Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நல்லாட்சி ஜனநாயக மேடையில் அரங்கேற்றப்படும் நாடகங்கள்

நாட்டில் நல்லாட்சி ஜனநாயம் மலர்ந்து சிறியதொரு இடைவெளி ஏற்பட்டு மக்கள் சிறிது மூச்சுவிட்டுத் தங்களை ஆசுவாசப்படுத்தத் தொடங்கு முன்னரே குடாநாட்டில் மக்கள் வன்முறைச் சூழலுக்குள் தள்ளப்பட்டு விட்டார்கள். அதற்கான காரணமாக புங்குடுதீவில் பாடசாலை மாணவி இளைஞர் குழுவினால் பாலியல் வன்முறைக்குள்ளாகிப் படுகொலை செய்யப்பட்டமை அமைந்துவிட்டது.

அச்சம்பவம் இடம்பெறும் வரையில் மாணவி வித்தியாவின் குடும்பத்தை- அதன் வாழ்வாதாரச் சிரமங்களைக் கண்டுகொள்ளாத தமிழ் மக்களின் துயர் துடைப்பதற்கென்றே அவ்வப்போது அவதாரம் எடுக்கும் இரட்சகர்கள்- மக்களின் மீட்பர்கள் தங்களுடைய அமோக வாக்களிப்பினால் தெரிவு செய்யப்பட்ட புதிய அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையை நம்பாமல் தாங்களே குற்றவாளிகளைப் பிடித்து "மரணதண்டனை வழங்க வேண்டும்"- "குற்றவானிகள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது" என்று மக்களை பொங்கி எழச் செய்துள்ளனர். இதனால் குடாநாட்டில் தீ பற்ற வைக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. பொலிசார் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தடவை யாழ்ப்பாணம் எரியூட்டப்பட்டதற்குக் காரணமானவர்கள் சிங்கள அரச படையினர் அல்ல. தமிழ் மக்களே காரணம். எனவே இலங்கையில் புதிய தாராளவாத பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சர்வதேச சமூகம் முன்னால் தமிழர்கள் பயங்கரவாதிகள் என்பது மீண்டும் நிருபணம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆட்சியும் ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக் கொண்டது. தமிழர் தலைவர்களும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பிள்ளையார் சுழிகளைப் போட்டுள்ளனர்.

அதிகார ஆசனங்களுக்கான போட்டியில் ஏற்கனவே ஆளுக்கு ஆள் நாளும் பொழுதும் ஏறுமாறாக உளறிக் கொட்டிக் கொண்டிருந்த நம்ம அரசியல் வித்தகர்கள் 'நினைவேந்தல் வாரத்தை" திசைகள் பிரிந்து நின்று கொண்டாடி விட்டு வந்த கையுடன் கொடூர சம்பவத்தால் நிலைகுலைந்து போயிருந்த குடும்பத்தின் துயரத்தைத் தங்கள் தலைமேல் சுமந்து சென்று மக்களின் உணர்ச்சிப் பொங்கலை கட்சிக்கு கட்சி பங்கிட்டுக் கொண்டார்கள்.

ஒரு தலைவர், "புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு நடந்த கொடூரமான மிருகத்தனமான சம்பவம் எமது நாட்டில்என் ஞாபகத்திற்கு எட்டிய வரையில் நடந்ததும் இல்லை. நான் கேள்விப்பட்டதும் இல்லை". எனவும்,

அடுத்த தலைவர், "வித்தியாவின் வருகை தாமதம் அடைவது பற்றி பொலிஸாரிடம் தாய், தந்தையர் கூறியதும் உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய இந்த துர்ப்பாக்கிய நிலை எழுந்திராது. அதன் பின்னரும் குற்றவாளிகளை கைது செய்வது சம்பந்தமாக தாமதத்தையும் அசட்டைத் தன்மையையும் காட்டுகின்றார்களோ பொலிசார் என்பதிலும் எமது மக்கள் கோபம் அடைந்துள்ளார்கள். எனவும்,

இன்னொரு தலைவர்... "வன்முறையில் ஈடுபட வேண்டாம் மீண்டும் ஒரு பேரழிவுக்கு இட்டுச் செல்ல யாருக்கம் இடமளிக்க வேண்டாம் என வேண்டுகிறோம்.." என்றும் தங்கள் தங்கள் நலனைப் பாதுகாக்கும் விதமாக அறிக்கை விட்டுள்ளனர்

புங்குடுதீவுக் கொடூரமும் அதன் பாரதூரமும் பாதிப்பும் தாங்கிக் கொள்ள முடியாதவை என்பதில் சந்தேகமே இல்லை. பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்திற்கு எவராலும் ஆறுதல் அளிக்கவும் முடியாது. ஆனால் இந்தக் கொடூரத்திற்கெதிராக காட்டிய உணர்சிக் குமுறல்களை இதற்கு முன்னர் வட்டுக்கோட்டை- வவுனியா- கிளிநொச்சி (மட்டக்களப்பை விட்டுவிடுவோம்) ஆகிய இடங்களில் கொலை செய்யப்பட்ட மாணவிகளுக்காக வெளிப்படுத்தியிருந்தால் இந்த கொடுமையைத் ஒருவேளை தடுத்திருக்கக் கூடும். ஆனால் அவரவர் நலன்களும் பின்புலப் பலாபலன்களும் பின் திரை அரசியல் சாணக்கியங்களும் குடாநாட்டு மக்களின் நாடிபிடிப்பும் ஒன்று சேர்ந்து புங்குடுதீவு அநியாயத்தை மட்டும் கையில் எடுக்க வேண்டி வைத்துவிட்டது.

இந்த விடயத்தில் ஜனநாயகம்- நீதி- நியாயம்- சட்டம்-ஒழுங்கு- பாதுகாப்பு பற்றிய கரிசனை உள்ளவர்கள் முன்னால் தோன்றும் கேள்விகள் பல. இதோ அவற்றில் சில உங்கள் சிந்தனைக்கு

(1) 'பல குற்றவாளிகள் தப்பினாலும் பரவாயில்லை. ஓரு நிராதிபதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது" என்ற அடிப்படையில் அமைந்துள்ள ஜனநாயக சட்டத்தையும் அதற்கான நடைமுறைகளையும் நிராகரித்து மக்கள் "மரணதண்டனை கொடு" எனவும், எதிரிக்காக வக்கீல்கள் வாதிடக்கூடாது" எனவும் கூறி வன்முறையில் ஈடுபடுவது நாகரீகமான செயலா?

(2) 'நினைவேந்தல்" நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத மக்கள் நீதி கேட்டு வீதிக்கு இறங்கியதற்கான விஞ்ஞான விளக்கம் யாது?

(3) திட்டமிட்ட வகையில் உலகம் ஊடகங்களில் பார்க்கும்படியாக வன்முறைகள் நடாத்தப்பட்டபோது அரச படைகள் கையைக் கட்டி நின்று வேடிக்கை பார்த்தது ஏன்?

உணர்வுபூர்வமாக சிந்திப்போம். அறிவார்ந்த வழியில் செயற்படுவோம்.