Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

வரலாற்றை மாற்றக் கூடியவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்களே.

வளர்ச்சியடைந்த நாடுகளினதும்,  வளர்ந்து வரும் நாடுகளினதும் கடந்த கால வரலாற்றில் அரசியல் சமூக மாற்றங்கள் யாவற்றிற்குமான போராட்டங்களின் முன்னோடிகளாக - முன்னணியினராக - முதுகெலும்பாக அடக்குமுறைகளுக்கு  முகம் கொடுத்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடிய தொழிலாளர்களும், பாமர பாட்டாளி மக்களுமேயாவர். உலக வரலாறுகள் இந்த சாதாரண குடிமக்களின் குருதியினால்தான் வரையப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த பல சகாப்தங்களாக குடிமக்கள் அவ்வப்போது பதவியிலிருந்த அரசாங்கங்களினால் மாறி மாறி ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். தாங்கள் ஏமாற்றப்படுவதை உணரமுடியாத வகையில் எமது அரசியல்வாதிகளும் அரசாங்கத்திற்கு அனுசரணையாகவே தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இன்றும் அந்த அணுகுமுறையையே தொடர்ந்து கடைப்பிடித்தும் வருகின்றனர். 

எமது அரசியல் இனம்-மொழி-தாயகம்--சாதி-சமயம்-பிரதேசம்-கலாச்சாரம் என்ற கதையாடல்கள் ஊடாக குடிமக்களை காவு கொடுத்தும் - நாட்டை விட்டு ஓட வைத்தும் - நாட்டில் எஞ்சியிருந்தவர்களை இழப்பதற்கு எதுவுமே இல்லாத ஒட்டாண்டிகளாக்கியும் விட்டுள்ளது. அப்படியிருந்தும் அதே பாணி அரசியலே தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

நாட்டில் யுத்தம் முடிவுற்று எட்டு ஆண்டுகளாகி விட்டது. கடந்த எட்டு ஆண்டுகளாக யுத்தக் குற்றம்-இன அழிப்பு-மனித உரிமை மீறல் என்ற கதையாடல்கள் இடம் பெற்று வருகின்றன. ஐ.நா.தீர்மானங்களும்-ஆட்சி மாற்றமும் தமிழ் மக்கள் வாழ்வில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, 

1. தொடர்ந்து அரசியல் கைதிகள் சட்ட விரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.(அரசியல் கைதிகள் எவருமில்லை என்கிறது அரசாங்கம்)

2. வலிந்து காணாமலாக்க பட்டோர் பற்றிய தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை (அனைவரும் இறந்து விட்டனர் அல்லது நாட்டை விட்டு ஓடிவிட்டனர் என்கிறது அரசாங்கம்)

3. படையினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் மீள கையளிக்கப்படவில்லை(அரசாங்கம் பாதுகாப்பு என்கிறது-இராணுவம் அது அரசாங்க காணிகள் என்கிறது )

இது வரை ஐ.நா.வின் ஜெனிவா(மனித உரிமை) கூட்டத் தொடர் 16 தடவைகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழர்களின் உரிமைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தவறவில்லை. அதே வேளை இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா.வினால் எச்சரிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டதிலும் குறையிருக்கவில்லை. ஆனால் எச்சரிக்கைகள் விடுக்கும் அதே ஐ.நா. “இலங்கையில் சில சனநாயக முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதையிட்டு” பாராட்டவும் தவறவில்லை. 

ஆனால் இலங்கையின் குடிமக்கள் “நல்லாட்சி” அரசுக்கு முன்னர் காணப்பட்ட ஆட்சி முறைமையையும் அதன் விளைவுகளையும் அனுபவித்த வண்ணம் தங்கள் அடிப்படை வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். யுத்தத்தின் பாதிப்பை அனுபவிக்கும் சாதாரண தமிழ் மக்கள் “எதுவும் நடக்கலாம்” என்ற பயத்துடன் தான் தங்கள் பிரச்சனைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

சர்வதேச சமூகம் என்பது வல்லரசுகளையும் ஏகாதிபத்தியங்களையும் உள்ளடக்கிய ஒரு அடையாளமாகும். இவைகளின் நலன்களை இலக்காக வைத்தே ஐ.நா.சபை இயங்குகிறது. வன்னிப் பேரழிவின் போது சர்வதேச சமூகமும்,  ஐ.நா.சபையும் மேற்கொண்ட நடவடிக்கைகளை வைத்தே இதனை நாம் தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும். இனிமேலும் நாம் இவர்களை நம்பி செயற்படுவோமேயானால் நமக்கு நாமே குழிபறிக்கிறோம் என்பதுதான் அர்த்தம். அறிக்கைகளும்-வாக்குறுதிகளும்-பிரகடனங்களும் எமது வாழ்வைப் பாழாக்கியுள்ளதை கடந்த 70 வருட அனுபவம் கற்றுத் தந்துள்ளது.

நல்லாட்சி எனக் கூறும் அரசாங்கம் நடைமுறையில் பழைய “வல்லாட்சி” முறையையே தொடர்கிறது. 

