Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்

இலங்கையின் பாராளுமன்ற சனநாயக ஆட்சிப் பாரம்பரிய பாதையில் அரசியல் கட்சிகளின் தோற்றம் காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட படிப்பும்-சொத்தும் படைத்த ஒரு குறிப்பிட்ட தொகையினரான பணக்கார வர்க்கத்தினர் மத்தியிலிருந்தே ஏற்பட்டது. தங்கள் வாழ்க்கை வசதிகளை-சொத்துக்களை-சுகபோகங்களை பாதுகாப்பதற்கான அதிகாரத்தை அடையும் நோக்குடனேயே அன்று கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. காலனித்துவ எசமானர்களும் தங்களுக்கு எப்போதும் சேவகம் பண்ணக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே அவர்களைப் (லண்டனுக்கு அனுப்பி) படிப்பித்துப் பயிற்றுவித்தும் இருந்தனர்.

இன்றுவரை காலனித்துவ எசமானர்கள் திட்டமிட்ட பிரகாரம் அதிலிருந்து அணுவளவேனும் பிசகாமல் அவர்களின் நலன் கருதியே அன்று(1910ல்) தொடங்கிய கட்சியிலிருந்து(இலங்கைத் தேசிய காங்கிரஸ்) இன்று முளைவிட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கும் கட்சிகள் வரை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொள்கைகள்-கொடிகள்-கோசங்கள்-சின்னங்கள்-நிறங்கள்-வாதங்கள்-போக்குகள் எதுவாக இருப்பினும் அனைவரும் மக்களை பணயம் வைக்கும் அரசியலை முன்னெடுத்து ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவகம் பண்ணியபடி தங்களை வாழ வைப்பதையே குறியாகக் கொண்டு செயற்படுகின்றனர்.

 

இலங்கையர் என்ற பதாகையுடன் ஆரம்பித்த கட்சி அதனுடைய பரிணாம வளர்ச்சியில் கண்டிச் சிங்களவர் – கரையோரச் சிங்களவர் - இஸ்லாமியத் தமிழர் - இந்தியத் தமிழர் - இலங்கைத் தமிழர் - இலங்கைத் தொழிலாளர் - இந்தியத் தொழிலாளர் - மலையகத் தமிழர் - கொழும்புத் தமிழர் - கிழக்குத் தமிழர் - வடக்குத் தமிழர் – பொதுவுடைமைவாதிகள் - சிறுபான்மை மக்கள் - புரட்சிவாதிகள் - பிரிவினைவாதிகள் - தேசியவாதிகள் - தீவிரவாதிகள் - தேசபக்தர்கள் - தேசப் பாதுகாவலர்கள் என்ற கோசங்களின் ஊடாக பல கிளைக் கட்சிகளாக பிரிந்து வந்து நின்று இன்று எமது நாட்டை புதிய உலக தாராள பொருளாதார முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் முயற்சி வரை கொண்டு வந்து விட்டுள்ளது.

இந்த கடந்த கால அரசியல் கட்சிகளின் பரிணாம வளர்ச்சிப் படிகளில் இனம்-மதம்-சாதி-பிராந்தியம்-வர்க்கம் என்பன பிரதான குறியீடுகளாக-கதையாடல்களாக இன்று வரை முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. குடிமக்களாகிய நாமும் இந்தப் பாகுபாட்டுச் சிந்தனை முறைமைகளில் பல தலைமுறைகளாக மூளைச்சலவை செய்யப்பட்டு சுயநலம்-அசட்டை-அறியாமை காரணமாக இந்தக் கட்சி அரசியலுக்குப் பழக்கப்படுத்தப்பட்டு சுயநம்பிக்கை-சுயாதீனம்-சுயசிந்தனை அற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளோம். இதனாலேயே கொடுமைகள் கொள்ளைகள் கொலைகள் அநீதிகள் அடக்குமுறைகள் ஊழல்கள் ஆகியவற்றிற்கு பொறுப்பாக செயற்பட்டவர்களை நாமே முன்னின்று இன்றைய ஆட்சியில் அமர்த்தி விட்டுள்ளோம். இதனை சனநாயக ஆட்சியாக சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதனூடாக அரசாங்கத்திற்குத் தேவையான சகல ஆதரவுகளையும் அச் சமூகம் அள்ளி அள்ளி வழங்குகிறது.

