Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களை ஏமாற்ற - புதிதுபுதிதாக தோன்றும் வெள்ளாளியக் கட்சிகள்

பணம் - பதவி - அதிகாரத்தையே தங்கள் கட்சிக் கொள்கையாகவும், அதையே குறிக்கோளாகவும் கொண்ட தனிநபர்களை அடிப்படையாகக் கொண்டதே, இன்றைய தேர்தல் கட்சிகள். நவதாராளவாதத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்சிகள், தனிநபர்களுக்கு இது விதிவிலக்கல்ல. தேர்தல் ஜனநாயகத்தின் உள்ளடக்கமானது, பணம் - பதவி - அதிகாரமாக  சீரழிந்து விட்டது. எந்தப் புதிய கட்சியும், புதிய முகமும், அது பெண்ணாக இருந்தாலும் மக்களை ஏமாற்றும் முகமாற்றத்தை மட்டுமே தர முடியும்.

அரசியல் மாற்றத்தையோ, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுக்கும் மக்கள் திரள் பாதையையோ தரப் போவதில்லை. மக்களை ஏமாற்றும் - ஒடுக்கும் நபர்களை மாற்றுவதன் மூலம், அடுத்த தேர்தல் வரை மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதும், இலங்கையில் முதல் பெண் தலைமைத்துவக் கட்சி என்றும், இந்து சந்நியாசி வேடம் போட்ட வெள்ளாளிய சாமியாரின் தலைமையில் மீண்டும் தமிழ் மக்கள் கூட்டணி என்று எந்த வேசம் போட்டாலும், இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற -  ஒடுக்குமுறையாளர்களின் தலைமைகள் தான்.

ஆட்சியின் கடைசி நாள் வரை பழைய கட்சியில் இருந்தவர்கள், ஆட்சிக்கு அடுத்த நாள் புதிய கட்சி. எப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள். மக்களை மொட்டை அடிக்க புதிய வேசங்கள். இப்படி திடீர் திடீரென அரசியலுக்கு கொண்டு வரப்படுவதும், திடீர் திடீரென புதிய கட்சிகள் தோற்றுவிக்கும் பின்னணியில், அந்நிய சக்திகள் இருக்கின்றனர் என்பதே உண்மை. கடந்தகாலம் முழுக்க அந்நிய சக்திகளின் காலில் வீழ்;ந்து கிடந்தார்களே ஒழிய, மக்களைக் கடுகளவு கூட கண்டு கொண்டது கிடையாது. தங்கள் அதிகாரத்தில் செய்யக்கூடிய கடமைகளைக் கூட செய்யாதவர்கள்.

 

கூட்டமைப்பு மக்கள்நலன் சார்ந்த தேர்தல் கட்சியுமல்ல. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக கூட்டமைப்பு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதும் கிடையாது. அப்படி இருக்க, இன்று புதிய கட்சிகள் ஏன் உருவாக்கப்படுகின்றது?

மக்கள் தேர்தல் கட்சிகளில் நம்பிக்கை இழந்து வருவதால், மக்கள் தாமாக தமக்கான மக்கள் திரள்பாதையை தன்னியல்பாக தேர்ந்து எடுத்துவிடக் கூடாது என்பதாலேயே புதிய கட்சிகள் தோற்றுவிக்கப்படுகின்றது. இந்த நோக்கில் சென்ற தேர்தலில் புதிய முகமாக விக்கினேஸ்வரனை களமிறக்கியவர்கள், இந்த முறை புதிய கட்சிகளை இறக்கினர்.

ஆக வெள்ளாளிய வர்க்க சமூக கட்டமைப்பை தொடர்ந்து பேண, புதிய முகம் கொண்ட பழைய இனவாதம் பேசும் போலி வலதுசாரிகள் கொண்ட கட்சிகளை தேர்தலில்  இறக்குவதன் மூலம், தொடர்ந்து மக்களை எமாற்றுஏதே ஆளும் வர்க்கங்களின் நோக்கமாக இருக்கின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் வெற்றிடம் என்பது, வெளிப்படையானதாக மாறி இருக்கின்றது. அதை அரசியல்ரீதியாக அணிதிரட்டக் கூடிய இடதுசாரிய கட்சிகள், தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இது தோன்றிவிடும் என்ன அச்சம் ஆளும் வர்க்கத்திற்கு தொடர்ந்து இருக்கின்றது.

சிங்கள மக்கள் மத்தியீல் இருக்கும் இடதுசாரியம் போல், தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிவிடக் கூடாது. ஆக தமிழ் மக்களின் அதிருப்தியை அறுவடை செய்வதற்காக, தீவிர இனவாதம் பேசக் கூடிய வலதுசாரிய கட்சிகள் தோற்றுவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் மேலான இனவொடுக்குமுறையை எதிர் கொள்வதில் தேர்தல் கட்சிகளின் தோல்வி, அதனால் ஏற்படும் அதிருப்தியை தீவிர வலதுசாரிய இனவாதத்தை முன்வைப்பதன் மூலம் அணிதிரட்டுவதே, புதிய கட்சிகளின் அரசியல் உள்ளடக்கமாகும். கூட்டமைப்பு மிதவாத அணிகளை அணிதிரட்ட, மறுபுறத்தில் தீவிரவாத இனவாத அணிகளை அணிதிரட்ட புதிய கட்சிகள்.

இவை எவையும் மக்களைச் சார்ந்த கட்சிகள் அல்ல. மக்கள் சார்ந்த இயக்கம் என்பது, மக்கள் திரள் அமைப்பை அணிதிரட்டுவதாக மட்டும் தான் இருக்க முடியும். இன்று புதிய கட்சிகளை உருவாக்கி இருக்கின்ற எவரும், இவர்கள் தம் கடந்தகால அரசியலில் மக்கள் திரள் அமைப்பை உருவாக்கியவர்கள் அல்ல. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை மக்கள் திரள் அமைப்பு மூலம் அணிதிரட்டி போராட மறுக்கின்ற, வலதுசாரிய தேர்தல் கட்சிகளே இருந்தன, இருந்து வருகின்றது.

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை அணிதிரட்டக் கூடிய ஒடுக்கப்பட்டவர்களின் தலைமையில் மக்கள் அணிதிரள்வதன் மூலம் உண்மையான தீர்வையும் - விடுதலையையும் பெற முடியும். தமிழ் மக்களை ஒடுக்கும் தேர்தல் கட்சிகளில் இருந்து விலகி, மக்கள் திரள் பாதைகளை உருவாக்குவதே, காலத்தின் தேர்வாக இருக்க முடியும். மக்கள் தங்கள் பிரச்சனைக்கு  தன்னியல்பாகவும், மக்கள் திரள் பாதை முன்வைக்கும் கட்சிகளை நோக்கி அணிதிரள்வது மட்டும், தேர்தல் மூலம் மீளவும் ஏமாறாது இருப்பதற்கான ஒரேயொரு தெரிவாக இருக்க முடியும்.