Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நல்லூர் கந்தனின் சாதி இந்துத்துவமாக மாறிய கதையைக் கேளு!

உழைப்பு சார்ந்து உருவானவன் "கந்தன்". அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த கந்தனை, முருகனாக, வேலனாக வழிபட்டதுடன், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினைமாவை முருகனுக்கு படைத்ததான வரலாற்று வழிக் கதைகளின் படி, "கந்தன்" வர்ணம் சாதி கடந்தவன் அல்ல. 

"கந்தர்" பௌத்த கடவுளாகவும் இருக்கின்றார். புத்தர் பரிநிர்வாணம் அடைகையில், கந்தருக்கு தர்மத்தை காக்கும் பணியை புத்தர் வழங்கியதாக கூறுகின்ற வரலாற்று வழிக் கதைகளின்படி, கந்தர் பௌத்த கோயில்களில் காணப்படுகின்றார்.      

சாதியை முன்னிறுத்தும் இந்திய பார்ப்பனியத்திலோ அல்லது இலங்கையில் வெள்ளாள சாதி இந்துக்களின் பெயர் வரிசையிலோ "கந்தன்" இருப்பதில்லை. இந்த வகையில் "கந்தன்" சாதியப் பெயர் வரிசையில் ஒடுக்கப்பட்ட சாதியப் பெயராகும். சாதிப் படிநிலையில் உயரும் போது, "முருகனானாலும்", முருகன், வேலன் சாதிய படிநிலையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தான்.

இந்த வகையில் நல்லூர் "கந்தன்" சாதி இந்துக்களின் கடவுள் அல்ல. நல்லூர் "கந்தன் - முருகன்" பணம் கொழிக்கும் கடவுளானதால், இந்துக்களை சாதிய படிநிலையை  "ஒன்றிணைக்கும்" இடமானதால், சாதி இந்துக்களின் கடவுளாகிவிட்டான். சாதி இந்துக்களின் ஒழுக்கங்களை கடைப்பிடித்து ஒழுகுமாறு, பிற சாதி மக்கள் மேல் திணிக்கின்ற இடமாக, நல்லூர் காணப்படுகின்றது. 

நுகர்வுமயமாகிவிட்ட உலகில், நல்லூர் திருவிழா பொழுதுபோக்குடன் கூடிய  களியாட்டங்களுக்குரியதாகவும், சாதிய கலாச்சாரங்களை கடைப்பிடித்து ஒழுகுவதையும், அரசியல்ரீதியாக மக்களை கட்டுப்படுத்தும் மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டதே நல்லூர் கொண்டாட்டங்கள்.

இந்த வகையில் நல்லூர் திருவிழாவையொட்டி கலைவிழா நிகழ்வுகள், யாழ் மண்ணுடன் தொடர்பற்றவை இம்முறை புகுத்தப்பட்டு இருக்கின்றது. இம்முறை நடைபெறும் கலை நிகழ்வுகள், தமிழ் மக்களின் பண்பாட்டுடன் தொடர்பற்றது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும், சாதி இந்துக்களின் சாதியக் கூத்துகள் நல்லூரில் நடாத்துகின்றனர்.  

இந்தியாவின் இந்துத்துவ பார்ப்பனிய நிகழ்ச்சிநிரலே, நல்லூரில் திருவிழாவாக அரங்கேறுகின்றது. தமிழ் மொழியை பேசும் மக்கள் மேலான இந்திய மேலாதிக்கத்தை நிறுவ, மதத்தையும், சாதியையும் முன்தள்ளுகின்றது. வடக்கு முதல் கிழக்கு வரையான, இன்றைய சாதிய மற்றும் மதக் கூத்துகள், இந்தப் பின்னணியில் அரங்கேறுவதை காணமுடியும். 

1983 இல் இந்தியா ஆயுதப் பயிற்சியையும், ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்தே ஒடுக்கப்பட்ட தேசத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்தது. இன்று அதைச் செய்ய மதத்தையும் சாதியத்தையும் முன்னிறுத்தி வருகின்றது. இந்த விபச்சாரத்துக்கு இந்துக்களின் பெயரில், சாதி இந்துக்களே முன்னிற்கின்றனர் என்பதே உண்மை.

சாதி இந்துகள் தாம் அல்லாதவர்களை தாழ்த்தி தம்மை உயர்ந்தவராக காட்டிக் கொள்பவர்கள். தங்கள் இரத்தம் சாதியப் புனிதத்தால் ஆனதாகக் கூறி, மனித உறவுகளை சாதிய உறவாக்கி விடுகின்றவர்கள். காதல் தொடங்கி கத்தரிக்காய் வரை, சாதி பார்தது சடங்குகள் செய்வதையே ஒழுக்கமாக்கி, அதையே மனித அறமாக மாற்றி விடுகின்றவர்கள்.

