Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதத்துக்கு மதவாதிகள் தலைமை தாங்கிய கல்முனைப் போராட்டம்

கல்முனையில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்கள், இன-மத ரீதியாக மக்களைப் பிரித்து ஒடுக்கியாண்ட முறைமையே, பிற இன-மத முறுகல்களுக்கு வித்திட்டது. இப்படி இலங்கை ஆட்சி அதிகாரங்கள், இன-மதம் சார்ந்து மக்கள் விரோத தன்மை கொண்டதாகவே இருக்கின்றது. கல்முனை வடக்கு தரம் உயர்த்தப்பட்டால், அந்த ஆட்சிமுறை இதற்கு விதிவிலக்காக ஒரு நாளும் இருக்கப்போவதில்லை. அதுவும் அதே இன-மதவாதம் கொண்ட, செக்குமாடாகவே செயற்படும்.

இன-மத ஒடுக்குமுறைக்கு எதிரான கல்முனைப் போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி நடத்தப்படவில்லை. மாறாக முஸ்லிம்களை எதிரியாக முன்னிறுத்தியே நடத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இதை எதிர்த்து முஸ்லிம் தரப்புகள் நடத்திய எதிர்ப் போராட்டமானது, ஒடுக்கப்பட்ட முஸ்லிம் தரப்பாக தம்மை முன்னிறுத்தி நடத்தவில்லை. அதாவது தமிழருக்கு எதிராக ஒடுக்கும் இஸ்லாமிய - முஸ்லிம் ஆட்சியாளர்களின இன-மத ஆட்சிமுறையை எதிர்த்;து, இன-மத ஒற்றுமையை முன்வைத்துப் போராடவில்லை.

எந்தப் போராட்டமும் ஓன்றுபட்ட மனித வாழ்வுக்கான ஒடுக்கப்பட்ட தரப்பின் பொது அறைகூவலாக இல்லாத வரை, அவை எதிர்க்கப்பட்டாக வேண்டும். ஓடுக்கப்பட்ட மக்கள் என்ற பொது அடையாளம், எங்கும் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. இதை முன்வைத்து போராட மறுக்கின்ற, ஒடுக்கும் மற்றொரு தரப்பு நடத்தும் போராட்டம் என்பது ஒடுக்குமுறையைக் கோருவது தான். இதுதான் கல்முனையில் நடந்தது, நடக்கின்றது.

இதன் பின்னணியில் இருப்பவர்கள் கேடுகெட்ட மனித விரோதிகளும், சமூக விரோதத்தை தங்கள் பிழைப்பாக கொண்ட அயோக்கியர்களுமே. இந்த பின்னணியில் மனிதர்களைப் பிளந்து வாழ்வதே மதவாதிகளின், வாழ்க்கை முறையாக மாறியிருக்கின்றது. இலங்கை எங்கும் இன-மதவாதம் என்பது ஓடுக்குமுறை கொண்ட அதிகாரமாகவே மாறி இருக்கின்றது. ஒடுக்குமுறை இல்லாத எந்த ஆட்சிமுறையும் கிடையாது. இதற்கு எதிரான அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்துவதற்கு பதில், ஒடுக்கும் அதிகாரத்தை தம் பங்குக்கு கோருகின்றனர்.

இதை இன-மதம் கடந்து, எல்லா இன-மதவாதிகளும் இலங்கை தளுவிய அளவில் முன்வைக்கின்றனர். தேர்தல் கட்சிகள் மக்களுக்கு எதிரான நவதாராளவாத அரசியல் பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு இருப்பதால், இன-மத ஆட்சியாக குறுக்கிக் கொண்டு மக்களை பிரித்தாளுகின்றனர். தன் இனத்துக்கு, மதத்துக்கு சலுகை என்ற பித்தலாட்டம் மூலம், ஓட்டுமொத்த மக்களை மொட்டை அடிக்கின்றனர்.

கல்முனை வடக்கு தரம் உயர்ந்தால், அங்கு இனமத வாதத்தைக் கொண்ட சலுகை பெற்ற கூட்டம் தான் ஆளும். இலங்கையை ஆளும் ஆட்சியாளர்களின் எடுபிடிகளின் ஆட்சியாகவே இருக்கும். நவதாராளவாதமே ஆட்சியாக இருக்குமே ஓழிய, குறைந்தபட்சம் தேசியவாதத்தைக் கூட கொண்டு இருக்காது. இங்கு தமிழர்கள் என்று கூறப்பட்டு, திரட்டப்பட்ட மக்கள் கூட்டத்துக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. தரம் உயர்வதால் வரி அதிகரித்து, இருக்கின்ற வாழ்க்கையின் ஒரு பகுதியை இழப்பதை தவிர எதுவும் கிடைக்காது. மாறாக ஆளும் தரப்பைச் சேர்ந்த ஒரு மக்கள் விரோத கும்பல், பிழைத்துக் கொள்ளவே உதவும்.