Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சமூக உணர்வு பெறாத உதவிகள் சுயநலனுக்கு உதவுவதே!

புலம்பெயர் நிதியுதவிகள் சரியான திசையில் இன்று பயணிக்கவில்லை. ஒரு கையால் வாங்கி மறு கையை ஏந்தும் மனிதர்களையும், சமூகத்தையும் உருவாக்குவதற்கு எமது உதவிகள் அமையக் கூடாது. சமூக உணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் உதவிகள் பெறுவதையும் இதன் அடிப்படையில் கொடுப்பதையும் அடிப்படையாகக் கொண்டு, உதவிகள் சமூகத் தன்மை பெற்றாகவேண்டும்.

யுத்தம் நடந்த வரை பெரும்பான்மையினர் புலி ஆதரவு அரசியலையும், சிறுபான்மையினர் புலி எதிர்ப்பு முதல் அரசு ஆதரவு அரசியலையும் செய்து வந்தனர். இந்தப் பின்னணியில் மக்களைச் சார்ந்து நிற்கின்ற அரசியல், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர முற்றாக காணாமற்போய் இருந்தது. யுத்தம் முடிவுற்ற பின்பு சுருட்டியவர்களுக்கும், சுருட்டுகின்றவர்களுக்கும் வெளியில், புலி - புலியெதிர்ப்பு - அரசு ஆதரவு அரசியல் போக்குகள், வேறு போக்கிடமின்றி தன்னார்வ உதவிகள் சார்ந்த ஒன்றாக மாறி இருக்கின்றது.

தன்னலமற்ற வகையில் சொந்த உழைப்பின் ஒரு பகுதியை, மற்றவர்களுக்கு கொடுக்கின்ற செயற்பாடாகவே இதை இனம் காணமுடியும். இந்த நோக்கமானது உயர்ந்த மனிதப் பண்பாக இருந்தாலும் அது சமூகத்துக்கு என்ன விளைவுகளை கொடுக்கின்றது என்ற சமூக ஆய்வு முறையில் இருந்து கொடுக்கப்படுவதில்லை என்பதே இதன் பின்னுள்ள எதார்த்தமாகும்.

தன்னார்வ நிதி சார்ந்த உதவிச் செயற்பாடானது, தவறான இரண்டு பிரதானமான அடிப்படையைக் கொண்டு காணப்படுகின்றது.

1. ஒடுக்கப்பட்ட சாதிகளை புறக்கணித்து, ஒடுக்கும் சாதியத்துக்கான உதவியாக இருப்பது. இதன் மூலம் ஒடுக்கும் சாதிக் கண்ணோட்டம் கொண்டதாக, உதவிகள் குறுகி இருப்பது

2. சமூகம் சொந்தக் காலில் நிற்கும் சமூக உணர்வைப் பெறாத சுயநலத்தை கொண்டதாக, தொடர்ந்து வலது கையால் பெற்று இடது கையால் கையேந்தும் சமூகத்தை தக்க வைக்கின்றது.

இந்த இரண்டு பிரதான போக்குகள் குறித்து விரிவாக ஆராய்வது காலத்தின் அவசியமாகும்.

யுத்தம் நடந்த போதும், இறுதி யுத்தத்தில் மக்களை அரசு பலியெடுக்க பலிகொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போதும், புலம்பெயர் சமூகம் கண்ணை மூடிக் கொண்டு மக்களின் தொடர் அழிவை ஆதரித்தது போன்று சமூகத்தின் சுயத்தை அழிக்ககூடிய தன்னார்வ உதவிகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவும் உதவவும் முடியாது. அனைத்தும் சமூக ஆய்வு மூலமும் சமூக விளைவுகளில் இருந்தும் அணுகியாக வேண்டும்.

