன்றுபடுத்த  முடிந்தது என்பது கவனிப்புக்குரியது. கோகலே , திலகர் போன்றோர் தலைமையிலான காங்கிரஸ் பிராமணத் தேசியத்தை முன்னிலைப்படுத்த முடிந்தபோது, அந்தப் பிராமணச்சாதி மட்டும், முழு இந்தியாவிற்குமுரியது என்ற வகையில் இந்தியத் தேசியம் பிராமணத்தேசியமாக (பிராமணத் தேசிய தலைமையில்) ஓன்றுபடுத்தப்பட்டது. கோகலே, திலகர் போன்றோரது பிராமணத் தேசியமே தொடர்ந்திருப்பின் இந்திய சுதந்திரத்தை சாத்தியப்படுத்தும் வெகுஜன எழுச்சி சாத்தியப்பட்டிராது. ஏனைய சாதித் தேசிய நலன்களையும் உள்வாங்கிய தாராளவாத அரைப் பிராமணத் தேசியத்தை முன்னிலைப்படுத்திய காந்தி-நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சியே அனைத்து மக்களையும் தலைமை தாங்கி வெகுஜனக் கிளர்ச்சிகளை முன்னெடுத்தது என்பது, கவனிப்புக்குரியது. (காந்தி-நேரு தலைமையில் காங்கிரஸில் தொடர்ந்ததும் பிராமணத் தேசியம் எனக் குறிப்பிட்டபோது, இதனை அவ்வாறன்றி தாராளவாத அரைப் பிராமணியத் தேசியமாக வேறுபடுத்திக் காணவேண்டும் என வலியறுத்தியவர் போத்தரெட்டி. அவர் முதலில் சாதித்தேசியம் என்ற கருத்தியலை ஏற்கவில்லை. தொடர் விவாதத்தில் அவர் ஏற்றுக்கொண்ட வகையில் இதனை வலியறுத்தினார். (அவருக்கு நன்றி)

காங்கிரஸின் பிராமணத் தேசியத்தை இனங்கண்டு, சாதிகளாய்ப் பிளவுபடுத்தித் தமது மேலாதிக்கத்தை நிலை நிறுத்துகின்ற பிராமணரால் இந்தியாவை ஒரு தேசமாக ஒன்றிணைக்க முடியாது என ஜோதிராவ் புலே, அம்பேத்கர் போன்றோர் குறிப்பிட்டிருநத்னர். ஜோதிராவ் புலே சொன்ன காலத்தில் அது சரியாக இருக்கத்தக்கவகையில் பிராமணத் தேசியம் தனது மேலாண்மைக் குணத்தை முனைப்பாகக் கொண்டிருந்தது. பின்னாலே அம்பேத்கார் காலத்தில் காந்தி-நேரு தலைமையில் தாராளவாத அரைப்பிராமணியம் ஏனைய சாதித் தேசங்களது நலன்களையும் ஓரளவிலாயினும் வெளிப்படுத்தி, பிராமணத் தேசத்தலைமையில் அனைத்துச் சாதிகளது தேசங்களையும் ஒன்றுபடுத்தியிருந்தது. சமகால இயக்கச் செல்நெறியின் மாற்றப்போக்கை உடனடியாக அம்பேத்கரால் இனங்காண முடியவில்லை, அக்காரணத்தாலேயே தலித் மக்களுக்கான வீர்pயம் மிக்க தலைமையை வழங்கிக் காத்திரமான பணிகளை அம்பேத்கர் முன்னெடுத்த போதிலும் பெரும்பாலான தலித்மக்கள் காங்கிரஸில் அணிதிரண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தலித் தேசியம்

