Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

துன்பமும் போராட்டமும்…

பல ஆண்டுகளாகப் போராடிய மாணவர்கள் இன்று தங்கள் கல்வி உரிமையினை வென்றெடுத்துள்ளார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பொது மக்கள், இடதுசாரிய அமைப்புக்கள், முன்னிலை சோசலிசக் கட்சி துணை நின்றார்கள். அதிலும் சில மாணவர்கள் அடக்குமுறைவாதிகளால் ஆதாரம் அற்ற முறையில் கொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் மிக ஏழ்மைக் கோட்டில் வாழும் குடும்பத்தினை சேர்ந்தவர்கள். ஏழைகளின் உயிர்கள் மற்றும் பொது மக்களின் உயிர்கள், அரசியல்வாதிகளுக்கும், மக்களைச் சுரண்டி வயிறு வளர்க்கும் பண முதலைகளுக்கும் எதுவுமே இல்லாத ஒன்றாகிவிட்டது. மக்களுடைய  இழப்புக்களை, கஸ்ரங்களை, துயரங்களைப் பொருட்படுத்தாத அரசியல்வாதிகள் ஆட்சியில் இருந்து மக்களுக்கு என்ன பயன்? புதவியைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளை இல்லாது ஆக்குவதும், முடிந்த வகையில் பொதுமக்கள் உழைப்பினை சுரண்டுவது, உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மக்களை அடையாளம் இல்லாது ஆக்குவது, நாட்டினை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை பல வழிகளில் வருத்தி துன்புறுத்தி, கொள்ளை அடித்து உலக முதலாளிகளையும், உலக வங்கியையும் வாழ வைப்பதோடு தாங்களும் கொள்ளை அடிப்பதும் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அவர்களுடைய அரசியலும் ஆகும். 

எதிர்க்கட்சி என்று வந்த கூட்டமைப்பு தமிழ்ப் பகுதிகளில் ஒரு கிராமத்தினை கூட புனரமைத்தது கிடையாது. இன்று மழையினால் எத்தனை கிராமத்து மக்கள் சேறும் சகதியுமாய் போக்குவரத்து சிரமத்தால் அவதிப்படுகின்றார்கள். இது சம்பந்தன் ஐயாவின் கிழட்டுக் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் பதவி எதிhக்;கட்சித் தலைவர். ஒரு கிராமத்து மக்களை வாழவைக்க முடியாத தலைவர் தமிழ் மக்களின் உரிமையினை பெற்றுத் தருவாராம்.., தமிழ் மக்களை அமைதியாக வாழ வைப்பாராம். சூடு சுரணை இல்லாத வெட்கம் கெட்ட கேவலமான மனிதர்கள். பார்த்தால் வெள்ளை வேட்டியும் சேட்டும்.

 

இன்று மாணவர் போராட்டம் வெற்றிபெற்று விட்டது. ஆனால் மக்களின் பல உரிமைப் பிரச்சனைகளில் இது ஒரு சிறிய கடுகளவு தான். புலிகளின் போராட்டத்தின் போதும் போராட்டம் முடிவடைந்த பின்னும் கைது செய்து ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் தமிழ் உயிர்களும், வேதனையில் வாடும் அவர்களின் குடும்பங்களின் துன்பமும் போராட்டமும் தொடர்கின்றது. அன்று லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்டதில் இருந்து இன்று வரை சம உரிமை இயக்கம் இதற்காக குரல் கொடுத்துப் போராடி வருகிறது. ஆனால் தொடர்ந்தும் அரசியற் கைதிகளும் அவர்கள் குடும்பங்களும் எந்தவித தீர்வுமின்றி அவர்களின் துயரம் தொடர்கின்றது. இந்த மக்களின் துயரினை தங்களின் அரசியல் இலாபத்திற்காக சில அரசியல்வாதிகளும் அமைப்புக்களும் பயன்படுத்துவதைத் தவிர எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்துவதாக இல்லை. பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் ஒருபோதும் தாங்களாக இவற்றை தீர்த்து வைக்கப் போவதுமில்லை.

கடந்தகால இழப்புக்களில் வலுவிழந்து நிற்கின்றது தமிழ் இனம். போரினால் கைகால்களை இழந்து ஊனமுற்று அல்லலுறும் மக்கள், சமுதாயத்தினின்றும் தனிமைப்படுத்தப்பட்ட பெண் போராளிகள், கணவன்மார்களை இழந்த விதவைகள்..., சிறையில் வாடும் அரசியற்கைதிகளின் குடும்பங்கள்.., இப்படி வலிசுமந்து நிற்கும் தமிழ் மக்களின் அவலநிலை ஆட்சி செலுத்தும் அரசிற்கும் தெரியவில்லை, தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு பெரிய விடையமில்லை. இனித் தேர்தல் நெருங்கும் போது தான் தமிழ் மக்கள் மீது “கரிசனை” வரும், சம்பந்தன் ஐயாவும் அப்போது தான் மயக்கத்தில் (பதவி) இருந்து கண் விழிப்பார். அடுத்த தேர்தலில் வென்றால் தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வு வாங்கித் தருவேன் என்பார். மாற்று வழி இருந்தும் அதை தெரிந்து கொள்ளாத அல்லது நம்பிக்கையில்லாத, ஏற்றுக்கொள்ள முடியாமல் இன்னொரு தேர்தலில் அவர்களுக்கே வாக்களித்து விட்டு மக்கள் அண்ணார்ந்து பார்த்து கொட்டாவி விட்டபடி இருக்க வேண்டியது தான். மக்களின் அறியாமையும் மௌனமும் தான் அரசியல்வாதிகள் பதவிக்கு வரும் மூலதனம். அதற்கு பக்கபலமாக இனவாதத்தினை தூண்டிவிட்டு மக்களை மோதவிட்டு பதவியினை பாதுகாத்து கொள்வார்கள். இதுதான் நாட்டில் வழமையான அரசியல். 

எங்கள் இனத்திற்காக போராடி குரல் கொடுத்து சிறையில் வாடும் எம் உறவுகளையும் அவர்களின் குடும்பங்களையும் நாம் இப்படியே மறந்து விடப்போகின்றோமா.., அல்லது ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து அவர்களை விடுவிக்க போராடப் போகின்றோமா..? எம்மை நேசித்து எமக்காக போராடி சிறையில் நாட்களை கழிக்கும் எம் சகோதரர்களை மீட்க அரசுக்கெதிராக இணைந்து குரல் கொடுப்பதே மனிதம்…!