இதை இலகுவாக புரிந்து கொள்ள ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்கள் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தைக் கொண்டு செய்த உதவிகள் அனைத்தும், மக்களைச் சொந்த காலில் நிற்பதற்கான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டவையல்ல. சமூகத்தின் எஞ்சிய சுயத்தை அழிக்கும் வண்ணம் திட்டமிட்ட வகையில் வழங்கப்பட்ட உதவிகள் தான் அவை என்பதை யுத்தத்தின் பின்னான சமூகத்தின் பொது அவலத்தில் இருந்து காணமுடியும்;. இந்தப் பின்னணியில் வங்கிக் கடன்கள் வாரி வழங்கப்பட்டு மக்களை பரதேசிகளாக மாற்றி இருக்கின்றது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உதவிகள் என்பது சமூகத்தை சொந்தக் காலில் நிற்கும் சமூக அறத்தை முதன்மையாகக் கொண்ட கொள்கை அடிப்படையில் உதவிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தன்னார்வ உதவியின் பின்னாலான சாதியம்

யுத்தத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட சமூகமாக இருப்பது ஒடுக்கப்பட்ட சாதி தான்;. காலாகாலமாக நிலவிய சாதிய ஒடுக்குமுறையால் இயல்பாகவே பொருளாதார அடித்தளமற்ற ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கும் சாதிகளால் கூலிகளாகவும் அவர்களுக்கு சேவை செய்து வாழுமாறும் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள்.

யுத்தம் நிலவிய காலத்தில் ஒடுக்கும் சாதியினர் யுத்த சூழலில் இருந்து தப்பிச் செல்ல முடிந்தளவுக்கு, ஒடுக்கப்பட்ட சாதிகள் தப்பி செல்லும் பொருளாதார அடித்தளத்தை பெற்று இருக்கவில்லை. யாழ் மேலாதிக்க அரசியல் இந்த சூழலைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தங்;கள் மேலாதிக்க யுத்தத்திற்கு ஒடுக்கப்பட்ட சாதிகளை பயன்படுத்தினர்.

யுத்தத்தின் பின் பெருமளவுக்கு யுத்த வடுக்களையும் இழப்புகளையும் கொண்ட சமூகப் பிரிவாக, ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் உள்ளனர். இந்த மக்களை சாதிய ரீதியாக ஒடுக்குகின்ற யாழ் மேலாதிக்க அடிப்படையைக் கொண்ட அரசு இயந்திரமானது, யுத்த இழப்பீடுகளை திட்டமிட்டு மறுதளித்து வருகின்றது. இந்த உண்மையை பேரினவாதத்தின் பொது நடத்தை மூலம் மூடிமறைக்க முடியாத அளவுக்கு சாதியமே, யுத்தத்தின் பின் தமிழ் மக்களை பிரித்து மோத வைக்கும் பிரிவினையாகவும், ஒடுக்குமுறையாகவும் மாறி வருகின்றது.

இதற்கு ஏற்ற வகையில், இந்த சாதிய போக்கில், புலம்பெயர் தன்னார்வ உதவிகள் ஒடுக்கும் சாதியை சார்ந்தவர்களைச் சார்ந்ததாக இருப்பது வெளிப்படையான உண்மையாக இருக்கின்றது. உதவி செய்யும் அமைப்புகள், தங்கள் உதவி சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சென்று அடைகின்றதா என்பதை உறுதி செய்கின்ற ஆய்வுகளைக் கொண்டதாக இருப்பதில்லை. இந்த உதவிகள் ஒடுக்கப்பட்ட சாதிகள் புறக்கணிக்கப்படுகின்ற வண்ணம், ஊர்கள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள், பிரமுகர்கள் சார்ந்ததாக இருக்கின்றது. இவை சாதியைக் கடந்ததல்ல. இவை அனைத்தும் ஒடுக்கும் சாதியக் கண்ணோட்டம் கொண்டதாக, ஒடுக்கப்பட்ட மக்களைப் புறக்கணிக்கின்ற வண்ணம், தமக்கான சொந்த நிகழ்ச்சிநிரலைக் கொண்டு இயங்குகின்றது.

இன்று பெருமளவில் முன்னெடுக்கப்படும் கல்வி சார்ந்த உதவிகள் காலகாலமாக ஒடுக்கும் சாதியால் கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்ற பின்னணியில் அரங்கேறுகின்றது.

அதிக வறுமையிலும், கற்றல் வசதிகளும் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளை முதன்மைப்படுத்தி, மையப்படுத்தாத கல்வி சார்ந்த உதவிகள் அனைத்தும் ஒடுக்கும் சாதிய கல்வி சார்ந்தாக இருப்பது இயல்பானது. வடக்கில் அதிகரிக்கும் சாதிய முனைப்புக் கொண்ட இன்றைய போக்குடன் இணைந்தாக இருக்கின்றது. ஒடுக்கும் சாதிய தன்னார்வ செயற்பாடாக, உதவிகள் குறுகி இருக்கின்றது.

