Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏகாதிபத்தியத்தின் கோமணமொன்று ஏகாதிபத்தியத்தை எதிர்க்குதாம்!

"ஏகாதிபத்தியவாதிகளுக்கோ அவர்களின் அடிவருடிகளுக்கோ நாம் அடிபணியமாட்டோம்! ஏகாதிபத்தியவாதிகளின் முன்பாக கடின முயற்சியின் மூலம் பெறப்பட்ட அமைதியையும். சுதந்திரத்தையும் காட்டிக் கொடுத்த அவர்களின் அடிவருடிகள் முன்பாகவோ நாம் தலைவணங்க மாட்டோம்

"ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நாம் ஜெனிவாவுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. நாம் மனித உரிமைகளை மீறியதாக அவர்கள் கூறுகிறார்கள். மக்களை உயிர் வாழ அனுமதித்ததை விட பெரிய மனித உரிமை என்ன இருக்கிறது! வாழும் உரிமை தான் முக்கியமான மனித உரிமை. மக்கள் தான் சரியானது எது? தவறானது எது? என்பதை தீர்மானிக்க முடியுமே தவிர ஐ.நா மனித உரிமை ஆணையம் அல்ல. முடிவெடுக்கும் அதிகாரம் உங்களின் கைகளில் தான் உள்ளது. நீங்கள் தவறு என்று கூறினால் அதற்கு நாம் தலைவணங்கத் தயார். ஆனால் ஏகாதிபத்தியவாதிகளிடமோ அவர்களின் அடிவருடிகளிடமோ தலைவணங்க மாட்டோம் என்பதை தெளிவாக கூறுகிறோம்".

குடிகாரன் பேச்சுப்போல் மகிந்தாவின் தேர்தல்காலப் பேச்சும் விடிந்தால் போச்சு. மக்களை உயிர்வாழ அனுமதிப்பதை விட பெரிய மனித உரிமை வேறு என்ன இருக்கின்றது எனக் கேட்கின்றார்?... ஞானபோதியான இத்தர்மிஸ்டர். உயிர் வாழும் உரிமை கூட எதிர்காலத்தில் எம்மக்களுக்கு இருக்கப்போவதில்லை.

எதிர்காலங்களில் எம்நாட்டு மக்களின் உயிர்வாழ்விற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களைக்கூட, மக்கள் தம் வீட்டுத் தோட்டங்களில் தாம் விருப்பிய மாத்திரத்தில் பயிரிட முடியாது. மற்றவர்களுக்கு பரிமாற முடியாது. மொனசன்டோ, கேலிஸ் போன்ற பல்தேசியக் கம்பனிகள் சொல்லும் பயிரின வகைகளையே எம்மக்கள் எதிர்காலத்தில் பயிரிட வேண்டும். அவற்றையே உண்டு உயிர்வாழ வேண்டும். இப்படியான உணவு உற்பத்திகள் தரமோ, உயிர்ச்சத்துக்கள் கொண்டவையோ என்பது பற்றிய கேள்விகளே கேட்கக்கூடாது. கேட்டால் பன்னாட்டுக் கொலைஞர்களுக்காக இயற்றப்படும் சட்டங்களின்படி தக்க தண்டனைகள் வழங்கப்படும்.

போறபோக்கில் எம்மக்கள் பனங்கொட்டை எடுத்து பனம்பாத்தி கூடப் போட முடியாது போல் இருக்கு. தற்செயலாக ஒளித்துப் போட்டு, காவோலையால் மறைத்து விட்டால்கூட, டக்கிளசும்-அவரின் உள்ளுர் எடுபிடிகளும் ராணுவத்திற்கு காட்டிக் கொடுத்தே விடுவார்கள். தட்டித்தவறி கிழக்கின் மக்கள் நல்லின விதைகளைப் பரிமாறினால் கூட பிள்ளையான்-கருணாவின் நிலையும் இதுதானே? தென்னிலங்கை விவசாயிகள் கூட நல்ல இன விவசாயப் பயிர் இனங்களை பயிரிட முற்றபட்டால், எங்கள் "ஏகாதிபத்திய எதிர்ப்பாளி" என்ன சொல்வார்? இதை முடிவெடுக்கும் அதிகாரத்தேர்வு உங்களுக்கில்லை. அது என் பன்னாட்டு நண்பர்களுக்கானது என்பார்.

எம்மண் சார்ந்த இயற்கையின் தரம் மிகு உயிரின ஆதாரங்களை அழித்தொழித்து, பன்னாட்டுக் கொள்ளையர்களின் கோமணமாகும் சாத்தான்…. தேர்தல் வேதம் ஓதுகின்றது.

சரியானது எது. தவறானது எது என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் உங்களின் கைகளில் தான் உள்ளது. நீங்கள் தவறு என்று கூறினால் அதற்கு நாம் தலைவணங்கத் தயார். ஆனால் ஏகாதிபத்தியவாதிகளிடமோ அவர்களின் அடிவருடிகளிடமோ தலைவணங்கமாட்டோம் என்பதெல்லாம் எதன்பாற்பட்டது? இவையெல்லாம் தங்கமலை ரகசியங்கள் அல்ல. இப்பேர்ப்பட்டவரை குற்றவாளியிலும் குற்றவாளியான குற்றவாளியென ஜெனீவா தீர்ப்பு எழுதுமா?