Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

உரிமைகளைப் பெறுவதெல்லாம் உழைப்பவர் உள்ளதனாலே...........

முன்னொரு காலத்தில் ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது சிங்கள-தமிழ் மேட்டுக்குடி மேலாதிக்கவாதிகள் இணைந்து "இலங்கைத் தேசிய காங்கிரஸ்" என்ற அமைப்பை 1919ல் நிறுவினார்கள். 1935ல் பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட படித்த சிங்கள கனவான்கள் சிலர் சேர்ந்து லங்கா சம சமாஜக் கட்சியை உருவாக்கி தொழிலாள வர்க்க ஆட்சி அதிகாரம் கொண்ட சுதந்திர இலங்கைக்காக செயற்படத் தொடங்கினார்கள்.

1939ல் மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் ஐம்பதுக்கு ஐம்பதுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கேட்டு அது கிடைக்காத காரணத்தால் 1944ல் இ.தே.காங்கிரஸிருந்து சில தமிழ் மேட்டுக்குடிகள் விலகி அகில இலங்கைத் தமிழ் காங்கிஸை ஆரம்பித்தனர்.

அதேகாலப் பகுதியில் 1944ல் இலங்கைப் பொதுவுடைமைக் கட்சி சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் சுயநிர்ணய உரிமைகள் கொண்ட சுதந்திர இலங்கையை முன்மொழிந்து அது பற்றி உரையாட ஒரு சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

1946ல் இ.தே.காங்கிரஸிருந்து வெளியேறிய சில சிங்கள-தமிழ்-முஸ்லீம் மேட்டுக்குடி வர்த்தகப் பிரமுகர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினார்கள். 1949ல் அ.இ.த.காங்கிரஸ் கட்சியிலிருந்த சில தமிழ் மேட்டுக்குடிகள் மலையகத் தமிழ் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டபோது அதிலிருந்து வெளியேறி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைத் தோற்றுவித்தனர். 1950ல் இலங்கை-இந்திய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1952ல் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த சிலர் விலகி சிறீலங்கா சுதந்திரக் கட்சியை அமைத்தனர். 1956ல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வெளியேறிவர்களால் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. 1971ல் இலங்கை இடதுசாரிக் கட்சிகளின் போக்கை விமர்சித்துக் கொண்டு மக்கள் விடுதலை முன்னணி தோன்றியது. 1981ல் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

இலங்கையில் இனவாத அரசியல் ஆரம்பித்த நாள் தொடக்கம் இன்றுவரை தமிழ் பேசும் மக்களுடைய பிரதிநிதிகளும், சிங்கள ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளும் சந்திப்பதும் பேசுவதும் தொடர்கிறது.

1956 இனக்கலவரத்தின் பின் 1957ல் பண்டா-செல்வா ஒப்பந்தம.

1958 இனக்கலவரம்- 1961ல் சத்தியாக்கிரகப் போராட்டம் அதனைத் தொடர்ந்து 1965ல் டட்லி-செல்வா ஒப்பந்தம்.

1977 இனக்கலவரம்- 1978ல் புலித்தடைச் சட்டம்- 1979ல் பயங்கரவாதத் தடைச் சட்டம் அதன் பயனாக 1982ல் மாவட்ட சபை ஒப்பந்தம்.

1983லிருந்து தமிழ் கட்சிகளின் போக்கை விமர்சித்தபடி பல தமிழ் ஆயுத அமைப்புக்கள் தோற்றம் பெற்றன.

1985ல் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஐந்து தமிழ் ஆயுத அமைப்புக்களும் சேர்ந்து இலங்கை ஆட்சியாளர்களுடன் திம்புவில் சந்தித்துப் பேசினார்கள்.

1988-89-90களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சிங்கள ஆட்சியாளர்களுடன் பேசினார்கள்.

2001ல் தமிழ்த் தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

2002ல் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துடன் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்டு ஐரோப்பிய தலைநகரங்களில் சந்தித்துப் பேசினார்கள்.

2009ல் வன்னிப் பேரழிவுக்குப் பின்னும் இந்நாள் வரை சிங்கள ஆட்சியாளர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதேவேளை இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்றுவரை இலங்கை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுடன் தமிழ்-மலையக-முஸ்லீம் கட்சிப் பிரதிநிதிகளும் இணைந்து ஆட்சியும் புரிந்து வருகிறார்கள்.

கடந்த 67வருட கால சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் ஆட்சியின் கீழ் சாதாரண தமிழ்-முஸ்லீம்-மலையக மக்கள் படிப்படியாக அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருவதுபோல் சாதாரண சிங்கள மக்களும் அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறார்கள்.

