Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஊமை நெஞ்சின் ஓசைகள் (சிறுகதை)

பால் வைச்சு தண்ணியும் வாத்து பிள்ளை குளிச்சிட்டும் வந்திட்டுது. இனிமேல் பிள்ளை வெளிக்கிட்டு வெளியாலவர எப்பிடியும் குறைந்தது மூண்டுமணித்தியாலம் எண்டாலும் எடுக்கும். சொந்த பந்தங்கள் எண்டு நிண்ட சனங்களும் திருப்பி வெளிக்கிடவெண்டு வீடுகளுக்குப் போனதாலேயும், வீடீயோ அண்ணையும் கோலை ஒருக்கா படம் பிடிக்க போனதாலேயும், மேக்கப்புக்காரியும்

பிள்ளையின்றை அம்மாவும், நானும் தான் வீட்டில தனியா நிண்டோம். எனக்கு பொழுது போகாதபடியால் அங்கு மேசையில் இருந்த சில விளம்பரப் பேப்பர்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிசன் மெல்லெனக் கதவைத் திறந்து அடிக்குமேல் அடிஎடுத்து.., கிட்டத்தட்ட ஒரு வெறிகாரன் போல பக்கத்திலிருந்த கதிரையையும் பிடித்து நடந்து வந்து, மூச்சையிழுத்துக் களைப்பாறுவது போல், சாடையாக என்னையும் பார்த்துப் புன்னகைத்தபடி முன்னிருந்த சோபாவில் அமர்ந்தார். என்னடா இந்த மனுசன் விடிக்காலையிலேயே வெறியுடன் வந்திருக்கிறாரே எண்டு மனம் சங்கடப்பட்டுக் கொண்டது.

அந்தவீட்டுக்கார மனுசியும் ஆ... கயனண்ணை இந்தாங்கோ… பலகாரம் சாப்பிடுங்கோ தேத்தண்ணி குடியுங்கோ எண்டு ஒரு பலகாரத் தட்டையும் தேத்தண்ணியையும் முன்னால் வைத்து விட்டு நகர்ந்து விட்டாள்.

எனக்குஅவரைப் பார்க்கும் போது எங்கேயோ பார்த்த முகம் போல இருந்தாலும் உடனே ஞாபகத்துக்கு வரவில்லை. நான் விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அண்ணை நீங்களும் பலகாரம் சாப்பிடுங்கோவன் என்று என்னைப்பார்த்துக் கேட்க, நானும் இப்பதான் சாப்பிட்டனான் எனச் சொல்லி மறுத்துவிட்டேன். அவர் கொஞ்சம் குனிந்து, தட்டிலிருந்த பலகாரத்தை எடுக்கஅவர் பட்ட கஸ்ரத்தை என்னால் பார்க்க முடியாமல் இருந்தது.

கைவிரல்கள் நடுங்கியபடியே அதை எடுத்து வாயில் போடும்போது அவர் பட்ட அவஸ்தையும் அதற்கெடுத்த நேரமும் அவர் வெறியில் இல்லை. அவர் ஒரு சுகமில்லாதவர் என்பதை என்னால் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருந்தது.

நான் பார்த்த பேப்பரை வைத்துவிட்டு உங்களுக்கு என்னn பயர் எங்கே இருக்கின்றீர்கள் எனக் கேட்க, ஒருகொஞ்சத் தூரத்திலேதான் இருக்கிறன், தன்ரை பெயர் கயேந்திரன் என்றும், கயன் எண்டு கூப்பிடுவினம் எண்டு சொல்லிப் போட்டு. என்னையும் விசாரித்தார்.

அவர் கதைக்கும்போது தலையும் சேர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தது. நான் இங்கே படமெடுக்கவந்தனான் என, நான் இருந்து வந்த சிற்றியின் பெயரையும் சொன்னபோது, அப்ப என்னைத் தெரிந்திருக்க வேண்டுமே..? நான் அப்போது உங்கட இடத்துக்குப் பக்கத்திலுள்ள சிற்றியிலேதானே புட்போல் விளையாடினனான் எண்டும், கயன் எண்டால் என்னைக் கனபேருக்குத் தெரியும் எண்டும், ஒருபெருமிதச் சிரிப்போடு அவர் சொன்னபோது எனக்கு வியப்பாகவும், பெரும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

அந்தக் கயனா.., நீங்கள்..! ஆம் என்று ஒருகுழந்தைபோலச் சிரித்தார். என்ரை மனம் ஒருகணம் ஆடி அடங்கி நின்றது.