இதற்கு ஏற்ப கடவுளின் கோவணத்தை உருவியவர்கள் சாதி இந்துக்கள். கோவணக் கடவுடளான ஒடுக்கப்பபட்ட சாதிமரபு வழிவந்த கந்தனை (முருகன்), நல்லூரில் காண முடியாது. செல்வத்தைக் குவிக்கும் "அற்புதத்தால்" சாதி இந்துக்களின் கடவுளாகி விட்டதால், "கடவுளின்" கோவணத்தை உருவி நிர்வாணமாக்கி விட்டனர். மாறாக சாதிய இந்துச் சட்டங்களைப் போர்த்தி, ஒடுக்கப்பட்ட சாதிகள் அதை பின்பற்றி ஒழுகுமாறு நல்லூரில் அரங்கேற்றுகின்றனர்.                         

சொத்துள்ள மனிதனைப் போல், கடவுளும் பணக்காரனாகி விடுகின்றான்.  மனிதனின்  ஏழை எளிய தோற்றத்தையொட்டிய முருகனின் தோற்றம் மறைந்து போகின்றது. முருகனின் கோமணத்தை திருடி விட்டு, சாதி வெள்ளாள மரபுக்கு ஏற்ற தங்க ஆபரணங்கள் அணிந்த பணக்காரக் கடவுளாக்கி விட்டனர். 

நல்லூர் கந்தன் பணக்கார கடவுளாகி, பணக்காரருக்கும், அதிகாரிகளுக்கும் சிறப்புத் தரிசனம் கொடுக்கும் அளவுக்கு, சாதியாலும் வர்க்க அந்தஸ்தாலும் "உயர்ந்து" விட்டான். சாதி இந்துக்களின் சாதிய ஆகம விதிகளுக்கு கட்டுப்பட்ட சாதிக் கடவுளாகி விட்டான்.

தன்னைச் சுற்றி உழையாமல் வாழ்கின்ற சாதி இந்துக்கள் புடை சூழ, வசூல் வேட்டைக்காக ஒடுக்கப்பட்ட சாதிகள் மத்தியில் பவனி போகின்றான்.  

முருகனை வழிபடுவதற்கு சாதிய ஒழுக்கங்கள் சட்டங்களாகி விடுகின்றது. இதை மீறினால் சட்ட ரீதியான தண்டனை. செருப்புடன் சென்றதால் உதையும் கைதும், சிறையும், நீதிமன்றமும். ஆக சாதிய ஒழுக்கம், கோயில்களில் சட்டரீதியானதாக மாறி வருகின்றது.  .

இதன் மறுபக்கம் செருப்பு காலுக்குப் பதில் பூட்ஸ் கால்களுடனோ, அதிகாரத்தில் உள்ளவர்கள் பஜரோ ஜீப்புகளுடன் நடமாடுவதையோ முருகனோ (கந்தனோ), சாதி இந்துக்களோ கண்டுகொள்வதில்லை.    

ஏழை எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் எதிரானது தான், இந்து மத சாதிய விதிகளும் சட்டங்களும்.

மனிதன் எப்படி வந்தால் என்ன, எப்படி வழிபட்டால் என்ன, அதை நீங்கள் நம்பும் கடவுள் பார்த்துக் கொள்ளுமாறு விட்டுவிடவேண்டியது தானே வழிபாட்டு முறை. கடவுளை பார்த்து கொள்ளுமாறு விட்டுவிட வேண்டியது தானே? சாதி இந்துகளுக்கு இதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை ஏன்?

இது தான் வழிபாட்டு முறை என்றும், இதுதான் வழிபாட்டு விதியென்றும், இது தான் ஒழுக்கம் என்று யார் தீர்மானிப்பது? சாதி இந்துக்கள் தங்கள் சாதிய விதியை மற்றவர் மீது திணிக்கின்ற வக்கிரம், வழிபாட்டு விதியாகின்றது. மனிதனின் வழிபாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரானது, இந்த சாதிய விதி.

கடவுளின் பெயரில் சட்டங்களும் தண்டனைகளும் ஏழை, எளிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் தான். வசதியானவனுக்கும், ஒடுக்கும் சாதியை பாதுகாக்கும் பிரமுகர்களுக்கும் விதிவிலக்குகளும் சலுகைகளுமே, இந்துமதத்தின் நடைமுறையாக இருக்கின்றது. இந்துமதம் சாதிக்கொரு நடைமுறையையும், ஏழைக்கும் பணக்காரனுக்கும் வெவ்வேறு நடைமுறையையும் கொண்டதாக இயங்குகின்றது. வெவ்வேறு நடத்தை விதிகளைக் கொண்ட சாதி இந்துகளின் விபச்சாரங்கள், மதமாகி நல்லூரில் காட்சி அளிக்கின்றது. 

உலகமயமாகும் நுகர்வு உலகில் கடவுளும் ஆடம்பரமாக மாறி விட்டாலும், சாதிய அடக்க ஒடுக்கத்துடன் பவனி வருவதையே, அரோகரா போட்டு கும்மி அடிப்பதே வழிபாடாகி வருகின்றது.

இதை சாதிய மேலாதிக்கத்துடன், உலகமயமாகும் அரசியல் பொருளாதார சமூகப் போக்குடன் ஒன்றிணைந்த கொண்டாட்டமாக நல்லூர் திருவிழா மாறி இருக்கின்றது. இது வெறும் பொழுதுபோக்கு இடமாகவும், மகிழ்ச்சிக்குரிய இடமாக மட்டும் இருப்பதில்லை என்பதே உண்மை.  என்ன செய்யப் போகின்றோம்?