Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்…

அரசுக்கெதிரான எச்சரிகையாக காட்டமுனையும் பிரச்சாரப் போக்குகள்!

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரியான நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவரின் வரவுக்கூடாக இலங்கையில் மகிந்த ஆட்சிக்கு ஏதோ பிரளயம் ஏற்படுமாப்போல் பிரச்சார ஊடக உலகம் உவகை கொள்கின்றது.

இலங்கை விஜயத்தின் போது முன் கூட்டிய தீர்ப்புக்கள் எதனையும் எடுக்கப் போவதில்லை எனவும், பக்கச்சார்பாக செயற்படhமல் நியாயமான முறையில் நிலைமைகளைக் கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மதத்தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும், மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து அறிந்து கொள்ள விரும்புவதாகவும் சொல்லியுள்ளார். மேலும் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் நல்லிணக்கப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதனை கண்காணிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இவையெல்லாவற்றிகும் நவநீதம்பிள்ளைக்கு காதில் பூ வைப்பதற்கும், அல்வா கொடுப்பதற்கும் அரசும் பல நடவடிக்கைகளைச் செய்தும், செய்து கொண்டும் தான் உள்ளது.

சிறுபான்மை மதங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி, சாதாரண மக்களிடம் கருத்துக் கேட்க அனுமதிக்கப்படுவாரா? நீதி மந்திரியிடம் கேட்டுப்பாருங்கள் என அரசு சொல்லும்.. அவரும் அல்லா மீது ஆணையிட்டு "உண்மையைத்தான்" (கிரான்ட்பாஸ் தாக்குதலில்… எனக்கு எல்லாமே திருப்தி என்பதுபோல்) சொல்கின்றேன். உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. நான் நீதி மந்திரியல்லவா? என்னை நம்புங்கள் என்றிட சிலவேளை நவநீதம்பிள்ளையும் நம்பக்கூடும்.

இதேபோன்று மனித உரிமை மீறல்களில்.. மக்கள் தான் மனித உரிமைகளை மீறுகின்றார்கள், அரசு மனித உரிமைகளைப் பாதுகாக்கின்றது எனக் கட்டியம் கூறவா ஆட்கள் இல்லை. டக்ளஸ் - பிள்ளையான் - கருணா - கேபி - தயா மாஸ்ரர் போன்றவர்கள் இல்லாமலா போய்வீடுவார்கள்.?

புனர்வாழ்வு - புனரமைப்பில் ஏ-9 பாதைக்கு ஊடாக போய்வந்தால் (பாதையை விட்டு 100-மீற்றர் வெளியில் கூட்டிச் செல்லாமல்) சரியாகிவிடும். ஏனெனில் இப்பாதைக்கூடாக போய் வருவோருக்கு வடக்கில் கடந்த காலங்களில் கொலைவெறி கொண்டு செய்த எவ்வனர்த்தனங்களும் நடைபெறவில்லையென இட்டுகட்டியே பாதை "அபிவிருத்தி" செய்துள்ளார்கள்.

தவிரவும் நவநீதம்பிள்ளை "மாக்கிரட் தட்சர்போலொரு அயன் வுமன்" அந்த அம்மாவிடம் மகிந்தாவின் பயறு அவியாது. அவ செய்ய வந்ததை செய்துதான் போவா என் ஆருடம் கூறுபவர்களின் (திக்கற்றாருக்கு தெய்வமே துணை என்பதுபோல்) ஆற்றொணா துயர் கொண்ட எச்சரிக்கைகளையும் ஒருவாரகாலம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

எனவே இவ்வகையறாக்கள் கொண்ட அரசியல் எதிர்வினைகளுக்கு ஊடாக எதைத்தான் காணமுடிகிறது. அரசும் - அரச எதிர்ப்பான தமிழ்த்தேசியமும் சுயமான சுதேசியம் எதுவுமின்றிய, விதேசியத்தின் பாதாரவிந்தங்கள் தான் என்பதே உண்மையாகும்.

சம்பந்தன் சொல்கின்றார் உள்நாட்டில் தீர்வு இல்லாத காரணத்தினாலேயே "வெளியான அந்நியத்தை" நாட வேண்டியுள்ளது. அதனால்தானே நவநீதம்பிள்ளையின் உருவத்தில், உள்நாட்டு விடயங்களில் அந்நியம் வருகின்றது என சொல்லாமல் சொல்கின்றார். ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போது, அதை தங்களிற்கு சாதகமாக பாவித்து அமைதிகாத்த "நவகாலனிய-நவநீதம்பிள்ளைகளின்" கொலைவெறி ஒத்தோடல்களை, இவர்கள் கணக்கில் கொள்ளமாட்டார்கள்.

