Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

மரியா மதலேனாவும் - நம்மட கோதை என்கிற ஆண்டாளும்

கத்தோலிக்க மதப் பின்னணி எனக்கு இருந்ததனால் மரிய மதலேனா பற்றி கொஞ்சம் தெரியும். 8ம் வகுப்பு தொடக்கம் 10ம் வகுப்பு   படிக்கிற காலத்தில வாணி, சரஸ்வதி, மாதவி, பாரதி, வாகதீஸ்வரி, மாலினி எண்டு, கொஞ்ச பொம்பிளைப்பிள்ளையளுக்கு பின்னால  திரியேக்க, அவயட சமய புத்தகத்தில இருந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாயன்மார் பற்றிய கதைகளை வாசிக்கும் போது,    மேலோட்டமாக அறிமுகமானவர் தான் ஆண்டாள் என்கின்ற கோதை. கொஞ்சம் வயது வந்த பின்னாடி, மரியா மதலேனாவைப் பற்றியும்  ஆண்டாளைப் பற்றியும் நான் "விபரமாக" தெரிஞ்சு கொண்டது சினிமா திரைப்படங்கள் ஊடாகத் தான்.

எனக்கு இன்றைக்கும் ஆண்டாள் என்றால் நினைவில் வருவது, பாரதியின் "காக்கை சிறகினிலே நந்தலாலா" என்று பாடியபடி திருமால் பெருமை  படத்தில் தோன்றிய கே.ஆர்.விஜயா தான்! சிவாஜி ரசிகனான நான் அநேகமாக எல்லாப் படங்களையும் அவருக்காகவே பார்த்திருக்கிறேன். ஆனால், திருமால் பெருமை  என்ற படத்தை நான் பலதடவைகள் கே.ஆர்.விஜயா நடித்த ஆண்டாளுக்காகவே பார்த்திருக்கிறேன்.

 

இப்படத்தால் ஏற்பட்ட  "பாதிப்பால்" ஆண்டாளை பற்றி தேடியிருக்கிறேன். ஆண்டாள் திருப்பாவையிலும், நாச்சியார் திருமொழியிலும் வரும் பல வரிகளை என்னால் இப்போதும் மனப்பாடமாக கூறமுடியும். எனக்குத் தெரிந்த இலக்கியம் பற்றிய உலகவரலாற்றில், பல நூறாண்டுகளுக்கு முன்பேயே, காதலால்-காமத்தால் கவிதைப் பெருக்கெடுத்து, ஆணை object தன் ஆளுமைக்கு உட்பட்ட  பொருளாக்கி - அல்லது ( கண்ணன்/கிருஸ்ணன் என்ற) கடவுளையே தன் காதல்-காம வெளிப்பாட்டுக்கான object - பொருளாக்கி பாடிய பெண்ணைப் பற்றிய பதிவை நான் வாசிக்கவில்லை.

 

அதேபோல, மரியா மதலேனா என்றால் நினைவில் வருவது Barbara Hershey தான். Barbara Hershey விவிலியத்தை புரட்டிப்போட்டு எடுக்கப்பட்ட திரைப்படமான The last temptation of Christ இல் மரிய மதலேனாவாக நடித்திருப்பார். அந்த படத்தில், சம்மனசு(தேவதை) ஒன்றினால்- ஒருவர் கண்ணிலும் படாமல்- சிலுவையில் இருந்து உயிருடன் இறக்கப்படும் இயேசு, கொல்கொத்தா மலையடிவாரத்தில் ஒரு குடிலில் மரியா மதலேனாவுடன் காமம் கழிப்பார். அதன் பின் உறவு வைத்துக் கொள்வார்கள்.   இறுதியில் மரியா மதலேனாவுடன் அவர் பிள்ளைகளை பெற்று குடும்பம் நடத்தியதாக காட்டப்படும். அப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சி  வரும். இயேசு மரியா மதலேனாவை சந்திக்க அவள் தங்கியிருக்கும் "விபச்சார விடுதிக்கு" வருவார். வந்தவர் அவளுக்கு "புத்தி சொல்லுவார்".  அப்போ, மரியா மதலேனா(Barbara Hershey) ஜேசுவைப் பார்த்துக் கேட்பார் ""you want to save my soul" என்று. அந்தக் காட்சி அழகாக - கவித்துவமாக படமாக்கியிருப்பார்கள்.

