Sun06262022

Last updateSun, 19 Apr 2020 8am

"இடதுசாரிய வேலைத்திட்டத்தினை மக்கள் மயப்படுத்தல்": குமார் குணரத்தினம்.

தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் லண்டன், கரோவில் (Harrow) 15ம் திகதி நவம்பர் 2014 அன்று முன்னிலை சோசலிச கட்சியின் “போராட்ட நினைவுகளுடன் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்” நிகழ்வில் ஆற்றிய உரையினது சாராம்சம்.

87-89 போராட்டத்திற்கு 25 வருடங்கள். இந்த போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்தவர்களை இன்று ஞாபகம் கூருகின்றோம். இவர்கள் தமது போராட்டத்தின் மூலமாக மக்களுக்கு சோசலிச வாழ்வு கிடைக்கும் என நம்பிக்கை கொண்டு போராடியவர்கள். இவர்கள் போராடிய அரசியல் வழிமுறை பாதை குறித்த சரிகள் பிழைகள் பற்றி எமக்கு ஒரு விமர்சனம் உண்டு. அது பற்றி நாம் தனியாக பேச வேண்டும்.

கடந்த 25 வருடங்களில் இலங்கையில் சோசலிச விடுதலைக்கான போராட்டத்திற்கு என்ன நிகழ்ந்துள்ளது. நாம் போராட்டத்தில் இறந்தவர்களின் இலட்சியமான சோசலிச விடுதலைக்கான போராட்டத்தில் எந்தளவுக்கு ஈடுபட்டுள்ளோம். இவர்களை இன்று மட்டும் ஞாபகம் கூர்ந்து விட்டு நாம் போவதா? சோசலிச விடுதலைக்கான போராட்டத்தை ஒவ்வொரு நாளும் 365 நாளும் முன்னெடுத்து எமது வாழ்க்கையினை அதற்க்கான போராட்டத்திற்கு அர்ப்பணிப்பதே நாம் இந்த வீரர்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும்.

1948 இல் கிடைத்த போலிச் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஆட்சியாளர்கள் தேசிய பொருளாதாரத்தையும் முதலாளித்துவத்தையும் முன்னெடுத்து வந்தனர். ஆனால் 1978 இல் ஜே.ஆரினால் கொண்டு வரப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறை இதனை மாற்றி புதிய பொருளாதார முறையினை முன்னெத்தது. இதற்கும் 87-89 போராட்டத்திற்கும் ஒரு தொடர்வு இருக்கின்றது.

1948 முதல் 1977 வரை நிகழ்ந்த தேர்தல்கள் எல்லாம் ஓரளவுக்கு முறையாக நடந்து வந்தன எனக் கூறலாம். ஆனால் 1977 இன் பின்னர் பதவிக்கு வந்தவர்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் நீடிப்பதை காண்கின்றோம். ஏகாதிபத்தியவாதிகளால் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் படிப்படியாக ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் மறுத்தும் மக்களை இன-மத ரீதியில் பிரித்து மோதவிட்டு, கலவரங்களை உருவாக்கி சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்கி ஆண்டு வருவது எமக்கெல்லாம் தெரிந்த விடயம். ஜனாதிபதி ஆட்சி அமைப்பு முறையின் பின்னர் ஜனநாயகம், மனித உரிமைகள் இலங்கையில் மரணித்து விட்டதுடன் ஆட்சியாளர்கள் சர்வாதிகாரிகளாக மாறிவிட்டனர்.

தென்னிலங்கை இளைஞர்களை பலரை காணாமல் போகச் செய்து படுகொலைகள் புரிந்த யூஎன்பி அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி ஜ.நா வரை சென்று நியாயம் கேட்ட மனித உரிமைவாதி தான் மகிந்த ராஜபக்ச. ஆனால் இன்று அதிகாரத்திற்கு வந்து ஜனாதிபதியான பின்னர் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளிற்கும் அவரால் என்ன நடந்து கொண்டிருக்கின்றது? இது மகிந்தா என்ற தனிமனிதனின் தவறா? அல்லது வேறு ஏதும் காரணமா? முதலாளித்துவ அரச அமைப்பு வடிவமே காரணம்.

