Sun10022022

Last updateSun, 19 Apr 2020 8am

தெரிவுக்குழு தேசிய இனப்பிரச்சினையை தீர்த்து வைக்குமா?.....

தெரிவுக்குழுவில் உள்ளோர் தலையாட்டும் தஞ்சாவூர்ப் பொம்மைகள் தான்!

இலங்கை அரசிலில் "புரையோடிப்போன புண்ணான தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கு தெரிவுக்குழு எனும் ஒளடதத்தை மருந்தாக தந்துள்ளார்" மகிந்த ராஜபக்ச.

பிரச்சினைத் தீர்வுகளுக்கு குழுக்கள் சபைகள் மன்றங்கள் அமைப்பதில் உலகில் எந்தநாடும் எம்நாட்டின் சாதனையை-பெருமையை நிலைநாட்டவிலைலை எனத் துணிந்து கூறலாம்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்ற ஒன்றை அமைத்து, அதனூடாக காதில் பூ வைக்கும் பல பொய்களை உண்மையாகக் காட்டி சுத்துமாத்துக் கொண்ட தன் குடும்ப ஏமாற்று அரசியலை, எம்மக்களுக்கும் உலகிற்கும் அறிமுகப்படுத்தியது… மகிந்த-கோத்தபாயவின் கோமாளித்தன அரசுதான் என்பதில் எவ்வித சந்தேக(?)மும் இருக்க முடியாது.

இப்பேர்ப்பட்ட கோமாளித்தன அரசியலின் இன்னொரு நடவடிக்கைதான் தெரிவுக்குழு எனும் ஒளடதம். இதில் இந்த 13-வது படும்பாடு பெரும்பாடாகும். சில சிங்கள பேரினவாதக் கோமாளிகளின் நடவடிக்கைகள் பேச்சுக்களால் "இதுவெல்லாம" ( ஈழம்-புலி-பிரிவினை) இதற்குள் இருக்கின்றதோ? என அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் சட்டவல்லுனர்கள் எல்லாம் மண்டையைப் போட்டு உடைக்கின்றார்கள்.

மகிந்தா சொல்கிறார் பொலிஸ் அதிகாரம் கொடுத்தால் தான் தன்னுடைய தொகுதிக்கு போவதற்கு தன்தொகுதியில் உள்ள அத்தனை பொலிஸ் நிலையங்களிலும் "பொமிசன்" எடுக்க வேண்டுமாம். இதில்…. எம்நாட்டின் "நிறைவேற்று அதிகாரம்" கொண்ட எம் ஜனாதிபதியின் கோமாளித்தன அரசியலை எப்படிக் கணிப்பது.

இதில் தனக்கு கூசா தூக்கும் பச்சை இனவாதிகள் சிலதுகளை உருவாக்கி, அதை நாட்டில் நடமாட விட்டுள்ளார். இதில் பொதுபல சேனாவின் இனவெறி கொண்ட படுமோசமான செயற்பாடுகளை கண்டு உள்ளுர ரசித்துக்கொண்டிருகின்றார். "இன்னுமொரு மாதத்தில் சிறுபான்மை இன மக்கள் மீது கடுந்தாக்குதல் நடாத்தப்படுமென" இவ்வமைப்பு சவால் விடுகின்றது. இதற்கு தான் நாட்டின் பொறுப்புள்ள ஜனாதிபதி என்ற நிலை தவறி, தானும் பச்சை இனவாதிதானென்ற வகையறாத் தன்மைக்குள் வகைப்படுகின்றார்.

இந்நோக்கில் எம்நாட்டின் சமகால அரசியல் நிலை... சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பச்சை பாஸிச சர்வாதிகார இனவெறி உள்ளடக்கம் கொண்டதிலான சகலதின் செயற்பாடல்களையே காணமுடிகின்றது.

இதில் இவர்களின் தெரிவுக்குழு எதைத்தான் செய்யப்போகின்றது. விசேடமாக இக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ், சமசமாஜக்கட்சி ஆகிய இரண்டும் தெரிவாகவில்லை. கடந்த காலங்களில் சமசமாஜக்கட்சியின் திஸ்ஸ விதாரண தேசிய இனப் பிரச்சினை குறித்து எத்தனை பக்கங்களிலான அறிக்கைகளை தயாரித்து சமர்ப்பித்திருப்பார். பாவம்...! இப்பேர்ப்பட்ட இவரே திட்டமிட்டு இல்லாதாக்கப்பட்டுள்ளார். இப்போ மகிந்தாவிற்கு தலையாட்டும் கொஞ்ச தலையாட்டும் தஞ்சாவூர்ப் பொம்மைகளே தெரிவாகியுள்ளன.

மகிந்தாவால் தெரிவாகியுள்ள இக் கோமாளிப் பொம்மைகள் எல்லாம் சேர்ந்து குரங்கு அப்பம் பங்கிட்ட கணக்காட்டம் "அரசியல் பங்குத் தீர்வு செய்வார்கள". இந்தக் கோமாளிக் கு.களின் அப்பப் பங்கீடுதான் எம்நாட்டின் தேசிய இனப் பிரச்சினைகான தீர்வாக கொள்ளமுடியும். இதையும் நூறுடன் கூடிய நூற்றியோராவது குழுவாகக் கொள்வோமாக.

சர்வாதிகாரிகள் எல்லாம் ஏன் இப்படியாகின்றார்கள் என்பதை டிமிட்ரோவ் கீழ்க்கண்டவாறு சொல்கின்றார்.

"பாஸிச சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்படுவதில் இன்றைய முதலாளித்துவ ஐனநாயக நாடுகளில் மேலும் மேலும் அதிகமான அளவில் முன் நடவடிக்கை எடுத்து முதலாளி வர்க்கம் பிற்போக்கான பல காரியங்களை – உழைக்கும் மக்களுடைய ஐனநாயக உரிமைகளை அழிப்பது, பாராளுமன்றத்தின் உரிமைகளைப் பொய்யாக்குவதும், வெட்டிக் குறைப்பதும், புரட்சிகரமான இயக்கத்தின் மீது அடக்குமுறையை அதிகப்படுத்துவது முதலிய நடவடிக்கைகள் பலவற்றை எடுப்பதைப் பற்றிய முக்கியத்துவத்தைப் குறைத்து, மதிப்பிடுவது அபாயகரமானதாகும்".

பாஸிசம் அதிகாரத்திற்கு வருவது என்பது சாதாரண முறையில் ஒரு முதலாளித்தவ அரசு போய் அடுத்த முதலாளித்துவ அரசு வருவதைப் போலல்ல. முதலாளி வர்க்கத்தின் வர்க்க ஆதிக்கத்தின் ஓர் அரசாங்க வடிவத்திலிருந்து, அதாவது முதலாளித்துவ ஐனநாயகத்திலிருந்து அடுத்த வடிவம் பகிரங்கமான பயங்கர வடிவத்திலான சாவாதிகார முறையாக மாறி இடம் பெறுவதாகும்.

இந்நோக்கில் இதை எம்நாட்டில் தேசிய இனங்களை இல்லாதாக்கும் நடவடிக்கைகளுக்கு ஊடான மகிந்தாவின குடும்ப சர்வாதிகார அரசியலின் மாற்றிடத்தைக் காணமுடியும்.