Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இடதுசாரிய மாற்றீடு ஏன் அவசியம்?

1948 முதல் ஆள்வோருக்கும் - ஆள விரும்புவோருக்கும் மாறி மாறி வாக்களித்ததன் மூலம் மாற்றங்கள் நடந்தனவா? இன்று ஆள்வோரை மாற்றுவதும், ஆட்சிமுறையை மாற்றுவதுமா சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு?

எந்த ஆதாரமுமின்றி மாற்றங்கள் நடக்குமென்று நம்புவது நேர்மையான அறிவுபூர்வமான செயலா!? மனச்சாட்சிக்கு விரோதமாக மற்றவர்களுக்கு இதைச் செய்யுமாறு கூறுவது, நடப்பதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நம்பிக்கை மோசடித்தனம் அல்லவா!?

ஜனாதிபதியின் தலைமையிலான ஜனநாயகவிரோத இனவாத, சர்வாதிகார குடும்ப அரசாங்கத்தை தோற்கடித்தலே ஜனநாயகம் என்று கூறுவது அரசியல் பித்தலாட்டமல்லவா!?

எப்படி, எதை, எந்த முறை மூலம் தோற்கடித்தல் என்று கூறாத வரை, மறைமுகமாக அதே சர்வாதிகாரத்தை வேறு பெயரில் கொண்டு வருவது தானே இது. ஜனாதிபதி முறையையும், ஆள்வோரையும் மாற்றினால் மக்களுக்கு "ஜனநாயகம்" கிடைத்து விடும் என்கின்றனர். இது உண்மையானதா?

தனிமனித ஜனாதிபதி சர்வாதிகார முறைக்குப்பதில், சிலரை அடிப்படையாகக் கொண்ட பிரதமர் சர்வாதிகார முறையை தெரிவுசெய்து விடுவதையே ஜனநாயகம் என்கின்றனர். இது மக்களுக்கு ஜனநாயகத்தை கொண்டு வந்து விடுமா? மனிதன் தன் பகுத்தறிவு மூலம் கேட்டாக வேண்டிய கேள்வி. ஜனநாயகம் பற்றியும், ஆட்சிமுறை பற்றியும் தெரிந்து கொண்டே முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

1. மக்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை, ஆட்சி வடிவப்பிரச்சனையாக குறுக்கி விடுவதா ஜனநாயகம்? இது ஜனநாயகத்தின் பெயரில் அரசியல் மோசடியல்லவா! மக்கள் ஜனநாயகமாகக் கருதுவது ஜனநாயக உரிமைகளையே ஒழிய, ஆட்சி வடிவத்தையல்ல.

2.மக்களால் தெரிவு செய்யப்படுவதன் மூலம் கிடைக்கும் அதிகாரம் யாருக்காக பயன்படுத்தப்படுகின்றது? மக்களுக்காகவா அல்லது மக்களைச் சுரண்டுகின்ற வர்க்கங்களை பாதுகாக்கவா!? மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பதே நாளைய உண்மையும் கூட.

3. அரசியல் அதிகாரத்தை பெறும்முறை, நேர்மையாகவும் இயல்பாகவுமா பெறுகின்றனர் அல்லது சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலுமா பெறுகின்றனர்? பணம், ஊடகப் பலம், அரசு பலம், ரவுடித்தனம், இன-மத வன்மம்... என்று ஜனநாயகத்துக்கே முரணாகத்தான் அதிகாரத்துக்கு வருகின்றனர் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்,

ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் கொண்டு வருவதாகக் கூறி ஜனநாயகவிரோதமான முறையில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருகின்றனர் என்றால், ஜனநாயக விரோதிகளே மீண்டும் ஆட்சிக்கு வருகின்றனர்.