அந்தக் கயனா..? அவனா இவன்..!? அவன் எங்கே..!இவன் எங்கே..!? அவனின் அந்த அழகுத் தோற்றம், கம்பீரம், விளையாட்டு வீரனுக்கான அந்த ஸ்ரையில் எங்கேயெல்லாம் மறைந்து போனது?

ஆனால் இவனோ.., முகமெல்லாம் அதைச்சு கண்களெல்லாம் உள்ளேபோய் முதுகும் வளைந்து கூனிக்குறுகிப் போய்..

கயன் அப்ப என்னையும் தெரிந்திருக்கவேணுமே..? அப்போ எங்களுடைய சிற்றிக்காக நானுந்தானே விளையாடியவன். ஞாபகம் இருக்கா என்று கேட்டபோது கண்களைக் கசக்கியபடியே, என்ன பெயர் சொன்னீங்கள் என்று திரும்பக் கேட்டு யோசித்தபடி.., அப்போ பாட்டெல்லாம் பாடுறவன் நீதானே என்று கேட்க நானும் தலையாட்ட, அவன் முகத்திலே அளவில்லா ஆனந்தத்தைக் காணக்கூடியதாய் இருந்தது.

சிரமப்பட்டு எழுந்து என்னைக் கட்டிப்பிடிக்க முயன்ற போது நானே எழுந்து அவனை இறுக அணைத்துக் கொண்டேன். நாஙகள் இருவரும் மிகவும் நெருகக்மாகவும், நாளாந்தமும் பழகிய சினேகிதர்கள் இல்லை. விளையாடும் போது சந்தித்த நேரங்களிலிலும் விளையாட்டு முடிந்த பின்னர் சேர்ந்திருந்து முஸ்பாத்தி பண்ணியபோது பழகிய நட்பே ஒழிய, பெரிதாய் இல்லை. ஆனால் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள்.

டேய் எவ்வளவு காலமடா..? சிரித்துக் கொண்டே என்னை இறுக்கிஅணைத்துக் கொண்டான். எங்கள் இருவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லாதபடியால் எமக்கு அது பெரிய சுதந்திரமாகவே இருந்தது.

இப்போது அவன் என் பக்கத்திலேயே அமர்ந்துகொண்டான். என்ன கயன்.., இப்படி மாறிட்டாய்...? எனது காலிலே ஊண்டியவனாய்.., நான் மாறவில்லை. என்னையெல்லாம் மாற்றி விட்டது என்று ஒரு அசட்டுச் சிரிப்புடன் தலையை ஆட்டியபடியே, இப்ப யாருமே கேள்விப்படாத, பேர் தெரியாத, ஆயிரத்தெட்டு வருத்தங்கள்.., ஒரு நாளைக்கு இரவு பகலெண்டு முப்பதிற்கு மேற்ப்பட்ட குளிசைகளைச் சாப்பிட வேண்டியிருக்கு. அப்படியெண்டால்த்தான் உயிர் வாழலாமாம்.

எனக்கு நேர்ஸ் மார் வந்து தான் எல்லா உதவிகளையும் செய்வினம். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இப்படியே காலமும் வாழ்க்கையும் ஒடிக்கொண்டிருக்கு. அப்ப உன்ரை பாடு என்னமாதிரி இப்ப என்ன செய்யிறாய் என்று என்னை உரிமையோடு மிக இயல்பாகவே கேட்கத் தொடங்கினான்.

நானும் எனது குடும்பம், பிள்ளைகள், வேலை எண்டும் எடுத்துச் சொல்லிவிட்டு நீ என்னமாதிரி. உன்னுடைய குடும்பம் குழந்தைகள் எனக்கேட்க. என்ன எனக்கா..! குடும்பமா..!! என்னை யார் முடிப்பார்கள்..? எனக்கு யார் பெண் தருவார்கள்..? என்று அவன் சிரித்தபடி சொன்னாலும், அவனது சிரிப்பிலே உயிர்ப்பே இருக்கவில்லை.

தனது கைகள் இரண்டையும் சேர்த்து பொத்தியபடி தலையைக் குனிந்து கொண்டான். என்ன கயன் உன்னைக் கவலைப்படுத்தி விட்டேனோ..?

