Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர்கள் லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு!

காணாமல் போனோருக்காக போராடியதால் காணமல் போனவர்கள் தோழர்கள் லலித், மற்றும் குகன் !!!

தோழர்கள் லலித், மற்றும் குகன் காணமல் போய் இன்று ஒரு வருடமாகி விட்டது. எத்தனையோ கடத்தல்கள், காணமல் போதல்கள் நிறைந்த எம் மண்ணில் தான், இவர்களின் கடத்தலும் காணமற் போதலும் நடந்து இருக்கின்றது. ஆனால் இந்தக் கடத்தல் வித்தியசமானது. அந்த வகையில்

*கடத்தப்பட்டு காணமற் போன தமிழ் மக்களுக்காக போராடியதால், தோழர்கள் லலித்தும் குகனும் காணாமல் போனார்கள்.

*அதுவும் சர்வதேச மனிதவுரிமை தினத்தன்று கடத்தப்பட்டு காணமற் போன தமிழ் மக்களின் விடுதலையை வலியுறுத்திப் போராடுவதற்காக முயன்ற போது, அவர்கள் இருவரும் காணமல் போனார்கள்.

*காணாமல் போன தமிழர்க்காக போராடிய சிங்களவரும் தமிழரும் சேர்ந்தே காணாமல் போய் இருக்கின்றனர்.

*ஆயிரக்கணக்கான மனித உயிர்களை கொன்று குவித்த கூட்டத்துக்கு எதிராக, அந்த குற்றங்களுக்கும் எதிராகச் சாவல் விட்டு, மக்களை அணிதிரட்டியதால் காணமல் போனார்கள்.

இநத வகையில் குகன் மற்றும் லலித்தின் காணாமற் போதல், மற்றயவற்றிலிருந்து வித்தியசமானவை. தம்மைக் கடத்தும் கடத்தல்காரர்கள் யார் என்று தெரிந்தும், தாம் போராடினால் கடத்தப்படுவோம் என்று தெரிந்து கொண்டு போராடியவர்கள் இந்த இரு தோழர்கள். தமக்காக அல்ல, மற்றவர்களுக்காக மக்களை அணிதிரட்ட போராடியதால் காணமல் போனார்கள். மனித விரோத குற்றவாளிகளுக்கு எதிராக போராடுவது, மரணதைக் கூட பரிசாகத்தரும் என்பதையும் தெரிந்து கொண்டு போரடினார்கள்.

இது தான் இலங்கை அரசியலில் வெட்டுமுகம், இதுதான்! இதற்கு யாரும் வெளியில் ஜனநாயக முகமூடியணிந்து கொண்டு வேசம் போட முடியாது!! மாறாக, பாசிசத்தை மூடிமறைக்க, பிழைப்புவாத வேசம் மட்டுமே போட முடியும்!!!

லலித் முன்கூட்டியே தான் இந்த அரசால் கடத்தப்படும் சூழலில் இருப்பதாக கூறி வந்தவர். அவர் கூறியபடியே நடந்தது. கடத்தப்பட முன்பே அவர் அரச பாசிச குண்டர்களால் தாக்கப்பட்டவர். காணாமல் போனவர்களுக்காக போராடுவதை நிறுத்தாவிட்டால், கொல்லப்படுவாய் என்று தொடர்ச்சியாக மிரட்டப்பட்டு வந்தவர். இதை அவர் பத்திரிகைகளில் வெளிப்படையாகவே கூறியவர். இப்படி தன்னை கடத்தவுள்ள குற்றவாளிகள் யார் என்பதையும், தான் யாரால் கடத்தப்படுவேன் என்பதையும் உலகறியச் சொல்லியவர் லலித்.

இதே போன்று தான் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க, தன் மரணம் யாரால் நிகழும் என்பதைப் பற்றி முன்கூட்டியே எழுதிய போது "யாரால் எனது உயிர் எடுக்கப்படும் என்பது நீண்ட பல நாட்களுக்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டதை நான் அறிவேன். எப்போது எடுக்கப்படும் என்பதுதான் எழுதப்பட்டிருக்கவில்லை. அதிகார வர்க்கத்தினால் பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் வரிசையில் நானும் இணைந்துவிட்டேன்." என்றார். இந்த வரிசையில் தான், இந்த பாதையில் லலித், குகன் காணமல் போனார்கள்!