கடந்த 70 ஆண்டுகளாக இலங்கையின் குடிமக்களாகிய நாம் கடந்த மூன்று தலைமுறைகள் ஊடாக இக் கட்சிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக நடக்க பயிற்றுவிக்கப் பட்டுள்ளோம். கட்சி அரசியல் ஊடாக அரசாங்கத்தை பதவியில் அமர்த்திய குடிமக்களாகிய நாம் ஒவ்வொரு தேர்தலுக்கும் பின்னர் அதே கட்சிகளால் கைவிடப்பட்டே வந்துள்ளோம். கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் காலங்காலமாக தங்கள் நலன்களை முன்னிறுத்தியே செயற்பட்டு வருகின்றன. மக்களை கட்சிகள் மந்தைகளாகவே கணித்து வருகின்றனர்.  இன்று நாமும் நமது இளந் தலைமுறையும்  இந்தக் கட்சி அரசியலுக்கு “இசைவாக்கம்” அடைந்தவர்களாகவே காணப்படுகிறோம்.

இன்றைய எமது சிந்தனை யாவும் புதிய தாராளவாத பொருளாதார திட்டங்களுக்குக் கட்டுப்பட்டதாகவும் அதன் அடிப்படையிலேயே சகல விடயங்களையும் நோக்குவதாகவும் அமைந்துள்ளது. மக்களுக்காக ஆட்சிமுறை என்றில்லாமல் ஆட்சியாளர்களுக்காக மக்கள் என்ற நடைமுறை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாதவாறு இனவாதமும் மதவாதமும் அரசியல் மொழியில் முன்னிலை வகிக்கிறது.  “தெரிந்த பிசாசா? தெரியாத பிசாசா? என்பதை தெரிவு செய்வதே நாட்டின் சனநாயக அரசியலாக முன்வைக்கப்படுகிறது. நீதித்துறை அரசியல் ஆளுமைக்கு உட்பட்டதாக செயற்பட வேண்டிய நிhப்பந்தங்களுக்கு ஆளாகியுள்ளது. நீதி கோரி மக்கள் அரசியல்வாதிகளின் காலடியில் வீழ்ந்து தவம் செய்யும் நிலைமை உருவாகியுள்ளது.

இத்தகைய சூழலில் மக்களைப் பற்றிய கரிசனம் உள்ளவர்கள், நமது நாட்டின் எதிர்காலம் பற்றிய அக்கறை கொண்டவர்கள், பொதுநல சிந்தனை கொண்டவர்கள், சகல பாகுபாட்டுச் சிந்தனைகளுக்கும் அப்பால் மனிதத்தை நேசிப்பவர்கள் அனைவரும் இணைந்து இலங்கையின் குடிமக்கள் என்ற அடிப்படையில் இன்று நாட்டின் பல பகுதிகளிலும் பலவிதமான தளங்களிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மக்களுடைய சுய சிந்தனையிலிருந்து புறப்படும் இத்தகைய செயற்பாடுகள் ஊடாகவே அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரு நியாயமான, நீதியான, சமத்துவமான சனநாயக அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்க முடியும். அதனூடாகவே அனைத்துக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை, அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய திட்டங்களையும், பொருளாதாரக் கட்டமைப்புக்களையும் நடைமுறைப்படுத்த முடியும்.

இந்த நடைமுறைகள் ஊடாகவே எமது நாட்டின் குடிமக்களின் பெயரில் அரசியல்வாதிகள் நாட்டையும் மக்களையும் கடனுக்கு அடகு வைக்கும் அரசாங்கங்களின் ஆட்சிமுறைமையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்.

