Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

"இடது -தேசியம் "- தமிழ் தேசிய இயக்கமும் வரையறைகளும்

1.

தேசியம்-தேசியவாதம்  பற்றி எழுதும் போது "இடதுசாரி " தேசியம் என்ற பதத்தை, மார்க்சிசவாதிகள் எனத் தம்மை வரையறுப்போர் பலர் உபயோகிக்கின்றனர். அப்படி ஒன்று உள்ளது. ஆனால் இப்பதம் மார்க்சிசம் சார்ந்து உபயோகப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் மார்க்சிஸ தத்துவம் மற்றும் நடைமுறையானது, தேசியவாதத்தை, கடந்து போக வேண்டிய ஒரு சமூக வரலாற்றுப் போக்கின் நிலையாகவே பார்க்கிறது. முதலாளித்துவ பொருளாதாரத்துடன் தொடர்புள்ள தேசியவாதத்தை - முதலாளித்துவப் பொருளாதாரத்தை இல்லாதொழிப்பதுடன்,  அதையும் (தேசியவாதத்தையும்) இல்லாதொழிப்பது  / அல்லது சர்வதேசியமாக வளர்த்தெடுப்பதே   மார்க்சிச நிலைப்பாடு என்பது  மார்க்சிச ஆசிரியர்களினதும் கருத்து. குறிப்பாக லெனின், - லெனின் தனது "தேசியப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்" என்ற தொகுப்பின் "கலாச்சார அடிப்படையிலான தேசங்களில் தன்னாட்சி " தலையங்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்.

//தேசியவாதம் எவ்வளவுதான் "நியாயமான ", "பரிசுத்தமான ", நயமான, நாகரிக வகைப்பட்டதாக இருப்பினும், அதனுடன் மார்க்சியத்தை இணைக்கமுடையதாக்க முடியாது. எல்லாவகை தேசிய வாதத்துக்கும்  பதிலாக  மார்க்சியம் சர்வதேசியவாதத்தை முன்வைக்கிறது; எல்லா தேசங்களும் உயர்நிலை ஒற்றுமையில் ஒன்றிணைவதை முன்வைக்கின்றது.// - லெனின், தேசியப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள் .  / V.I . Lenin, Critical remarks on  the National Question : “CULTURAL-NATIONAL AUTONOMY” .  

இக்கட்டுரையில் கட்டுரையில் லெனின்  முதலாளித்துவ கட்டமைப்பின் தேசியவாதத்துக்குப் பதிலாக, தேசங்களும், தேசிய இனங்களும், சிறுபான்மை தேசிய இனங்களும் சர்வதேசியத்தை அடிப்படையாக்க கொண்ட     பாட்டாளி வர்க்க ஆட்சிக்கட்டமைபுக்கு உட்பட்ட "உயர்நிலை ஒற்றுமையில் ஒன்றிணைவதை" வலியுறுத்துகிறார். 

 

2.

அதேவேளை, ஆரம்பத்தில் கூறியபடி முற்போக்கு தேசியம் என்று ஒன்று உள்ளது. அதுவும் இடது-தேசியவாதம் என்று அழைக்கப்பட்டது. பிரெஞ்சு புரட்சிக் காலத்தில் இது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு அரசியல் பதமாகும். அவ் விவாதங்களின் அடிப்படையில் இப் பதமானது  ஒரு மொழி, ஒரு இன மக்களின் நிலம் சார்ந்த தேசியத்தை- தேசியவாதத்தை  குறிப்பிடுவது/வரையறுப்பது  அல்ல. இந்த வகையில் "வழமையாக"  சில நாடுகளின் தேசியவிடுதலைப் போராட்டங்கள் - அந்நாடுகளில் போராட்டங்களைத்   தலைமைதாங்கிய தேசியவாத சக்திகளை "இடது-தேசியவாதம் " என்ற பதத்திற்குள் வரையறுப்பதுண்டு.