சந்திரிக்கா அம்மையார் 1994 ம் ஆண்டு இது வரை கால ஜனாதிபதி தேர்தலில் ஆகக் கூடுதலான 62.28 வீத வாக்குகளை வென்று பதவிக்கு வந்தார். யூஎன்பியின் 17 வருட மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக மக்களிற்கு ஜனநாயகத்தை வழங்கப்போவதாகவும் ஜே.ஆரின் காலத்தில் தமிழ் மக்களிற்கு இழைத்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தீர்வொன்றை காணப்போவதாகவும் பிரச்சாராம் செய்து மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் அமோக வெற்றி பெற்றார். ஆனால் 5 வருடங்கள் கடந்து பார்த்தால் அவவும் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் மறுத்து வந்ததையும் தேர்தல் வெற்றியை குறியாக கொண்டு எல்.ரீ.ரீக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை வடக்கிலும், கிழக்கிலும் நடத்தியுள்ளார்.

1977 ஆட்சி அமைப்பு மாற்றத்திற்கு பின்பாக ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்தவர்கள் தனிப்பட்ட ரீதியில் எப்படிப்பட்டவர்களாக இருந்த போதும் மக்களின் உரிமைகளை மறுத்து சர்வாதிகார ஆட்சியினையே புரிந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என நீங்கள் சிந்திக்க வேணடும்.

பிரதமர்களாக ஜனாதிபதிகளாக இருந்தவர்களை பார்த்தோமேயானால் தனிப்பட்ட ரீதியில் இவர்கள் எவரும் இனவாதிகளோ, மதவாதிகளாகவோ நாம் காண முடியாது. இவர்களின் குடும்பத்தில் தமிழர்களுடனோ, முஸ்லீம்களுடனோ திருமண உறவுகள், தனிப்பட்ட வர்த்தக உறவுகளை நாம் காணலாம். ஆனால் அதிகாரத்திற்கு வந்ததும் இன, மதவாதிகளாக செயற்பட்டு பெரும் அழிவுகளுக்கு காரணமானவர்களாக இருக்கின்றனர். எதற்க்காக இவர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர் என நாம் சிந்திக்க வேண்டும்.

சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து நாம் மக்களின் வாழ்க்கை நிலை, மனித உரிமை என எதனை எடுத்து பார்த்தாலும் அவை முன்னேற்றகரமாக இருந்ததில்லை. எப்போதும் கீழே தான் போய்க் கொண்டிருந்தன. இன்று பார்த்தால் தெரியும் அவை நெகட்டிவ்வாக கீழே இருப்பதனை.

இடதுசாரிகள் கடந்த காலங்களில் இந்த முதலாளித்துவவாதிகளுடன் கூட்டிணைந்து அரசுகளில் அமைச்சர்களாக இருந்தனர். தலை சிறந்த பொருளாதார நிபுணர், வழக்கறிஞர் என்று சொல்லப்பட்ட இடதுசாரிகளான பீற்றர் கெனமன், கொல்வின் ஆர்.டி சில்வா போன்றோர் முக்கிய அமைச்சர்களாக சிறிமா ஆட்சியில் இருந்தனர். அவர்களால் உழைக்கும் மக்கள் வாழ்வில் மாற்றத்தினை கொண்டு வர முடிந்ததா?

சந்திரிக்கா ஆட்சியில் நாம் ஜேவிபியில் இருந்த போது மீன்பிடி, விவசாயம் உட்பட நாலு அமைச்சுக்களை வைத்திருந்தோம். பத்தாயிரம் குளங்களை புணரமைக்கும் திட்டம் ஒன்றின் மூலம் குளங்களை புரணமைத்தோம். விவசாயிகள் வாழ்வில் மாற்றத்தை காண முடிந்ததா? முடியாது ஏனென்றால் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் சாதாரண மக்களின் அவலங்களிற்கு தீர்வு கிடையாது.

