Fri09222023

Last updateSun, 19 Apr 2020 8am

பிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்...! பாகம் 01

ஆட்டம்-3

புத்தகப்பூச்சிகளின் புரட்சி (புதிய துவக்கம்)

ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா அடுத்தபடியாக ஈரானையும், லிபியாவையும் ஆக்கிரமிக்கத் துடித்தது. அணுவாயுதச் சாக்குப் போக்குகளைச் சொல்லி, முன்போல தன்பாட்டுக்கு உடனே ஆக்கிரமிக்கும் சூழல் அமெரிக்காவுக்கு இப்பொழுது அவ்வளவாக வாய்த்திருக்கவில்லை. வட ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா மற்றும் மத்திய ஆசியாவுக்குள் அமைந்திருக்கும் அரபு நாடுகளுக்குள், முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் மேவி அதன் சமூக அடிப்படை முரண்பாடுகள் கொதிநிலையாக மேலெழுந்திருந்தன. வெளியே மேற்குநாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளின் தடித்த மௌனச்சுவர்கள் இப்பொழுது  வெளியே தெரியும்படியாயும் இருந்தது. ஐ.நா சபை முன்னைய ஆண்டுகளையும் விட முக்கிய ஆண்டாக 2008ஐ அறிவித்தும் இருந்தது. சர்வதேச சுகாதார தூய்மை ஆண்டாகவும், சர்வதேசமொழிகளின் ஆண்டாகவும், சர்வதேச புவி ஆண்டாகவும், சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாகவும் பிரகடனங்களை அடிக்கிக்கொண்டே போனது. இந்த ஆண்டில் உலகில் வாழும் 260 கோடி மக்களுக்கு தமது மனிதக்கழிவுகளை அகற்றும் கழிவிட வசதிகள் கிடைத்திருக்கவில்லை. இது உலக மொத்த சனத்தொகையில் 41 சதவீதமாக இருந்தது. இதனால் உலகில் 20 கோடி தொன் மனிதக்கழிவுகள் திறந்தவெளிகளிலும், கடற்கரைகளிலும் உற்பத்தியாகிக் கொண்டிருந்தது.

ஐ.நா இதைக் காரணமாகக் காட்டி கடல் சட்டங்களையும், கடலோரத்திட்டங்களையும் வறிய நாடுகளில் ஏவிவிட்டதே ஒழிய, மக்களுக்கான அடிப்படைவசதிகளை ஊக்கமாக முன்னெடுக்கவில்லை. இந்த அழுத்தங்களால் இந்திய, இலங்கைக்கடலில் படுகொலை களால் பிணங்கள் மிதந்ததே தவிர, கக்கூசுகள் கட்டப்படவில்லை. பன்முகக் கலாச்சாரம், பன்முகத்தன்மைக்கு இணங்க ஐ.நாவின் அதிகார மொழிகளாக 06 மொழிகள் இருந்தன. அரபு,சீனம்,ஆங்கிலம்,பிரஞ்சு,ரசியன், ஸ்பெயின் போன்றவையாக அவை இருப்பினும், ஜேர்மன் மொழி (டொச்ஸ்) இதில் அடங்கியிருக்கவில்லை.