அம்பேத்கர் காங்கிரஸின் பிராமணியத் தேசியத்திற்கு எதிராக தலித்மக்களின் எதிர்த்தேசியத்தை முன்னெடுத்து இயங்கினார். பொதுவாக இந்தியத் தேசியம் சாதிகளின் தேசமாகப் பிளவுண்ட தேசியங்களாயே உள்ளது. இவற்றில் பிராமணத் தேசியம் ஆதிக்க தேசப்பண்பைக் கொணடுள்ளபோது, அதிகார எதிர்புணர்வுடன் தலித்தேசியம் எதிர்த்தேசியமாக உள்ளது. “வெள்ளையனே வெயியேறு” இயக்கம் முனைப்படைந்தது போன்ற சில சந்தர்ப்பங்களில் ஆங்கில அரசுடன் அம்பேத்கர் இணங்கி இயங்க முன்வந்தது இந்த எதிர்த் தேசியப் பண்பினாலேயே, அடிப்படையில் தலித் விடுதலைக்கு ஏகாதிபத்தியம் வலுவான பங்களிப்பை நல்கவில்லையென வலியுறுத்திய அதேவேளை, பிராமணத் தேசியத்துடனான முரண்பாட்டின் பேறாக அவர் இவ்வகையிலான உடன்பாட்டை ஆங்கில அரசிற்கு வழங்கினார். முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலித்தேசியமே இவ்வாறு முழுமையான எதிர்த்தேசியமாக அமையமுடியும். ஏனைய பிற்படுத்தப்பட்ட சாதிகளது தேசிய உணர்வுகள் குறித்த சில அம்சங்களில் எதிர்த்தேசியமாக முடிந்தாலும், அவை ஆதிக்க சாதித் தேசியத்துடன் சமரசங் கொள்ள ஏற்ற பண்புகளையும் கொண்டுள்ளன. அவ்வகையில் இதை “ஒருவகை எதிர்த்தேசியப்” பண்புடையனவென்றே கூறமுடியும்.

சென்ற நூற்றாண்டின் 20-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் வீறுகொள்ளத் தொடங்கிய திராவிடத் தேசியம் இவ்வகையிலான ஒருவகை எதிர்த் தேசியமே. திராவிடர் இயக்கம் பிராமணத் தேசியத்துக்கு எதிரான மிகக் காத்திரமான எதிர்த் தேசியப் பண்பை கொணடிருந்த போதிலும், வெள்ளாளர், முதலியார், நாயக்கர், ஆகிய ஆளும் சாதிகளது கூட்டுத்தேசியம் தலைமை தாங்கிய வகையில் அது தலித்தேசியம் போல முழுமையான எதிர்த்தேசியமாக அமையவில்லை. திராவிடத் தேசியத்தின் ஆளும் சாதிகளது தேசியப் பண்பு அதன் உடன்பிறப்பான தமிழ்த் தேசியத்திலும் வெளிப்பட்டது. தமிழ்ததேசியம் ஆட்சியதிகாரத்தைப் பெற்ற 67-ன் பின்னர் கீழ்வெண்மணியில் தொடங்கிய தலித்மக்களுக்கு எதிரான ஆதிக்கவெறி இன்றுவரை நீடிப்பதில், எத்தகைய பங்களிப்பை வழங்கிற்று என்பது உலகறிந்த விடயம். அந்தவகையில் திராவிட இயக்க (தமிழ்த்தேசிய) பிராமண எதிர்ப்பானது “ஒருவகைத் தேசியமாகவே” அமைகின்றது, (‘மதமும் மார்க்சியமும்’ நூலுக்கு ‘மார்க்சிஸ்ட்’ இதழில் குணா காத்திரமான ஓர் விமர்சனம் எழுதியிருந்தார். அந்த விமர்சனத்தில் ஒருவகை எதிர்த்தேசியம் என்பது போதிய விளக்கமற்று இருப்பதாகக் குணா குறிப்பிட்டிருந்தார். இப்போது தெளிவுபடுத்தப்பட்டிருக்கும் எனக் கருதுகின்றேன்.)