 

உதாரணங்கள்:

 A. பிடல் தலைமையிலான  கியூபா புரட்சியின் நடவடிக்கை. கியூப புரட்சி என்று சொல்லப்படும் வரலாற்று நிகழ்வு  எந்த வகை  இனமோ அல்லது மொழியே  சார்ந்ததல்ல. மாறாக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக- அமெரிக்க அடிவருடிகளான தரகு வர்க்கத்துக்கு எதிராகப்  போராடி, கியூபா என்ற பல்தேசிய  நாட்டை  மீட்டல் அல்லது கியூப அரச அதிகாரத்தைக் கைப்பற்றல்  நடந்தது.

  

B . இந்திய விடுதலையும் அப்படிதான். இந்திய விடுதலைப்போராட்டத்தில் மஹாத்மா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஒட்டுமொத்த நாட்டை மீட்கவே போராடியது. ஒரு இனம் சார்ந்து- அல்லது ஒரு மொழிசார்ந்து அல்ல.

 

C. அதேபோல நோர்வே சுவீடனுடனான யூனியனிலிருந்து வெளியேறியது. இதுவும் ஒரு  முற்போக்கான தேசியவாத செயற்பாடாக இருந்தாலும், அதேவேளை  முதலாளித்துவத்தை கடந்து போவதற்கான முறையில் தேசியவாதத்தைக் கையாண்ட செயற்பாடல்ல. ( சில மேதாவிகள் நோர்வே சுவீடனுடனான ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைப்பற்றி லெனினின் 20 வரிகளை வாசித்துவிட்டு, நோர்வேயின் வெளியேற்றம் புரட்சிகரமானது என்று நிறுவ முனைந்து வருகின்றனர். இந்த "நிறுவல்" தமது இனவாத அரசியலை மார்க்சிசச்  சிவப்புச்சாக்குப் போட்டு மூடுவதற்காகவே. )

 

இந்த மூன்று உதாரணங்களும், வரலாற்றில் மார்க்சிச கருத்தியல்/அரசியல்  சார்ந்த பார்வையினாலான அடிப்படையில் தேசியவாதத்தைக் கையாண்ட உதாரணங்கள் அல்ல.  இருந்தபோதும்; பிற்காலத்தில் இந்தியா, கியூபா போன்ற நாடுகள் சோவியத்துடன் நெருக்கமாக இருந்தன. நேரு தலைமையில் இந்தியா ஒருவகை முற்போக்கு இந்தியத் தேசியத்தை கையாண்டது. காஸ்ட்ரோ புரட்சிக்கு பின் தன்னையும் - கியூப அரசையும்   மார்க்சிஸ்ட் ஆக அறிவித்துக் கொண்டார்.

நோர்வே சுவிடனுடனான யுனியனிலிருந்து வெளியேறிய போது உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய சக்திகளால் ஆரம்பிக்கப்பட்ட   நோர்வே சமுக ஜனநாயக கட்சியானது  1923 இல் கோமின்டெர்ன்( Comintern)இல் இருந்து வெளியேறியது.

ஆனாலும்  அது (நோர்வே சமூக ஜனநாயக கட்சி) இரண்டாம் உலகப் போருக்கு முன்னான காலம் வரை சோவியத்துடன் நல்லுறவைப் பேணியது. அத்துடன் 2.ஆம் உலக போர் முடிவுக்கு வந்த பின், ஒப்பீட்டளவில் இன்றுவரை நின்று நிலைக்கும் "சோஷலிஸ" பொருளாதரக் கட்டமைப்பை நோர்வேயில் உருவாக்கியது. இக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முன்னுதாரணங்களில் மிக முக்கியமானது சோவியத் சமூகக் கட்டமைப்பே என்பது வரலாறு.

 

மேற்கூறியபடி  இவையெல்லாம் மார்க்சிஸ அடிப்படையிலானவை அல்ல (கியூபா இப்போதும்-  மற்றும் நோர்வே அரசை  சமூக ஜனநாயக கட்சிகள்  சோஷலிச ஆட்சி வடிவம் என  என்று பிரகடனம் செய்தன. அது வேறு ஒரு விவாதம்)  அதேவேளை, சோசலிசத்தை மறுக்கும் தேசியவாதமாகவும் இருக்கவில்லை. அதனாலேயே progressive nationalism/முற்போக்கு தேசியவாதம் என இவற்றை குறிப்பிடுகிறார்கள். சில சந்தர்பங்களில் இடது-தேசியவாதம் என்றும் குறிப்பிடுவார்.