இருப்பினும் உலக வணிக மேலாதிக்கத்தில் இந்தியும், போத்துக்கீசும் இணைந்து 08 மொழிகள் ஆதிக்கத்துக்கு வந்திருந்தன. 6000 மொழி பேசும் உலகமக்களில் 417 மொழிகள் அழியும் நிலைக்கு வந்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையி லான முரண்பாடுகளின் மௌனச்சுவர்களை ஈரோவால் சுலபமாக இடித்துவிடலாம் என்பது பகல் கனவாகப்போனது. பேர்லின் கற்சுவர்கள் உடைந்த ஐக்கிய ஜேர்மனியின் முரண்பாட்டுக்கான மௌனச்சுவர், ஈரோவால் இடிக்கமுடியாத பலமானதாகவே இருந்தது. அந்தப் பலம் 2008 ஆம் ஆண்டுக்கு முன்னரே 'கூட்டாளிகளின் தீயகனவு' என்று ஜேர்மன் வெளிப்படுத்தியும் இருந்தது. ஜேர்மனுக்கும் - பிரான்சுக்கும் இடையேயான கடுப்பான முரண்பாடுகளும் அதற்கான 'கோலி' விளையாட்டுக்களும் ஈரான், லிபியா மீது அமெரிக்கா எடுத்த எடுப்பில் ஆக்கிரமிப்பதை நெருக்கடிக்குள் உள்ளாக்கியது. உலகத்தில் ஏறத்தாழ 15சதவீத மக்களைக் கொண்ட இந்தியாவின் கச்சாய் எண்ணைத் தேவையின் 12 சதவீதத்தை ஈரான் வழங்கிவந்தது. இந்தநிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரான் மீது கடும் பொருளாதார அழுத்தத்தை ஐ.நா மூலம் அமெரிக்கா கொடுத்து வந்தது. கடந்த ஆண்டு ஐ.நா மூலம் 40 க்கும் அதிகமான பொருளாதார வர்த்தக நிறுவனங்கள் மீது (வங்கிகள் உட்பட) அமெரிக்கா தடைகளை விதித்தது.

1974 இல் ஐ.நா மன்றத்தால் உருவாக்கப்பட்ட 'ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியம்' ஈரானுடனான எண்ணை வர்த்தகத் தொடர்புகளை கவனித்து வந்தது. இந்த ஒன்றியத்தில் ஈரான், இந்தியா உட்பட பிற தெற்காசிய நாடுகளும் மற்றும் மியான்மாரும் உறுப்பினர்களாக இருந்தனர். ஈரானின் கச்சாய் எண்ணை ஏற்றுமதியை ஐ.நா மூலம் அமெரிக்கா கட்டுப்படுத்தும் போக்கு இன்னும் சரியாக வெற்றியளிக்கவில்லை. ஆயினும் இவ் ஏற்றுமதி இறக்குமதியில் அமெரிக்க டொலரைப் பயன்படுத்துவதை 2008இல் இருந்தாப்போல் சொல்லிக் கொள்ளாமல் தடைசெய்தது. அதன் வர்த்தகம் ஈரோவுக்கு மாறிய பின்னரும்,ஈரானின் இந்த வர்த்தகம் ஈரோவால் கூட சீர்செய்யக் கூடாது என அமெரிக்கா குழப்பத் தொடங்கியது. இந்த ஒன்றியத்துக்கு உதவிவரும் ஜேர்மனியிலுள்ள ஹாம்பேர்க் நகரில் செயற்பட்டு வரும் ஈரான் - ஐரோப்பிய வர்த்தக வங்கியான 'ஏ.ஜி (நு.ஐ.ர்) ' என்ற ஈரானுக்குச் சொந்தமான வங்கி மீது பொருளாதாரத் தடையைக் கொண்டுவந்தது. எப்படியாவது குளறுபடிகளைச் செய்து இந்த ஆசிய கணக்குத் தீர்க்கும் ஒன்றியத்தை அடியோடு கலைத்துவிட வேண்டும் என்பதோடு, லேசாக பிரான்சுக்காக ஜேர்மனுக்கு ஒரு கனவுக் காலுதை கொடுப்பதே இதன் ஒருபகுதி ஆட்டமுமாகும்.

ஈரானின் கச்சாய் எண்ணைத் தொழிலில் எந்த ஒரு நாடும் முதலிடக் கூடாது என்றும், ஈரானுக்கு எந்த ஒரு நாடும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலை ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும், ஈரானின் கப்பல்கள் அணு ஆராய்;சிக்குத் தேவையான பொருட்களை ஏற்றிவருவது சந்தேகிக்கப்பட்டால், அக்கப்பலை சர்வதேச கடல் எல்லைக்குள்ளேயே நிறுத்தி சோதனை செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு உண்டென்றும், அமெரிக்கா ஈரான் மீதான தனது ஆக்கிரமிப்பு அதிகாரத்தை வெளிப்படுத்தியது. ஏற்கனவே ஈரான் - பாக்கிஸ்தான் - இந்தியாவுக்கு இடையே  பேசிமுடிக்கப்பட்ட குழாய்வழியாக எரிவாயுவைக் கொண்டுவரும் திட்டத்தை இந்தியா கிடப்பில் போட்டுவிடவேண்டும் என்றும் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது. ஈரானுக்கு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வது, மற்றும் கச்சாய் எண்ணையை ஈரானிலிருந்து இறக்குமதி செய்வதைத் தவிர்த்து, அதை சவுதியில் இருந்து இறக்குமதி செய்யும்படி இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தியும் வருகிறது.

