Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்திய பார்ப்பனிய சிவசேனாவும் - யாழ் வெள்ளாளிய சிவசேனாவும்

ஈழ ஆதரவு தமிழ் தேசிய காவலராக தன்னை முன்னிறுத்திய மறவன்புலவு சச்சிதானந்தன், இலங்கையில் சிவசேனாவை தோற்றுவித்துள்ளாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுன் தொடர்புடையதே, சிவசேனாவும் அதன் பினாமி அமைப்புகளும். இந்தியாவில் நடந்த முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான, மத மற்றும் சாதிக் கலவரங்களைத் தலைமை தாங்கிய அமைப்பாக சிவசேனா இருக்கின்றது. அது தனது வரலாறு முழுக்க இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து இருக்கின்றது. இன்று மாடுகளின் பெயரால் ஒடுக்கப்பட்ட சாதிகளையும், முஸ்லீம்களையும், விவசாயிகளையும் சட்டம் போட்டே ஒடுக்குகின்றது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே அங்கம் வகித்த இந்துத்துவ பாசிச அமைப்புகளான இந்துமகாசபா மற்றும் RSS (Rashtriya Swayamsevak Sangh) அமைப்புகளின் வழி வந்ததே இந்தச் சிவசேனா. இந்த வகையில் இந்தியாவில் பார்ப்பனிய சாதிய அமைப்பையும், சுரண்டும் வர்க்க நலனையும் உயர்த்தி நிற்கும் சாதிய அமைப்பு தான் சிவசேனா. இன்று இலங்கை மக்களை பிளந்து சதிராட வந்திருப்பது, புதிய சாபக்கேடு.

சிவசேனாவுக்கு தலைமைக் காரியாலயம் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் வை. யோகேஸ்வரன் சிவசேனாவுக்காக வவுனியாவில் ஒரு காரியாலயத்தையும் 9ம் திகதி திறந்து வைத்திருக்கின்றார். அந்த விழாவில் சிவசேனாவின் அமைப்பாளரான மறவன் புலவு சச்சிதானந்தன், கலந்து கொண்டு "இலங்கையில் வாழும் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பை தொடங்கினேன்" என்கின்றார். வெள்ளாள சாதிய சமூகத்தை பாதுகாக்கவும், மக்களைச் சாதி மதம் மூலம் ஆழப் பிளக்க தொடங்கி இருக்கின்றனர் ஒரு சாதிய இயக்கத்தால். இது யாழ் வெள்ளாள சாதிய சிந்தனையின் பொது வெளிப்பாடு.

சிவசேனாவின் நோக்கம் "கலாச்சார நடவடிக்கைகளை மேம்படுத்து"வதே என்கின்றனர். இன்று கலாச்சாரம் குறித்து பேசுகின்ற தமிழ் தேசியப் பன்னாடைகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை, இந்தியாவின் தாளத்துக்கு ஆடும் காவிப் பொம்மைகள் என்பதையே, யாழ்ப்பாண வெள்ளாள சிவசேனாவின் கூற்றும் நடத்தையும் ஆழமாக உறுதி செய்கின்றது.

இந்துத்துவம் விரும்பும் தமிழ் கலாச்சாரம் எது?

பெண் உறுப்பு வெளியேற்றும் இறந்த கரு முட்டைக் கழிவை முன்னிறுத்தி தொடங்குகின்றது யாழ்ப்பாண வெள்ளாள தமிழனின் கலாச்சாரம். அதை பெண்ணின் தீட்டாகக் காட்டி பெண்ணை அடிமை கொள்ளுவதும், அதைக் கொண்டாடுவதுமே கலாச்சாரமாகும். ஆணுக்கு முன் பெண் அடக்க ஒடுக்கமாக நட, ஆணின் மேலாதிக்கத்தையும் அவன் சார்ந்த சமூக மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொள் என்று கூறும் கொண்டாட்டங்கள் தான், பெண்ணின் சுதந்திரமான பாலியல் தெரிவை மறுக்கின்ற மத சாதியக் கட்டமைப்பாகும்.

தமிழ் கலாச்சாரமானது ஒரு பெண் சாதி, வர்க்கம் கடந்து, சுதந்திரமாக தனது துணையை தேடக் கூடாது என்பது தான். இதைத்தான் யாழ்ப்பாணத்து இந்துத்துவா முன்வைக்கும் தமிழ் கலாச்சாரம். சுதந்திரமான சாதி கடந்த திருமணம், சாதி அடிப்படையிலான தமிழ்க் கலாச்சாரத்தை தகர்த்துவிடும் என்பது தான், யாழ் சிந்தனையில் வெளிவரும் சிவசேனா போன்ற சாதி அமைப்புகளின் கலாச்சாரக் கொள்கை.