சோவியத்தில் கமினிசத்தின் அழிவுக்கு பின்னர் உலக இடதுசாரி இயக்கத்திலும் பின்னடைவும், சிதைவடைவுகளும் உருவாகி இடதுசாரியம் பெரும் நெருக்கடிக்கும், தோல்விக்கும் உள்ளாகியுள்ளது. இலங்கையிலும் இடதுசாரியம் தோல்வியடைந்தே உள்ளது. சீனா ஒரு முதலாளித்துவ நாடாக மாறி அது இன்னொரு திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. முதலாளித்தும் தனிக்காட்டு அரசனாக உலகெல்லாம் மூக்கை நுழைத்து குழப்பங்களை விளைவித்து அதில் இலாபம் கண்டு கொண்டிருக்கின்றது.

மறு பக்கத்தில் மக்கள் இந்த முதலாளித்துவ வாழ்க்கைக்குள் சிக்குண்டு அதனை காவிக்கொண்டிருக்கின்றனர். இந்த அபாயகரமான முதலாளித்துவ வாழ்வு பற்றி சிந்திக்க நேரமின்றி தமது பொருளாதார தேவைக்காக ஓடிக் கொண்டிருக்கின்றனர். இங்கும் சரி, இலங்கையிலும் சரி மக்கள் ஆர அமர நேரமின்றி பொருளாதார தேவைக்காக இரண்டு மூன்று வேலை என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தமக்கான வீடு, வசதி, பொருளாதாரத்திற்க்காக ஓடி ஓடி உழைக்க வேண்டி இருக்கின்றது. உடல் நலம் விரைவாக கெடுகின்றது. குடும்ப உறவுகளுடன் உறவு கிடையாது. பேச்சு வார்த்தை ரொம்ப கிடையாது. இதுவா வாழ்வு. இது முதலாளித்துவம் எம் மீது ஏற்றிய சுமை. குழந்தைகள் குழந்தை பிராய வாழ்வை அனுபவிக்கிறார்களா? அன்று ரேடியோ கேட்டு குடும்பமாக கூடியிருந்து உண்டு வாழ்ந்த வாழ்வா இன்று வாழ்கின்றோம். பொருளாதாரத்தை தேட இரவு பகலாக வேலை செய்ய முதலாளித்துவத்தால் நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

இந்த நெருக்கடியான வாழ்விலிருந்து மக்களை மீட்க கூடியது சமத்துவம் நிறைந்த சோசலிச வாழ்க்கை முறைமை மட்டுமே. சோசலிசத்தில் மக்களுக்கு வீடு, வசதிகளுடன், பொருளாதாரமும் இவற்றை குடும்பத்துடன் அனுபவிக்க நிரம்ப நேரமும் கிடைக்கும். சந்தோசமான வாழ்வு கிடைக்கும்.

இடதுசாரியம் என்பது உழைக்கும் மக்களின் விடிவுக்கான அரசியல் மார்க்கம். அதனை முதலாளித்துவ கட்சிகளுடன் இணைந்து நின்று செயற்படுத்தவோ, வென்றெடுக்கவோ முடியாது. இடதுசாரியம் என்பது உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வேலைத்திட்டம். இதனை மக்கள் மத்தியில் எடுத்து சென்று அவர்களை போராட்டத்தில் ஈடுபட வைக்க வேண்டும். போராட்டத்தின் ஊடாக மக்களுக்கு எதிரான இந்த முதலாளித்துவ அமைப்பும், அரச வடிவமும் தகர்க்கப்பட்டு மக்களுக்கான புதிய அரச அமைப்பு முறைமை உருவாக்க நாம் போராடுவதே இந்த வீரர்களிற்கு நாம் செலுத்தும் மரியாதை

ஜ.நா ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து இன்று வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சோவியத் வீழ்ச்சிக்கு பின்னர், பலஸ்தீனத்தில் நம் கண் முன்னால் நடப்பதையும் அதில் ஜ.நாவின் செயற்பாடுகளையும் பார்க்கும் போது, இது ஒரு காலாவதியான அமைப்பு என்பதும் ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இயங்குகின்றது என்பதும் தெளிவானது. எனவே ஜ.நா இலங்கையில் நடந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வையோ, மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியாக நடக்கும் என எண்ணுவது எம்மை நாமே ஏமாற்றுவதில் தான் முடியும்.