நாம் பிறந்த மண்ணில் எமது வளங்களைப் பயன்படுத்தி நமது வாழ்வை வளம்படுத்தி எமது அடுத்த தலைமுறைகளை சுயமாகவும் சுயமரியாதையுடனும் சுதந்திரந்துடனும் வாழ வைக்க வேண்டுமானால் நாட்டையும் குடிமக்களையும் அந்நியர்களுக்கு அடகு வைக்கும் 70 வருடகால அரசியல் கலாச்சாரத்தை முறியடிக்க வேண்டும்.

இற்றைக்கு ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு (1920-1930) முன்னரே வாழ்ந்த எமது முன்னயை ஒரு தலைமுறையினர் எமது நாட்டில் இடம்பெற்ற கடந்தகால அனர்த்தங்களை அன்றே முன்கூட்டி உணர்ந்து இலங்கைக் குடிமக்கள் அனைவரும் சுதந்திர - சமாதான - சக வாழ்வு வேண்டி பாகுபாடுகள், பாரபட்சங்கள் அற்ற ஒரு அரசியல் கலாச்சாரத்தை நோக்கிச் செயற்பட்டனர். அன்றே அவர்கள் காலனித்துவ ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை - அதற்குத் துணை போகத் துடித்த சுதேசிய தரகு முதலாளிகளின் இன-மத-சாதி-பிராந்திய ஆளும் மேலாதிக்க போக்குகளை தங்கள் தூரநோக்குப் பார்வையில் கண்டுகொண்டதனாலேயே ஆங்கிலேயரும்  சுதேசிய தரகு முதலாளி வர்க்கமும் இணைந்து எழுதிய அரசியல் அமைப்பு நாட்டுக்கு அழிவைக் கொண்டு வரும் என எச்சரித்தனர். ஆனால் எமது முன்னோர்களின் இன-மத-சாதி-பால்-பிராந்திய ஆதிக்க மனோபாவம் அந்த இளைய தலைமுறையினரின் முயற்சிகளை தோற்கடித்து விட்டது மட்டுமல்லாமல் நாட்டை இன்று வரை அழிவுப் பாதையிலேயே இழுத்து வந்தபடி உள்ளது.

இன்று எமக்கு ஆயிரமாயிரம் பிரச்சனைகள் உண்டு. அன்றாட வாழ்வுச் சிக்கல்கள் உண்டு. கடந்த காலங்களில் குடிமக்களாகிய நாம் விட்ட தவறுகளே எமது இன்றைய இந்த அவலநிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்து இனிமேல் அந்நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. “ஊர் இரண்டு பட்டால் எதிரிக்குக் கொண்டாட்டம்”. என்பது போல்  “குடிமக்கள் பிளவு பட்டால் அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டம்” என்றாகியுள்ளது இன்றைய நாட்டு நிலைமை.

இன்றைய அரசியல் - அரசியல்வாதிகள் - அரசாங்கங்கள் - அரசியலமைப்புச் சட்டங்கள் எதுவுமே எமக்கு உதவப் போவதில்லை. அந்நியர்களும் எங்களுக்கு ஏதாவது உதவி செய்யும் நோக்கத்திலும் இல்லை. "குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பதே" ஏகாதித்தியத்தின் தந்திரம். நம்மை நாம் நம்பி செயற்படாதவரை எமக்கு விடிவும் இல்லை.

எனவே நாம் சுய நம்பிக்கை கொள்வோம். மக்களை மனிதர்களாக மதிப்போம். பாகுபாடுகளை நீக்குவோம். பகைமையைத் தவிர்ப்போம். நட்புக்களைத் தேடுவோம். நட்புக் கரங்களைப் பற்றுவோம். தோழமையை வளர்த்தெடுப்போம். மக்களால் மக்களுக்கான வகையில் ஒரு அரசியல் பாதையை நிர்மாணிப்போம். அதனடிப்படையில் ஒரு அரசியலமைப்பை வரைவோம். அதுவே இலங்கைக் குடிமக்களின் சுயாதீன - சுதந்திர - சகவாழ்வுக்கு வழி சமைக்கும்.