ஆக “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என விவசாய வாய்ப்பைப் பெற்ற இனக்குழு ஏனையவற்றை வென்றடக்கி ஆட்சிப்படுத்தி உறவு கொண்டாடியபோது, வர்க்கப் பிளவடைந்த தனிமனிதர்களாயல்லாமல் இனக்குழுக்களே உழைக்கும் தொகுதியாகும், சுரண்டல் முறை நமக்குரியதாக ஏற்பட்டுள்ளது, இத்தகையதான பித்தியேகச் சூழல் அதிக கவனிப்பிற்குரியதாகின்றது. இனக்குழுப்பண்பு இவ்வகையில் நீடீக்கும்போது தேசிய உணர்வைக் கிளர்த்தும் முதலாளித்துவத்தில் தமக்குள் வலுவான இரத்த உறவைப்பேணும் சாதிகளாக்கப்பட்ட இனக்குழு முறை வாழ்வுடையோர் தம்மை “தேசம்” போலக் கருதுதல் தவிர்க்கவியலாததாகியது. அந்தப் புறநிலை யதார்த்தம் நிலவுவதால் கிராம எல்லைகள் கடந்து ஒரே சாதியினர், சாதிச் சங்கங்களாக ஸ்தாபனமயப்பட்டு தமது (தேசிய) நலன்களை முன்னிறுத்திப் போராட வேண்டியவர்களாயினர். வாய்ப்புள்ள பெரும்பான்மைச் சாத்தியமுள்ளவர்கள் தமது சாதிக் கட்சிகளையும் கட்டியெழுப்பினர். இவ்வாறு பிளவுபட்ட தேசியங்கள் எது யதார்த்தமாயினும், ஒரு தேசத்தை வடிவப்படுத்தி தலைமையேற்க வாய்ப்புள்ள ஆதிக்க சாதித் சாதியம், ஒடுக்கப்பட்டு உரிமைகள் முழுமையாக மறுக்கப்பட்ட தலித்தேசியம் எனும் இரட்டைத்தேசியம் எதிரும் புதிருமாக இங்கு வலுவாயுள்ளமை கவனிப்புக்குரியது. இந்த இரட்டைத் தேசியத்தை  தெளிவுபடுத்திய இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையிலிருந்து இதனைப் புரிந்துகொள்ள முயறசிக்க முடியும்.

பிராமணத் தேசியத்தை நிராகரித்த எதிர்த்தேசியம்

அம்பேத்கரின் தலித் இலக்கியம், பெரியாரின் திராவிட இயக்கம் என்பன காங்கிரஸின் பிராமணத் ;தேசியத்தை நிராகரித்து முன்னெடுக்கப்பட்ட எதிர்த்தேசியங்களாகும். இந்த வரலாற்றுச் செல்நெறி இரட்டைத் தேசியக் கோட்பாடு அடிப்படையில் புரிந்து கொள்ளப்படவில்லை. சுதந்திரப் போராட்டத்தை அப்படியே ஆதரித்தவர்கள் ஏதோவொரு வகையில் பிராமணத் தேசியத்தை  ஏற்பவர்களாய் இருந்தனர். அவர்கள் அம்பேத்கரது தலித் தேசியத்தையோ, பெரியாரின் திராவிடத் தேசியத்தையோ விளங்கிக் கொள்ளாமல் அவர்களை வகுப்புவாதிகளாய்க் கணித்தனர். ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெறும் ஆதிக்க சாதித் தேசியத்திற்கு எந்தளவு நியாயப்பாடு உள்ளதோ, அதேயளவு பண்ணை அடிமைத்தனத்தை தகர்க்கும் சாதிய எதிர்ப்புச் சார்ந்த அம்பேத்கார், பெரியார் போன்றோரது எதிர்த்தேசியமும் அவசியமானது. அன்று சுதந்திரப ;போரட்டத்தின் பேரால் எதிhத்தேசியத்தை வகுப்புவாதமாயும், எகாதிபத்திய சார்புடையதாயும் பார்த்ததில் தவறுண்டு. அதேபோல எதிர்த்தேசிய நிலைப்பாட்டை தவறற்ற முழுச்சரியான ஒரே நிலைப்பாடெனக் கொண்டாடும் இன்றைய தலித் இயக்கங்கள் சுதநதிரப்போராட்ட முற்றிலும் பிராமண ஆதிகத்திற்கேயுர்pயது எனக்கூறி அதன் வரலாற்றுப் பங்களிப்பை மறுதலிப்பதும் தவறானதுமாகும்.

