Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அதிகாரவர்க்கம் அறிமுகப்படுத்தும் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரமும் மக்கள் சீரழிவும்..!

மனிதனுடைய சிந்தனையும் செயற்பாடும் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் பெற்ற வண்ணமுள்ளது. எதிலுமே இது தான் நிலையானது என்ற முடிவினை யாராலும் எடுக்க முடியாது. எந்த விடயத்தினை எடுத்தாலும் மனிதனுடைய ஒவ்வொரு நடைமுறையும் நாளுக்கு நாள் புதியதொரு மாற்றத்தினை அடைந்து கொண்டுதானிருக்கிறது. இதனை நாகரீக மாற்றம் என்று சொல்வதா அல்லது மனிதனுடைய அறிவு சார்ந்த சிந்தனையின் மாறுதல் என்று சொல்வாதா..? என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு மனிதனுடைய அறிவு சார்ந்த சிந்தனையின் மாற்றம் என்று தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு மனிதன் பிறந்து வளரும் சூழல், அவன் குடும்பத்தில் வளர்க்கப்படும் முறை, அவனுடைய சமூகம் அத்துடன் ஆட்சி செலுத்தும் அதிகார வர்க்கத்தின் அரசியல் என்பன அவனுடைய வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது. ஆனால் ஒரு மனிதனுடைய அறிவு பூர்வமான சிந்தனை வளர்ச்சியில் முதலில் முக்கிய பங்கு வகிப்பது அவனது குடும்பம். ஒரு குழந்தை முதலில் தனக்குள்ளே உள்வாங்கிக் கொள்வது தாய் தந்தையினை, அதற்குப் பின்னர் தான் வெளிச் சூழலினை பார்க்க ஆரம்பிக்கிறது. ஒரு குழந்தை வளர்ந்து வரும் போது குழந்தைப் பருவத்திலே அது தன்னுள் வாங்கிக் கொள்ளும் ஒவ்வொரு விடயங்களும் அதன் சிந்தனையினையும், செயற்பாட்டினையும் ஆக்கிரமித்து கொள்கிறது. இந்த சூழ்நிலையில் புறச் சூழலில் இருந்து உள்வாங்கி கொள்ளும் ஒவ்வொரு விடயத்தினையும் தெரிந்து சரி பிழை, அவசியம் அவசியமற்றது.., என்பதை பிள்ளைக்கு இனங் காட்ட வேண்டிய பெரிய பொறுப்பு தாய் தந்தை இருவரிலேயே தங்கியுள்ளது. இங்கு பெற்றோர்களின் சிந்தனையில் தவறான கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதுவே பிள்ளைகளுக்கான வழிகாட்டலாக அமைந்துவிடுகிறது.

 

பல துறைகளிலே தேர்ச்சி பெற்று திகழும் ஒரு மனிதன் சாதாரண நாளாந்த நடைமுறை வாழ்க்கையிலே தோற்றுப் போய்விடுகிறான். பிரச்சனையினை சரியான முறையிலே இனங்கண்டு தீர்த்துக் கொள்ள முடியாமல், தனது தவறான நடவடிக்கைகளினால் மேலும் தனது வாழ்க்கையினை சிக்கலுக்குள்ளாக்கி கொள்கிறான்.


மனிதனுடைய வாழ்க்கையில் ஏன் இப்படியொரு அவலநிலை அதிகரித்து வருகிறது. மனிதனுடைய சிந்தனையினை மிக சுலோபமாக ஆக்கிரமித்து அவனில் ஆளுமை செலுத்தும் இன்றைய சமுதாய சீர்கேடுகள் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த அதிகார வர்க்கம் ஆட்சிளாளர்கள் தங்கள் சுரண்டலை சுலோபமாக்க சகல சமூக சீர்கேடுகளையும் அறிமுகப்படுத்தினார்கள். மக்களை குறிப்பாக இளம் சந்ததியினரின் சிந்தனையினை மட்டுப்படுத்தி சிறிய குறுகிய வட்டத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென்பது அதிகார வர்க்கத்தின் தேவையாகவுள்ளது. அரசியல் ரீதியாக, சமுதாய பொருளாதார ரீதியாக தனது சுரண்டலை பற்றி மக்கள் சிந்திக்காமல் இருக்க, அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழாமல் இருக்க உலக அதிகார வர்க்கம் இந்த யுக்தியினையே கையாள்கிறது. மகிந்த சர்வாதிகார ஆட்சியும் அதன் வால் பிடிகளும் இன்று தமிழ் மக்கள் இளம் சமுதாயத்தின் மீது திணித்து வருவதும் இதே யுக்தியினைத் தான்.