சீசீ... இதெல்லாம் ஒரு கவலையெண்டால்... அப்ப... என்ரை அம்மாவும் சகோதரர்களும் என்னை கலியாணம் முடி முடி எண்டு வற்புறுத்தினவை தான், ஆனா நான் மறுத்துவிட்டேன். சும்மா அவையின்ரை ஆசைக்காக கலியாணம் செய்யலாமே..?

இல்லைக் கயன் திருமணம் எண்டால் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ்க்கையிலே கடைசிக் காலங்களில் அதுக்குத் தானே இந்தக் குடும்பம் மனைவியெல்லாம். கொஞ்ச நேரம் ஒன்றுமே பேசாது மௌனமாய் இருந்தான். தலையைச் சொறிந்தவனாய் சோபாவில் சாய்ந்தபடி உனக்கு நிறைய நேரம் இருக்குத்தானே..? வெளியே வா போட்டு வருவோம் என எழுந்தான். அவனோடு சேர்ந்து நானும் இறங்கினேன்.

வெளியிலே நல்ல காலநிலை. இது பூக்களின் மாதமானதால் அழகாகவும் நல்ல மணமாகவும் இருந்தது. கொஞ்சத் தூரம் மெல்ல நடந்தவன் திடீரென நின்றபடி ஒன்றுமே பேசாது மவுனமாய் காலடியெடுத்து வைக்கத் தள்ளாடினான். நான் எட்டி அவனது தோளைப்பற்ற.., அவனும் இறுக்கமாய் ஒரு கையால் என் கைகளைப் பிடித்துக் கொண்டு மறு கையாலே என் தோளைப் பிடித்து தன்னை நிலைநிறுத்தியவனாய், நான் ஒரு கதையொன்று உனக்குச் சொல்லப் போறன். யாருக்கும் தெரியாத இவ்வளவு காலமும் என் மனவெளியிலே அமிழ்த்தி அமிழ்த்தி பதுக்கிப் பூட்டிவைத்த ரகசியத்தை அதை எனக்காகவும் உனக்காகவும் இண்டைக்கு உடைக்கப் போறன். உனக்குச் சொல்ல வேண்டும் என்று மனம் விரும்புகிறது என்றான். இவன் இப்படி நாடக வசனம் போலே கதைக்கத் தொடங்க மனதிலே ஒருவிதப் பயமும் பீதியும் என்னைப் பற்றிக் கொண்டது.

ஏதோ சும்மா இருந்தவனின் மூளையைக் குழப்பி விட்டேனோ என்ற நினைப்பே என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டது. ஏய் கயன் என்ன கதைக்கிறாய். என்ன என்ன என்றபோது அவனும் என்னை விளங்கியவனாய் பயப்படாதே. உண்மை ஒன்றைத்தான் உனக்குச் சொல்லப் போறன். ஒருவரை ஒருவர் மாறிமாறிப் பார்த்துக் கொண்டோம்.

எனக்கு வித்தியா எண்டொரு காதலி இருந்தவள். நாங்கள் இருவரும் ஊரில் இருந்த வேளையிலே ஒருத்தரை ஒருத்தர் விரும்பியிருந்தோம் எங்கள் இரு வீட்டாருக்கும் கூட நல்ல விருப்பம் இருந்தது. எல்லோரைப் போலவும் சேர்ந்து வாழ வேண்டும் எண்டு விரும்பி, அவளை இங்கே கூப்பிடுவதற்கெண்டு அவளுடைய தமையனும் மாமனும் நானும் சேர்ந்து ஒரு ஏச்என்சியிடம் காசு கட்டியிருந்தோம்.

அவங்களும் சிங்கப்பூர் மலேசியா எண்டு கொண்டு வந்து, காசு காசு எண்டு கேட்ட போது நாங்களும் அனுப்பினம். பிறகு எங்கேயோ ஒரு ஆபிரிக்க நாட்டிலே கொண்டு வந்து காசு காசு எண்டாங்கள் நாங்களும் வந்து சேரத்தானே வேணும் எண்ட படியால், அங்கே இங்கெயெண்டு கடன்பட்டு அனுப்பினம். பிறகு பிறகு ஏதோ உக்கிறைன் எண்ட நாட்டுக்கு கொண்டு வந்து வைத்திருக்கிறோம் எண்டு சொன்னாங்கள். ஆனால் நாங்கள் ஒருத்தரும் வித்தியாவுடன் கதைக்கவோ தொடர்பு கொள்ளவோ முடியவில்லை. அவனது நா தளதளத்து குரல் அடைத்துக் கொண்டது.

