Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தை 2010 தேர்தல் பெறும் அர்த்தம்

உலகின் வினோதமான அரசியல் போக்கு ஒன்றின் குவிமையப்படுத்தலாக இலங்கை எதிர்கொள்ளும் இன்றைய ஜனாதிபதித்தேர்தல் அமைந்திருக்கிறது. இதுவரையிலான இலங்கையின் தேர்தல்கள் ஏதோவொருவகையில் அதன் தலைவிதியை வரையறுப்பதாக அமைந்ததுண்டு. இன்றைய தேர்தல் அடிப்படையில் எந்த மீட்சிக்கும் நம்பிக்கையற்றதாக முகங்கொள்ளப்படுகின்றது.

இருப்பினும், இதுவரையில்லாத அளவில் கடும்போட்டி நிலவுவதாகவும் இது அமைந்துள்ளமை நகைமுரன். ஓரிரு வாரங்களுக்கு முன்வரை ஆளுந்தரப்பின் வெற்றி நிச்சயம் என்பதாக இருந்தபோதே போட்டி வலுவானது என்பதாக உணரப்பட்டது. போட்டிக்கு மூன்று வாரங்களுக்குட்பட்டதாக நாட்கள் நகரும் போது எதிர்த்தரப்பு வெல்ல வாய்ப்பு வலுத்துவருகின்றமையை அவதானிக்க முடிந்த போதிலும் கடுமையான போட்டி என்பது மாறிவிடவில்லை..

 

எதிர்த்தரப்பை வெற்றிகொள்ள வைப்பதற்கு ஐரோப்பா முதன்மைபெறும் இலங்கைக்கான உதவிவழங்கும் நாடுகளது ஒன்றியமும் அமெரிக்காவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் காய்நகர்த்தல்களைச் செய்தபடியுள்ளன. சென்ற ஆண்டின் இறுதியில் சமர்ப்பித்திருக்க வேண்டிய வரவு–செலவுத்திட்ட ஆண்டறிக்கையை அரசு சமர்ப்பிக்கவில்லை. உதவிவழங்கும் நாடுகள் நிவாரணங்களின் மீதான கடும் வெட்டுகளை நிர்ப்பந்தித்து உடன்படவைத்த பின்னரே இந்த அரசுக்கு முண்டுகொடுக்க இணங்கியிருந்தனர். அதற்கேற்ற வெட்டு;களுடன் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துத் தோல்வியை உறுதிப்படுத்த அரவு தயாராய் இருக்கவில்லை. இரண்டு வருடங்களின் பின் இந்த வெட்டுகளோடு தேர்தலை முகங்கொள்ள வர உள்ளதாலேயே இன்று முன்னதாக களம் இறங்கியுள்ளதென்பது இரகசியமானதல்ல.

எதிர்த்தரப்பு அனைவருக்கும் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு உட்பட பாலும் தேனும் வழிந்தோடப்போவது போன்ற வாக்குறுதிகளை வழங்கியபடியுள்ளது. இதற்கு எல்லாம் எங்கே காசுள்ளது என முட்டாள்தனமாகப் பிரசார மேடைகளில் கேள்வி எழுப்புகிறார்கள் ஆளும் தரப்புப் பேச்சாளர்கள். தமிழகத்தில் ஜெயலலிதா கருணாநிதியிடம் ஆட்சியை இழந்தது இப்படிக் கேட்கப்போய்த்தான்.

எதிர்த்தரப்பு ஆட்சிக்கு வந்தால் சொன்ன சம்பள உயர்வைத் தரமுடியும். மற்றப்பக்கத்தால் புடுங்கியெடுப்பது அவர்களுக்கு உவப்பானது. அதாவது நிவாரணங்கனை எவ்வளவுக்கு இயலுமோ அந்தளவு வெட்டி மக்கள் நல அரசு எனும் குணாம்சத்தை முற்றாக அழித்து, சுதந்திரமான போட்டிக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே எதிர்த்தரப்பின் பிரதான சக்தியாகிய யு.என்.பி இன் பொருளாதாரக் கோட்பாடாகும்.

