Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தா-தொண்டமான் குடும்பத்தால்… தோ.தொழிலாளர்களின் நூறு கோடி கொள்ளையடிப்பு!

கண்டி ஹந்தானை தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இப்படி ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பணம் சுமார் 100 கோடி ரூபா மீளப் பெறவேண்டிய நிலையில் உள்ளது.

இதேவேளை அரச நிர்வாகங்களின் கீழுள்ள தோட்டங்களிலுள்ள பழமையான பெறுமதி மிக்க மரங்களை வெட்டி விற்று தொழிலாளர்களின் ஓய்வுகால கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும், இல்லாவிட்டால் அரச திறைசேரியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு நீதிமன்றம் ஊடாக அரசாங்கத்தைக் கோரவுள்ளதாகவும் அரசுடன்; இணக்க அரசியல் செய்யும் எடுபிடிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மலையகத்திலுள்ள 400க்கும் மேற்பட்ட தோட்டங்களில் குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடமுள்ள தோட்டங்கள் தவிரஇ கண்டி மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 தோட்டங்கள் வரை அரசினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இந்த 3 மாவட்டங்களிலும் அரசினால் நிர்வகிக்கப்பட்டுவரும் தோட்டங்களில் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட சேமலாபம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக் கொடுப்பனவுகளும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் தொழிலாளர்கள் ஓய்வுபெறும் காலத்தில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளன.

அரசின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் கீழ் இயங்கும் இந்தத் 15 தோட்டங்களும் முறையாக இயங்காதபடியாலேயே தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் உரிய முறையில் வைப்பிலிடப்படாமல் இருந்துள்ள மலையகத்தில் பெரும்பான்மை தொழிலாளர்களை சந்தாதாரர்களாகக் கொண்டுள்ள தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (தந்தை-முதல் மைந்தன் வரை) காலத்திற்கு காலம் வரும் பேரினவாத அரசுகளின் அடிவருடிகளாகவே இருந்து தங்கள் வர்க்கநலன் கொண்ட கொள்ளையடிப்பு அரசியல்களை செய்து வந்தவர்களாவர். தொண்டமான் குடும்பமும், அதன் தொழிற்சங்க சேவகர்களும் இன-மத-மொழியை மூலதனமாக்கி கருணாநிதி குடும்பம் போல் மாபெரும் அகில உலகக் கொள்ளையர்கள் ஆனவர்கள்.

தோட்டத் தொழிலாளர்களிடம் அறவிடப்பட்ட பணத்தை உரிய முறையில் வைப்பில் இடாமல், மகிந்த-தொண்டமான் குடும்பங்களே தங்கள் பொக்கற்றுக்களில் போட்டுள்ளார்கள். களவு அம்பலத்திற்கு வர, காட்டுமரங்களை களவாக வெட்டுkயில் பிடிபட்ட சாதாரண கள்ளன் போல் பதில் சொல்கின்றார் தொண்டமான் காங்கிரஸின் முத்து சிவலிங்கம்.

"இது களவில்லை, மோசடியில்லை, எங்களுக்கு மகிந்தா வியாபாரி மேல் நம்பிக்கை இருக்கு, அவர் தோட்ட மரங்களை விற்றாவது கடனை அழிப்பார்" என்பது… நிலமானியத்தில் இறுகிய பழமைவாத-பிற்போக்கின் எச்சசொச்சங்களைக் கொண்டதொரு சமூக மேற்கட்டுமானத்தின் கிழட்டுக் குரலாகத் தெரியவில்லை.

எம்நாடு முழுமையடைந்த முதலாளியத்தின் பாற்பட்டதல்லவென்பதில், அதன் அரசியல் சுரண்டலின் பாற்பட்ட கொள்ளையடிப்புக் கதைகள் எல்லாம் இப்படித்தான் இருக்கும்.