இன்று உலகமயமாக்கம் முன்தள்ளும் நுகர்வாக்க அமைப்பில், பாலியலையும் நுகர்வாக்கி இருக்கின்றது. இந்த நுகர்வுவெறிக்கு, இன்று இருக்கின்ற சாதிக் கலாச்சாரத்தால் வேலி போட முடியவில்லை. புதிதாக சாதிய முள்வேலி போடும் முயற்சி தான், கலாச்சாரம் குறித்த கூக்கூரல்கள். இவை அனைத்தும் சாதியக் கண்ணோட்டம் கொண்ட ஆணாதிக்க வக்கிரங்கள். பெண் பால் உறுப்பு மூலம், கலாச்சாரத்தை பேண முனையும் சாதிமயமாக்கமாகும்.

இந்தியாவின் மேலாதிக்கத்தின் அடையாளமே சிவசேனா

மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் மக்களைப் பிரித்து மோத வைப்பதற்கு ஏற்ப, இந்தியா வெள்ளாளச் சிவசேனாவை இலங்கையில் தோற்றுவித்திருக்கின்றது. அதன் கைத்தடி தான், தமிழ் (ஈழத்) தேசிய மறவன்புலவு சச்சிதானந்தன் போன்ற "அமைதியான, சாந்தமான, அறிவான, வெள்ளைவேட்டி" சாதி வெறியர்கள்.

இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ, பௌத்த, ஒடுக்கப்பட்ட சாதிகள், மதமற்ற நாத்திகர்கள் கொண்ட தமிழர்கள், ஒன்றிணைந்த ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்துக்குப் பதில், வெள்ளாள இந்துத்துவ சாதிய தேசியத்தை வெளிப்படையாக இந்தியா சிவசேனா மூலம் பிரகடனம் செய்திருக்கின்றது. 1980 களில் தோன்றியது போல் மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த தேசியம் வளர்ந்துவிடக் கூடாது என்ற இந்தியாவின் நலன், சிவசேனா வடிவில் வெளிவந்திருக்கின்றது.

வடக்கில் பணத்தை தாராளமாக வாரி வழங்கும் இன்றைய பொதுப் பின்னணியில், இந்திய சிவசேனா போல் வெள்ளாளிய சிவசேனாவினை ஆயுத பாணியாக்கல் வரை அனுசரணை வழங்கும்.

1980 களில் இன ஒடுக்குமுறைக்கு எதிராகத் தோன்றிய தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்க இந்தியா தலையிட்டது. இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சியும், ஆயுதமும், பணத்தையும் வாரி வழங்கியது. அறிவாளிகளுக்கு வசதிகளையும் பணத்தையும் வழங்கி தன்வசப்படுத்தியது. இதன் மூலம் தனக்கான தமிழ் தேசிய கூலிப் படைகளையும், கூலி எழுத்தையும் உருவாக்கியது. இலங்கை மேலான தனது பிராந்திய மேலாதிக்கத்துக்கு ஏற்ப, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தி, இறுதியில் அதை அழித்தும் ஒழித்தது. இயக்கங்களும், இயக்க தலைவர்களும் இந்த இந்திய நலன் பேணும் கைத்தடிகளாக செயற்பட்டதும், தனிப்பட்ட நலன் சார்ந்து மோதியதும் நடந்தேறியது.

ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த அரசியலை முன்னெடுத்துச் செல்லாத இயக்கங்கள், இந்தியா, அமெரிக்கா என்று கைக்கூலிகளாக மாறி மக்களுக்கு துரோகம் செய்தனர். யாழ் மேலாதிக்க வெள்ளாள சாதிய சமூக அமைப்பை பிரதிநிதித்துவம் செய்த இயக்கங்களுக்கு பதில், இன்று அதன் வாரிசுகள் இந்தியாக் கைக் கூலிகளாக மாறி வெள்ளாளிய இந்துத்துவத்தை சமூகத்தில் திணிக்கின்றனர்.

இன்று வடக்கில் இந்தியா தலையிடாத நிகழ்ச்சி கிடையாது. இந்து மயமாக்கல், இந்து அடிப்படைவாதமாக்குதல், சாதிமயமாக்கல், இறைச்சி உணவுக்கு எதிராக சைவ உணவாக்கம் என்று சமூகத்தை குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்குமாறு, அனைத்து வகையிலும் இந்தியா அனுசரணை வழங்குகின்றது. வெள்ளை வேட்டிக்கார வெள்ளாள சிவசேனாவின் தோற்றம் குறித்து அறிவிப்பு, சமூகத்தில் புரையோடியுள்ள சாதி அமைப்பை வீரியமாக்கும் இந்தியாவின் நேரடித் தலையீடாகும்.

என்ன செய்யப் போகின்றோம்?