ஆளுந்தரப்பும் உதவிகளைப் பெற்றாகவேண்டிய நிர்ப்பந்தத்தில் நிவாரணங்களைக் குறைத்து வரவே செய்கின்றனர். அதனைத் தயக்கங்களுடன்தான் செய்ய வேண்டியவர்களாயுள்ளனர். விவசாயிகள், கீழ் நிலை மத்தியதரவர்க்க அரசு ஊழியர்களே ஆளுந்தரப்பின் பிரதான வாக்குவங்கி என்பதனால் மக்கள் நல அரசுக்கான சேவைகளை வழங்கும் நிவாரணங்களை ஒரேயடியாக வெட்டுவது அவர்களது அரசியல் எதிர்காலத்தை இருள் சூழ்ந்ததாக்கிவிடும்.

ஆக, இரு தரப்புக்குமிடையே எந்த வேறுபாடும் இல்லை எனச்சொல்வது அரசியல் தெளிவீனத்தின் வெளிப்பாடாகும். இரு தரப்பும் மக்கள் மீது சுமைகளை ஏற்றவே நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்ற போதிலும் அவர்களுக்குள் அதற்கான வழிமுறைகளில் வேறுபாடுண்டு. ஆளுந்தரப்பு அடிநிலைமக்களை அதிகம் பாதிக்காமல் மக்கள் நல அரசின் சில அம்சங்களை ஆவது பேணியாக வேண்டும் என்ற அவசியத்தைக் கொண்டுள்ளது. எதிர்த்தரப்போ அமெரிக்காவின் பொருளாதாரக் கோட்பாட்டை முழுதாக விருப்பபூர்வமாக ஏற்று சுதந்திரமான போட்டியில் வறுகக்கூடியவர்கள் வறுகி வாழப்பாருங்கள் என ஒரு எதிர்காலத்தை வரவழைக்க முயல்கிறார்கள்.

இவ்வாறு பார்க்கும் போது ~ஏதோவொரு வகையில்| இதுவும் இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ள தேர்தல்தானே? இதுவொரு அடிப்படையான அம்சமே ஆயினும், இந்தத் தேர்தல் வெளிப்படையாகவே இந்த மண்ணுக்கு உரியதாக அல்லாமல் வெளிச்சக்திகள் மோதும் களமாகியுள்ளது என்பதே மிக மிக அடிப்படையான விடயம் என்பதனால், இது இலங்கையின் தலைவிதியைத் தீர்மானிக்கிற தேர்தலாக இல்லை என்பது கவனிப்புக்குரியது. ஏற்கனவே இறைமையை முழுதாக இழந்ததை வெளிப்படுத்தும் ஒன்றின் வெளிப்படையான அடையாளம் இந்தத் தேர்தல்.

முன்னதாக பார்த்தபடி எதிர்த்தரப்பு அமெரிக்க நலனை வெற்றிபெறச் செய்வதற்கு முயல்கிறது. ஆளுந்தரப்பு வெல்வதனை இந்தியா உறுதிப்படுத்த விரும்புகின்றது. சென்ற வருட மே மாதமுடிவில் யுத்தம் வெல்லப்பட்ட கையோடு ஜனாதிபதி சொல்லியிருந்தார், இந்த வெற்றி உண்மையில் இந்தியாவினுடையது என்று. யுத்தத்தை வியூகம் வகுத்து வெற்றிக்கு சாத்தியமான அனைத்தையும் வாய்ப்பாக்கித்தந்து சாதித்துவிட்ட இந்தியா சொல்கின்ற எதையும் செய்யவேண்டிய நிலையில்தான் நான் இருக்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார். அந்த நிர்ப்பந்தத்தோடுள்ள ஒருவர் வென்றாக வேண்டும் என்பதற்கான அனைத்து கைங்கரியங்களையும் இந்தியா செய்தபடிதான் உள்ளது.

மீறி எதிர்தரப்பு வெற்றிபெற்றால் அதனையும் வழிப்படுத்த இந்தியாவுக்கு இயலாமல் போகும் என்றில்லை. ஏற்கனவே எதிர்த்தரப்புப் பொதுவேட்பாளர் இந்தியா போய்வந்துவிட்டார்; வென்றால் உடன் மேலதிகமாய்ப் போய்வர வேண்டியிருக்கும். அவருக்கான தளமாயுள்ள யு.என்.பி இன் தலைவரும் அவ்வப்போது இந்தியாபோய் வந்தபடிதான். இந்தியாவையும் திருப்பதிப்படுத்தியபடிதான் அமெரிக்க நலனை முன்னெடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் தொடரும். ஆளுந்தரப்பு, அமெரிக்க நிரப்பந்தங்களுக்குப் பணிந்தபடி இந்தியாவிடம் இறைமையைத் தாரைவார்த்து விட்டதைப் போன்ற மறுவடிவம் இது.