இன்று எந்த அரசியல் கட்சிகளும் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பற்றி பேசுவது கிடையாது. எல்லோரும் தேர்தலில் மகிந்தாவிற்கு எதிராக பொது வேட்பாளரை கண்டு பிடிப்பதிலேயே உள்ளனர். மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் எங்களுக்கும் எந்த எதிர்க்கருத்தும் கிடையாது. அதனை எப்படி செய்வது என்பதில் தான் நாம் மற்ற கட்சிகளிடமிருந்து வேறுபடுகின்றோம். நான் ஏற்க்கனவே கூறியது, ஆட்சிக்கு வரும் போது ஜனநாயகவாதிகளாகவும் மக்களது பிரச்சனைகளிற்கு தீர்வு காண்பதாகவும் கூறிக் கொண்டு வருபவர்கள் பதவிக்கு வந்து சில வருடங்களில் சர்வாதிகாரிகளாக மாறுவதே அண்மைக்கால வரலாறாக இருக்கின்றது. இந்தப் போக்கின் பின்னால் நாமும் இழுபட்டு போகலாமா? இதனை மாற்றியமைப்பதே எமக்கான சரியான தெரிவாகும்.

இலங்கையில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளின் பனருக்கு பின்னாலும் இருப்பது ஒரே அரசியல் தான். அது மக்களினது பிரச்சனைகளுக்கான, தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை கொண்டதல்ல. வேறு நோக்கம் கொண்டது. இதனை கடந்த 66 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் மூலமாக நாம் கண்டு வருகின்றோம். மக்களது வாழ்க்கைத்தரம், உரிமைகள், பொருளாதாரம், தேசிய இனப்பிரச்சனை என்பனவற்றினை பார்த்தால் அவை மைனஸாகி கொண்டே போய் மிகவும் கீழே போய் விட்டன. இந்த ஆட்சியாளர்களிடம் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு கிடையாது. இடதுசாரிகள் இவர்களுடன் சேர்ந்து நின்று எதையும் மக்களிற்கு செய்ய முடியாமல் போனது தான் எமக்கு தெரியும்.

எனவே நாம் இடதுசாரிய அரசியலை இவர்களிடமிருந்து விலத்தி நின்று மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இந்த முதலாளித்துவ அமைப்புக்குள் சிறைப்பட்டுள்ள மக்களை சிறையினை உடைத்து வெளியே வர வழிகாட்ட வேண்டும். இதற்க்காக நாம் இடதுசாரிய வேலைத்திட்டம் ஒன்றிணை ஆரம்பித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் இருக்கின்ற இடதுசாரிய அமைப்புக்களுடன் ஒரு கூட்டு பொதுவேலை திட்டத்தில் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இது எதிர்காலத்தில் மக்களின் புரட்சிக்கு தலைமை தாங்கும் புதிய ஒரு கட்சியினை உருவாக்கும்.

முன்னிலை சோசலிச கட்சியானது மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார பிரச்சனை முதல் தேசிய இனப் பிரச்சனை வரை கருத்தில் கொண்டு அவற்றிற்கு தீர்வினை காணும் நோக்கில் பல திட்டங்களையும், வெகுஜன அமைப்புக்களையும் கொண்டு தனது வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக மாணவர் பிரச்சனைக்காக போராட மாணவர் அமைப்பினையும், பெண்களின் பிரச்சனைகளுக்காக பெண்கள் அமைப்பினையும், தேசிய இனப்பிரச்சனைக்காக சடவுரிமை இயக்கம் என பல வெகுஜன அமைப்புகளை அமைத்து அதன் ஊடாக போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

சமவுரிமை இயக்கமானது இனவாதத்திற்கும், இனஒடுக்கு முறைக்கும் எதிராக மக்களை அணிதிரட்டி போராடி வருகின்றது. இதில் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக சுயநிர்ணயம், சுயாட்சி என பல்வேறு தீர்வுகளை முன்வைப்பவர்கள் ஒன்றிணைந்து வேலை செய்கின்றனர். நடைமுறை வேலைக்கு ஊடாக தேசிய இனப்பிரச்சனைக்கு முதலாளித்துவம் முன்வைக்கின்ற தீர்வினை விட மிகச் சிறந்த இடதுசாரிய தீர்வொன்றினை கண்டடைய முடியும்.