நடந்த, நடந்து வரும் ஒடுக்குமுறைகள் பற்றிய உண்மைகளைப் புதைக்க, பலரை உயிருடன் புதைக்கின்றனர். இதுதான் நாட்டின் சட்டம், நீதி என அனைத்துமாகி விட்டது. உண்மைகளைப் புதைக்கப் புதைக்க, போராடுவதைத் தவிர, இதற்கு எதிராக வேறு எந்த மார்க்கமும் எமக்குக் கிடையாது.

இலங்கையின் சட்டம், நீதி என அனைத்தும் செத்துவிட்டதையே நாட்டின் அரசியல் நிலைமை இன்று எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. தன்னுடன் ஒத்துழைக்காத அதிகார வர்க்கத்தைக் கூட இலங்கைப் பாசிச அரசு விட்டு வைக்கவில்லை. முரண்படும் அதிகார வர்க்கம் கூட, போராடும் மக்களை சார்ந்து தங்களை காப்பாற்ற வேண்டிய அளவுக்கும், நாட்டில் பாசிசம் தலைவிரித்தாடுகின்றது.

இன்று நீதி வழங்கும் நீதிபதிகள் கூட, தமக்கான நீதி வேண்டி மக்களை சார்ந்து போராட வேண்டிய அவலநிலை. மகிந்தவின் குடும்பச் சர்வாதிகார ஆட்சி, எங்கும் இராணுவப் பாசிசமாகி வருகின்றது. தேர்தல் ஜனநாயகத்தை கொண்டு, எங்கும் எதிலும் மாபியத்தன ஆட்சியை கட்டமைத்து வருகின்றது.

மக்களை அடங்கி ஒடுங்கி வாய் பொத்தி வாழக் கோருகின்றது. இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து, மக்களை பிரித்தாளுகின்றது. இன்று உழைக்கும் மக்கள் முதல், ஆளும் வர்க்கத்தின் ஒரு பெரும் பகுதி வரை, அடிப்படை ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் கூட பாதுகாக்க முடியாது போன பாராளுமன்றம் மற்றும், நீதிமன்றங்கள் வரையான அனைத்து சமூக நிறுவனங்கள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டனர்.

இன்றுள்ள சர்வாதிகார ஆட்சியாளர்கள், இனவாத யுத்தம் மூலம் பாரிய போர்குற்றங்களைச் செய்தவர்கள், யுத்தம் மூலம் கொள்ளையிட்டு பணக்காரரானவர்கள், இன்று முழுநாட்டையும் அதே பாணியில் அடக்கி ஒடுக்கின்றனர். பொய் வாக்குறுதிகள், அரசியல் மோசடிகள், நம்ப வைத்து கழுத்தறுத்தல், ஏமாற்றுவது, விலைக்கு வாங்குவது, ஆசை காட்டுவது, மிரட்டுவது, வன்முறை எவுவது... என்று எல்லா சமூக இழிகேடான நடத்தைகளைக் கொண்டு, ஆளும் இந்த அரசு தனிமனிதன் முதல், முழுச்சமூகம் ஈறாக யாரையும் இன்று விட்டு வைக்கவில்லை. சமூகத்தை நடைப்பிணமாக்கி, கைக்கூலிகளையும் மாபியாக்களையும் கொண்ட ஆட்சி அதிகாரமாக்கி இருக்கின்றது. வீதியில் இறங்கி போராடினால் தான் வாழ்வு என்ற உண்மையை, ஆளும் வர்க்கங்கள் கூட போராடும் மக்களைச் சார்ந்து தம்மை வெளிப்படுத்துவது இன்று நிதர்சனமாகி இருக்கின்றது.

லலித், குகன் மக்களை அணி திரட்டிப் போராடிய பாதைதான், அனைவருக்குமான பொதுப் பாதையாகி இருக்கின்றது. அவர்கள் இனம், மதம் கடந்து போராடியது போன்று, அனைவரும் அணி திரண்டு போராட வேண்டும் என்பதை அவர்கள் தங்கள் போராட்டங்கள் மூலம் எமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். இன்று நாட்டில் நிலவும் பாசிச ஒடுக்குமுறையை, மக்களை அணிதிரட்டி போராடுவதைத் தவிர, வேறு வழியில் இதை ஒழித்துக்கட்ட முடியாது. இது லலித், குகன் விட்டுச் சென்ற வழிமுறை மட்டுமல்ல, சர்வதேச மக்கள் போராட்ட வரலாறுகள் கூட இதைத்தான் எமக்கு வழிகாட்டியாக விட்டுச் சென்றிருக்கின்றன.

09/12/2012