Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மனிதப்பண்டங்கள்........... சிறுகதை

இப்ப ஆக்களை விட வாகனங்கள் தான் கூடிப்போச்சு. சும்மா நாட்களிலேயே கார்கள் விட இடமில்லை. அதுவும் சனிக்கிழமையெண்டால் சொல்லவா வேண்டும்...? சுற்றிச் சுற்றிக் களைச்ச எனக்கு கடைசியிலே ஓர் இடம் கிடைச்சது. காரை விட்ட இடத்துக்கு முன்னால் ஒரு சின்ன மரக்கூடல், அதுக்கு கீழே இருக்க நாலைந்து வாங்குகள். அதிலேயிருந்து சில பேர் வைனும், பியரும் குடித்துக் கொண்டிருந்தார்கள். சில பேர் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.

வேலையில்லாத ஆக்கள், குடிகாரர்கள், குடும்பத்தைத் துலைத்தவர்கள், வாழ்க்கையை வெறுத்தவர்கள், நிரந்தர வீடில்லாதவர்கள், என்று பல தரப்பட்டவர்கள் இப்படிக் கூடி சேர்ந்து குடிப்பது இங்கே ஒரு வழக்கம், இவர்கள் எதிலும் சுதந்திரமானவர்கள் சந்தோசமானவர்கள் எண்டும் சொல்லலாம்.

இவர்களில் ஒருவன் எழுந்து நின்றபடி பியர் குடித்துக் கொண்டிருந்தான். மஞ்சளாய் ஊத்தையாய் ஒரு குறுந்தாடி. நீண்ட நாட்களாய் குளிக்காதவன் போலும், எரித்தால் கூட எரிய முடியாத மாதிரியான ஒரு ஜக்கற். தலையிலே பொப்மாலி போடுற மாதிரியான ஒரு தொப்பி.

இவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே... ஞாபகத்துக்கு உடனே வரவில்லை. எங்கே பார்த்தேன் எப்படிப் பார்த்தேன் என்ற நினைவுகளுடன் கடைக்குப் போய் சாமான்களை வாங்கும் போது, திடீரென அவனின் நினைவு வந்தது. சீ.. சீ... நிச்சயமாய் அவனாய் இருக்காது... அப்ப யார்.... அவன்....? சரி நின்றால் கேட்டு விடுவோம் என்ற நினைப்பில் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு திரும்பி வந்த போது அவன் அந்த இடத்திலேயே நின்று குடித்துக் கொண்டு நின்றான்.

உந்த இடத்துக்கு போய்... ஏன் வில்லண்டத்தை விலைக்கு வாங்குவான்.... என்று நினைத்துக் கொண்டு காரை ஸ்ராட் செய்தாலும், எனக்கு ஏதோ மனம் கேட்கவில்லை. சரியாய் அவனைப் போலத் தான் இருக்கிறான்.

இறங்கிப் போய் அவன் கி;ட்டே தயங்கித் தயங்கி நெருங்கி... நீ.... நீ.... றெனே தானே என்றேன். ஆம் ஆம்... நான் றெனே தான் என்று ஒரு சின்னச் சிரிப்பை உதிர்த்த படி, உன்னைத் தெரியவில்லையே என்று கிட்ட நெருங்கினான். நான் தான் உன்னுடைய பழைய பாடசாலை கறுத்தத் தோழன் என்று கையை நீட்டிய போது கைகுலுக்கி முகம் மலர்ந்தான்.

ஏறக்குறைய ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் புகைப்படக் கல்லூரிக்குப் போன போது அந்த வகுப்பிலே என்னோடு அன்பாய் ஆதரவாய் இணைந்த நல்ல நண்பன் தான் இந்த றெனே.

றெனே.... இது என்ன கோலம். இதுவென்ன புதிய வேசம், என்னால் நம்ப முடியாமல் இருக்கு. நீயா இந்த இடத்தில்....? இவர்களுடன்.......? எட்டி நின்றவன் மிக நெருக்கத்தில் வந்து என் இரு கைகளையும் பற்றியவனாய் இது ஒரு நீண்ட சரித்திரம் நண்பா, மறுக்க முடியாமல் நானாக ஏற்றுக் கொண்ட புதிய வாழ்க்கை.

அவனது இரண்டு கைகளும் என்னை மேலும் இறுக்கிக் கொண்டது. நிமிர்ந்து பார்க்க அவன் கண்களில் நீர் பனித்துக் கொள்ள அவனது முகத்தில் சோக ரேகைகள் நிழலாடியது.

சுற்றியிருந்த மற்றவர்கள் எல்லாம் எங்களையே நிமிர்ந்து பாhத்தார்கள். நான் ஒரு நல்ல கணவனாய்.... ஒரு நல்ல தந்தையாய்.... இந்தச் சமூகத்துக்கே வேண்டாதவனாய்.... ஒன்றுக்குமே அருகதையற்றவனாய்ப் போனேன்.