ஆயினும் இன்றுவரை இந்திய இயக்கங்களில் பல இரட்டைத் தேசியப் பிளவுடன் கூடிய இரண்டக நிலையுடையனவாயே உள்ளன. அம்போத்கரோ, பெரியாரோ ஏகாதிபத்திய சக்திகளிடம் விலை போனவர்களல்ல. தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்காக எதிர்த்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடியவர்கள். இன்று உலகமயமாதலின் கையூட்டில் தொண்டு நிறுவனமாக இயங்கித் தீவிர தலித்தியம் பேசும் சிலரோ மக்கள் விடுதலைக்கு விரோதமாக ஒடுக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி என்றென்றும் இழிவுபடுத்தல்களுக்குள் உழல்வதற்கே வழிகோலுகிறார்;கள். தலித் மக்களின் விடுதலை இவர்களுக்கு அவசியமில்லை. ஆண்டாண்டுகால அவமதிப்புக்களைப் பேசியே இவர்கள் தம் பிழைப்புவாத அரசியலை முன்னெடுக்க முயல்கிறார்கள். புpராமணியம் மக்களை சாதிகளாக பிளவுபடுத்திச் சுரண்டலைப் பேண எந்தளவுக்கு முயல்கின்றதோ, அதேயளவிற்கு தலித்தியமும் எதீpர்த்தளத்தில் இயங்கியவாறு அதே சாதிவாதப் பிளவுபடுத்தல் தவறையே இழைக்கிறது. இது உலகமயமாதலுக்கு ஆட்படும் அமசமுமாகும்.

தலித்தியப் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுக்கள்


உண்மையில் மார்க்சிஸத்தால் மட்டுமே சாதிவாதப் பிளவுபடுத்தலுக்கு இடமற்ற வகையில் தலித் விடுதலைக்கு ஏற்றதாக அனைத்துச் சக்திகளையும் அணிதிரட்ட உதவமுடியும். மார்க்சியர்கள் ஏகாதிபத்தியத் தகர்ப்பை அவசியப்படுத்தும் அதேவேளை, பண்ணையடிமைத் தகர்ப்பையும் வலியுறுத்துபவர்களாயே இருப்பர். கம்யூனிஸக் கருத்துக்கள் இங்கு வேரூன்ற முன்னரே பாரதியிடம் இரட்டைத் தேசியப் பிளவின்றி இரண்டு விடுதலைக் கூறுகளையும் இணைத்துப் பார்க்க முடிந்தது. முதல் கம்யூனிஸ்ட்டாக விளங்கிய சிங்காரவேலர் தொடர்ந்தும் சாதியத் தகர்ப்பு, ஏகாதிபத்திய ஒழிப்பு, முதலாளித்தவ எதிர்ப்பு என்பனவற்றுக்காக குரல் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பண்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த இயக்கச் செல்நெறியில் ஆரம்பம் முதலாகவே இருந்து வந்தது. அதன் வெளிப்பாடாக தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத் தலைமையில் 60-களின் பிற்கூறில் சாதியத் தகர்ப்புப் போராட்டம் முனைப்படைந்தபோது, ஒடுக்கப்பட்ட மக்கள் தனிமைப்படவில்லை. அனைத்து சாதியினரையும் (பிராமணர் தவிர, எல்லா அதிகாரங்களையும் கையகப்படுத்தியிருந்த வெள்ளாளர்களில் முற்போக்கு ஜனநாயகப் பண்புடையோரையும்) ஜக்கியப்படுத்தி, முன்னெடுக்கப்பட்ட சாதிய இழிவுகளுக்கு எதிரான அந்தப்போராட்டம் கம்யூனிஸட் கட்சியால் வழிநடாத்தப்பட்ட காரணத்தால், இரட்டைத்தேசியம் பிளவற்ற வெற்றிகளையீட்ட முடிந்தது.

