Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

போராடுவோம்.., போராடுவோம்.., எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம்..!

நாம் இன்றைய எமது வாழ்க்கையினை நகர்த்துவதற்கு ஒவ்வொரு நிமிடமும் போராடியே ஆகவேண்டும் என்பது எமது வாழ்க்கையின் நியதியாக மாற்றப்பட்டுவிட்டது. வாய் திறந்து பேசாமல், நீதி கேட்டுப் போராடாமல் வாழவே முடியாது என்ற நிலமை உலகிலே நிலை கொண்டுவிட்டது. எனக்கு என்ன, நான் எனது பாட்டில் அமைதியா இருந்துவிடுவோம் என் இருப்போமாயின், பக்கத்து வீட்டுக்காரனின் அதே பிரச்சனை நாளை எனது வீட்டின் கதவைத் தட்டும். வேலை, வதிவிடம், கல்வி, மருத்துவம், பொருளாதாரம்…, என நாளாந்த வாழ்க்கையினை கொண்டு செலுத்த நாம் சந்திக்கும் கஷ்ரங்களும் துன்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இது விதியல்ல.., கடவுளின் தண்டனையுமல்ல.

இது எமது வாக்குக்கள் எமக்கு கொடுக்கும் தண்டனை. இது நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் எமக்கு கொடுக்கும் தண்டனை. பணத்திற்காகவும், பதவிக்காகவும், புகழுக்காகவும் அடுக்கு மொழிகளையும், வாக்குறுதிகளையும் அள்ளி வழங்கி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தி வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளால் நாம் பெறும் துன்பங்கள் தான் அத்தனையும். மக்களின் வாக்குக்களால் அதிகாரத்தினை கைப்பற்றிய பிறகு, அதே மக்களின் உரிமைகளை மறுப்பதும், மக்களின் நலன்களையும் தேவைகளையும் மறந்து செயற்படுவதும், உலக ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாப்பதும், உலக முதலாளித்துவத்தின் முதலீடுகளை பெருக்கவும்.., தங்கள் அதிகாரத்தினை பயன்படுத்துவதே இன்றைய அரசியல்வாதிகளின் ஒரே நோக்கமாகும். இன்று தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி மக்களின் வாக்குக்களை பெற்று பாராளுமன்றம் சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர், தாங்கள் ஆவேசப்படுவதாகவும், உணர்ச்சிவசப்படுவதாவும் முதுகெலும்பில்லாத ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை  விளம்பரப்படுத்தி மக்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டு பாராளுமன்றத்தில் ஆட்சியாளர்களோடு கட்டியணைத்து, விருந்துண்டு தங்கள் வாழ்க்கையினை வசதியாக செழுமைப்படுத்தி கொள்கிறார்கள்.

தமிழ் மக்களின் நியாமான போராட்டங்களை  ஆட்சியாளரின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு ஏமாற்று வார்த்தைகளையும், பொய் கருத்துகளையும் கூறி தவறான பாதைக்கு திசை திருப்பி மழுங்கடித்து ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிடுகின்றார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஊடகங்களும் உண்மைகளை மறைத்து பாராளுமன்ற அரசியல்வாதிகளின் நலன்களை பாதுகாக்கும் நோக்கோடே செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதை எந்த அரசியல்வாதிகளும் விரும்பமாட்டார்கள். மாறாக மக்களின் சகல போராட்டங்களையும் ஏதாவது ஒரு வழியிலே அடக்கி போராட்டங்களை ஒன்றுமே இல்லை என்று ஆக்கிவிடுவதே அரசியல்வாதிகளின் நோக்கமாகும். எங்கள் உரிமைகளை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் சொல்லிவாதாட மக்கள் வாக்களித்த அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களிற்கு சார்பாக செயற்பட்டு தங்கள் சொந்த நலன்களை தக்க வைத்துக் கொள்வது தான் அவர்களின் குறிக்கோளாக உள்ளது.இப்படிப்பட்ட சூழலில் மக்களாகிய நாங்கள் எங்கள் உரிமைக்காகவும், எங்கள் இழப்பிற்காகவும் நியாயம் கேட்டு போராடுவதே எமக்கு இருக்கும் ஒரே வழி.


சமஉரிமை இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களான, காணாமற் போனோர் பற்றிய போராட்டம், சகல அரசியற் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் பாரிய அளவிலான பிரச்சனைகளையும், அழுத்தத்தினையும் இலங்கை அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதை தாங்கள் தான் ஆரம்பித்ததாகவும், தாங்களே முன்னெடுப்பதாகவும் முண்டியடித்துக் கொண்டு தங்களை முன் நிறுத்திய கூட்டமைப்பு அப்பாவி அரசியற் கைதிகளின் போராட்டத்தை திட்டம் போட்டு மழுங்கடித்து திசை திருப்பி வருகின்றது. தாங்கள் பாராளுமன்றத்தில் அரசுடன் பேசிவருதாயும், நீங்கள் போராடி குழப்பியடித்து விடாதீர்கள் என பொய்யுரைத்து போராட்டத்தினை சோர்வடையச் செய்து வருகின்றார்கள்.

மக்களின் இந்த போராட்டத்தினால் இன்று அரசாங்கத்தை விட பாதிக்கப்படுவது கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தான். சம உரிமை இயக்கம் தொடங்கியுள்ள போராட்டம் தங்கள் அரசியல் நலன்களை பாதிக்கின்றதே என்ற ஆதங்கம் அவர்களுக்கு. சம உரிமை இயக்கம் ஒட்டி வரும் போஸ்ரர்களை கிழித்தெறிவதும், சாணி பூசுவதும் அவர்களின் செயற்பாடாக உள்ளது. இந்த போஸ்ரர்களும், பனர்களும் அரசியல்வாதிகளின் மக்களை சுரண்டி சேர்த்த பணம் இல்லை. மக்களின் பணம், மக்களின் உழைப்பு. இன்று மக்கள்படும் அவல வாழ்வை மாற்றி அமைக்க வேண்டுமென்ற நல்ல நோக்கோடு சமவுரிமை இயக்கத்தினர் பல சிரமங்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்கும் முயற்சியே இந்தப் போராட்டங்கள். இன்று குறைந்த தொகையிலாவது ஒரு சிலர் விடுதலை பெற்றுள்ளார்கள் என்றால் அது சமஉரிமை இயக்கம் ஆரம்பித்த போராட்டத்தின் வெற்றி தான். காணமல் போனவர்கள் பற்றி நியாயம் கிடைக்கும் வரை, சகல அரசியற் கைதிகளும் விடுவிக்கும் வரை அவற்றிற்கான போராட்டங்கள் தொடரும். போராடுவதை தவிர மாற்று வழி ஏதும் இல்லை.    

மாடாக உழைத்தும் எமது வாழ்வில் அமைதியோ, சந்தோஷமோ இல்லை, ஆனால் எமது உழைப்பில் வாழ்பவன் தேவைக்கு அதிகமான சொத்து சுகத்தோடு நிம்மதியாக வாழ்கிறான். இதுவே தலைவிதி என்று அமைதியாக இருந்தோமானால் எமது நிலை என்றும் மாறப் போவதில்லை.