இந்திய ஆளுந்தரப்பு அமெரிக்காவிடம் இந்தியாவை அடகுவைக்கிறது என்ற எதிர்ப்பு இயக்கங்கள் இந்தியாவில் வலுத்துவருவதனை அறிவோம். இவ்வாறு அமெரிக்க – இந்திய உறவு சிநேகபூர்வமானதாக ஆகிக்கொண்டுள்ள போதுதான் இங்கே இப்படியொரு வினோதமான போட்டி.

இதில் வினோதம் ஏதும் இல்லை. உலக மேலாதிக்கமான அமெரிக்காவுக்கு இந்தியாவைவிடவும் முன்னாள் முதன்மைப் போட்டியாளரான ருஷ்யாவும், முதன்மைப் போட்டியாளராக வேகமாய் வளர்ந்துவரும் சீனாவும் பிரதான எதிரிகளாய்த் தென்படுகின்றனர். ருஷ்யா, சீனா அளவுக்கு இந்தியாவை அச்சந்தரத்தக்க வளர்ச்சி பெறுவதாக அமெரிக்கா கருதவில்லை. அப்படியே முதல் நிலைப் போட்டியாளர் எனுமளவுக்கு வளரமுடிந்தால் அப்போது போர்வியூகத்தை மாற்றி வலுப்படுத்த வேண்டியதுதான். தவிர இந்தியாவின் காலடியில் உள்ள இலங்கையில் இப்படிக் கால்பதிக்க முயல்வதுங்கூட அத்தகைய வாய்ப்பை உத்தேசித்தேதான்.

அவ்வாறே, இந்தியாவும்  தனது நலன் சார்ந்து என்னதான் அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்திய போதிலும், தன்னைப்பாதிக்கவல்ல பின் தளமான இலங்கையில் அமெரிக்கா முழுதாக கால்பதிக்க இடங்கொடுக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம், சீனா தனது வளர்ச்சிக்கான பிரதான தளமாக ஹொங்கொங்கை வைத்துக் கொள்வதுபோல, இலங்கையைக் கையாள்வதில் இந்தியா வெற்றிபெற்று வருகிறது. இலங்கையின் ஆட்சியாளர்களும் சொந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்தபடி தமது சுகபோகங்களைப் பெருக்க முயல்வதனால், நாட்டின் இறைமை அதற்கேற்றவாறு இந்தியாவிடம் தாரைவார்த்து வருகின்றனர்.

இன்னுமொரு விடயம், அமெரிக்கா இன்று உலக மேலாதிக்கமாயும் இந்தியா வெறும் பிராந்திய மேலாதிக்கமாயும் உள்ளனவாயினும் நிலைமை வேகமாக மாறிவருகின்றது. அமெரிக்கா முதன்மைப்பொருளாதார உச்சத்திலிருந்து வீழ்ந்தபடியுள்ளது. இந்தியா வலுவான போட்டி நிலையில் வேகமாய் வளர்ந்தபடியுள்ளது. அத்தகையை ஒரு சூழலில் இலங்கையில் தனது சொல்லுக்குக் கட்டுப்படும் ஆட்சியைத் தக்கவைக்க இந்தியா முயல்வது தவிர்க்க வியலாததாகின்றது.

எவ்வாறாயினும் இலங்கை மக்கள், சிங்களவர்களோ, தமிழர்களோ, முஸ்லிம்களோ, மலையக மக்களோ, வேடர்களோ, ஏனைய சிறுபான்மையினரோ–அனைவரும் கையறு நிலையில்! சுய புரிதலும், பரஸ்பரம் ஏனையவரை விளங்கிக் கொள்வதும், மற்றவரது உரிமைகளை மதித்துப் போற்றுவதும் எப்போது? அந்தச் சிந்தனைக்கான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்துமாயின் இத்தேர்தல் பெறுபேறு எமது முன்னோட்டத்துக்கு உதவியதாக அமைய வாய்ப்புப்பெறும்.