Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒப்பாரி வைக்கும் இஸ்லாமிய இலக்கிய - அரசியல் சிந்தனைமுறை

எங்கிருந்தோ வந்தார்கள், புதிய மார்க்கமும் வந்தது, கூடவே பணமும் வந்தது, பெண்களுக்கு புர்காவும் வந்தது, திடீர் திடீரென மசூதிகள் முளைத்தது. இப்படி, அது வந்தது, இது வந்தது என்று கூறுகின்றதன் மூலம், சூழலுக்கு ஏற்ப தப்பிப் பிழைக்கின்ற இலக்கிய – அரசியல் போக்கே, தங்கள் சமூகம் குறித்த சுயமதிப்பீடாக கட்டமைக்க முனைகின்றனர். இப்படி இன்று கூறுகின்றவர்களின் சமூக நேர்மையென்பது கேள்விக்குரியது. அன்று ஏன் நாங்கள் இதைக் கூறவில்லை என்பதைச் சொல்லுவது தானே, குறைந்தபட்சம் சமூக சார்ந்த நேர்மை. எல்லாவற்றையும் சொந்த சமூகத்துக்குள் பூட்டி, மூடிமறைத்தவர்கள் யார்? ஏன் மூடிமறைத்தனர்?

இப்படி எதார்த்தம் இருக்க, அன்று இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பின் தாங்கள் இருந்ததை நியாயப்படுத்துவதும், இன்று சூழலுக்கேற்ப இஸ்லாமியவாதத்துக்கு மறுவிளக்கம் கொடுப்பதும் தான், புதிதாக நடந்து வருகின்றது.

நடந்த இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. சமூகம் இஸ்லாமிய அடிப்படைவாதமாக மாற்றிக் கொண்டதில் எமக்கு சம்மந்தமில்லை. தாங்கள் இஸ்லாமிய அடிப்படைவாத சமூகத்துக்கு வெளியில் இருந்தது போல் நடிப்பதும், நடந்து கொள்வதும் நடக்கின்றது. இது உங்களுக்கு கேலியாகப்படவில்லையா? இஸ்லாமிய சிந்தனையில் இது கேலியல்ல.

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று சாதாரண மக்கள் கூறினால், அது அவர்களின் அறியாமையாகவே எடுத்துக் கொள்ள முடியும். அதுதான் சமூகம் குறித்த அவர்களின் பார்வையும், புரிதலுமாகும்.

ஆனால் சமூகம் குறித்து பேசுகின்றர்வர்கள், தங்களை "முற்போக்கு" இலக்கிய - அரசியல் வாதிகளாகக் காட்டிக் கொள்கின்றவர்கள் இப்படி கூறினால், மன்னிக்க முடியாத குற்றத்துக்கு தொடர்ந்து துணை போகின்றனர் என்பது தான் அர்த்தம். இதன் பின்னுள்ள அரசியல். சுயவிமர்சனமூடாக சமூகத்தை மீள தலையேற்று மறுநிர்மாணம் செய்யத் தயாரற்ற இஸ்;லாமிய பிதற்றல்கள்.

சமூகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மெதுவாக, ஆழமாக ஊடுருவிக் கொண்டிருந்த போது, இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். என்னத்தை, எதைப்பற்றி எல்லாம் எழுதிக் கொண்டு இருந்தார்கள்? இன்று புதிதாக வந்தவை பற்றி கூறுகின்றனரே, அது குறித்து அன்று என்ன எழுதினார்கள்?

இன்று இஸ்லாமிய தேர்தல் கட்சிகள் எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறிக்கொண்டு, நடந்ததை தனிப்பட்ட நபர்கள், குழுக்கள், மதப்பிரிவுகளை மட்டும் பொறுப்பாக்கி தப்பிக்கும் அதே இஸ்லாமிய சரக்கைத்தான், அனைவரும் புரட்டிப்புரட்டி போட்டு காட்ட முனைகின்றனர். அதைக்கொண்டு தப்ப முனைகின்றனர். முஸ்லிம் சமூகத்தில் இருந்து வந்த இஸ்லாமிய எழுத்தாளர்கள் தேர்தல் அரசியல்வாதிகள் கூறுவது போல, தாங்களும் கூறி, தங்கள் போலித்தனமான கடந்தகால இஸ்லாமியவாத எழுத்துக்கும், நடத்தைக்கும் நியாயம் கற்பிக்க முனைகின்றனர். இதன் மூலம் எதிர்கால தலைமுறையை, தவறாக வழிநடத்த முனைகின்றனர்.

இஸ்லாமிய பயங்கரவாதத்தை உருவாக்கிய அடிப்படைவாத சமூகமாக, சமூகம் மாற்றப்பட்டுக்கொண்டு இருந்தபோது, அதைக் கேள்விக்குள்ளாக்காதவர்கள் தான் இவர்கள். அதை இன்றும் கூட கேள்விக்குள்ளாக்க முனையவில்லை. மாறாக தனிப்பட்ட நபர்கள், குழுக்கள், மதப்பிரிவுகளை மட்டும் பொறுப்பாக்கி, சமூகத்தை அடிப்படைவாதத்துக்குள் தக்கவைக்க முனைகின்றனர்.

தமிழ் வலதுசாரியம் போன்று இஸ்லாமிய வலதுசாரிய இலக்கியமும் – அரசியலும் தான், "முற்போக்கு" வேசம் போட்டுக் கொண்டு சமூகத்தை முடமாக்கி வருகின்றது. மீளமுடியாத அடிமைத்தனத்தை, சமூக சிந்தனை முறையாக்க முனைகின்றது.