Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மூன்று புத்தகங்களின் வெளியீடு (படங்கள் இணைப்பு)

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று போராளிகளின் புத்தகங்களின் வெளியீடும், மதிப்புரையும் மே மாதம் 15ம் திகதி ரொறன்ரோவில் நடைபெற்றது. முன்னாள் போராளிகள் பொதுமக்கள் இலக்கிய ஆர்வாலர்கள் என பலதரப்பினரும் கலந்து கொண்ட இந் நிகழ்வு மாலை 2 மணிக்கு ஆரம்பமாகி 6 மணிக்கு நிறைவு பெற்றது. புத்தக வெளியீட்டுடன் கூடிய மதிப்புரையும் நடைபெற்றது. நேசன் தலமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு எல்லாளனின் நன்றியுரையுடன் முடிவுற்றது.

முதலில் சீலனின் 'வெல்வோம் அதற்காக' என்ற புத்தக வெளியீடும் மதிப்பீட்டுரையும் நடைபெற்றது. சபேசன் முதலாவதாக மதிப்பீட்டுரையை வழங்கினார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தனிநாட்டுக் கோரிக்கை தவறான ஒரு முடிவு என்றும் மக்களை அரசியல் மயப்படுத்தாத ஆயுதப் போராட்டத்தின் வெளிப்பாடுகள்தான் விடுதலை அமைப்புக்குள் எற்பட்ட உட்கட்சிப் படுகொலைகளுக்கான முக்கிய காரணமாக அமைந்தது என்றும் இதனை தனது அனுபவப் பகிர்வாக சீலன் பதிவு செய்ததை குறிப்பிட்டார். இவரைத் தொடர்ந்து பேசிய தர்சன் ஈழ விடுதலை அமைப்பிற்குள் ஆயுதம் ஏந்தியவர்கள் போராளிகளாக இருந்தார்கள் என்பதை விட அவர்கள் சிப்பாய்களாக செயற்பட்டார்கள். இதுவே கேள்வி கேட்காமல் தமது தலமை சொன்னவற்றை செயற்படுத்த முயன்று உள் கட்சிப் படுகொலை, இயக்கத் தவறுகளாக பரிணாமம் அடைய வாய்பு எற்பட்டது என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பாஸ்கரனின் கவிதை தொகுபிற்கான வெளியீடும் மதிபீட்டுரையும் நடைபெற்றது. மதிப்பீட்டுரையை ஜேம்ஸ் சிவா ஈஸ்வரமூர்த்தி நிகழ்த்தினார். அவர் தமது மதிப்பீட்டுரையில் எழுத்துக்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்திகளை காவி வருவது சிறந்ததாக அமையும். ஆனால் பாஸ்கரன் கவிதைப் புத்தகம் முழுவதும் நம்பிகையீனங்களை, தோல்விகளை விதைத்து சென்றிருக்கின்றது என்ற கருத்துரைத்தார். மேலும் ஊழிக்காற்று என்ற சொற்பதம் அதிகம் இவ் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருப்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும் காதலில் ஆரம்பித்து, புலம்பெயர் தேசத்து மக்களின் வாழ்நிலை, பத்திரிகைகளின் சமூகக் கடமையை தட்டிக் கழிக்கும் செயற்பாடுகள், மத்திய கிழக்கில் எம்மவர்கள் படும் துன்பங்கள், யுத்தம் முடிவுற்ற எமது தேசத்தின் இன்றை நிலை, ஈழத்து உழைக்கும் வர்க்கத்தின் முன்னெற்றம் அடையாத நிலமைகள் என்று பலதளத்திலும் தமது கவிதைப் புனைவுகளை மேற்கொண்டிருக்கின்றார் என்று குறிப்பிட்டார்.

இறுதியாக எல்லாளனின் "ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்பு" என்ற புத்தகத்தின் வெளியீடும் மதிபீட்டுரையும் நடைபெற்றது. புத்தகத்திற்கான மதிப்பீட்டுரையை இருவர் நிகழ்த்தினர். சரிநிகர் பத்திரிகையில் 1990 களில் முதன் முதலில் இப்பதிவு தொடராக வெளிவந்த போது பணியாற்றிய விக்னேஸ்வரன் தனது மதிப்பீட்டுரையை நிகழ்த்தினார். இவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் சிவா ஈஸ்வரமூர்த்தி தனது மதிபீட்டுரையை நிகழ்த்தினார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் 1983 கால கட்டங்களில் ஆயுத மோகங்களினால் இயக்கங்களில் இணைந்த யதார்த்த நிலமையை மிகச்சரியாக பதிவிட்டிருக்கின்றார் எல்லாளன் என்றார். மேலும் தமிழீழ விடுதலைப் போராடத்தில் ஆரம்ப காலகட்டத்திலேயே ஒரு அமைப்பிற்குள் ஊடுருவி தலைவர்களை கொலை செய்யும் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் முள்ளிவாய்காலுக்கான அத்திவாரத்தை அன்றே போட்டு விட்டார்கள் என்றார். இந்த புத்தகத்திலிருக்கும் அனுபவப் பகிர்வுகளிலிருந்து தன்னால் பகுத்தாய்வு செய்யக் கூடியதாக இருப்பது அதுவே. எல்லாளன் பதிவு செய்திருத்த விடயங்களுடன் ஜேம்ஸ் அவர்களும் சமகாலத்தில் பயணித்திருப்பதினால் இந்த புத்தகத்திலுள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை தன்னால் உறுதி செய்யக் கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் தனது இரண்டாவது பதிப்பை வெளியிடும் காலத்தில் நினைவுக்குறிப்புகளுடன் இதற்கான சமகால வரலாற்று பதிவுகளையும் சேர்த்து இணைப்பது இந்த புத்தகம் மேலும் செழுமையடைய வாய்பாக இருக்கும் என்றார்.