4. ஆட்சிமுறையையும், ஆள்வோரையும் மாற்றுவதன் மூலம், இலங்கையின் பொருளாதார - இனம் சார்ந்த இரண்டு பிரதான முரண்பாடுகளையும் அவை தீர்க்குமா? அதாவது

4.1. பொருளாதார ஜனநாயகத்தைக் கொண்டதா இந்த ஆட்சி(முறை) மாற்ற ஜனநாயகம்!? பொருளாதார ஜனநாயகத்தை முன்வைக்காத ஆட்சி, மக்களுக்கு ஜனநாயகத்துக்குப் பதில் ஒடுக்குமுறையைத் தான் தரும்.

4.2. இன முரண்பாட்டைத் தீர்க்கும் முரணற்ற ஜனநாயகத்தை கொண்டதா இந்த ஆட்சி (முறை) மாற்றம்!? இனப்பிரச்சனைக்கு தீர்வைக் கொண்டிருக்காத ஆட்சி, ஜனநாயகத் தீர்வுக்கு பதில் இனவொடுக்குமுறையையே தொடரும்.

கடந்தகால அனுபவங்கள் வாழ்க்கையின் படிப்பினையாக இருக்க, எதற்காக இதில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்? இதை மீறிய எமது செயலுக்காக நேர்மையாக ஒவ்வொருவரும் இன்று பதிலளித்தாக வேண்டும். செக்குமாடாக வாக்குப் போடும் விதண்டாவாதங்கள், தர்க்கங்கள் மூலம், உண்மையான நடைமுறைரீதியான ஜனநாயக வாழ்க்கைக்கு ஒருநாளும் வந்தடைய முடியாது.

ஆள்வோருக்குப் பதில் ஆள விரும்புவோரை மாற்றுவதும், அதற்காக ஆட்சிமுறையை மாற்றுவதுமா ஜனநாயகம்? இதுதான் மக்களின் பிரச்சினையா? இல்லையெனின் இது யாருடைய பிரச்சினை? இந்தத் தேர்தலில் கேள்வியாக, எம்மை நாம் இதனைக் கேட்டாக வேண்டும்.

இவையெல்லாம் யாருடைய பிரச்சினைகள் என்று பார்த்தால் ஆளவிரும்புகின்றவர்களின் சுயநலப் பிரச்சினைகள். ஆள்வோர் போல் அதிகாரத்தை பெற்றுக் கொண்டு, பணத்தைக் குவிக்க விரும்புகின்றவன் முன்வைக்கின்ற அரசியல் பித்தலாட்டங்கள் இவை. மறுபக்கத்தில் ஆள்வோர் எங்கள் இந்த ஆட்சிதான் மக்களுக்கானது என்று கூறி, அதற்கு வாக்களிக்குமாறு கோருகின்றனர்.

இதில் ஒன்றை தெரிவுசெய்ய வேண்டும் என்கின்றனர். அவர்கள் கூறுவது போல் கேட்டு ஒன்றை தெரிவு செய்வதன் மூலம், அவர்களிடம் நாங்கள் தோற்பதா அல்லது அவர்களை நிராகரிப்பதன் மூலம் நாங்கள் அவர்களை தோற்கடிப்பதா என்பதே எம் முன்னுள்ள உண்மையான கேள்வி.

ஆள்வோரையும் - ஆள விரும்புவோரையும் வாக்களித்து தெரிவு செய்வதானது, எங்களை நாங்கள் தோற்கடிப்பதாகும். இதற்கு மாறாக அவர்களை தோற்கடிக்குமாறு இடது முன்னணி கோருகின்றது. தோற்கடிப்பது என்பது இடது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை வாக்குகள் மூலம் வெல்ல வைப்பதல்ல, மாறாக நாம் ஒவ்வொருவரும் ஆள்வோரையும் - ஆளவிரும்புவோரையும் அரசியல்ரீதியாக தோற்கடித்து வெல்லுவதாகும். வாக்கு எண்ணிக்கையை வைத்து வெற்றி தோல்வியை தீர்மானிப்பதல்ல, மாறாக எமது அரசியல் என்ன என்பது தான், வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கின்றது.

