Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மீண்டும் அதே தமிழீழம் வேண்டுமென..!

எதையோ சரி சரி என்றனர் சிலர்
அதையே பிழை பிழை என்றனர் சிலர்
அந்தப் பிழை என்பதுதான் சரி என்றனர் சிலர்
இல்லை இல்லை
அந்தச் சரி என்பதுதான் சரியென்றனர் சிலர்

 

இப்படிச் சரியும் பிழையும் வாதிட
என்ன நடக்குதென்றே புரியாது
தலை குழம்பி அலைந்தனர் ஒருசிலர்

அவரில் ஓரிருவர்க்கு மட்டும்
அறிவு குதிரைக் கொம்பாக நீட்ட

எனைப் பெற்ற தாயே
நான் பிறந்த மண்ணே
குண்டு உழுத ஊரே
எனக்கு நீ வாழ்வு தர விரும்பலையே
உன்னில் நான் வாழவும் முடியலையே
அதனாலே பிறநாடு வந்தனையே
என் குடும்பமெலாம் எடுத்தனையே
இப்போ உனக்குத்தான் விடுதலை வேணுமடி
எனைப் பெற்ற தாயே..!?

அதனாலே..,

மாவிட்டபுரம் கந்தசாமிக் கோயிலிலே
தனிநாட்டுக் கோரிக்கையை
மீண்டும் இப்போ பேசவைக்க
காலனிய வெள்ளையரின் வாரிசுகளாம்
சுந்தர லிங்கத்தாரை அழைத்து வந்து - அந்த
யாழ் மேட்டுக்குடி சாதிமான் நெற்றியிலே
நீறு பூர்த்த வரியிழுத்து
அதற்கு மேலே சந்தனப் பொட்டுமிட்ட
இந்து மதக் கோரத்தினால்..?

தமிழரால் தமிழரை ஒடுக்கிய தமிழரை  
ஏதோ தமிழ் பேசும் ஜந்துக்களாய் - அவர்
தலையை தேங்காய்போல் அடித்துடைத்து
அந்தச் சாதிபேதம் பீறியோடும் குருதியிலே
இவர் தங்கள் தமிழ்க் குறுந் தேசியத்தில்
செந் திலகம் பதிந்தெழுதி..!?   

மீண்டும் அந்த முள்ளிவாய்க்கால் முடிவுகளை
மீண்டும் அந்த இனங்களைப் பிரித்துவைக்கும்  
சிறிலங்காப் பேரினவதத்தை முறுக்கேத்தும்
தங்கள் தமிழ்க் குறுந் தேசியத்தை

மீண்டும் மீண்டும் வேண்டுமென
இனங்களின் சுய இணைவை மறுக்கும்
உணர்ச்சி வகை எழுத்துக்களை
வறட்டு வக்கிரப் போக்குகளை
பூசுவதேன் மற்றவரில்
இத்தனை அனுபவத்தை கொண்ட பின்பும்..?

-07/11/2012