இந்த ஐரோப்பிய மண்ணில் ஆடை, மதுபோதை, பாலியல் உறவு.., என்று சகல சீர்கோடுகளையும் யாருடைய தடையுமில்லாமல் எவராலும் அனுபவிக்க முடியும். இதிலே பழக்கப்படும் இளம் சமூகத்திற்கு இதுவே நாகரீகமாக, மனித பண்பாடாக தெரிகிறது. தனது அறிவு பூர்வமான சிந்தனையினால் இந்த சமுதாய சீர்கேடுகளை இனங்கண்டு சீரான வாழ்க்கை வாழ்பவர்கள் அந்த இளம் சமூகத்தினரின் பார்வையில் பண்பாடற்ற நாகரீகம் தெரியாத மனிதர்களாக தெரிகிறார்கள். இவர்களுடைய அறியாமை இவர்களுடைய எதிர்கால வாழ்க்கையினை படுகுழியினுள் தள்ளி விடுகிறது. ஒரு மனிதனுடைய நாகரீகம் அவனது வெளித் தோற்றத்திலே அவனது பேச்சு வழக்கில் வெளிப்பட்டுவிடுகிறது. ஆனால் ஒருவனுடைய பண்பாட்டினை அவனது உள் உணர்வு சார்ந்த பழக்க வழக்கங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். சகலதையும் ஆடை அணிகலன்களில் அடைந்து விடலாம் என்று நினைப்பது  ஒரு மனிதனுடைய அறியாமையே. ஒரு மனிதன் தனக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, சமூகத்திற்கோ பாதிப்பில்லாது வாழ்வது அவசியமானது. எப்படித் தான் நாம் நாகரீகம் கலாச்சாரம் பற்றி பேசினாலும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனையும் பிரிவினையும் பெரிதும் பாதிப்பது பெண்களையும் குழந்தைகளையும் தான். வன்முறைக்கு உட்படுத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தற்கொலை செய்வதும் பெருமளவில் பெண்கள் தான். உலகின் சகல மக்களுக்கும் இதுவே நியதி. ஆனால் எமது தமிழ் சமூகத்திற்கு இது இரட்டிப்பாகவே உள்ளது. ஒரு ஆண் எந்த பெண்ணேடு உடலுறவு கொண்டாலும் அவனுடைய தவறினை சந்தர்ப்பமாக இந்த சமுதாயம் மறந்து விடுகிறது. அதே தவறை ஒரு பெண் செய்தால் அவளை வாழ்க்கை பூராவும் தண்டிக்கிறது. ஆணைப் பெற்ற தாய் கூட இந்த ஆணாதிக்க வெறியர்களின் சிந்தனைக்கு உடந்தையாகி விடுகிறாள். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தான் ஒரு பெண் தனது வாழ்க்கையினை நகர்த்த வேண்டியுள்ளது. இதிலிருந்து ஒரு பெண் விடுபட வேண்டுமாயின் இந்த ஆணாதிக்க அதிகார வர்க்கத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான சகல சீரளிவுக்களையும் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதையே நாகரீகம் பண்பாடு என்று சிந்திக்கும் அறியாமையில் இருந்து வெளியே வர வேண்டும்.


ஒரு மனிதனுக்கு கல்வி, தொழில், கலை சார்ந்த அறிவு மட்டும் அவனை முழு மனிதனாக மாற்றிவிடாது. மனித வாழ்க்கையின் சகல நடவடிக்கைகளையும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் அரசியலினை சரியான வழியில் இனங் கண்டு கொள்ள வேண்டும். இந்த அதிகார வர்க்கம் தனது நலன்களுக்காக மனிதனுடைய அறிவையும் சிந்தனையினையும் கீழ்மட்ட சினிமா திரைப்படத் தரத்திற்கு மாற்றி அவனை அதை விட்டு வெளியிலே சிந்திக்க முடியாத குறுகிய  மனிதனாக மாற்றிவிடுகிறது. ஆனால் இதுவே நியம், இது தான் சந்தோஷம் நினைக்கும் சில மனிதர்கள் இதையே தமது வாழ்க்கையாக பழக்கி கொண்டு தமது எதிர்கால ஆரோக்கிய வாழ்வினை சீர்குலைத்து கொள்கிறார்கள். எங்கள் அறியாமை எம்மை சீரளிப்பதோடு சுரண்டல்வாதிகளுக்கு சாதகமாகிவிடுகிறது. இந்த அதிகார வர்க்கத்தின் தன்னலம் சார்ந்த சுரண்டல் போக்கிற்கு நாங்கள் துணை போகாமல் இவர்களின் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை உடைத்தெறிந்து சகல சமூக சீர்கேடுகளை இனங்கண்டு அதை புறந்தள்ளி வாழ்ந்து எமது எதிர்கால சந்ததியினர்க்கு சரியானதொரு வழிகாட்டியாக நாம் எமது வாழ்வினை அமைத்துக் கொள்ள வேண்டும்.

- தேவன்.  
08/03/2012