என்னுடைய இந்த நிலமைக்கும் இந்த வறுமைக்கும், இந்த வாழ்க்கைக்கும், என்னால் எதிர்த்து நின்று போராட முடியாமல் போய்விட்டது. என்னுடைய தகுதிக்கும் விருப்புக்கும் ஏற்ற மாதிரி ஒன்றுமே கிடைக்கவில்லை அமையவுமில்லை.

என்ன றெனே.......

நான் பல இடங்களிலே வேலை பார்த்தேன். எங்கே மாடு போலவும் அடிமைகள் போலவும் வேலை செய்ய வேண்டுமோ அங்கேயெல்லாம் என்னால் எதிர்கொள்ள முடியாமல் போனது. அன்று உன்னோடு போட்டோ துறை பற்றிப்படித்ததோடு ஊடகத்துறை சம்பந்தமாகவும் படித்து முடித்தேன் எங்கேயும் உண்மையாக வேலை செய்ய முடியாமல் கடைசியில் ஒரு தொழிற்சாலையிலும் கூட வேலை பார்த்தேன். எல்லாமே தோற்றுப் போனேன்.

எனது உள்ளக்கிடக்கைகளை எல்லோருடனும் கதைக்க முடியாது. ஆனால் உனக்கு ஓரளவாவது விளங்கலாம் என நினைத்து இதைச் சொல்லுறேன்.

என்னுடைய இந்த வாழ்க்கைக்கும் என்னுடைய இந்த நிலமைகளுக்கு இந்தச் சுரண்டல்களும், ஒடுக்கு முறைகளும் தான் காரணம். முன்னைய காலங்களை விட இந்த முதலாளித்துவச் சமுதாய அமைப்பில் மனித விடுதலைக்கான பல வாய்ப்ப்புக்கள் தோன்றிய அதே நேரத்தில், மனிதர்கள் மேல் செலுத்தப்படும் ஒடுக்கு முறைகளும், அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது. இது இன்றும்.... ஒருவருக்கும் விளங்காத விசயமாகவும் புரியாத புதிராகவும் தெரியாத ஒன்றான விசயமாக இருப்பது தான் கவலையளிக்கிறது.

இவன் என்னடா நான் ஏதோ கேட்க இவன் ஏதோ சொல்லுறான்.

இடைக்கிடை வாகனங்கள் வந்து நிற்பதும், போவதுமாகவும் இருந்தன.

அன்று ஒரு நாள் நான் வேலையிலிருந்து திடீரென நீக்கப்பட்டேன். நான் மட்டுமல்ல என்னைப் போல் வேறு சிலரும் தான். எங்களையெல்லாம் நீக்கி விட்டு, அதே வேலையை குறைந்த ஆக்களைக் கொண்டு செய்விக்கிறாங்கள். அவங்களும் தங்கள் வேலையை நிலைநிறுத்திக் கொள்வதற்காக மாடு போல முறிகிறார்கள். அடிமைகள் போல வேலை செய்ய வேண்டிக் கிடக்கு.

இந்தச் சமுதாயம் ஒரு குறிப்பிட்ட தொகுதியினரை வேலையின்றி வைத்திருப்பதன் மூலம் தான் மற்றவர்களிடமிருந்து குறைந்த கூலியில் உழைப்பைச் சுரண்ட முடியும். என்னைப் போன்ற வேலையில்லாமல் இருப்பவர்களின் வறுமையையும், இழி நிலையையும், பட்டினியைiயும் அதன் கொடுமைகளையும் காட்டி மற்றச் சக தொழிலாளர்களையும் அடிமைப்படுத்துகின்றது.

றெனே.......? நான் என்ன கேட்க நீ என்ன சொல்லுகிறாய்.... நீ கதைப்பது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை நண்பா... என்ற போது அங்கிருந்த மற்றவர்களில் ஒருவன் இவன் இப்படித்தான் கனக்கச் சொல்லுகிறான் எங்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லையெனச் சொல்ல மற்றவர்களும் கொல்லெச் சிரித்தார்கள்.

பதிலுக்கு அவனும் சிரித்தபடியே இப்படித்தான். பல பேர் ஏன் எதற்கு என்று தெரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்... இன்று இவர்கள் இந்த நிலைக்கு ஏன் வந்தார்கள் என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று கூறிய படி இன்னொரு பக்கத்திலுள்ள வாங்கில் போய் அமர்ந்து கொள்ள நானும் அவன் அருகில் போய் அமர்ந்து கொண்டேன்.