இத்தகைய பரந்துபட்ட ஜக்கியமுன்னணிப் போராட்டக் களமாகிய யாழ்ப்பாணத்தைக் கடந்து, முழுஇலங்கை சார்ந்த சாத்தியப்பாடுள்ள பல்வேறு சக்திகளையும் அணிதிரட்டுவதாக அமைந்தது. அதேவேளை சர்வதேசத் தளவிர்pவாக்கத்தடன், உலகளாவிய ஆதரவும் பலமும் வாய்த்திருந்தது. பீக்கிங் வானொலி வாயிலாக சீனப்பாட்டாளி வர்க்கம் வழங்கிய ஆத்மார்த்த ஆதரவு முதல் பல்வேறு ஊடகங்கள் ஊடாக சர்வதேச விடுதலைச் சக்திகளது ஆதரவும் பெறப்படட்து. அதேபோல சாதியத் தகர்ப்புப் போராட்ட முன்னெடுப்பானது, வியட்னாம் மக்களது விடுதலைப் போராட்டம் உட்பட பல்வேறு நாடுகளின் உழகை;கும் மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் பலதரப்பட்ட ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாயும் அமைந்தது. வெறும் சாதிவாத முடக்கம் இல்லாத, இத்தகைய பரந்ததள விரிவாக்கமுடைய போர்க்குணாம்சம் பிளவுபடாத தேசிய மனப்பாங்கு சார்ந்ததாக அமைந்தது.

அப்படியிருக்க இரட்டைத் தேசியப் பண்பு எங்கே வெளிப்பட்டது.? இந்தியாவில் ஆளும் சாதித் தேசியம் பிரதான வரலாற்றுப் போக்காக அமைந்தபோது அம்பேத்கார், பெரியார் போன்றோரது எதிர்த்தேசியம் உடன் விளைவாக வெளிப்பட்டன. மாறாக இலங்கையில் ஆளும் சாதியத் தேசியமே பிரதான செல்நெறிக்கு எதிரான உடன் விளைவாக வெளிப்பட்டமை கவனிப்புக்குரியது. மேலே குறித்தவாறு யாழ்ப்பாணத்தில் சாதியத் தகர்ப்புப் போராட்டம் முனைப்படைந்தபோது முழு இலங்கை சார்ந்த பரந்துபட்ட ஐக்கியம் அவசியப்பட்ட வகையில் இலங்கைத் தேசியத்தின் பகுதியாகவே அது அமைவது இயல்பாயிருந்தது. (எதிர்த்தேசியத்தை முன்னெடுத்த அம்பேத்கர்; இந்தியா முழுமையிலுமுள்ள தலித் மக்களின் ஒன்றுபட்ட பலத்தை முன்னிட்டு இந்தியா பிளவுபடும் பிரிவினை வாதத்தை நிராகரித்தார். என்பது நினைவு கூரத்தக்கது.) அப்போது தீவிரம் பெறத்தொடங்கிய தமிழ்த்தேசியம் முற்போக்குக் குணாம்சமுடையதாயின், அந்த சாதிய்த் தகர்ப்பு போராட்டத்தை ஆதர்pத்திருக்க வேண்டும். மாறாக யாழ்ப்பாண வெள்ளாளத் தேசியத்தால் தமிழ்த் தேசியம் முடக்குவாதமுற்றிருந்தமையினால், அவ்வாறு ஆதரவு வழங்முடியாமல் போயிற்று. சாதியத் தகர்ப்பை உள்வாங்கி இலங்கை முழுமையிலுமான உழகை;கும் மக்களது முற்போக்கான போராட்டங்களுடன் கைகோர்;க்கும் பரந்துபட்ட சக்திகளுக்கான ஈழத்தமிழ் தேசியமாயின் இத்தனை பேரழிவுகளுடன் கழித்தல் பெறுபேறிலான அவல முடிவு நேர்ந்திராது. யாழ் வெள்ளாளத் தேசியம் பிராமணியத்தை விடவும் கேடான அகம்பாவங்களுடன், ஆண்டபரம்பரைத் திமிர் மேவியதாய் ஆரம்பம் முதலாகவே மக்கள் விடுதலைக்கு விரோதமான போக்குகளுடன் விளங்கியிருந்தது.