சமூகம் மீது ஆதிக்கம் பெற்ற ஒடுக்கும் சாதிகளின் அடிப்படைவாத கொள்கையே இந்துத்துவமாகும். ஒரு நாணயத்தின் இரு பக்கமாக வெள்ளாளியமும் பார்ப்பனியமும் இருப்பதால், சிவசேனா போன்ற சாதிய அமைப்பு தன்னை இந்துக்களின் பாதுகாவலனாக கூறிக் கொண்டு சமூகத்தில் முன்னிறுத்த முடிகின்றது.

யாழ் சமூகம் ஆட்டு மந்தைகள் போல் இந்து சாதிய பண்பாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுகின்ற பின்னணியில், சாதி சமூகமாக யாழ் மையவாதம் இயங்குகின்றது. பொது நிகழ்வுகளை கூட விட்டு வைக்காத இந்துமயமாக்கம், அதிகாலையில் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளில் இருந்து ஆரம்பிக்கின்றது. இதற்கு ஏற்ப யாழ் சமூகம் மீதான இந்திய தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பும், இலங்கை தமிழ் சமூகத்தின் தனித்துவத்தை நலமடிக்கின்றது.

வடக்கில் இந்தியத் தூதரகம் முன்னின்று செய்கின்ற தலையீடுகளினூடாக பாயும் நிதி, அனுசரணைகளும், சமூகத்தின் எந்தத் துறையையும் விட்டுவைக்கவில்லை. முற்போக்கு இலக்கியம், கலை, அரசியல் என்று எதை எடுத்தாலும் இந்தியா அல்லது மேற்கு அல்லது தன்னார்வ நிறுவனத் தலையீடு இன்றி, சுயாதீனமானதாக இயங்கும் எதையும் காண முடிவதில்லை. இங்கு சிவசேனாவின் வருகையைக் கூட, இதன் நீட்சியாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் தேசியத்தை அன்று முதல் இன்று வரை முன்வைத்து வரலாறு முழுக்க, இந்தியாவின் தலையீட்டை முற்போக்காகவும், தேசிய விடுதலைக்கான நிபந்தனையாகவும் காணுகின்ற யாழ் மையவாத சிந்தனையின், ஒரு அங்கமாகவும் நீட்சியாகவுமே சிவசேனாவின் வருகை நடக்கின்றது.

சமூகத்தில் இதற்கு எதிராக கருத்துக்களையும் செயற்பாட்டையும் முன்னெடுக்காத பொதுச் சூழலில், சிவசேனா இலங்கையில் காலூன்றுகின்றது. மதம் ஒரு தனிப்பட்ட மனிதனின் தெரிவாக இருக்க முடியுமே ஒழிய, பொது இடங்களில் அதன் தலையீட்டுக்கு எதிராக சமூகத்தில் செயற்பாடற்ற ஒரு பொதுச் சூழலில், சிவசேனா போன்ற இந்து சாதி பாசிச அமைப்பின் கிளைகள் தோன்றுவது ஆச்சரியமானதல்ல.

இங்கு கலை இலக்கிய சமூக வலைத்தள ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி அளித்த விடையம், மறவன்புலவு சச்சிதானந்தன் மூலம் சிவசேனா வெளி வருவது தான். அவரை எழுத்தாளராக, பதிப்பாளராக, சமூக ஆர்வலராக முன்னிறுத்தி கொண்டாடும் பொது அரசியல் இலக்கிய அளவுகோல்கள், சிவசேனா மூலம் கேள்விக்குள்ளாக்கி விடுகின்ற போது அதிர்ச்சியாகின்றது. இலக்கியம், கலை, அரசியல் என்று பேசுகின்றவர்களில் பெரும்பகுதியினர் மறவன்புலவு சச்சிதானந்தன் போல் கடைந்தெடுத்த வலதுசாரிகளாக இருப்பதும், சமூகத்தை வழிநடத்த வக்கற்றவராக இருப்பதுமே பொது உண்மையாகும்.

சமூகத்தில் புரையோடியுள்ள இந்து வெள்ளாள சாதி சமூக அமைப்பிற்கு வெளியில் இருந்து சிவசேனா தோன்றவில்லை. அது உள்ளேயே இருக்கின்றது. இதற்கு எதிராக செயற்படாத கலை இலக்கியங்கள் முதல் சமூக வலைத்தள செயற்பாடுகள் அனைத்தும், சிவசேனாவின் இந்துத்துவத்தைக் கடந்ததல்ல. இன்று சிவசேனா அமைப்புக்கு எதிரான கண்டனங்கள், சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற சாதிய பண்பாட்டு கூறுகளுடன் சக பயணிகளாக பயணித்தவர்களிடம் இருந்து வருகின்றதே ஒழிய, இதற்கு எதிரான இவர்களின் சமூக எதிர் நீச்சலில் இருந்தல்ல. இதை தடுத்து நிறுத்தி புதிய சமூகத்தை படைக்க என்ன செய்யப் போகின்கிறோம் என்பதற்கு, கண்டனங்களுக்கு அப்பால் நடைமுறையில் பதில் தேவை.