உலக எண்ணை உற்பத்தியில் கிட்டத்தட்ட 3.34 சதவீதத்தை லிபியாவே உற்பத்தி செய்கிறது. இந்த லிபிய எண்ணை உயர்வான உலகத்தரத்தையும் கொண்டிருக்கிறது. இது லிபிய நாட்டு உள்நாட்டு வளங்களில் வெறும் 30 சதவீதத்தில் இருந்தே பெறப்படுகிறது. இன்னும் 70 சதவீத வளங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படாமலும், அவ்வாறு உட்படுவதை தடுக்கும் மாயவலைகளையும் அமெரிக்கா விரித்துள்ளது. லிபியாவின் எண்ணை வளத்தின்  மிகப்பெரும் பகுதி, உலகின் அதிக சனத்தொகை கூடிய நாடாகிய சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. இதனால் ஆபிரிக்காவில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டம் தட்டி வைத்திருக்க அமெரிக்கா லிபியாவைக் குறிவைக்கிறது. இதை விடவும் மறுபுறத்தே ஐரோப்பிய ஒன்றிய நாடான ஜேர்மனியின் நான்காவது முக்கிய எண்ணை விநியோக நாடாக லிபியாவே உள்ளது. அல்ஜீரியா அதன் எட்டாவது இடத்தில் உள்ளது. இதைவிடவும் லிபியாவில் யுரேனியம், தங்கம் உள்ளிட்ட அள்ள அள்ளக் குறைவில்லாத கனிமவளங்களும் தாராளமாக விளைந்து கிடக்கிறது.

பிரான்சுக்கும், ஜேர்மனுக்கும் இடையிலான பூசல் நிறைந்த முரண்பாடுகளால் உருவாகிவிட்ட பலமான மௌனச்சுவரை அடுத்து, பிரான்ஸ் மத்தியதரைக்கடல் ஒன்றியத்தைக் கோரியது. ஒருவாறு இவ் மத்தியதரைக்கடல் ஒன்றியத்துக்கான ஒப்பந்தம் 2008 இல் ஒப்பந்தமுமானது. பிரான்சின் இந்த மத்தியதரைக்கடல் ஒன்றியத்துக்கான ஒப்பந்தத்தை எதிர்த்துவந்த ஒரே ஒரு வட ஆபிரிக்கநாடும்     லிபியாவேதான். பிரான்சின் மத்தியதரைக்கடல் நாடுகளின் ஒன்றியத்தின் ஆளுமைகளால் ஏற்படும் ஆதிக்கத்தை ஜேர்மனானது மிகச் சாதுரியமாகக் கையாண்டது. மத்தியதரைக் கடல் நாடுகளை மட்டுமன்றி, ஐ.நாவின் அனைத்து உறுப்பு நாடுகளையும் அதில் கூட்டாளியாக்கி பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் 'கூட்டாளிகளின் தீயகனவை' மிகவும் சிக்கலுக்குள் உள்ளாக்கியது ஜேர்மன். இக்காலத்தில் பிரான்சின் நெருங்கிய கூட்டாளிகளான துனிசியா, எகிப்து அதிபர்கள் தத்தமது உள்நாட்டில் மேலெழுந்து வரும் சமூகப்பிரச்சினைகள் பெரும் தலையிடியாக இருந்து வருவதால் இந்த மத்தியதரைக்கடல் ஒன்றியம் இதற்குத் தையிலமாக அமையுமென நம்பினர். எகிப்தின் முபாரக் பிரான்ஸ் கார்க்கோசியுடன் இணைந்து மத்தியதரைக் கடல் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பில் இலாவகமாக உட்கார்ந்தும் இருந்தார்.

தொடரும்