தேசியவாதமென்ற  ஒன்று மார்க்சிச அடிப்படையில் இருக்குமானால்-(இடதுசாரிய தேசியவாதம்/ மார்க்சிச தேசியவாதம் ) மார்க்சிஸமே முன்னுக்குப் பின் முரணானதாக கருதப்படும். 

அதேவேளை; மாவோ சோசலிசத்தை உருவாக்க தேசியவாதத்தை கையாண்டார். அவர் , சீன தேசத்தை மீட்பதை இறுதிக் குறிக்கோளாக கொள்ளவில்லை. வர்க்க விடுதலையை / உழைக்கும் மக்கள் விடுதலையையே அடிப்படையாகக் கொண்டு ஏகாதிபத்தியதுக்கு எதிராக போராடினர். இந்திய காந்தி போல இந்தியாவை விடுவிப்பதை மட்டும் குறிக்கோளாக அவர் கொள்ளவில்லை. 

இதுதான், மார்க்சிசம் தேசியவாதத்தைக் கையாள்வதற்கும், முதலாளித்துவவாதிகள் progressive nationalism/முற்போக்கு தேசியவாதிகள் தேசியவாதத்தை கையாள்வதற்குமான வித்தியாசம்.

 

3.

இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் எனத் தம்மை காட்டிக் கொண்ட தமிழ் ஆயுத போராட்ட இயக்கங்கள்- உண்மையிலே மார்க்சிச இயக்கங்கள் அல்ல. அவை தேசிய இயக்கங்களாகவே இருந்தன.

உலகளவில் காலனித்துவ விடுதலைபெறப் போராடிய பெரும்பான்மையான இயக்கங்கள், சோசலிச அல்லது கொம்முனிச இயக்கங்களாகவே தம்மைக் காட்டிக் கொண்டன. அன்றிருந்த உலகப் பொருளாதார- அரசியற் -புவிசார் சூழலில் அதுவே சரியாகப்பட்டது. சோவியத் மற்றும் அது சார்பான நாடுகளே காலனித்துவத்துக்கு எதிரான தேசிய விடுதலைப்போராட்டங்களுக்கு உதவின. அந்நிலைப்பாடே இலங்கையிலும் தமிழ் தேசியவாத இயக்கங்கள் தம்மை இடதுகளாக காட்டிக்கொள்ள வழிவகுத்தது. புலிகள் கூட தமது இலக்கு சோஷலிஸத் தமிழீழம் என்றார்கள் என்பது நினைவிருக்கலாம்.

அத்துடன் சிலோன் கம்யூனிஸட் கட்சி போன்றவற்றில் இருந்து பிரிந்த இடதுசாரியச் சிந்தனை கொண்டோரும் கூட தேசிய இயக்கங்களையே உருவாக்கினர். தமிழ் ஈழத்தை உருவாக்க மார்க்சிசம் கதைத்தார்கள். வர்க்க விடுதலைக்காக அவர்கள் தேசியவாதத்தைக் கையாளவில்லை. தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டே மார்க்சிஸத்தை உச்சாடனம் செய்தார்கள். தமது இயக்கத்துக்குள் "கட்சி" வைத்திருந்த இயக்கங்கள் எனக் கூறப்படுபவை கூட " தமிழ் ஈழ கம்யூனிஸ்ட் கட்சி"கள் தான் வைத்திருந்தனர். பாட்டாளி வர்க்க கட்சிகளை அல்ல. பாட்டாளி வர்க்க கட்சிகள் அவ் இயக்கங்களுக்கும் இருந்திருக்குமானால், அவை; பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் "கட்சிகளாக " இருந்திருக்க முடியாது. 

லெனினின் நடைமுறை - மற்றும் புரட்சி பற்றிய சிந்தனைகளை உண்மையிலேயே தேசியப்பிரச்சனை சார்ந்து உபயோகிக்க மேற்படி இயக்கங்கள் விரும்பி இருந்தால்- இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் என்ற வரையறைக்குள் பல நூறாண்டுகள் இருந்து வந்த (தமிழ் பேசும்)உழைக்கும் வர்க்கத்தை உடைத்து - தமிழ் முதலாலாளியக் கட்சிகள் முஸ்லீம் மதம் சார்ந்த மக்களை அந்நியராக்கியபோது, அதற்கு எதிராகப் போராடி இருப்பார்கள்.