அன்று வேலையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அடுத்த மூன்றோ நாலாம் மாதம் அளவில் என் மனைவியும் என்னை விட்டுப் பிரிந்து போனாள். அவளும் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கையில் பங்கம் ஏற்பட்டு விட்டது என்றும் நான் வேலையில்லாம் இருப்பது கூட ஏதோ ஒரு அவமரியாதை என்றும் நினைக்கத் தொடங்கி விட்டாள். அவளையும் பிழை சொல்ல முடியாது தான்.

கணவன் மனைவி என்ற உறவு, குடும்பம் பிள்ளைகள் என்ற பிணைப்பு, ஏன்.... காதல் அன்பு மீதான ஆதரவுகளும் எதிர்ப்புக்களும் கூட இன்று அரசியலாய் மாறியிருக்கின்றது. இன்றைய ஒவ்வொரு தனிமனித உறவுகளையும் உணர்வுகளையும் இந்த முதலாளித்துவ அரசியல் தான் தீர்மானிக்கின்றது.

திருமண முறிவு என்பது கூட இன்றைய இந்த முதலாளித்துவ அமைப்புக்களில் மிகவும் சாதாரண ஒரு சிறு நிகழ்வாய்ப் போய்ச்சு. இன்றைய உலகமயமாக்கலும் இந்த நுகர்வுக் கலாச்சாரமும் தான் இன்றைய உறவுகளைத் தீர்மானிக்கின்றது, என்ற படி கையிலிருந்த மிச்ச பியரை உறிஞ்சிக் குடித்தான். இப்போது உனக்கெனத் தருவதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை இருக்கும் இந்த பியரை மாறிமாறி குடிப்போமா என்றான்.

இல்லை நீயே குடி பிரச்சினையில்லை என்ற போது தலையைச் சரித்து ஒரு வித்தியாசமாய் பார்த்தான்.

அடுத்த பியரை உடைக்க.... என்ன றெனே.. இப்ப நல்லா அரசியல் கதைக்கிறாய். என்று நான் சிரிக்க, தோழா நாங்கள் அசையும் ஒவ்வொரு அசைவைக் கூட இன்றைய இந்த அரசியல் தான் தீர்மானிக்கின்றது.

நண்பா நான் இந்த உண்மையைக் கதைக்க பல பேருக்கு விளங்காமலும் புரியாமலும் இருக்குத் தான், ஏன் என்றால் இந்த நுகர்வுக்கலாச்சாரம் இன்றைய மனிதனை பண்டங்களுக்கான மனிதர்களாகவும் கேளிக்கை நிறைந்தது தான் வாழ்க்கையென்ற ஒரு மாயையும் தோற்றி வைத்துள்ளது.

மனைவி தான் விட்டிட்டுப் போனாள்.. ஏன் பிள்ளைகள் கூட அப்படித் தான். விதம்விமான தொலைக்காட்சிகள் கணனிகள் ரெலிபோனுகள், ஜபோட் என்றும் அது இது என்று எத்தனையோ......... இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுக்க முடியாததால் அவர்களும் என்னை வெறுத்துப் போய் விட்டார்கள்.

இன்றைய கல்வியும் ஊடகங்களும் கூட சமூக அக்கறையும் அறிவும் இல்லாத, எந்தவொரு வாழ்க்கையையும் எதிர்கொள்ளத் தெரியாத மனிதர்களையும், அன்பு பாசம் நேசம் என்ற இந்த அர்த்தம் தெரியாத இந்தத் தலைமுறையினரிடம் வெறும் கேளிக்கைகள் தான் வாழ்க்கை என்பதை இந்த நகர்ப்புறக் கலாச்சாரம் மாற்றியிருக்கின்றது.

படிக்கும் படிப்புத் துறையிலிருந்து சட்டம், மருத்துவம், பல்கலைக்கழகம் அது இது என்று எல்லாவற்றிலும் இந்த முதலாளித்துவம் ஊடுருவி தனது அதிகார எல்லைக்குள் அடக்கி தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே எல்லாவற்றையம் நகர்த்தி வருகின்றது.

இன்று முதலாளித்தும் வளர்ச்சி என்று பேசுவது உண்மையில் வெறும் அழிப்புச் செயல் தான் நகர்புறங்களிலே தான் இந்த அநியாயங்களைச் செய்தாலும் கிராமப்புறங்களை என்ன விட்டு வைத்திருக்கின்றதா......?

வறுமையைப் போக்க வேண்டும் வளர்ச்சியைப் பெருக்க வேண்டும் என்று விவசாயத்துறையிலும் பல புரட்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எத்தனையோ முறைகளைக் கொண்டு வந்து புகுத்துகின்றது. ஆனால் வறுமை ஒழிந்ததாக இல்லை. மாறாக இந்த முதலாளித்துவக் கம்பனிகள் தாங்கள் செய்த உற்பத்திப் பொருட்களை இந்த விவசாயிகள் மேல் திணித்து இந்த விவசாயிகளை நிமிர விடாமல் வெறும் கடனாளிகளாகவே வைத்திருக்கின்றது.