பொதுவாக வாக்களிப்பதன் மூலம் "உடனடித் தீர்வுகள்" பற்றி குருட்டு நம்பிக்கைகளும், மனப் பிரமைகளும் அறிவுபூர்வமற்ற இந்த செயலை தொடர்ந்து செய்ய வைக்கின்றது. இது சரியானதா? இது தான் தீர்வா?

"குறுகிய காலத் தீர்வுகளை" நம்பி கடந்த 65 வருடமாக தேர்தலில் வாக்களித்ததன் மூலம், ஆள்வோரை மாற்றினோம். இதனால் எமது பிரச்சினைகளுக்கு எப்போதாவது தீர்வு கிடைத்தனவா எனின் இல்லை. என்ன நடந்தது? ஒடுக்குமுறைகள் அதிகரித்தனவே ஒழிய அவை என்றும் குறையவில்லை. வாழ்க்கையின் சீரழிவும் அதிகரித்துச் செல்கின்றதே ஓழிய, மனிதவாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கவில்லை. வாழ்க்கைச் சுமைகள் அதிகரிக்கின்றனவே ஒழிய குறையவில்லை.

ஆள்வோரினதும் - ஆள விரும்புவோரினதும் ஆட்சி, மக்களுக்கான நல்லாட்சியாக மாறியதில்லை. லஞ்சம், ஊழல், கும்பல் ஆட்சி, சொத்துக் குவிப்பு, ரவுடித்தனம், மாபியாத்தனம்... ஆட்சிமுறையாக பரிணாமம் பெற்று, அது மேலும் மேலும் வக்கிரமாகி வருகின்றது. நாட்டை ஆள்வோரின் பண்பாடுகளும், கலாச்சாரங்களும், உழைத்து வாழும் மக்களின் தேசிய மற்றும் ஜனநாயகப் பண்பாட்டையா கொண்டிருக்கின்றது? இல்லை, மாறாக நவதாராள நுகர்வுக் கலாச்சாரத்தன்மை கொண்டதாக, ஜனநாயகவிரோதமாக வக்கிரமடைந்து இருக்கின்றது. உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கையையா, ஆள்வோர் தங்கள் வாழ்க்கை முறையாக கொண்டிருக்கின்றனர் எனின் இல்லை.

எந்த ஆட்சி வந்தாலும் அது தேசிய வளங்களை அழித்து அதை சூறையாடும் நவதாராளவாத பொருளாதாரத்தை கொண்டதாக இருக்கும். உழைத்து வாழும் மக்களின் தேசிய வாழ்க்கையையும், அது சார்ந்த உற்பத்திகளையும் அழித்து, நவதாராளவாத பொருளாதாரத்தினை வாக்களித்த மக்கள் மேல் திணித்து விடுகின்ற வன்முறையைக் கொண்டதே இந்த ஆட்சி முறை.

மருத்துவம், கல்வி, குடிநீர், நிலம், இயற்கை .. என்று எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி வரும் இந்த ஆட்சிமுறை, அதை பணத்துக்கு வாங்கவும் விற்கவும் செய்கின்றது.

அரசு மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைச் சேவைகளைக் கூட மறுத்து வருகின்ற அமைப்பு முறையாகிவிட்டது. மக்களின் இயல்பாக உழைத்து வாழும் வாழ்க்கையை நரகமாக்கி, வீங்கி வெம்பி வக்கிரத்தை திணித்து விடுகின்றது. குடும்பங்கள் கூடி வாழ்ந்த வாழ்வை அழித்து, சொந்தக்குழந்தையைக் கூட பாலியல்ரீதியாக குதறும் நுகர்வுப் பண்பாட்டை நவதாராளமாக்கி வருகின்றது.

நவதாராளவாதத்தை பொருளாதார கொள்கையாகக் கொண்ட எந்த ஆட்சிமுறை மாற்றமும், அதை யார் ஆண்டாலும், மக்கள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது.

