Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் கைதிகளின் விடுதலையும், கூட்டமைப்பு - மைத்ரி-ரணில் அரசின் வஞ்சகமும்

சமவுரிமை இயக்கம் புரட்டாதி 14 அன்று, அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும் - பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தையும் - அதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றைச் சமர்ப்பிக்கும் வண்ணம் ஊர்வலத்தையும் கொழும்பில் நடத்தியது. இடதுசாரிக் கட்சிகள் உட்பட பல கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும், சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் முதல் கைதிகளின் உறவினர்கள் வரை, பலதரப்பினர் இந்தப் போராட்டத்தில் பங்குகொண்டனர்.

அதேநேரம் நாடுதழுவிய அளவில், அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும் - பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், சுவரொட்டிகள் சமவுரிமை இயக்கத்தால் ஒட்டப்பட்டது.
கைதிகளை விடுதலை செய்யக்கோரிய ஆர்ப்பாட்டமானது இவ்வருடத்தில் (2015) இது இரண்டாவது தடவையாகும்.

தேர்தலுக்கு முன்பாக கொழும்பு, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா எனப் பல நாடுகளில் சமவுரிமை இயக்கம் போராட்டத்தை நடத்தி இருந்தது.

தமிழ் - சிங்கள மொழி பேசும் மக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தைத் முன்னெடுத்த நிலையில், தொடரவிடாது தடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசர அவசரமாக கைதிகள் விடையத்தில் தலையிட்டது. கூட்டமைப்பு கைதிகள் விடுதலை தொடர்பாக அரசுடன் பேசியதாகவும், கைதிகளின் விடுதலை புதிய அரசு பதவிக்கு வந்தவுடன் நடக்கப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டது.

இதன் மூலம் கைதிகளின் உறவினர்கள் இனி போராட வேண்டியது அவசியமில்லை என்றும் மறைமுகமாக கூறியது.

கைதிகளையும், கைதிகளின் உறவினரையும் ஏமாற்றி, சமவுரிமை இயக்கத்துடன் அவர்கள் இணைந்து முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த போராட்டங்களை முடக்கியது.

தேர்தல் காலத்தில் கைதிகள் சார்பான போராட்டம் தொடர்ந்து நடப்பதன் மூலம் தங்கள் அரசியற் போலித்தனம் அம்பலமாவதைத் தடுத்து நிறுத்தியது. கூட்டமைப்பின் திட்டத்துக்கு ஏற்றார் போல மைத்திரி -ரணில் அரசும் கைதிகள் சிலர் இருப்பதாகவும், அவர்கள் மிக விரைவில் விடுவிக்கப்படப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டது. இந்த அரசியற் சித்துவேலைகள் மூலம், ரணில் -மைத்ரி அரசின்
பின் வாசல் கூட்டாளியான கூட்டமைப்பு, மக்களை ஏமாற்றி வாக்கு வேட்டையை நடத்தியது.

இது ஒரு புறமிருக்க, இலங்கை ஆளும் வர்க்கமோ அல்லது தமிழ்- சிங்கள ஆளும் வர்க்கமோ எந்தக் காலத்திலும் இனங்களுக்கு இடையிலான நல்லுறவை விரும்பியவர்கள் அல்ல. இன முரண்பாடுகள் எப்போ முடிவுக்கு வருகின்றதோ அப்போதே தமது அரசியல் இருப்பு ஆட்டங் கண்டு விடுமென்று அவர்களுக்குத் தெரியும். இந்நிலையில், தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் இணைத்து தமது உரிமைகளுக்காப் போராடுவதை கூட்டமைப்பும், மைத்ரி-ரணில் அரசும் எவ்வாறு பார்த்துக் கொண்டு சும்மாயிருக்குமா?

இப்படியாக, ஆளும் வர்க்கத்தின் சுயநலனுக்காக அனைத்து இன மக்களும் இணைந்து அரசியற் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் தடுக்கப்பட்டது.

தேர்தல் திருவிழாவும் முடிந்து விட்டது. பதவிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு விட்டது. ஆனாலும் இன்றுவரை எந்த அரசியற் கைதியும் விடுதலை செய்யப்படவில்லை.

"நல்லாட்சி" அரசு என்று தன்னை சுய விளம்பரப்படுத்தும் மைத்திரி-ரணில் அரசும், எதிர்கட்சி தலைமைப் பதவியை சுவீகரித்த கூட்டமைப்பும் அரசியற் கைதிகளின் விடுதலையைப் பற்றி மூச்சுக்கூட விடுவதாயில்லை.

ஆனாலும், மேற்படி சமவுரிமை இயக்கத்தின் போராட்டம் புரட்டாதி 14 அன்று கொழும்பில் நடந்தேறிய பின்பு, பயங்கரவாதச் தடைச் சட்டம் நீக்கப்பட்டால் தான் அரசியற் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க முடியும் என கூட்டமைப்பின் தலைவர்களில் சிலர், ஊடகங்களுக்கு கூறி வருகின்றனர். அவர்களின் கருத்துப்படி தற்போது தாங்கள் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்க வேலை செய்வதாகவும், அதன் பின்பு கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல, மைத்ரி -ரணில் அரசானது அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்றும், தாம் பயங்கரவாதிகளையே தடுத்து வைத்திருப்பதாகவும் அறிக்கை விட்டு இருக்கின்றது. இங்கு அரசும், கூட்டமைப்பும் ஒருவரை ஒருவர் பாதுகாக்க அரசியல் செய்வது தெளிவாகவே தெரிகின்றது.

இலங்கையில் நடந்து முடிந்த கொடூர யுத்தத்தின் பின் 12000 போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களைப் போலவே அரசுக்கு எதிராக போராடியவர்களும், எந்தக் குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்டோருமே இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் தற்போது சிறையிலுள்ள அரசியற் கைதிகளை, அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக அங்கீகரிக்க மறுப்பதென்பது, இலங்கையில் இனமுரண்பாடு என்ற ஒன்று இருக்கவில்லை என்று மறுப்பதாகும்.

இதன் மூலம் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக, பயங்கரவாதிகளாக மாற்றும் சதியே நிகழ்கிறது. இதற்கு எதிராகப் போராடாமல், கூட்டமைப்பும் அரசின் ஜதிக்கேற்ப அரசியல் நடனமாடுகிறது.

கூட்டமைப்பு, அரசுடன் சேர்ந்து நடத்துகின்ற அமெரிக்க மற்றும் மேற்குலக ஏகாதிபத்திய சார்பு இணக்க அரசியல் என்பது, மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கல்ல. மாறாக அவர்களை ஏமாற்றி வாக்குப் பெறுவதும் - தம்மால் மட்டும் தான் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று கூறி, மக்களைத் தமது சொந்த விடுதலைக்கான போராட்டத்தில் இருந்து விலக்கி வைப்பதும் தான் நடைபெறுகிறது.

கூட்டமைப்பையும், மைத்திரி - ரணில் அரசையும் நம்பி ஏமாறாது மீண்டும் கிளர்ந்துள்ள அரசியற் கைதிகளின் விடுதலைக்கான போராட்டமானது, இம்முறை ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் விடுதலை
என்ற உச்சபட்ச இலக்கை அடையும் வரை தொடர வேண்டும்.