2013ம் ஆண்டின் 2ம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைக் கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துதல் என்னும் சட்ட மூலம் ஒன்று 2017 பெப்ரவரி 21 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு 2017 மார்ச் 6 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இச் சட்டமூலத்தில் 6A(2) மற்றும் 6A(6) பிரிவுகளின் கூற்றுப் படி பொலிஸ் விசாரணையின் போது கைது செய்யப்படுவோர் சார்பாக சட்டத்தரணிகள் அவர்களை அணுகும் உரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது விசாரணையின் போது சித்திரவதைக்குள்ளாவதை அனுமதிக்கிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென இலங்கைக் குடிமக்கள் போராடுகிறார்கள். சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐ.நா.சபையும் அதனை பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கமோ அதற்குப் பதிலாக ஒரு புதிய பெயரில் அதே பழைய சட்டத்தை நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருக்கிறது.

இன்று இலங்கையில் அரசும், அரசியலும், அரசாங்கமும் எமது நாட்டை கூறு போட்டு அதன் வளங்களையும் குடிமக்களாகிய எம்மையும்  பகுதி பகுதியாக அந்நியர்களுக்கு “குத்தகை”க்கு விட்டு “கொமிசன்” வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த “குத்தகை-கொமிசன்” பின்னணியில்தான் 2015ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தக் “கொமிசன்” விடயத்தில் முன்னைய ஆட்சியாளர்களுக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் இடையில் இடம் பெறும் இழுபறிப் போட்டியின் பிரதிபலிப்புத்தான் இன்றைய அரசாங்க செயற்பாடுகள் ஆக வெளிப்படுகிறது. 

இதனை பூசி மெழுகி மூடி மறைக்க “இனப்பிரச்சனை” கையாளப்படுகிறது. 70 வருடங்கள் ஏமாந்தது போதும். இனியும் ஏமாறாமல் இருப்பதற்கான வழிகளைத் தேடுவோம். அந்த வழிகள் எமக்கு அருகேதான் உள்ளன. ஆனால் இது வரை காலமும் அதனை நாம் பார்க்க விடாமல் “இனவெறுப்பு” என்ற தடுப்புச் சுவர் போடப்பட்டிருந்தது. இப்போது அதில் சிறு சிறு வாசல்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றினூடாக சிங்கள தமிழ் மக்கள் நேருக்கு நேர் சந்திப்பதற்கும்-ஒருவரை மற்றவர் அறிந்து கொள்வதற்கும்-ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குமான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. 

எம்மைப் போல் கடத்தலும் காணாமல் போதலும் காணி இழப்பும் சிறை வைப்பும் சித்திரவதையும் சீரழிந்த வாழ்வும் அனுபவிக்கும் குடிமக்கள் இலங்கை பூராவும் உள்ளனர். எம்மைப் போல் அவர்களும் இலங்கையின் இனவாத அரசியலில் பகடைக் காய்களாக ஆக்கப்பட்டவர்களே. 90 சத வீதமான குடிமக்களை 10 சத வீத மேலாதிக்க ஆளும் வர்க்க அதிகார சக்திகள் ஆட்டிப் படைப்பதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. 

யுத்தம் எமது நாட்டில் இன-மத-பால்-வர்க்க-பிராந்திய வேறுபாடில்லாமல் அதன் வடுக்களை தந்து விட்டுள்ளது. அரசாங்கங்களும் மக்கள் முதுகில் சவாரி செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளது. எமது நாட்டின் அரசியல் குறிப்பிட்ட சிலரின் பரம்பரைச் சொத்தாகவே இதுவரை காணப்படுகிறது.

இதனால் நாட்டில் வாழ்க்கைத் துணையிழந்தவர்கள்-மாற்றுத் திறனாளிகள்-ஆதரவற்றோர்-கைவிடப்பட்டோர்-பராமரிப்பற்றோர்-வீடற்றோர்-வேலையற்றோர்-தொழில் வளங்கள் பறிகொடுத்தோர்-கல்வி மறுக்கப்பட்டோர்-விசாரணையின்றி சிறையிருப்போர்-கடத்தப்பட்டோர்-காணாமல் போனோர் என்பது இலங்கைக் குடிமக்கள் அனைவரையும் பாதித்தபடி உள்ள பொதுவான அடிப்படைப் பிரச்சனைகளாகும். 

இந்தப் பிரச்சனைகளுக்கு பாதிக்கப்பட்ட குடிமக்கள் யாவரும் பரஸ்பரம் சந்தித்து கலந்து பேசுவதன் ஊடாக மட்டுமே முடிவு கட்டமுடியும். இதனை விடுத்து சட்டம் படித்த அரசியல் வாதிகளை நம்பினால் “வழக்கு வென்ற பின் காணியை அப்புக்காத்துக்கு எழுதிக் கொடுத்த” கதையாகவே எமது கதையும் முடியும்.

(பிரபல சட்டத்தரணி ஒருவர் தனது வழக்கொன்றை பல வருடங்களாக இழுத்தடித்து நடத்திக் கொண்டிருந்தார். அவரது மகன் சட்டத்தரணியானதும் அவ்வழக்கை மகனிடம் ஒப்படைத்தார். மகன் தனது முதலாவது பிரசன்னத்திலேயே அவ்வழக்கை முடித்து விட்டு வந்து தகப்பானாரிடம் “நீங்கள் வருடக் கணக்காக நடாத்திய வழக்கை நான் ஒரே நாளில் முடித்து விட்டேன்” என்றார். அதற்கு “மகனே அந்த வழக்குப் பேசிய காசில்தான் உன்னை நான் இது வரை படிப்பித்து முடித்தேன்” என்றாராம் தகப்பனார்.)

சர்வதேசம் தலையிட்டு ஒரு தீர்வைத் தரும்போது நாம் அடிமைகளாக நிற்போம். 

இலங்கை தனது இறைமையை இழந்த ஒரு நாடாக விளங்கும்.