கயன் சொல்ல விருப்பமில்லாவிட்டால் பரவாயில்லை. நான் உன்னைக் கஸ்ரப்படுத்த விரும்பவில்லை கயன். மூச்சையிழுத்து மேலும் கீழுமாய் விட்டான். அவனது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது. தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பொக்கற்றிலிருந்த லேஞ்சியால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

உக்கிறைன் நாட்டிலே நிண்டபோது யாரும் ஒரு தமிழன் ரெலிபோன் எடுப்பான். இந்த நம்பருக்கு காசு அனுப்புங்கோ எண்டு கூறுவார்கள். வித்தியாவுடன் கதைக்கக் கேட்டால் ஏதோ சாட்டுகள் போக்குகள் சொல்லி விடுவாங்கள். தாங்கள் காசு அனுப்பப் பிந்தினா வித்தியாவின் வருகையும் பிந்தும் எண்டு சொல்லுவாங்கள். கடைசியிலே அவளுடைய மாமனும் நானும் களைச்சே போனோம்.

பிறகு ஒரு நாள் மாமன் ரெலிபோன் எடுத்துக் குளறினார். தம்பி அங்கே பிள்ளையை ஒரு மலைப் பிரதேசத்துக்காலே கொண்டு வரேக்கே அவ குளிர் தாங்காமல் செத்துப்போனா எண்டு யாரோ எடுத்துச் சொன்னவங்களாம்.

நானும் அவரும் அவங்களோடு தொடர்பு கொள்ள முயன்றோம். ஒரு பதிலும் இல்லை. அதெல்லாம் முடிஞ்சு ஒரு கொஞ்ச நாளின் பின்னர், நான் வேலை செய்த இடத்திலே மயங்கி விழுந்தனாம். ஏதோ மூளையிலே கசிவு ஏற்பட்டதாம். கொஞ்சக்காலம் ஆஸ்ப்பத்திரியிலே இருந்திட்டுத் தான் வந்தனான்.

என்ன அற்ப வாழ்க்கை. என்னுடைய வாழ்நாள் அனைத்துக்கும் ஆதாரமாய் இருந்தவள் வித்தியா எல்லாம் போய்விட்டது. அவனது கைகளை திரும்பவும் பற்றிக் கொண்டேன். என் கதை இன்னும் முடியேல்லை. இது தான் என்ரை வீடு. அவன் திறப்பை எடுக்க அதிக நேரம் தேவைப்பட்டது.

உள்ளே நுழையும் போது.., அறை மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் இருந்தது. இன்று தான் நேர்ஸ் வந்து போனவள். இதிலே இரு எனக்காட்டி விட்டு அங்கிருந்த கபேட்டின் மேலிருந்த ஹான்ட்பாக் ஒன்றைக் கீழிறக்கி அதிலிருந்த கடிதமொன்றை எடுத்தான். என்னைப் பார்த்தவனாய் கைகள் நடுங்கியடியே அதை நீட்டி, இதைப்படி என்றான்.

வித்தியா இல்லை என்ற செய்தி கேட்டு கொஞ்சநாளின் பின்னர் கிடைத்த கடிதம். எனக்கு பயமாகவும் நடுக்கமாகவும் இருந்தது. மெல்ல விரித்து படிக்கத் தொடங்கினேன்.

அன்புடன் உயிர் கயனுக்கு

கடவுள் துணையால் இக்கடிதம் எப்போதாவது உங்கள் கையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். நான் என்ன பழி செய்தேனோ தெரியாது. நரகம் என்றால் என்ன என்பதை ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கடிதம் உன் கையில் கிடைப்பதற்கு முன்னர் நான் உயிரோடு இருக்கமாட்டேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

என்னோடு வேறு சில தமிழ்ப் பெண்களும் சில ஆண்களும் வந்திருந்தனர். ஆனால் இப்போ அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. இங்கே ஒரு பழைய பண்ணை போன்ற இடத்தில் ஒரு நிலவறையில், சிறையில் இருப்பது போல் அடைக்கப்பட்டிருக்கிறேன். பெயர் தெரியாத மொழி தெரியாத ஆட்களின் இச்சைகளுக்காக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும், துன்பப்படுத்தப்படுகின்றேன்.

எப்போதாவது வந்து போன தமிழ் ஏச்என்சிக்காரனும் இவர்களுடன் ஒத்துப்போனால் இலகுவாய் உன்னிடம் வந்து சேரலாம் எண்டு புத்தி சொல்லியிருந்தான். இதுதான் என்று அப்போது தெரியவில்லை.