ஆனால் நடந்தது என்னவென்றால்,(வடக்கு -கிழக்கு) "பூர்வீகத் தமிழரான" தங்களை /தங்கள் "மக்களை " தனித்தேசிய இனம் என்று வரையறுத்து - முசுலீம் மக்களை தமிழ்பேசும் மக்கள் என்ற கூட்டுக்குள்(Union) இருந்து வெளியேற வைத்தார்கள். பின்பு முசுலீம் மக்களின் பிற்போக்குத் தலைமைகள்/தரகு முதலாளியக் கும்பல்கள்  தம்மை ஒரு தனித்தேசிய இனமாக வரையறுத்துக் கொண்டார்கள்.  இலங்கையின் பவுத்த சிங்கள இனவாத- முதலாளிய அரசுகளுக்கு இப்பிரிவினை பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலானது. வர்க்கரீதியிலும், இன அடிப்படையிலும் தமிழ் பேசும் மக்கள் பிளவுபட்டதென்பது  பவுத்த சிங்கள இனவாத- முதலாளியத்துக்கும், பிரித்தாளும் அதன் அரசியற் தந்திரோபாயத்துக்கும்   பெரும்  வரப்பிரசாதமாகியது. 

தற்போது சில "தமிழ் மார்சிஸ்ட்டுகள் " தாமே தான் முசுலீம் மக்களை முதன் முதலில் தனித்தேசிய இனமாக வரையறுத்தது என்று பீத்துகின்றனர். உரிமை கோருகின்றனர். ("தமிழ் மார்க்சிஸ்ட்டுகள்" என்று போலி மார்க்சிஸ்டுகள், மற்றும் தமிழினவாதத்தை மார்க்சிசச் செஞ்சாக்கு  போட்டு மூடுபவர்களையே குறிப்பிடுகிறேன். மார்க்சிஸக் கட்சிகளில் இயங்கும் தமிழ்மொழி பேசும் தோழர்களை அல்ல ) இவர்கள் புலிகள் முசுலீம் மக்கள் மீது நடத்திய தாக்குதல் பற்றி முதலை கண்ணீர் இன்றும் வடிக்கின்றனர். ஆனால், உண்மையிலேயே புலிகளின் செயற்பாடுகளுக்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்களைப் பிரிந்து - உழைக்கும் தமிழ் பேசும் மக்களை தமக்குள் தாமே அடிபட வைத்த பெருமை மேற்படி "தமிழ் மார்க்சிஸ்ட் " களையே சாரும். இந்நிலையே மலையக உழைக்கும் தமிழ் மக்களுக்கும் நடந்தது. 

கலாச்சார-தேசத் தன்னாட்சி பற்றி லெனின் விவாதிக்கும் பொது முன்வைக்கும் கருத்து மேற்கூறிய தமிழ் தேசியவாதத்தின் வரலாற்றுக்கும்  வெகு இலகுவாகப் பொருந்திப்போகிறது. 

//// "நியாயமான முறையில்" வரம்பிடப்பட்ட குறிப்பிட்ட அரங்குக்குள் தேசியவாதத்தை உறுதி பெறச் செய்தல், தேசியவாதத்தை "அரசியல் சட்ட வழிப்பட்டதாக " ஆக்குதல், எல்லா தேசிய இனங்களும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிப் பிரிந்திருத்தலை விசேஷ அரசு நிறுவனத்தின் மூலம் உறுதியாக்கி கெட்டி பெறச் செய்தல் ஆகிய இவை தான் கலாச்சார-தேசத் தன்னாட்சியின் சித்தாந்த அடிப்படையும் உள்ளடக்கமும் ஆகும். 