இது இப்போ நான் சொல்லுறது 30 வருடத்துக்கு முன்னாடி அது எனக்கு பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தும் காட்சியாக மட்டுமே தெரிந்தது. ஏனென்றால், என்ர வயது அப்படி. பாலியல் பற்றி "அறியாத வயது - புரியாத மனசு". ஆனாலும் அப்படத்தில் மரியா மதலேனாள் சித்தரிக்கப்பட்ட முறையும், Barbera Hershey அப்பாத்திரத்துக்கு உயிர்கொடுத்து உருகி உருகி நடித்ததுவும், மரியா மதலேனாள் என்ற விவிலிய பாத்திரம் என்னை பெரிதாக கவர்ந்தது. மரியா மதலேனாவை பற்றி தேட வைத்தது. புதிய ஏற்பாட்டில் வெறும் 13 தடவைகள் மட்டுமே சொல்லப்படும் மரியா மதலேனாள், அதில் முழுவதுமாக வியாபித்திருக்கும் ஜேசுவின் சீடர்களை விட இன்றுவரை பிரபலமான விவிலிய பாத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார்.

விவிலியத்தில், விபச்சாரி ஒருவர் ஜேசுவின் பாதங்களைக் கழுவி முத்தமிடுவார் (லூக்காஸ் 7,37-50). அந்தப் பெண்ணே, இந்த மரியா மதலேனாள் என கத்தோலிக்க திருச்சபையானது நம்புகிறது. இயேசுவின் பாதம் கழுவியதையும், ஜேசு உயிர்த்தெழுந்த பின் மரியா மதலேனாளுக்கு காட்சி கொடுத்தையும் அடிப்படையாகக் கொண்டு, மரியா மதலேனாள் இயேசுவின் காதலி, மனைவி, துணைவி, இணைவி  என பல கதைகளும், நம்பிக்கைகளும் இன்றுவரை உலவுகிறது. Da vinchi code - டன் பிறவுணின் புத்தகம் இதற்கு உதாரணம். அது போலவேதான் நான் மேலே கூறிய என்ற The last temptation of Christ என்ற திரைப்படமும். 

Da vinchi code புத்தகம் மற்றும் The last temptation திரைபடம் வெளிவந்த போது, உலகிலுள்ள கிறீஸ்தவ மத இஸ்தாபனங்கள் இவற்றிக்கு எதிராக கூக்குரலிட்டன. சில நாடுகளில் இப்புத்தகமும், திரைப்படமும் தடை செய்யபட்டது. காரணம்: "பரிசுத்த" வாளனான ஜேசு ஒரு பெண்ணுடன்- மரியா மதலேனாளுடன் பாலியல் உறவை வைத்துக் கொண்டார் என இவற்றில் சித்தரிக்கப்பட்டதே  காரணமாகும். 

நிறைவாக: 

மரியா மதலேனாவும் ஆண்டாளும், சினிமாவுக்குள்ளால் தான் எனக்கு அறிமுகமானவர்கள் என்ற ஒற்றுமைக்கு அப்பால், இருவரைப் பற்றியும்  -பெரும்பாலும் கேள்விஞான அடிப்படையில்- கூறப்படும் வரலாறுகளிலும் கூட பல ஒற்றுமைகளைக் காண முடியும்.

 - இருவரும் "கடவுளரின்" காதலிகள். தமது காதல்-காம உணர்வுகளுக்கு கடவுள்களை வடிகாலாக்கியவர்கள் 

- விபச்சார பின்னணியைக் கொண்டவர்கள் (ஆண்டாளின் விபச்சார அல்லது தேவடியார் பின்னணி உபயம் : வைரமுத்து விவாதம்)

- ஆணாதிக்க சமூக வரலாற்றில் மறைக்கப்பட முடியாத பாத்திரங்கள். 

- இருவரும் இரு மதங்களில் புனிதர்களாக கருதப்படுகின்றனர். 

- ஆண்டாளின் பாடல்கள் இன்று வழிபாட்டுக்கு உரியதாக அங்கீகாரம் பெற்றுள்ளது. மரியா மதலேனா எழுதியதாக கூறப்படும் மரியாவின் சுவிசேஷம் ஆரம்பகாலத்தில் மறுக்க-மறைக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது பொதுவான அங்கீகாரம் பெற்றதாக மாறி வருகிறது.

விசேடமாக, இப்போதும் (2018) கூட  மதம், அரசியல், மற்றும் சமூகம் சார்ந்த சர்ச்சைகளில் தாய்களாக இருக்கின்றனர். ஆணாதிக்க மதவாத - பிற்போக்கு சக்திகள் இவர்களை தமக்கானவர்கள் எனக்கூறி- இவர்கள் இருவருக்கும் புனிதப் பட்டம் கொடுத்தாலும், அந்தச்  சக்திகளை ஏதோ ஒருவிதத்தில் அவர்களின்  "புனிதங்களை"  உடைப்பவர்களாக மரியாவும் - ஆண்டாளும் திகழ்கின்றனர்.