இன்னொருத்தரால் எச்சிப்படுத்தப்பட்ட நான் இனிமேல் உங்களுடன் வந்து எப்படி நிம்மதியாய், உண்மையாய் வாழமுடியும். அப்படி வந்து வாழ்ந்தாலும் கூட எப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்தப் பிரச்சினை எழுந்தே தீரும். ஏன் என்றால் நீயும் கூட சாதாரணத் தமிழன் தானே!

நீயென்ன மொத்தத் தமிழ்ச் சமூகமே இதை ஏற்காது என்ற நினைப்பில் என்னை அழித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளேன். நிறைய எழுதவேண்டும் என நினைக்கிறேன். முடியாது. எங்களுடைய நாட்டிலேயே சொந்த மக்களே பாதுகாப்பற்றும் உயிருக்குப் பயந்து வாழும் நிலையில் இருக்கும்போது நீ ஏன் இங்கே வந்தாய் என்று இங்கு வந்தவர்களில் ஒருவன் கேட்டான். அவன் மூலமாய்த்தான் இந்தக்கடிதத்தை அனுப்புகின்றேன்.

இப்படியே கடிதம் நீண்டு கொண்டு போக என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. கயனை என்னால் நிமிர்ந்து பார்க்க முடியாமல் இருந்தது.

நான் வெளிநாடெண்டு என்று வராமல் நாட்டிலேயே இருந்து செத்துத் தொலைத்திருக்கலாம். இல்லாவிட்டால் போராடியாவது எங்கள் நாட்டில் மடிந்து போயிருக்கலாம். இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்க இப்பவும் இந்தச் சனங்கள் வெளியே வர வேண்டுமெண்டு அலையிறதை நினைக்க கவலையாகவும் வேதனையாகவும் இருக்கு. அவன் தலை நிமிராமலேயே சொல்லிக் கொண்டிருந்தான்.

ஒருவரின் துயரத்தையும் துன்பத்தையும் இன்னொருத்தரால் அதே விதமாய் உணர்ந்து கொள்ள முடியாது தான். ஆனால் கயனின் துயரத்தையும் ஏமாற்றத்தையும் என்னால் முழுமையாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

வார்த்தைகளால் அவனை என்னால் தேற்ற முடியாது. எமது போராட்டத்தின் இறுதிக் கணத்திலே மாட்டிக் கொண்ட எமது பெண் போராளிகள் போல் இவளும் இந்த மாபியாக் கும்பலிடம் மாட்டித் தவித்திருப்பாளோ?

அங்கே ஒரு இசைப்பிரியாவைப் போல், ஒரு அங்கையர்கன்னியைப் போல மற்றும் பெயர் தெரியாத ஊர் தெரியாத, ஏன்? வயதே தெரியாத நாட்டுக்கெண்டும் விடுதலைக்காய் போய் மாட்டிக் கொண்ட என் சகோதரிகள் போல் இந்த வித்தியாவும் இங்கே மாட்டுப்பட்டிருப்பாள்.

இந்தப் புலம்பெயர்வு என்ற இருட்டுப் போர்வைக்குள், ஏச்என்சிக்காரர்கள் என்று தங்களை மறைத்துக் கொண்டு இவர்கள் செய்த அநியாயங்களினால் வித்தியா போன்ற எத்தனையோ பெண்கள் அனாதரவாய் கண்ணுக்கே தெரியாத இடங்களில் செத்து மடிந்து தொலைத்திருக்கிறார்கள். இவர்கள் எத்தனை பேரைச் சாகடித்திருப்பார்கள்.

கயனைப் போல இன்று எத்தனை இளைஞர்கள் வெளியிலே சொல்ல முடியாத மன நோயாளிகளாக இன்னும் எத்தனையோ பேர் காசு கட்டி ஏமாந்தவர்களாக என் மனம் கொதித்துக் கொண்டது. கயனைப் போல் என்னாலும் மௌனமாய் இருக்க முடியாது. இவர்களை எப்படியாவது அம்பலப்படுத்தியே ஆகவேண்டும் என்று எனது மனம் நினைத்துக் கொண்டது.

அவனை நான் அணைத்தபடி வெளியிலே இறங்கினேன்.

காற்று வெறுமையாய் வீசிக்கொண்டிருந்தது.