சுயத்தை அழிக்கும் சுயநலம் உருவாக்கும் உதவிகள்

உதவி செய்கின்றவர்கள் உதவி பெறுபவனின் வாழ்க்கையை முன்னேற்றுதல் என்னும்; நல் நோக்கில் உதவி செய்கின்றனர் என்பது பொது உண்மை. இதை யாரும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது. ஆனால் அந்த உதவி அதைச் செய்கின்றதா என்பதே இங்கு முக்கியமான கேள்வியாகும். கொடுப்பதுடன் நிற்பதல்ல அதற்கு என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு உதவவேண்டும்.

முன்பு புலிப் போராட்டத்துக்கு ஆதரவு, உதவி என்னும் பொதுவான சமூக நல்நோக்குக்கு அப்பால், அப் போராட்டமானது தவறான அழிவுகரமான போராட்டமாக இருந்ததுடன் மக்களின் வாழ்க்கையை அழித்த எமது கடந்த அனுபவமும் வரலாறுமாகும். இதை நாம் தொடர முடியாது.

இன்றைய உதவிகள் சமூகத்தை வளப்படுத்தத் தவறி வருகின்றது. தனிமனித முன்னேற்றம் மூலம் சமூக மாற்றம் என்ற பொதுப் பின்புலத்தில், தனிநபரின் கல்விக்கான உதவி முதல் தனிநபரை மையப்படுத்திய பொருளாதார உதவிகள், எந்தளவுக்கு சமூகத் தன்மை கொண்டதான விளைவுகளை உருவாக்குகின்றது?

இலகுவாக இதைப் புரிந்துகொள்ள புலம்பெயர்ந்த எமது சமூகத்தைச் சேர்ந்த 99 சதவீதமானவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு உதவியவராக இருக்கின்றனர். இந்த உதவியானது, குடும்பத்தை உங்களின் உதவியின்றி சொந்தக் காலில் நிற்கும் வண்ணம் மாற்றி இருக்கின்றதா எனின் இல்லை. மாறாக மனித உறவுகள் என்பது, பணத்தை பெறுவதற்கான கருவியாக மாறியதைத் தவிர, முன்னேறிய சமூகத்தைப் படைக்கவில்லை. உதவி பெற்றவர்கள் தங்கள் சொந்த உழைப்பில் தன்மானத்துடன் வாழவும் தான் பெற்றது போல் மற்றவர்களுக்கு உதவும் மனநிலையையும் பெறவில்லை என்பதே உண்மை.

சமூக உணர்வு பெறாத உதவிகள், சமூக உணர்வை ஊட்டாத உதவிகள், உறவுகளில் இருந்து சமூகம் வரை கையேந்தி நிற்கின்ற சமூகத்தையே உருவாக்கியுள்ளது.

உதவிகள் என்பது அவசியமானது, ஆனால் அவை சமூகத்தன்மை கொண்டதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். சமூகநோக்கு சார்ந்த நடைமுறை செயற்பாட்டுடன் இணைந்ததாக, அதை முன்வைத்து உதவிகள் அனைத்தும் சமூகத்தன்மை பெற வேண்டும்.

கையேந்தும் சமூகமாக தொடர்ந்து இருக்கும் வண்ணம் உதவுவதோ தனிமனித முன்னேற்றம் சமூகத்தை மாற்றும் என்பதோ தவறானது. தனிமனித முன்னேற்றம் என்பது எப்போதும் எங்கும், சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது. உதவி என்பது சமூகத்தன்மை கொண்டதாக இருக்காத வரை, உதவி பெற்றவர்கள் தங்கள் சமூகத்துக்கு உதவ முன்வருவதில்லை என்பதே எதார்த்தம்.

சமூக உணர்வு இல்லாத மனிதனுக்கு உதவுவது என்பது அவனின் சுயநலனுக்கு உதவுவதேயாகும். இந்தக் கசப்பான அனுபவங்கள் தங்கள் குடும்பங்கள் முதல் பொது உதவிகளில், பலர் எதிர்கொள்ளும் பொது உண்மையாகும். இதை மாற்றி அமைப்பதற்கான புதிய சிந்தனை தான், மாற்றத்துக்கான முதற்படியாகும்.