1971லும் 1988-89லும் தென்னிலங்கையில் சாதாரண சிங்கள மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்கான ஆயுதப்போராட்டத்தில் ஒரு லட்சம் இலங்கைக் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

1983 முதல் 2009வரை இலங்கையின் வட-கிழக்கில் இடம்பெற்ற தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப்போராட்டத்தில் இரண்டு லட்சம் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

இருந்தும் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களும், தமிழ்-முஸலீம்-மலையக மக்களும் இன்றுவரை சந்திக்கவும் இல்லை-பேசவும் இல்லை. ஏன்? எதற்காக? எப்படி?

"ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை- நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை. முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே உரிமைகளைப் பெறுதெல்லாம் உழைப்பவர் உள்ளதனாலே"

இனியாவது நாம் சிந்திப்போமா? அல்லது இனியும் தொடர்ந்து ஆளும் பரம்பரையினர் வாழவும் அடக்கப்படும் மக்கள் மாண்டு மடியவும் அனுமதிக்கப் போகிறோமா?

உலக வரலாற்றில் சாதாரண-பாமர-உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களே அடிமை வாழ்விலிருந்து மனிதனை விடுவித்தது. அத்தகைய மக்களின் ஒன்றிணைந்த சக்தியே இன்று நாம் வாழும் வாழ்க்கை முறைகளை உருவாக்கித் தந்தது. மனிதகுல மேம்பாட்டுக்கான-முன்னேற்றத்திற்கான பயணத்தில் முன்னணியில் நின்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள், மரணதண்டனை பெற்றார்கள், கொல்லப்பட்டார்கள்-, காணாமல் போனார்கள். ஆனால் அவர்களுடைய சிந்தனைப் பாசறையில் பயின்று வளர்ந்த படித்த-பாமர-உழைக்கும் மக்கள்-இழப்பதற்கு உயிரைத் தவிர எதுவுமே இல்லாதவர்கள் ஓரணியில் தோளோடு தோள் சேர்ந்து நின்று போராடியதாலேயே இன்று நாம் பேசும் மனித உரிமை சாசனமே எழுதப்பட்டது.

இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு எங்களிடம்தான் உண்டு. எங்கள் இதயங்களில்தான் உண்டு. எங்களுடைய பொதுநல சிந்தனையில்தான் உண்டு. எமது மக்களை அழிப்பவரிடமோ அன்றி அவர்களுக்குப் பின் நின்று ஆயுதம் வழங்குபவரிடமோ நாம் நீதி கேட்டுப் பெறமுடியாது. நாம் நீதியும் நியாயமும் அடைய வேண்டுமானால், எமது சிங்கள-முஸ்லீம்-மலையக சகோதரர்களுடன் பேசவேண்டும். ஏனெனில் அவர்களுடைய வாழ்வும் எங்களைப் போன்றதே. அவர்களும் கொல்லப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வாழ் நிலங்களும் பறிக்கப்படுகின்றன. அவர்கள் நடாத்தும் போராட்டங்களும் அடக்கியொடுக்கப்படுகின்றன. சிங்கள மக்கள் மத்தியில் இப்போதுதான் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனை எடுத்துக் கூறப்படுகிறது.

2009ல் இசைப்பிரியாவுக்கு நடந்த கோரக் கொடுமையை சிங்கள மக்கள் கண்டித்தார்கள். ஆனால் 1971ல் கதிர்காமத்தில் பெருமாவதி மன்னம்பெருமாவுக்கு நடந்த அதே கோரக் கொடுஞ் செயலை தமிழ் மக்கள் அறிய விரும்பாமலேயே இருந்தனர்.

சண்டை பிடித்துக் கொண்டிருந்த சிங்கள இனவாத ஆட்சியாளர்களும் தமிழ் இனவாத ஆட்சியாளர்களும் சேர்ந்துதானே இலங்கையில் கால் பதித்த இந்திய இராணுவத்தை வெளியேற்றினார்கள்.அப்படியானால் ஒரு போதுமே முரண்படாத சிங்கள-முஸ்லீம்-தமிழ்-மலையக சகோதரர்கள் யாவரும் சேர்ந்து எங்களைப் பிரித்து வைத்தபடி-இனப் பிரச்சனையை வளர்த்தபடி திட்டம் போட்டுத் திருடும் உள்நாட்டு-அண்டைநாட்டு-மேலைநாட்டுப் பண மேலாதிக்கவாதிகளை முறியடித்து இலங்கையில் மக்களுக்கான சுதந்திர வாழ்க்கையை ஏன் கட்டியெழுப்ப முடியாது? கட்டாயம் நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதுவே எங்களுக்காக-எமது சந்ததிகளுக்காகத் தங்களைப் பலி கொடுத்த எமது சகோதர சகோதரிகளுக்கு நாம் செய்யும் பொருத்தமான அஞ்சலி ஆகும்.