இவர்களால் அறிமுகபபடுத்துகின்ற கிருமிநாசினிகளாலும், உரவகைகளாலும் தான் புதிது புதிதாய், தோன்றுகின்ற நோய்களுக்கு காரணம் என்ற இந்த கசப்பான உண்மைகள் கூட மறைக்கப்படுவது இன்று யாருக்குத் தெரியும் என்று நினைக்கிறாய்..... என்று என்னைப் பாத்துக் கேட்க நானும் ஒன்றும் பேசாது மௌனமாய் இருந்தேன்.

எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. எங்களைச் சுற்றியிருந்த வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆக்களின் நடமாற்றமும் அற்றுப் போனது. றெனேயுடன் நின்று குடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் சில பேரும் எழுந்தெழுந்து போய் புதிய புதிய போத்தல்களுடன் வந்து அமர்வதும் குடிப்பதும் சிரிப்பதுமாய் இருந்தார்கள்.

ஏதோ இனம் தெரியாத பாரம் என் மனதிலும் இதயத்திலும். எங்களையறியாமலே எத்தனை விடையங்களோடு ஏன் எதற்கு என்று தெரியாமலே ஒத்தோடிக் கொண்டிருக்கிறோம்.

றெனே நீ சொல்வதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தோ வேறு எண்ணங்களே இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் நாம் எப்படி எதிர்கொள்ள முடியும். ஜரோப்பாவில் தோன்றிய இந்த முதலாளித்துவம் உலக அளவில் பரவி இன்று எனது சொந்த நாட்டையும் ஆக்கிரமித்து தன்னுடைய அதிகார எல்லைக்குள் கட்டுப்படுத்தியும் வைத்திருக்கின்றது. எங்கடை இனப்பிரச்சினையை முன் வைத்து யார்யாரோ எல்லாம் உள்ளேயும் நுழைந்து கொண்டிருக்கின்றார்கள்.

நீ சொல்வது நல்ல விடையம் தான். உந்த இனப்பிரச்சிசினையையும் தூண்டியிருப்பதும், அதை ஊக்குவிப்பது கூட இந்த முதலாளித்துவம் தான். நீங்கள் நினைப்பது போலவோ அல்லது மற்றவர்கள் நினைப்பது போல இந்த இலங்கையரசு தனித்து தமிழர்களுக்கு மாத்திரம் எதிரான அரசாங்கம் அல்ல. அது அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுக்கும் எதிரி என்பதை நல்லா விளங்கிக் கொள்ள வேண்டும். சிங்களத் தலைவர்கள் எப்படி இனவெறியை தூண்டி தங்களை வளர்த்துக் கொள்ளுகிறார்களோ அப்படித் தான் தமிழ்த் தலைவர்களும்.

இதை இனங்கண்டு அதற்கெதிராக சகல மக்களையும் அணிதிரட்டிப் போராடுவதன் மூலம் தான் அங்கே ஒரு நல்ல நிலையை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். இதே போல் தான் இந்த ஜரோப்பிய நாடுகளிலும் முதலாளிகள் தமது சுரண்டல் பொருளாதாரத்துக்கு தேவையான போது மலிலான தொழிலாளர்களை வறுமைப்பட்ட நாடுகளிலிருந்து ஆக்களை இறக்கிப் போட்டு இண்டைய இப்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு அந்த வெளிநாட்டவர்களின் வருகையும் ஒரு காரணம் என்று சொல்லி கட்டவிழ்த்து விட்ட துவேசங்களையும் நாம் கணக்கில் கொண்டு, சாதாரண குடும்ப நிலையிலிந்து அன்பு பாசம் நேசம் என்பனவற்றைக் கற்றுக் கொள்வதிலிலுந்து இந்த ஆடம்பர வாழ்க்கையும் இந்தப் பொருளாதார கட்டமைப்பும் போலியானது உடைத்தெறிய நாம் பாடுபட வேண்டும்.

இப்ப எங்கு பார்த்தாலும் துன்பமும் வன்முறையும் மலிந்து போயிருப்பதையே பத்திரிகைகளும், ஊடகங்களும் பறைசாற்றுகின்றன. இதற்கெல்லாம் இந்தச் சுயநல வெறி தான் காரணம். தானும் வாழ்வதைப் போல் அடுத்தவனும் வாழ வேண்டும் என்ற நிலை மாற வேண்டும். அப்போது தான் எல்லாரும் சந்தோசமாய் இருக்கலாம்.

மனிசி ரெலிபோன் அடிச்சுப் பேசியது.. பேர்சில் இருந்த சில தாள் நோட்டுக்களை எடுத்து அவனது கையில் திணித்து விட்டு மீண்டும் சந்தித்துக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

-நிலாதரன்.