Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சோசலிசக் கவிதைகள்

எனக்கு ஆருயிர்க் காதலி

ஒருத்தி இருந்தால்

ஒரு இரவின் முடிவில் - அவள்

போலீஸ்காரர்களால்

படுகொலை செய்யப்பட்டாள்.

 

ஏ! காடே ! நீ என் ஆருயிர்க் காதலியாய் இரு !

நீயே என் மணப்பெண்.

என் இதயத்தின் அன்பு

வெளிச்சமிடுகின்றது, வெள்ளமாய் ஓடுகிறது.

அந்தக் காதல் வார்த்தைகளை- நான்

எப்போழுதும் சொல்லத்துணிந்ததில்லை !

ஆனால்.... அருமைக்காடே !

உன் செவிகளில் மெதுவாக உச்சரிக்கிறேன்.

 

 

அந்தி மாலைகளில்

உன்றன் மரக்கிளைகள்

மெல்ல அசைந்து - பச்சை இலைகளால்

முத்தம் படாத என் இதழ்களைத்

தடவிக் கொடுக்கின்றன !

என் அம்மாஅவளையும்

இந்தக் கசடர்கள்

கருத்த இருட்டில்-எங்கோ...

தூக்கிச் சென்றார்கள்.

 

ஏ! காடே ! நீயே என்-

அன்பான ஆதரவான அம்மாவாக இரு !

அவனின் அரவனைப்பு இல்லாமல்

வாழவே இயலாது!

 

காலைப் பனித் துளிகளால்

வலிக்கும் என்

போர்க்கள விழுப்புண்களை

கழுவிக் குளிப்பாட்டு !

 

அணி வகுத்துச் செல்லும் போதும்

அபாயத்துடன் விளையாடும் போதும்

அன்பான உன் ஆசைப் பார்வையால்

கவனித்துக்கொள் !

 

எனக்கும்.... ஒரு

ஒட்டைக் குடிசை இருந்தது.

காற்று ஏந்தி வந்த

புகை மண்டலத்தால்- அது

சாம்பலாகிப் போனது!

 

ஏ ! காடே ! நீ என் குடிசையாய் இரு !

கயமையின் களங்கக் கரங்கள்

உன்னைத் தீண்டவே அஞ்சுகின்றன!

போராட்டங்களின் முடிவில்- அந்தக்

குழப்பமான இரவுகளில்

களைப்புற்று உன் மடிமீது அணைந்தபடி

தவழ்ந்து ஊர்கின்ற பொழுது

உன் கனத்த இலைகளால்

கட்டி அணைத்துக்கொள் !

 

உறங்கும் பொழுது பணிவிடை செய் !

எனக்கம் ஒரு தாயகம் இருக்கின்றது.

ஆனால்.... கொடுங்கோலர்களின் கீழ்

அடிமையாய்,

துண்டாடப்பட்டு

உடைந்து கிடக்கிறது.

 

ஏ! காடே ! நீ என் புகலிடம் !

ஆனால்...

என் நெஞ்சில் இருக்கும் தாயகமாக

நீ ஆக முடியாது

 

நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

அம்மாவை விட

அன்பு மனைவியை விட

அழகுக் குடிசையை விட

அன்னை பூமியை

அளவு கடந்து நேசிக்கிறோம் !

 

ஏ! புரட்சிக்காடே ! எங்களைப் பாதுகாத்திடு !

எங்களைக் கவனித்துக் கொள் !

தாயகத்திற்காக - அந்தச்

சாவையும் சவாலுக்கு அழைப்போம் !

டோப்ரி ஜோடாவ். ரஸியக் கவிஞரின் கவிதை தமிழாக்கம்