மக்களைப் பிளவுபடுத்தம் சாதிய வெறியுடனான, மக்கள் விடுதலைப் பண்பற்ற ஈழத்தமிழ் தேசியத்தை நிராகரித்து, இலங்கைத் தேசியம் பற்றியே தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுக்கள் பேசுவதற்கும் இது காரணமாயிற்று. பௌத்த-சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட தமிழ்மக்களுக்கு விரோதமான அரசியல்,-பொருளாதார நடவடிக்கைகளும் புறக்கணிப்புக்களும் ;இராணுவ அழித்தொழிப்புகளும் ஈழத்தமிழ் தேசியத்தை யாழ்-வெள்ளாள தேசியத் தலைமையில் அணிதிரட்டும் துர்ப்பாக்கியம் வீறுபெற்ற பின்னரே கம்யூனிஸ்ட்டுக்கள் தேசிய இனப்பிரச்சினை குறித்த அக்கறை கொள்ள நேர்ந்தது.

என்னதான் எதிரியால் ஓன்று குவிக்கப்பட்ட போதிலும், மிகப் பிரமாண்டமான வளர்ச்சிகள் எட்டப்பட்டபோதிலும் ஆதிக்க சாதித் தேசியம் என்கின்ற வகையில் ஐக்கியப்படுத்தும் சக்திகள் பற்றிய அக்கறையின்றி அகங்காரத்தோடு முன்னெடுக்கப்பட்ட முப்பது வருட யுத்தம் அவல முடிவை எய்தியுள்ளது. இப்போதும் கடந்தகால அனுபவங்களைக் கற்று முன்னேறும் அக்கறை ஈழத்ததமிழ்த் தேசியத்திடம் இல்லை என்பதே பெரும் துன்பியல். ஐரோப்பர், கனடா, ஆவுஸ்திரேலியா போன்ற புலம்பெயர்; தேசங்களில் இருந்தபடி அதே ஏகாதிபத்திய ஒட்டுறவும், ஆண்ட பரம்பரைக் கனவுகளும் மேவியபடி யாழ்-வெள்ளாளத் தேசியத் தவறுகளுடனேயே ஈழத்தமிழ்த் தேசியம்.

அதேவேளை ஒடுக்கப்பட்ட மக்களது சாதியத் தகர்ப்பு போராட்ட சக்திகளும், கமயூனிஸ்ட் கட்சியும் எதிர்த் தேசிய நிலைப்பாட்டை மேற்கொள்ளாது, தமிழினத் தேசியப் போராட்டத்தின் நியாயங்களை ஏற்க முன்வந்தமை கவனிப்புக்குரியது. தொடர்ந்து தேசிய இனப்பிரச்சினை குறித்த கற்றலை விரிவுபடுத்தி சுயநிர்ணய உரிமை குறித்த ஆழ்ந்த அக்கறையை கம்யூனிஸ்டுக்கள் முன்னெடுத்தனர். இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைத் தீர்;வுக்கு அதன் பன்மைப் பரிமாணத் தளங்கள் அனைத்தையும் கவனத்திலெடுத்து தீர்வுத்திட்டம் ஒன்றை பு.ஜ.கட்சியே முன்வைத்துள்ளது. இனியும் மாறிவரும் சர்வதேச-தேசிய நிலைமைகளை உள்வாங்கி சுயநிர்னய உரிமையைப் சர்pவரப் பிரயோகிப்பது அவசியமானது. அந்தவகையில் தலித்பிரச்சினை இன்று ஈழத்தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது. சாதியத் தகர்ப்புபு போராட்டத்தின் ஊடாக ஒடுக்கப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட காரணத்தால், இலங்கையில் தலித்தியவாதம் காலூன்ற முடியவில்லை.  முப்பது வருடங்கள் நீடித்த யுத்தம் மற்றும் புலம்பெயர் சூழல் காரணமாக தலித்திய வாதம் பேசும் பொருளாகி உள்ளது. அதன் பிளவுபடுத்தல் பண்பால் பாதிப்புற்று விடாதவகையில், ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்னயத்திற்கான வடிவம் கண்டறியப்படுவது அவசியம்.

