Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மனிதர்களை நேசித்த மனிதர்கள் : லலித் - குகன்

லலித்  - குகன் இருவரும், காணாமல் போனவர்களை தேடிச் சென்றதற்காய் கடத்தப்பட்டனர். உலக நாகரீகங்கள் மனிதனை நன்றாக வாழ்வதற்காகவே நாள்தோறும் மாறி வருகின்றன. மனிதர்கள் பலவகையான இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்கின்றார்கள். சிலர் போராடி வாழ்கிறார்கள். பலரோ சாவை எதிர் கொள்கிறார்கள். மனித குலத்தில் ஒரு சிறு கூட்டமே போராட தயாராக இருக்கின்றது. மனிதர்களுக்கு உதவவும் தயாராக இருக்கின்றது.

அப்படிப்பட்ட மனிதன் தான் லலித். லலித் மனிதர்களையும் மனிதத்தையும் காக்க வடபகுதிக்கு புறப்பட்டுச் சென்றது. நாம் செல்லும் சாதாரண பாதையால் அல்ல. கப்பல் மூலமாக லலித் யாழ்ப்பாணத்திற்குச் சென்றது. மனிதர்களை மீட்க கஷ்டப்பட்டவர்களுக்கு உதவிய லலித், கடத்தப்பட்டதாகவும் காணாமல் போனதாகவும் கூறப்பட்ட பலரை கண்டு பிடித்தார். வட பகுதி மக்களின் உண்மை வாழ்வு பற்றி வெளி உலகத்திற்கு வெளிக்காட்ட லலித் தன்னை அர்ப்பணித்தார்.

லலித்தின் பயணங்கள், தேடல்கள் அனைத்தும மனிதம் சார்ந்ததாகவே இருந்தது. லலித் மனிதத்தின் தேவை. 30 வருட கால யுத்ததின் பின் யாழ் பயணித்த லலித் அங்குள்ள மக்களின் உண்மையான தேவை அறிந்து கொண்டார். மனிதர்களை தேடும் பணியில் அவர் இடைவிடாது பாடுபட்டார். இனி வரமாட்டார்கள் என்று நம்பியிருந்த பலரை லலித் தேடி கண்டு பிடித்தார். அரசாங்கம் சொல்வது அனைத்தும் அப்பட்டமான பொய், பெரும் தொகையான மக்கள் இன்னமும் முகாம்களில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு போதிய உணவு இல்லை. வீடு மற்றும் தொழில், பிள்ளைகளின் கல்வி வசதி கூட அங்கு சரியாக இல்லை. இவைகளை லலித் வெளி உலகத்திற்கு எடுத்து வந்தார்.

காலங்களுக்குள் புதைந்து லலித் காணாமல் போக விரும்பவில்லை. சதா நேரமும் மற்றவர்களின் விடுதலைக்காகவே பாடுபட்டார் அவர். மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராகச் செயற்பட்டார். லலித் கண்ட கனவுதான் மனிதர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். காணாமல் போவது கடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் பலராலும் அச்சத்தோடு பார்க்கப்பட்டது. இலங்கைத்தீவின் வேறொரு தேசமாக வர்ணிக்கப்பட்டது. பலரும் பாதைகளை வரைபுகள் மூலம் விவரித்துக் கொண்டிருந்தார்கள். லலித் தன்னந்தனியே கடல் வழியாகவே புறப்பட்டுச் சென்றார். மனிதத்தினை காக்க காலம் லலித்தை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்சென்றது. லலித் அங்குள்ள துன்பப்படும் மக்களுக்கு நண்பரானார். லலித் நிறையவே செய்தார். தன்னால் முடிந்த அனைத்தையும் ஏன் அதையும் தாண்டி யாழ்ப்பாண மக்களுக்காக லலித் நிறையவே செய்தார்.

லலித் அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்களை, கொழும்பிற்கு அழைத்து வந்து காணாமல் போனவர்களை விரைவாக தேடும்படி அரசாங்கத்தை வேண்டினார். நீங்கள் சொல்லுவது வேறு, அங்கு நிலைமை வேறு என்பதை லலித் ஊடகங்களுக்கு விளக்கினார். மனிதர்கள் தினம் தினம் யாழ்ப்பாணத்தில் கடத்தப்படுகின்றார்கள். பலரோ என்ன ஆனார்கள் என்று தெரியாது. அரசுக்கு எதிரானவர்கள் கடத்தப்பட்டு வதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றார்கள். புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் பெரும்பான்மையானோர் தமிழர்கள். ஆனால் தமிழர்கள் அனைவருமே புலிகள் அல்ல என்பதை லலித் தெளிவாக எடுத்துரைத்தார்.

இவ்வாறாக லலித் யாழ்ப்பாணத்திற்கு பல தடவைகள் மனிதர்களைத் தேடி பயணத்தை மேற்கொண்டிருந்தார். பல இயக்கங்கள் ஆயுதம் வைத்துக் கொண்டு செய்ய முடியாமல் போனதை லலித் தனி மனிதனாக செய்தார். நிறையவே செய்யவும் முனைந்தார். லலித் மனிதத்தின் உயிர் நாடி.

-விஜயகுமாரன்