இந்த கருத்து முழுக்க முழுக்க பூர்ஷ்வா தன்மை வாய்ந்தது, முழுக்க முழுக்கத் தவறானது. எவ்விதத்திலும் தேசியவாதம் நிலைநாட்டப்படுதலைப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியாது, இதற்கு மாறாக தேசிய இன வேறுபாடுகளைக் குறையச் செய்து தேசிய இனப் பிரிவினைச் சுவர்களை அகற்ற உதவுகிறவை யாவற்றையும் , தேசிய இனங்களுக்கு இடையிலான பந்தங்களை மேலும் மேலும் நெருக்கம் பெறச் செய்கிறவை அல்லது தேசங்களை மேலும் மேலும் இணைய வைப்பவை யாவற்றையும் அது ஆதரிக்கிறது. இவ்வாறன்றி வேறு விதமாகச் செயல்படுதல் , பிற்போக்கான தேசியவாத அற்பர்களின் பக்கம் சென்று விடுவதையே குறிக்கும் . /// V.I.லெனின்,தேசியப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள். / VI . Lenin, Critical remarks on  the National Question : “CULTURAL-NATIONAL AUTONOMY” . 

 

4. 

இந்நிலையில் :

//தேசியஇனம் என்கிற கோட்பாடு பூர்ஷுவா சமூகத்தில் வரலாற்று வழியில் தவிர்க்க முடியாதது. இந்த சமூகத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மார்க்சிசமானது. தேசிய இன இயக்கங்கள் வரலாற்று வழியில் நியாயமுடையவை என்பதை முழு அளவுக்கு அங்கீகரிக்கின்றது. ஆனால்  இந்த அங்கீகாரம் தேசியவாதத்துக்கான ஆதரவு விளக்கமாக ஆகி விடாதிருக்கும் பொருட்டு, இந்த இயக்கங்களில் முற்போக்கான அம்சமாக /(அம்சங்களாக ) இருப்பவைக்கு  மட்டுமானதாக இந்த அங்கீகாரம் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்- அப்போதுதான் பாட்டாளி  வர்க்க உணர்வு பூர்ஷுவா சிந்தாந்தத்தால் மழுங்கடிக்கப்படுவதற்கு இந்த அங்கீகாரம் இட்டுச் செல்லாதிருக்கும். // என்கின்ற லெனினிய கூற்றிக்கேற்ப தமிழ் முற்போக்கு தேசிய சக்திகளின் வளர்ச்சியென்பது தவிர்க்கப்பட முடியாததொன்று. அவ் வளர்ச்சி தவறுகள் களைந்து- குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் பண்புகளைக் கொண்டதாகவாகுதல் இருக்கவேண்டும். இதன் அர்த்தம் பன்மைத்துவம் Pluralism - ஜனநாயகம் Democracy - சமத்துவம் Equality போன்ற குறைத்த பட்ச உள்ளடக்கத்தையாவது ஒரு முற்போக்குத் தமிழ் தேசியம் கொண்டிருக்கவேண்டும். பெண்விடுதலைக்கான செயற்பாடு, இனவாத எதிர்ப்பு, பிரதேசவாத எதிர்ப்பு , அரசியற் பன்மைத்துவத்தை ஏற்றுகொள்ளல்- அதை வளர்த்தல், சர்வதேசியத்துவம் போன்ற நடைமுறைகளை கொண்டிருக்கவேண்டும். 

இவ்வாறான முற்போக்கு இயக்கத்தை வளர்க்க உண்மையான மார்க்சிச சக்திகள் பங்களிக்க வேண்டும். இதுவே இன்றுள்ள இலங்கையில், சோசலிசப் புரட்சிக்கான முன்னெடுத்தலுக்கு வழிவகுக்கும் நடைமுறை வேலைகளில் மிகமுக்கியமானவற்றுள் ஒன்றாகும். 

 

நூல்கள் :

* V.I.லெனின்,தேசியப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள். / V.I . Lenin, Critical remarks on  the National Question : “CULTURAL-NATIONAL AUTONOMY” .  Lenin Collected Works, Progress Publishers, 1972, Moscow, Volume 20, pages 17-51. 

* V.I .Lenin, Theses on the National Question ,  Lenin Collected Works, Progress Publishers, 1977, Moscow, Volume 19, pages 243-251. 

* Stephen Maxwell : The case for left wing nationalism. Luath Press Ltd. 2013