நவநீதம்பிள்ளையின் வரவில் அரசிற்குள்ள ஆதரவு எதிர்ப்பு எனும் நிலை எதன் பாற்பட்டு பிரதிபலிக்கின்றது. நாட்டை நவதாராளவாதம்; கொண்ட பொருளியலில் அதை அந்நியத்தின் சப்பாத்துக்காலடிகளில் கொண்டு போய் சேர்த்ததில் இந்திய-சீனத்துடன் அமெரிக்க மேற்கத்தையத்திற்கும் உள்ள பின்னிப்பிணைப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும். .

உலக வங்கிக்கடன், கடன் கொடுப்பனவிற்கு ஊடாக கொடுக்கும் நிபந்தனைகளுக்கு ஏற்பவே இலங்கையின் அரசியல் பொருளாதாரமும் வரவு-செலவுத்திட்டமும் பொருட்களின் விலைவாசிகளும் அதனோடு இணைந்த இன்னோரன்ன தொழிற்பாடல்களும் நடநதேறுகின்றன. இது தொடர வேண்டுமென்றால் அது அமெரிக்க-ஐரோப்பியத்திற்கும் அதன் எடுப்பார் கைப்பிள்ளையான ஐ.நா.விற்கும் ஆதரவுப் பச்சைக்கொடி காட்டியாக வேண்டும்.

எதிர்ப்பெனும் பொழுது 2009-ல் முள்ளிவாய்கால் படுகொலைகளின் போது மகிந்தாவின் குடும்ப அரசு சர்வதேச மனித உரிமை சட்ட விதிகளை மீறிச் செய்த படுகொலைகளும் அதோடு ஒத்த கொலைவெறி நடவடிக்கைளுமேயாகும். இதை தர்மிஸ்டன் அறிக்கை கோடிட்டு காட்டுகிறது. வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்கள் கோத்தபாயவின் உத்தரவின் பேரிலேயே படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற சரத் பொன்சேகவின் சாட்சியம் மேலும் வலுச்சேர்க்கின்றது.

புலிகளின் பயங்கரவாத ஒழிப்பை மகிந்த அரசு சர்வதேசத்தின் பல நாடுகளின் அங்கீகாரத்துடனேனேயே செய்தது. மனித உரிமை மீறல்கள் என்ற ஒன்று வந்தவுடன், சேர்ந்து செய்தவர்களில் அமெரிக்க மேற்கத்தையம் மட்டுமல்ல ஐ.நா. சபையும் இப்பழியை மகிந்த-கோத்தபாயவின் தலைகளில் போட்டுவிட்டு, தர்மிஸ்டன் அறிக்கை தயாரிப்பின் கதாநாயகர்களும் ஆனார்கள். இதுதான் இவர்கள்மேல் மகிந்தாவிற்கு வந்த கோபமும், நவநீதம்பிள்ளை வரவில் உள்ள மனக் கசப்புமாகும்..

இந்த ஆதிக்க சக்திகளுக்கிடையிலான பனிப்போர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐக்கியம்-போராட்டம் எனும் நிலைகொண்டு நடைபெறுகின்றது. ஆனால் இவர்கள் நிரந்தர எதிரிகள் ஆக மாட்டார்கள். இதை ஐக்கிய நாடுகளின் கடந்தகாலக் கூட்டங்களின் நிகழ்வுகளுக்கு ஊடாக கண்டுகொள்ள முடியும். ஆனால் இந்த ஆதிக்கத்தினரின் பனிப்போரால் சாதாரண மக்களுக்கு, அதிலும் தமிழ் மக்களுக்கு ஆவது ஒன்றுமேயில்லை.

எனவே மகிந்த அரசின் குடும்ப ஆட்சியும், மக்கள் விரோத நடவடிக்கைளும், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான இன-மத விரோத பேரினவாத நிகழ்வுகளும் தொடரின் தொடராக தொடரத்தான் போகின்றன. இவைகள் இருந்தால்தான் அமெரிக்க-ஐரோப்பியமும், ஐ.நா.வும் உயிர்வாழ முடியும். பல நவகாலனிய-நவநீதம்பிள்ளைகளும் அவதரிக்க முடியும்.

மகிந்த அரசின் அடக்குமுறையில் உள்ள எம்மக்களுக்கு நவநீதம்பிள்ளையின் வருகையை காளி அம்பாளின் (மகிந்தாவை சங்காரம் செய்ய) அகோர வருகையாக்கி காட்டும் போக்கு திக்கற்ற அரசியலின் அந்நியப் பக்தி கொண்ட வெளிப்பாடாகும்.