மக்கள் தங்களிடம் இருப்பதை இழப்பதும், அடக்குமுறை அதிகரிப்பதுமே வாழ்க்கை முறையாக மாறி இருப்பதை வரப்போகும் ஆட்சி மாற்றம் தடுத்து நிறுத்தாது.

இப்படிப்பட்ட ஆட்சிமுறையை வாக்குகள் மூலம் அதிகாரத்துக்கு கொண்டு வருவதும், மாற்றமாக தெரிவு செய்வதும் சரியானதா என்பதை நாங்கள் கேட்டாக வேண்டும்.

தேர்தல்களில் என்ன நடக்கின்றது? சாதியின் பெயரால், இனத்தின் பெயரால், ... கிராம தேவையின் பெயரால், தனிப்பட்ட இலஞ்சங்கள் மூலம் வாக்களிக்குமாறு காலாகாலமாக நாம் ஏமாற்றப்படுகின்றோம். விளைவு எம் வாழ்க்கையையும், எம்மைச் சுற்றிய மனித வாழ்க்கையையும் அழித்து விடுகின்றோம்.

உதாரணமாக இலங்கையில் இனமுரண்பாட்டை எடுப்போம். வாக்களித்ததன் மூலம் இதற்கு இதுவரை காலமும் என்ன தீர்வு கிடைத்திருக்கின்றது? 2005 மகிந்தாவை வெல்ல வைக்க, மகிந்தாவிடம் பணம் வாங்கிய புலிகள் தமிழ் மக்களை வாக்குப் போடாதவாறு பார்த்துக்கொண்டனர்.

வாக்குப் போடுவதன் மூலம் மாற்றம் கொண்டு வர முடியும் என்று நம்பும் கட்சிகளில் ஒன்றான கூட்டமைப்பு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் யூ.என்.பி.யுடன் சேர்ந்து சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற வகையில் தமிழ் மக்களை வழிநடத்தினர். இன்று பொது வேட்பாளரை ஆதரிக்கும் வண்ணம் தங்கள் மறைமுகமான செயற்பாட்டை தெளிவாக முன்தள்ளுகின்றனர். இப்படி தமிழ் மக்களை தொடர்ந்து அரசியல் அனாதையாக்கும் வண்ணம் தேர்தலில் வாக்களிக்குமாறு வழிகாட்டுகின்றனரே ஓழிய, அவர்களை சொந்தக்காலில் நிற்கும் வண்ணம் வழிகாட்டவில்லை.

இதை மாற்றி அமைக்க இடதுசாரிய முன்னணி மக்களை சொந்தக் காலில் அணிதிரளுமாறு இடதுசாரி மாற்றீடை முன்வைக்கின்றது. ஆள்வோரையும் - ஆளவிரும்புவோரையும் தோற்கடிப்பதன் மூலம், அரசையும் அரசு வடிவத்தையும் தோற்கடிக்கும் இடதுசாரி மாற்றீட்டின் பின் அணிதிரளுமாறு கோருகின்றது.

இதன் மூலம் ஆள்வோரையும் -ஆள முற்படுவோரையும் அரசியல்ரீதியாக ஒழித்துக்கட்டக் கோருகின்றது. தேர்தல் வாக்கைப் பெற்று ஆட்சியில் அமருவதற்காகவோ, பேரம் பேசுவதற்காகவோ இடது முன்னணி தன்னை முன்னிறுத்தவில்லை. மக்கள் வாக்களிப்பதன் மூலம் எந்த மாற்றமும் வராது என்பதை சொல்லவும், அவர்களை அணிதிரட்டவுமே தேர்தலில் நிற்கின்றது. இதன் மூலம் உண்மையான மாற்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும், சொந்த வழியைக் காட்ட முனைகின்றது.

இடதுசாரிய மாற்றீடு என்பது மக்கள் தங்களைத் தாங்கள் ஆளவும், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்யும் அரசியல் வழிமுறையை முன்நோக்காகக் தெரிவு செய்யுமாறு கோருகின்றது.