இன்று இலங்கையின் யுத்தவெறியுடன் ஏற்பட்டுள்ள சர்வதேச உறவுநிலை மாற்றம் கவனிப்புக்குரியது. “யுத்தத்தை இந்தியாவே வெற்றியீட்டித் தந்தது. அக்காரணத்தால் இந்தியா சொல்கிற எதையும் செய்யவேண்டிய நிலையில் உள்ளோம்” என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளமை கவனிப்புக்குரியது. இத்தகைய நிலைக்கு இலங்கையை ஆட்படுத்த இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. பல்வேறு தந்திரோபாயங்களை பொறுமையாக முன்னெடுக்க வேண்டியிருந்தது. பல்லாயிரம் உயிர்கள் பலியிடப்பட்டது குறித்துக் கவலை கொள்ளாமல், காந்தீயத்தை கடைவீதியில் விட்டுவைத்துக் கடைகோடி இராஜதந்திரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆமெரிக்கா-ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய சக்திகளின் வேட்டைக்காடாக இலங்கையை மாற்றுவதற்கு 1977-ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா முனைந்த போது, இந்தியாவின் எடுப்பார் கைப்பிள்ளையாக ஈழத்தமிழ்த் தேசியம் இருந்தது. ‘எங்கள் பையன்கள்’ வாயிலாக (இப்படியாக அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி பாராளுமன்றத்தில் சொன்னபோது ஈழப்பத்திரிகைகள் எல்லாம் என்னமாய்ப் புளகாங்கிதமடைந்தன.) இலங்கை அரசு வழிக்கு கொண்டுவரப்பட்ட போது ஈழப் போராளிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடம் வைக்கப்படவில்லை. இலங்கை-இந்திய (ராஜீவ்-ஜே.ஆர்.) ஒப்பந்த வாயிலாக இலங்கை பூரணமாக இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. ஆயினும் சிங்கள மக்களிடம் இந்திய ஆதிக்கத்திற்கான எதிரான உணர்வுகள் இருந்தன. இனி இரண்டாவது காண்டம்: பிந்திய 20வருட யுதத்த்தில் புலி மிக மிகப் பிரமாண்டமான சக்தியாக வளர்வதை இந்தியா கண்டுகொள்ளாமல் விட்டது. சிங்களக் கிராமங்களில் புகுந்து தாக்குவது, நகரங்களில்  குண்டுவெடிப்பு, தொடர் யுத்தத்தில் பலநூற்றுக்கணக்கில் மடிந்துகொண்டிருத்தல், இவை சார்ந்து நீடிக்கும் சிங்களப் பண்பாட்டுச் சிதைவுகள் எனத் தாங்கமுடியாத வேதனையின் உச்சத்தில் சிங்களப் பேரினவாதம் இந்தியாவிடம் தனது இறைமையைத் தாரைவார்த்து இன்று யுத்தத்தில் வெற்றியீட்டியுள்ளது.

(தொடரும்)

சாதி, தேசம், பண்பாடு: ந. இரவீந்திரன் – பகுதி-1