இனவாதம் என்பது சகல இனமக்களிடமும் இன்று காணப்படும் யதார்த்தம். ஆனால் பெரும்பான்மை சிங்கள இனம் ஏனைய இனங்கள் மீது இன ஒடுக்கு முறையில் ஈடுபடுகின்றது. சிங்கள மக்களை இன ஒடுக்கு முறைக்கு எதிராக போராட வைப்பதே எமது இன்றைய பிரதான நோக்கமாகவுள்ளது.

அண்மையில் பேருவளை முஸ்லீம் சமூகத்தின் மீதான தாக்குதல்களின் பின்னர் கொழும்பு மாளிகாவத்தை முஸ்லீம் மக்கள் அச்சத்துடன், தமது பாதுகாப்பு தேடி கிழக்கிற்கு இடம்பெயரும் நிலையில் இருந்த வேளை, சமவுரிமை இயக்கம் அரச மறைமுக அச்சுறுத்தலை மீறி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் பேருவளையிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் நடைபெற்ற தாக்குதல்களை கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது. இதில் பெருமளவிலான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டதுடன் கிழக்கிற்கு இடம் பெயருகின்ற எண்ணத்தையும் கைவிட்டனர்.

இனவாதம், இனஒடுக்கு முறைக்கு எதிரான இந்த போராட்டம் சமுத்திரத்தில் விடப்பட்ட ஒரு சிறுதுளி நீர் போன்றதே. நாம் போக வேண்டிய தூரம் மிக நீண்டது. ஆனாலும் இதை யாராகிலும் தொடங்கத்தான் வேண்டும். முன்னிலை சோசலிச கட்சி இதனை தொடக்கி வைத்துள்ளது. இது எல்லோராலும் சேர்ந்து முன்னெடுத்து செல்லப்பட வேண்டும். சமவுரிமை இயக்கம் உங்கள் எல்லோரையும் இந்த வரலாற்றுப் பயணத்தில் இணைந்து கொள்ள இருகரம் நீட்டி அழைக்கின்றது.

எங்களை பொறுத்தமட்டில் இந்த தேர்தல்கள், அது ஜனாதிபதி தேர்தலாகட்டும் பாராளுமன்ற தேர்தலாகட்டும் அல்லது ஏனைய தேர்தல்கள் ஆகட்டும் எல்லாமே மக்களுக்கானவை அல்ல. எல்லாமே போலியானவை. இந்த தேர்தல்கள் அதிகார வர்க்கத்தினரை மாறி மாறி பதவிக்கு கொண்டுவர மட்டுமே நடைபெறுவன. ஆனாலும் இன்றைக்கு இலங்கையில் இருக்கின்ற சர்வாதிகார சூழலில் தேர்தல் பிரச்சாரம் என கிடைக்கும் சிறு இடைவெளியினை பயன்படுத்தி மக்களிடம் இடதுசாரிய கருத்துக்களையும் வேலைத்திட்டத்தையும் கொண்டு செல்லும் நோக்கில் இடதுசாரிய பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளோம். அது குறித்த பேச்சு வார்த்தைகள் ஏற்க்கனவே சக இடதுசாரிய கட்சிகளுடன் ஆரம்பித்துள்ளோம். எமது நோக்கம் வாக்கு கேட்பதல்ல. எத்தனை வாக்குகள் பெறுகின்றோம் என்பதல்ல. இடதுசாரியத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் அதனை மக்கள் மயப்படுத்துதலுமே.