Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அழும் குழந்தைச் சின்னமடி நீ எமக்கு..!

கடத்தப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் குகனின் மகள் சாரங்காவுக்காக இக்கவிதை எழுதப்பட்டது. இங்கு காண்பது 01 .04 .2012 அன்று வெளிவந்த LANKA பத்திரிகையின் முதற்பக்க படங்கள். தகப்பனை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது அழும் சாரங்கா. தகப்பனை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் எமது பல நூறு இளம் பிஞ்சுகளில் இவளும் ஒருத்தி ....

அன்பு மகளே..!

உனக்கு மட்டுமல்ல
எமக்குந்தான்
இந்தச் சோக வாழ்வு சொந்தமடி..!?

உனது அழுகைதான்
உனது நிலையாச்சு என்பது மட்டுமல்ல
உனைப்போன்ற அத்தனை மனிதரையும்
காக்கும் பொறுப்புகளை
அறுத்தெடுத்த பேய்களும்
பிசாசுகளுமான அரசும்
அதன் அடிவருடிகளையும் அழிக்கின்ற
குழந்தைகளின் போராட்டமடி உனது..!!

நீ உன்னால் முடிந்தவரை அழு..,
அழு.., அழு.., தொடர்ந்து அழு..,
அழுவதைத் தவிர்த்து
வேறொன்றும் பேசிப் பறைந்துவிடாதே மகளே..!
இதைவிட வேறொன்றும்
இல்லையடி உனக்கு..!?

நீ உனது தந்தைக்காக மட்டுமல்ல
எங்கள் தாய்நாட்டில்
உனைப் போன்ற சகோதரருக்காகவும்
அழுகின்ற குழந்தைச் சின்னமடி.

உனது தந்தையை
கடத்திய அம்மிக் கல்லுகள்
என்றோ ஒருநாள்
பெரும் சுனாமியுள் மாட்டும்வரை
நீயே எமக்கு
அழும் குழந்தைச் சின்னமடி.

உனது தந்தையைப் போல்..,
உனது நிலையான
இன்னும் பல்லாயிரம்
குழந்தைகளின் பெற்றோரை..?
இந்தப் பேய்களும் பிசாசுகளுமான
அரசும் அதன் அடிவருடிகளும்
பிடித்து அடைத்து வதைத்து..??
உனை என்றும் அழவைத்த
இலங்கை அரசியலில்
நீ என்றுமே
அழும் குழந்தைகளுக்கான சின்னமடி.

- 02/04/2012